என் மலர்
திருநெல்வேலி
- 5-வது கட்டமாக 1700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது.
- மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ மையத்தில் இருந்து விண்கலம் செலுத்துவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் எஸ்.எம்.எஸ்.டி.எம். (SMSDM) என்ற என்ஜின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.
அதன்படி 5-வது கட்டமாக 1700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுண்டவுன் ஆரம்பிக்கப்பட்டு சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.
இதனை மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார். மேலும் திருவனந்தபுரம் திட்ட மைய இயக்குனர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் ஆகியோர் காணொளி காட்சி மூலமாக கண்டனர்.
- மாநில பாடத்திட்டமும், மத்திய பாடத்திட்டத்திற்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
- மத்திய, மாநில பாடத்திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டதால் நீட் தேர்வில் பல மாணவர்கள் தேர்ச்சி பெறும் நிலை உருவாகியுள்ளது.
நெல்லை:
நெல்லையில் இன்று ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் பள்ளியில் நடத்தப்பட்ட ஆன்மீக வகுப்பு தவறானது. பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சி நடத்த யாரால் அனுமதிக்கப்பட்டது, எதனால் நடந்தது என்ற விசாரணையை பள்ளிக்கல்வித்துறை நடத்த வேண்டும். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு சனாதன கருத்துக்களை அனுமதித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முதலமைச்ச ரின் அமெரிக்க பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வந்து லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொண்டு வரும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் அதிகம் படித்த இளைஞர்கள் தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவு பெரிய தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
நாங்குநேரி உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்து வருவதற்கான புகார்கள் தொடர்ந்து வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை நேரில் சந்தித்து தற்போது தமிழகத்தில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தபடும். பி.எம். ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும் என மத்திய அரசு சொல்கிறது.
தேசிய கல்விக் கொள்கை சார்ந்தது தான் பி.எம். ஸ்ரீ திட்டமும். பா.ஜ.க.வை தவிர்த்த அனைத்து அரசியல் இயக்கங்களும் தேசிய கல்விக் கொள்கை தேவையில்லை என்ற நிலையோடு இருந்து வருகிறது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் மூலம் கல்வி வளர்ச்சி பெறுவதை வரவேற்கிறோம். பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் மூலம் தேசிய கல்விக் கொள்கையை ஊக்குவிப்பதை ஏற்க முடியாது. அதில் பல முரண்பாடுகள் உள்ளது.
3 மொழி கற்றுக் கொள்வதில் என்ன தவறு என மத்திய அரசு கேட்பதை நாங்கள் ஆமோதிக்கிறோம். மூன்றாவது மொழி ஏன் ஹிந்தியாக, சமஸ்கிருதமாக இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் கேட்கிறோம்.
தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியருக்கு மேல் சம்பளம் கொடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.249 கோடி வரவேண்டிய நிதி வரவில்லை. இந்த ஆண்டுக்கான நிதி ரூ.500 கோடிக்கு மேல் வரவில்லை. தமிழகத்தில் ஏற்கனவே நிதி நெருக்கடி உள்ளது. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.
மாநில பாடத்திட்டமும், மத்திய பாடத்திட்டத்திற்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில பாடத்திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டதால் நீட் தேர்வில் பல மாணவர்கள் தேர்ச்சி பெறும் நிலை உருவாகியுள்ளது.
ம.தி.மு.க. என்பது தனி இயக்கம். எங்களது சித்தாந்தத்தின் படியே எங்களது தகவல்களை சொல்கிறோம். எங்களது கூட்டணி நிலைத்து நிற்கும். எங்களது கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ம.தி.மு.க. நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் நிஜாம், செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி உள்பட பலர் உடன் இருந்தனர்.
- நெல்லை- திருச்செந்தூர் வழித்தடங்களில் மற்ற நேரங்களில் இயக்கப்படும் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும்.
- ரெயில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இரவில் திருச்செந்தூருக்கு சென்று, அங்கிருந்து திருச்செந்தூர் எக்ஸ்பிரசாக சென்னைக்கு புறப்படும்.
நெல்லை:
நெல்லை சந்திப்பில் இருந்து தினமும் திருச்செந்தூருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர சென்னைக்கு இயக்கப்படும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், கேரள மாநிலம் பாலக்காடுக்கு இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவையும் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் யார்டு சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது. எனவே அந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் விதமாக நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்தை ரத்து செய்ய மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வழக்கமாக காலை 8.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு 10 மணிக்கு நெல்லை சந்திப்புக்கு வரும் பயணிகள் ரெயில், பணிகள் நடக்க உள்ள அந்த யார்டு பகுதியில் நிறுத்தப்படும். அதேபோல் அந்த ரெயில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இரவில் திருச்செந்தூருக்கு சென்று, அங்கிருந்து திருச்செந்தூர் எக்ஸ்பிரசாக சென்னைக்கு புறப்படும்.
