என் மலர்
திருநெல்வேலி
- வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருக்கும்.
- வருகிற ஏப்ரல் மாதம் இறுதி வரையில் இது அமலில் இருக்கும்.
நெல்லை:
செங்கோட்டை -தாம்பரம் இடையே வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 20681, 20682) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி, 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் ஒரு பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
தாம்பரத்தில் இருந்து வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) முதல், செங்கோட்டையில் இருந்து 2-ந் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். வருகிற ஏப்ரல் மாதம் இறுதி வரையில் இது அமலில் இருக்கும்.
வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருக்கும்.
இதே போல் நெல்லை வழியாக இயக்கப்படும் தாம்பரம் -நாகர்கோவில் (வண்டி எண் 22657, 22658) ரெயிலில் ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு பொது பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.
தாம்பரத்தில் இருந்து வருகிற நவம்பர் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல், நாகர்கோவிலில் இருந்து 3-ந் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும். இவை ஏப்ரல் மாதம் இறுதி வரை அமலில் இருக்கும்.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் செந்தமிழ் செல்வன் தெரிவித்து உள்ளார்.
- கூட்டணிக்கு மறுத்தால் விஜய் மீதும், ஆதவ் அர்ஜூனா மீதும் சி.பி.ஐ. வழக்குபதியும்.
- இயக்குனர் மாரி செல்வராஜ் சாதி வெறியை தூண்டுவதாக கூறுவது அவர்களது இயலாமையை காட்டுகிறது.
நெல்லை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் முதலில் சேலம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நாமக்கல், கரூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது ஏன்? கரூர் சம்பவம் நடைபெறுவதற்கு முதல் காரணம் விஜய்தான்.
த.வெ.க. தலைவர் விஜய் வருவதால்தான் அங்கு கூட்டம் கூடியது. விபத்து நடைபெற்றது. எனவே முதன்மை காரணமான விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாமல் கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறு இல்லை என்றால் த.வெ.க.வினர் ஏன் முன்ஜாமீன் கேட்கிறார்கள்.
கரூர் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதும் புஸ்சி ஆனந்த் கோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை திரும்ப பெறுகிறார். இது எதன் வெளிப்பாடு. சி.பி.ஐ. தங்களை காப்பாற்றும் என்பதால் தானே. பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. அழைப்பதால் தான் சி.பி.ஐ. விஜய் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் உள்ளது.
விஜய் கூட்டணிக்கு மறுத்தால் விஜய் மீதும், ஆதவ் அர்ஜூனா மீதும் சி.பி.ஐ. வழக்குபதியும்.
இயக்குனர் மாரி செல்வராஜ் சாதி வெறியை தூண்டுவதாக கூறுவது அவர்களது இயலாமையை காட்டுகிறது. ஒரு நாடு தனது கடல் பரப்பில் 12 நாட்டிக்கல் மைல் தான் ஆதிக்கம் செலுத்த முடியும். ஆனால் இலங்கை நமது தமிழகத்தின் கச்சத்தீவு வரை ஆதிக்கத்தை செலுத்த நினைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நிருபர்கள் சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே வர உள்ளதாக தகவல்கள் வருகிறதே என கேட்டனர். அதற்கு முன்கூட்டியே வந்தால் என்ன திருப்பம் வந்துவிட போகிறது என்றார்.
தொடர்ந்து தி.மு.க. 200 இடங்களில் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறும் என கூறுவது பற்றி கேட்ட போது, இன்னும் 6 மாதம் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
- குளங்களை பொருத்தவரை 100-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
- தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கழுகுமலை சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு எஸ்டேட் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளுக்கு முன்பிருந்தே அந்த பகுதிகளில் தொடர் கனமழை பெய்கிறது.
இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கில் 30 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 26 மில்லி மீட்டரும் மழை பெய்தது. காக்காச்சி, மாஞ்சோலையி லும் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. தொடர்மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் 14-வது நாளாக இன்றும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிக்கிறது.
அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தபோதிலும் வினாடிக்கு 1,084 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 143 அடி கொண்ட அந்த அணை நீர் இருப்பு இன்று மேலும் 1 அடி உயர்ந்து 108 அடியை கடந்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 121.32 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 102 அடியை தொட்டது.
மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் குளிர்ந்த ஈரப்பதமான மெல்லிய சாரல் காற்று வீசியபடி இருந்தது. இதனால் சீதோஷண நிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தில் இந்த மாதத்தில் கடந்த 23-ந்தேதி வரை 198.95 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது வழக்கமான அளவான 166 மில்லிமீட்டரை விட 19.85 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் 498 ஹெக்டேர் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. குளங்களை பொருத்தவரை 100-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நகர பகுதிகளான தென்காசி மற்றும் செங்கோட்டை சுற்றுவட்டாரங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் மெல்லிய சாரல் அடித்தது. ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த மேற்கு திசை சாரல் காற்று வீசியது.
ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தின்போது வீசும் காற்றை போல வீசியதால் சீதோஷண நிலை மாறியது.
அணைகளை பொறுத்தவரை குண்டாறு அணை பகுதியில் 6 மில்லிமீட்டர் மழை பெய்தது.
இந்த அணை மூலமாக செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 1,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக இந்த அணை நிரம்பி வழியும் நிலையில் விவசாய பணிகள் தீவிரம் எடுத்துள்ளது.
கடனா அணை நீர்மட்டம் 58½ அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 69½ அடியாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று காலை 129.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 48 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
அந்த அணை நிரம்ப இன்னும் 3 அடி தண்ணீர் மட்டுமே தேவைப்படுகிறது. இன்றும் காலை முதலே பரவலாக மழை பெய்வதால் இன்று இரவுக்குள் அணை நீர்மட்டம் முழு கொள்ள ளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கழுகுமலை சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. வைப்பாறு, காடல்குடி பகுதியில் லேசான சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். கோவில்பட்டி சுற்ற வட்டாரத்தில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
- நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கியது.
- பஸ் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் வழியாக இன்று காலை நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கியது.
டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததனால் சாலையோரம் சறுக்கி இறங்கிய அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சில பயணிகள் சிறிய காயங்களுடன் தப்பினர்.
தகவல் அறிந்த உடனே கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 99 அடியை நெருங்கி உள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டுகளில் கடந்த 1 வாரமாக கனமழை பொழிந்து வருகிறது.
நெல்லை:
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசியில் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது. நகர், புறநகர் பகுதிகளில் மட்டுமல்லாது, மலைப்பகுதிகளிலும் தொடரும் மழை காரணமாக அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பொழிந்த வண்ணம் இருப்பதால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்கு 21 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு நேற்று 1,847 கனஅடி நீர் வந்த நிலையில் இன்று வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியை கடந்து நீர்வரத்து இருக்கிறது. இதனால் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து பாபநாசம் அணை 101.80 அடியாக உயர்ந்துள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டமும் 4 அடி உயர்ந்து 115.48 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 854 கனஅடி நீர் வந்த நிலையில், தொடர்மழையால் இன்று 2 மடங்கு உயர்ந்து 1598 கனடியாக உயர்ந்துள்ளது. இன்று மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 99 அடியை நெருங்கி உள்ளது.
களக்காடு, சேரன்மகாதேவி, அம்பை, நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழை காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. ராதாபுரம் சுற்றுவட்டாரத்தில் நேற்று பகலில் தொடங்கி இரவு வரையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 32 மில்லிமீட்டரும், களக்காட்டில் 11 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 9 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
கனமழை பெய்து வருவதால் திருக்குறுங்குடி நம்பி கோவில், களக்காடு தலையணை செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. மேலும் மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்மழையால் மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை நீடிக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டுகளில் கடந்த 1 வாரமாக கனமழை பொழிந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்து எஸ்டேட்டில் 14 ½சென்டிமீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 13 ½ சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. காக்காச்சியில் 10.8 சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 8.6 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
- சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது.
- தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகர பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், நேற்று தீபாவளி அன்று பகலில் மழை இல்லை. இரவில் பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்த நிலையில், இன்றும் காலை முதல் அனைத்து இடங்களிலும் சாரல்மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை புறகர் பகுதிகளான ராதாபுரம், நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ராதாபுரத்தில் 36 மில்லிமீட்டரும், நாங்குநேரி, சேரன்மகாதேவியில் 17 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அங்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் தீபாவளியையொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள் அருவியை தூரத்தில் இருந்து ரசித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அணைகளை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 93.25 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 109.38 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்து 96 அடியாகவும் உள்ளது.