இந்நிலையில் யார்டு பணிகள் காரணமாக காலை 8.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரெயிலும், மாலை 4.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரெயிலும் வருகிற 9-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை 25 நாட்களுக்கு இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் நெல்லை-திருச்செந்தூர் வழித்தடங்களில் மற்ற நேரங்களில் இயக்கப்படும் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவில் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
- யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து போர்க்கொடி தூக்குகிறார்கள் தி.மு.க.வினர். ஆனால் அவர்கள் ஆளும் தமிழகத்தில் பெண் போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.
அமெரிக்காவில் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பள்ளி, கல்லூரி வாசல்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக பாஜக குழுவில் என்னுடைய பெயர் இடம் பெறவில்லை என பலரும் கூறுகின்றனர். அது தொடர்பாக கட்சி தலைமை முடிவு செய்திருக்கிறது. ஒரு குழுவை அமைத்திருக்கிறது.
தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும்? என்பதை கேட்டு அறிவதற்காக அந்த குழு தலைவர் டெல்லி சென்றுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்காததால் விஜய்யை கண்டு தி.மு.க பயப்படுகிறதா என்றால், யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.
அப்படி அனுமதி கொடுத்துவிட்டால் இது போன்ற பிரச்சனைகள் வராது. இப்போது அனுமதி கொடுக்க 21 கேள்விகள் கேட்பதன் மூலம் விஜயை கண்டு தி.மு.க அஞ்சுகிறது என்று தோன்றுகிறது.
விஜயதாரணி தனக்கு பதவி வழங்கப்படவில்லை என கூறியிருக்கிறார். எம்.எல்.ஏ. பதவியை துறந்து விட்டு பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு பதவி கொடுத்திருக்க வேண்டும். அது தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் வருத்தப்பட வேண்டாம். வரும் காலத்தில் அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும்.
அ.தி.மு.க.வில் நான் பெரும் பதவியில் இருந்து விட்டு பா.ஜனதாவில் வந்து இணைந்தேன். எனக்கும் கட்சி பதவி இல்லாமல் இருந்தது. தற்போது சட்டமன்றக்குழு தலைவராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பாஜக கட்சிக்கு புதிதாக குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க.வுடன் இணக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்று நிருபர்கள் கேட்ட போது அ.தி.மு.க-பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
- விநாயகர் சிலைகளை வட மாநில தொழிலாளர்கள் தயாரித்து விற்பனை செய்வார்கள்.
- இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த சிலைகளுக்கு வரவேற்பு இருப்பதாக வேல்முருகன் கூறினார்.
நெல்லை:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவையொட்டி ஆண்டுதோறும் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை கிருபா நகரில் 3 அடி முதல் 12 அடி வரையிலும் விநாயகர் சிலைகளை வட மாநில தொழிலாளர்கள் தயாரித்து விற்பனை செய்வார்கள்.
அவ்வாறு தயார் செய்யப்படும் சிலைகள் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மூலம் வாங்கி பிரதிஷ்டை செய்து அவற்றை தாமிரபரணி ஆற்றில் கரைப்பார்கள்.
இவ்வாறு தயாரிக்கப்படும் சிலைகள் ரசாயன கலவை மிகுந்ததாக இருப்பதால் அவற்றை ஆற்றில் கரைக்கும்போது நீர் மாசுபடுகிறது என்று கூறி சமீப காலமாகவே மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலவையால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை தயாரிக்கக்கூடாது மற்றும் அதனை பிரதிஷ்டை செய்யக்கூடாது. அதனை ஆற்றில் கரைக்க அனுமதி இல்லை என்று இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
அந்த வகையில் களிமண்ணால் ஆன விதை விநாயகர் சிலைகளை தயார் செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியிலும், மரங்களை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறார் நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த 63 வயதான மண்பாண்ட தொழிலாளி வேல்முருகன்.
இவர் ஒவ்வொரு பண்டிகை காலங்களுக்கும் ஏற்றார் போல் களிமண்ணில் பல்வேறு வேலைப்பாடுகளை செய்து வருகிறார். சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் தற்போது களிமண்ணில் நாவல் மரம் மற்றும் நெல்லிக்காய் மரத்தின் விதைகளை வைத்து களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகிறார்.