52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 43 அடியை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் மழை பெய்யும் நிலையில் அந்த அணை நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணை பகுதியில் இன்று காலை நிலவரப்படி 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
மாநகர பகுதியில் நேற்று பெரிய அளவில் மழை இல்லை. அதேநேரம் மாலை நேரத்தில் மழை பெய்தது. ஏற்கனவே தொடர்மழையால் மாநகரின் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் சாலையில் மேடு பள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் சகதிக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் குடியிருப்புவாசிகளும் , வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்க்குடி சுற்றுவட்டாரத்தில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக தென்காசி சுற்றுவட்டாரத்தில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழையால் தீபாவளி பட்டாசு வெடிக்க முடியாமல் இளைஞர்களும், சிறுவர்களும் வீடுகளில் முடங்கினர்.
இதேபோல் நகரின் மற்ற பகுதிகளான சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. அதிபட்சமாக தென்காசியில் 6 மில்லிமீட்டரும், சிவகிரியில் 8 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை கடனா நதி அணை பகுதியில் சுமார் 5 சென்டிமீட்டர் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 56½ அடியை எட்டியுள்ளது. இதேபோல் ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 ½ அடி உயர்ந்து 66 அடியாக உயர்ந்துள்ளது. அடவிநயினார் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 120 ½ அடியாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகர பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. கயத்தாறு, கடம்பூர், கழுகு மலை ஆகிய பகுதிகளில் தலா 9 மில்லிமீட்டரும், எட்டயபுரத்தில் 8½மில்லி மீட்டரும், சூரன்குடியில் 15 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
- களக்காடு பகுதியில் பெய்த கனமழையால் தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 102.33 அடியாக உயர்ந்துள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. 2 நாட்களாக இடைவிடாது பெய்த மழையால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, ராதாபுரம், களக்காடு, மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டாரத்தில் 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் சாலைகள், வயல்வெளிகளில் வெள்ளம் தேங்கி கிடக்கிறது. அம்பை, சேரன்மகாதேவி சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டது.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் சுற்று வட்டாரத்தில் நேற்று பகலில் தொடங்கி இரவு வரையிலும் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நான்குவழிச்சாலையில் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. அங்குள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையம் பகுதியில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதுவே மாவட்டத்தின் அதிகபட்ச மழை அளவாகும்.
நெல்லையில் மாநகர் மற்றும் புறநகர் என அனைத்து இடங்களிலும் பெய்து வரும் தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட அதிக அளவு தண்ணீர் செல்கிறது. அணை பகுதிகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்படாத சூழ்நிலையிலும், காட்டாற்று வெள்ளம் வந்து ஆற்றில் சேருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் டவுன் குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
களக்காடு பகுதியில் பெய்த கனமழையால் தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை நீடிக்கிறது. சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் 37 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ராதாபுரத்தில் அதிகபட்சமாக 47 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. அணைகளுக்கு வினாடிக்கு 1614 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 2 அடி உயர்ந்து 88 அடியாக உள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 102.33 அடியாக உயர்ந்துள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 1 அடி உயர்ந்து 94 அடியை எட்டியுள்ளது.
அதேநேரம் கொடுமுடியாறு அணை நீர் இருப்பு நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்திருந்த நிலையில் இன்று மேலும் 4 அடி உயர்ந்து 35½ அடியை எட்டியுள்ளது. அணைகள் நீர்மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாநகரில் நேற்று பகலில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் தீபாவளி விற்பனை சற்று பாதிக்கப்பட்டது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் டவுன் ரதவீதிகளில் சாலையோர வியாபாரிகள் அதிக அளவு கடை அமைத்திருந்தனர். ஆனால் மழை பெய்வதும், ஓய்வதுமாக இருந்ததால் கடும் அவதி அடைந்தனர். மாநகரில் பாளையில் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று நாலுமுக்கு எஸ்டேட்டில் 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. ஊத்து, மாஞ்சோலையில் 8 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 9 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாமல் நீடித்து வருகிறது.
- 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 86 அடியை எட்டியுள்ளது.
- சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மதியம் வரையிலும் கனமழை பெய்த நிலையில், மாலை நேரத்திலும் பரவலாக மழை பெய்தது.
நெல்லை மாநகரில் நேற்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடந்தது. பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. டவுன் ரதவீதிகள் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து ஓடியது.