இதன் மூலம் சுற்றுப்புற சூழலில் எந்தவித எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த சிலைகளில் நாவல் மற்றும் நெல்லிக்காய் விதைகளை உள்ளே வைத்து தயாரிப்பதால் இந்த வகை சிலைகளை கரைக்கும்போது அந்த விதைகள் ஆற்றங்கரை ஓரங்களில் விழுந்து முளைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த சிலைகள் ரூ.100-ல் இருந்து ரூ.1,000 வரை விலை போவதாகவும், இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த சிலைகளுக்கு வரவேற்பு இருப்பதாகவும் வேல்முருகன் கூறினார்.
பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இவரது களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளின் விற்பனை அமோகமாக இருக்கிறது.
- ரேசன் கடை குறித்த மனுவை எங்கெல்லாம் எந்தெந்த தேதியில் அனுப்பி உள்ளார் என்ற விவரத்துடன் பேனர் ஒன்று வைத்துள்ளார்.
- ஒரு கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த ரேசன் கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதியில் தடிவீரன் கோவில் கீழத்தெரு மற்றும் தடிவீரன் கோவில் மேல தெரு ஆகியவை உள்ளன. இந்த 2 தெருக்களிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் ரேசன் அரிசி வாங்குவதற்காக அந்த பகுதியில் உள்ள கால்வாய் அருகே ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருமழையில் இந்த ரேசன் கடைக்குள் வெள்ளம் புகுந்து முட்புதர்களும் அடித்து வரப்பட்டது. இதனால் அந்த கட்டிடம் சேதமடைந்ததோடு அங்கு பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் கோடீஸ்வரன் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த ரேசன் கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இங்கு சென்று வருவதற்கு ஆட்டோவில் தான் செல்ல வேண்டும் அல்லது பஸ்சில் பயணம் செய்தால் நீண்ட தூரம் நடக்க வேண்டி இருக்கிறது என்று அப்பகுதி மக்கள் புகார் கூறினர்.
இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேசன் கடையை உடனடியாக புதுப்பித்து தர கோரி நாம் தமிழர் கட்சியின் நெல்லை சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர் மாரி சங்கர் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 4 முறை கலெக்டர் அலுவலகத்திலும் மற்றும் ஒரு முறை முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் கூறப்படுகிறது.
இதுவரை அதிகாரிகள் அந்த இடத்தை கூட வந்து நேரில் ஆய்வு செய்யவில்லை. வேறு இடம் தயாராக உள்ள நிலையில் அதிகாரிகள் ஒருவர் கூட அந்த பக்கம் வரவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் கோடீஸ்வரன் நகருக்கு சென்று பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர் என்று கூறியும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மாரி சங்கர் காட்சி மண்டபம் அருகே உள்ள தடிவீரன் கோவில் தெருவில் வினோதமான பேனர் ஒன்று வைத்துள்ளார்.
அதில் இதுவரை ரேசன் கடை குறித்த மனுவை எங்கெல்லாம் எந்தெந்த தேதியில் அனுப்பி உள்ளார் என்ற விவரத்துடன் பேனர் ஒன்று வைத்துள்ளார். இதனை அந்த வழியாக செல்பவர்கள் நின்று பார்த்து செல்கின்றனர். இதனிடையே அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. செலவில் அந்த ரேசன் கடையில் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- தக்காளியை பறிக்க பயன்படுத்தும் கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட தக்காளி விற்ற தொகை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
- இன்னும் சில நாட்களில் கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் என்பதால் தக்காளி விலையானது சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே காய்கறிகள் விலை சீரற்ற நிலையில் ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக பாவூர்சத்திரம், ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், மானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் உள்ளூர் வரத்து தக்காளிகள் அதிகமாக வருகிறது.
இதனால் தக்காளி விலை நாள்தோறும் இறங்குமுகமாக காட்சியளிக்கிறது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.14 முதல் ரூ.17 வரை விற்பனையானது. உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.18-க்கு விற்கப்பட்டது. மொத்த மார்க்கெட்டில் 6 கிலோ தக்காளி ரூ.100 என்று கூவி கூவி வியாபாரிகள் விற்றனர். தக்காளி விலை வீழ்ச்சியினால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இதேபோல் 3 கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்கப்பட்டது. சின்ன வெங்காயமும் நெல்லை, தென்காசியில் இருந்து மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் வருவதால் விலை வெகுவாக குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் சில்லறை விற்பனைக்காக வாங்கி செல்பவர்கள் ஒரு கிலோ தக்காளி ரூ.20 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தின் பிரதான காய்கறி சந்தையாக விளங்கி வரும் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்து அவை ஏலம் விடப்பட்டு வருகிறது. காய்கறிகளை ஏலம் எடுப்பதற்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள் பாவூர்சத்திரம் காய்கறி சந்தைக்கு வருவார்கள்.
பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான பெத்த நாடார்பட்டி, மகிழ்வண்ண நாதபுரம், அடைக்கலப்பட்டணம், மேலபட்டமுடையார்புரம், ஆலங்குளம், சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டிருந்தனர். தற்பொழுது விளைச்சல் அதிகரித்துள்ளதால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் வரை தக்காளி கிலோ ரூ.20 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.8 ஆக வீழ்ச்சி அடைந்தது.
இதனால் தக்காளியை பறிக்க பயன்படுத்தும் கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட தக்காளி விற்ற தொகை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அதேநேரம் விலை குறைவால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இன்னும் சில நாட்களில் கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் என்பதால் தக்காளி விலையானது சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.
- சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு இல்லாததால் மோசமான காட்சிகளை பதிவேற்றம் செய்கின்றனர்.
நெல்லை:
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வேளாண் ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சிலில் இட ஒதுக்கீடு முறையை புறக்கணித்துவிட்டு லேட்டரல் என்ட்ரி என்று சொல்லக்கூடிய பக்கவாட்டு அனுமதியின் மூலம் விஞ்ஞானிகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். வேளாண் ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் என்பது விவசாயத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடிய நிறுவனம்.
இதில் இட ஒதுக்கீட்டு முறை புறக்கணிக்கப்படுவதை மனித நேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசுத் துறைகளில் எல்லா தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.
வக்பு வாரிய திருத்தச் சட்டம் முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. தீய நோக்கத்துடன் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.
சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு இல்லாததால் மோசமான காட்சிகளை பதிவேற்றம் செய்கின்றனர். பாலியல் குற்ற வழக்குகளை ஒரு மாதத்திற்குள் விசாரித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக அரசின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழக அரசின் கல்வித்துறை சார்ந்த உயர்மட்ட குழு முடிவின் அடிப்படையில் தான் அது குறித்து முடிவெடுக்க முடியும்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஆண்டுக்கான அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான பணம் வந்து சேர்ந்து விட்டது. அதில் சுமார் ரூ.230 கோடியை குறைத்து விட்டார்கள்.
மொத்தம் ரூ. 2 ஆயிரத்து 120 கோடி நாம் கேட்டிருந்த நிலையில் மத்திய அரசு ரூ.1,876 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி உள்ளது.
இந்த ஆண்டிற்கு ரூ.2 ஆயிரத்து 300 கோடி கேட்டிருந்த நிலையில் முதல் தவணையாக ஜூன் மாதத்தில் கொடுக்க வேண்டிய ரூ.540 கோடியை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை.
இதுதொடர்பாக தமிழக அரசின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பிரதம மந்திரி மாதிரி பள்ளிகள் திட்டத்தின் மூலம் 14 ஆயிரத்து 500 புதிய பள்ளிகள் கொண்டு வர உள்ளனர்.
அதில் மறைமுகமான தீர்மானங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது தெரியாது. எனவே அதனை ஏற்கவில்லை. தமிழக அரசின் கல்வித்துறை சார்ந்த உயர்மட்ட குழு முடிவின் அடிப்படையில் தான் அது குறித்து முடிவெடுக்க முடியும்.
பிரதம மந்திரி மாதிரி பள்ளியில் தேசிய கல்வி கொள்கையை கொண்டு வருவார்கள். பிரதம மந்திரி மாதிரி பள்ளி நிதியை நாம் கேட்கவில்லை. அனைவருக்கும் கல்வி தொடர்பான நமக்கு தர வேண்டிய நிதியை தான் நாம் அவர்களிடம் கேட்கிறோம்.
பாராளுமன்றத்தில் ஒரு திட்டத்திற்காக நிதியை ஒதுக்கி விட்டால் அதன் பிறகு அதற்கான நிபந்தனைகளை விதிப்பது சரியானது அல்ல. அது ஏற்புடையது அல்ல.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 68.18 அடியாக உள்ளது.
- விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் நகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சேர்வலாறு, பாபநாசம் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் திடீர் மழையால் அணைகளுக்கு சற்று நீர்வரத்து ஏற்பட்டது. அந்த அணைகளுக்கு வினாடிக்கு 1,102 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 1004 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேர்வலாறு அணை பகுதியில் 7 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. பாபநாசத்தில் 108.70 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறில் நேற்று 114 அடி நீர் இருந்த நிலையில், இன்று சுமார் 2 அடி வரை அதிகரித்து 116.89 அடி நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 68.18 அடியாக உள்ளது.
50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 15.50 அடியாகவும், கொடுமுடியாறு அணையில் 28 அடியும், நம்பியாறு அணை நீர்மட்டம் 13 அடியாகவும் இருக்கிறது. அணை பகுதிகளில் இந்த ஆண்டு பரவலாக பெய்த மழை காரணமாக நீர் இருப்பு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இதனால் நெல் சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று காலையில் இருந்தே நகர் பகுதி மற்றும் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் வானில் கருமேகம் திரண்டு காணப்பட்டது. தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. குறிப்பாக செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. அங்கு 17 மில்லிமீட்டர் மழை பெய்தது.
தென்காசி நகர் பகுதி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, கடையம், சிவகிரி, கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதோடு, இதமான காற்றும் வீசியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. குறிப்பாக குண்டாறு அணை பகுதியில் நேற்று அதிகாலையில் தொடங்கி மதியம் வரையிலும் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 41 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
குண்டாறு அணை ஏற்கனவே மாதக்கணக்கில் நிரம்பி வழிவதால், அணைக்கு வரும் 48 கனஅடி நீரும் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவானது. அந்த அணையில் 60 அடி நீர் இருப்பு உள்ளது. 84 அடி கொண்டராமநதி அணை நீர்மட்டம் 65 அடியாக உள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான அடவிநயினாரில் 109.50 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 36 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
குற்றாலம் மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக மெயினருவி, ஐந்தருவியில் வெள்ளம் நீடிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகளுக்கு அவ்வப்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வரத்து அதிகரிக்கும்போது தடை விதிக்கப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி மெயினருவி, ஐந்தருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால், சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு கருதி மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- புலியருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு தடை இல்லை.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் பகுதியில் 6 மில்லி மீட்டர், மணிமுத்தாறு பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை பகுதியில் 19, கருப்பாநதி பகுதியில் 1.50, குண்டாறு பகுதியில் 32.80, அடவிநயினார் பகுதியில் 16 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக தற்போது குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவிக்கரையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் புலியருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு தடை இல்லை
குற்றாலத்தில் தற்போது சீசன் முடிவடைந்து விட்ட நிலையில் அருவிகளில் மீண்டும் தண்ணீர் விழத் தொடங்கி இருப்பது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
- தசராத்திருவிழா அக்டோபர் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 12-ந் தேதி.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா இந்தியாவில் மைசூருக்கு அடுத்து மிகவும் புகழ்பெற்றது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த திருவிழாவை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் சென்னை, கோவை, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காளி, அம்மன், சிவன், கிருஷ்ணா், முருகன், விநாயகர் போன்ற சாமி வேடங்கள் மற்றும் குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்ற வேடங்கள் அணிவார்கள்
குலசேகரன்பட்டினம் கோவிலை பொறுத்தவரை 90 நாள், 48 நாள், 31 நாள், 12 நாள், 10 நாள் என பல்வேறு நாட்கள் விரதத்தை கடை பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழாவை முன்னிட்டு 48 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் குலசேகரப்பட்டினம் கடலில் புனித நீராடி, சிவப்பு ஆடை அணிந்து, துளசி மாலையுடன் கோவிலுக்கு வந்து கோவில் அர்ச்சகர் கையால் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி உள்ளனர்.
சிறப்பு வாய்ந்த குலசேகரப்பட்டினம் தசராத்திருவிழா வருகிற அக்டோபர் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் அக்டோபர் 12-ந் தேதி குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடைபெறுகிறது. அன்றைய தினம் கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.
இதற்கிடையே, தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக குலசேகரன்பட்டி னம் புறவழிச் சாலை, உடன்குடி சாலை, மணப்பாடு சாலை, திருச்செந்தூர் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 250 ஏக்கர் இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அப்பகுதியில் உள்ள முட்செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி, மேடு, பள்ளங்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் பக்தர்கள் வாகனம் நிறுத்தும் 20 இடங்களில் 150-க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. இந்த வாகன நிறுத்தும் இடங்களில் தற்காலிக நடமாடும் சுகாதார வளாகங்களும் அமைக்கப்பட உள்ளது.