டவுனில் நேற்று பகலில் பெய்த கனமழை காரணமாக டவுன் சுந்தரர் தெருவில் ஒரு வீட்டின் மாடி அறையானது முழுமையாக இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வேளாண்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமசாமி என்பவர் தனது மனைவி மற்றும் மகன்களான சிவா, பரமேஸ்வரன் ஆகியோருடன் வசித்து வந்தார்.
தற்போது சிவா, பரமேஸ்வரன் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில், நேற்று 2 பேரும் வெளியே சென்ற நேரத்தில் வீடு இடிந்தது. இதனால் பெரிய அளவு பாதிப்பு இல்லை. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், டவுன் தாசில்தார் தலைமையில் குழு சென்று பார்வையிட்டனர்.
மாநகரில் இன்று காலை நிலவரப்படி பாளையில் 26 மில்லிமீட்டரும், நெல்லையில் 21.60 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் 5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,425 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 944 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 86 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 93 அடியாக உள்ளது.
மாவட்டத்தில் களக்காடு சுற்றுவட்டாரத்தில் 8 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் தலையணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நம்பியாற்றிலும் வெள்ளம் அதிக அளவு சென்றது. நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் கொட்டித்தீர்த்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.
இந்த பகுதிகளில் பிற்பகலில் மழை குறைந்த நிலையில், இன்று காலை வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. அம்பை பகுதியில் நேற்று இரவில் சற்று கனமழை பெய்தது. அங்கு 77 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கொடுமுடியாறு, நம்பியாறு என அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக 52 அடி கொண்ட கொடுமுடியாறு அணை பகுதியில் தொடர் மழையால் நேற்று ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்து 31.25 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 201 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் வறண்டு போன குளங்கள், கால்வாய்களில் நீர்வரத்து சற்று ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அதிகாலை தொடங்கி மாலை வரையிலும் கொட்டித்தீர்த்த கனமழையால் கடனா அணையில் 1 அடியும், ராமநதி அணையில் 1½ அடியும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 42.28 அடியாக இருந்த கருப்பாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 47½ அடியானது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 115 அடியை கடந்துள்ளது.
நகர் பகுதியை பொறுத்தவரை செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் 35 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சங்கரன்கோவில், சிவகிரி பகுதியில் நேற்று பிற்பகலில் இருந்து மழை சற்று குறைந்துவிட்டது. எனினும் நேற்று முன்தினம் தொடங்கி பெய்த மழையால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் தொடர்மழையால் மின்தடை ஏற்பட்டது. சில கிராமங்களில் மாலையில் தொடங்கி சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. ஆனாலும் மின் ஊழியர்கள் கொட்டும் மழையிலும் மின்தடங்கலை சீர் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகரில் பரவலாக மழை பெய்தது. கழுகுமலை சுற்றுவட்டாரத்தில் 10 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. திருச்செந்தூர், கோவில்பட்டி, சூரன்குடி, வைப்பார், கீழ அரசடி, மணியாச்சி, கயத்தாறு சுற்றுவட்டாரங்களில் பரவலான மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- தென்காசி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- தூத்துக்குடி மாவட்டத்திலும் 1 வாரத்துக்கும் மேலாக பிற்பகலில் மழை பரவலாக பெய்து வருகிறது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, சந்திப்பு, டவுன், தச்சநல்லூர், பேட்டை, பெருமாள்புரம், கே.டி.சி. நகர் பகுதிகளில் பரவலாக பெய்யும் மழையால் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பாளையில் அதிகபட்சமாக 7 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லையில் 3.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணை பகுதிகளை பொறுத்தவரை சேர்வலாறு அணை பகுதியில் 15 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.
புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நேற்றும் மழை நீடித்தது. குறிப்பாக களக்காடு, சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் அதிகபட்சமாக 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.
அம்பையில் 9 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளில் மழை பரவலாக பெய்தபோதிலும், மேற்கு தொடர்ச்சி மழையில் குறிப்பிடத்தக்க அளவு மழை இல்லை. இதனால் அணைகள் நீர்மட்டம் உயரவில்லை. அதேநேரம் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக 50 அடி கொண்ட வடக்கு பச்சையாறு அணைக்கு நீர் வரத்து இல்லை. இதனால் அந்த அணை நீர் இருப்பு 11 அடியாகவே இருக்கிறது. 23 அடி கொண்ட நம்பியாறு அணையில் 13.12 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த அணை பகுதியில் 13 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை பகுதியில் கனமழையால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை முதலே வானம் மேகமூட்ட மாக காட்சியளிக்கிறது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கடனா அணையில் 20 மில்லிமீட்டரும், ராமநதியில் 25 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கருப்பாநதி மற்றும் குண்டாறு அணையில் தலா 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
85 அடி கொண்ட கடனா அணையில் 32 அடியும், 84 அடி கொண்ட ராமநதி அணையில் 46 அடியும் நீர் இருப்பு உள்ளது. மிகச்சிறிய அணையான குண்டாறு அணை மாதக்கணக்கில் நிரம்பி வழிகிறது. 132 அடி கொண்ட அடவிநயினார் அணையில் 114 அடி நீர் இருப்பு உள்ளது.
நேற்று மாலையில் தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை,சிவகிரி சுற்றுவட்டர கிராமங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 40 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 39 மில்லி மீட்டரும், செங்கோட்டையில் 14 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் 1 வாரத்துக்கும் மேலாக பிற்பகலில் மழை பரவலாக பெய்து வருகிறது. வைப்பாறு சுற்று வட்டாரத்தில் கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு 56 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. கோவில்பட்டி, மணியாச்சி, சூரன்குடி, விளாத்திகுளத்தில் கனமழையால் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது.
தூத்துக்குடி உப்பளங்களில் கனமழையால் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குஜராத் உப்புக்கு மவுசு அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டு தூத்துக்குடியில் இருந்து உப்பு ஏற்றுமதி குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வருத்தத்தில் இருக்கும் நிலையில், மழையால் கூடுதல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை அடைந்துள்ளனர்.
- தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி 2 குழந்தைகளை சடலமாக மீட்டனர்.
- 3 பேர் உடல்களையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கயத்தாறு:
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்தையா (வயது38). இவரது மனைவி முத்துலெட்சுமி (வயது 27). இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி முத்தமிழ் (4½), சுசிலாதேவி (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
முத்தையா ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையை கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
நேற்று காலை கறி குழம்பு வைப்பதற்காக முத்தையா கறி வாங்கி கொடுத்ததாகவும், முத்துலெட்சுமி குழம்பு வைக்க மாட்டேன் என்று மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து முத்தையா தனது மனைவி முத்துலெட்சுமி மற்றும் குழந்தைகளை கங்கைகொண்டானில் இருந்து பருத்திகுளத்தில் உள்ள முத்துலெட்சுமியின் தாயார் லட்சுமி வீட்டில் கொண்டு விட்டுள்ளார். அதோடு நேற்றிரவு முத்தையா குடித்து விட்டு பருத்திகுளம் சென்று முத்துலெட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் முத்துலெட்சுமி மனமுடைந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை முத்துலெட்சுமி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பெருமாள் கோவில் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் லெட்சுமி தேடிப்பார்த்த போது அப்பகுதியில் உள்ள கிணற்று அருகே முத்துலெட்சுமி செருப்புகள் கிடந்ததை கண்டார். உடனே கிணற்றுக்குள் பார்த்த போது கிணற்றில் முத்தமிழ், சுசிலாதேவி ஆகிய 2 குழந்தைகளும் மிதந்தனர்.
உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய அலுவலர் பர்னபாஸ் சாலமோன் தலைமையில் வீரர்கள் கிணற்றுக்கு விரைந்து சென்றனர்.
மேலும் கங்கைகொண்டான் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி 2 குழந்தைகளை சடலமாக மீட்டனர். தொடர்ந்து முத்துலெட்சுமியும் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. 3 பேர் உடல்களையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதை பார்த்து அங்கிருந்த உறவினர்களும், கிராம மக்களும் கதறி அழுதனர். இந்த சம்பவத்தால் பருத்திகுளம் கிராமம் சோகத்தில் மூழ்கியது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், முத்தையா மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஜய் இரண்டாம் கட்ட தலைவர்களை விசுவாசிகளாக நியமித்திருந்தால் கரூர் கோர சம்பவம் நடந்திருக்காது.
- நேரத்தை முறையாக பின்பற்றி இருந்தால் இந்த கோர சம்பவம் நிகழ்ந்திருக்காது.
கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. பிரசாரகூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் விஜய் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசலுக்கு பின் த.வெ.க. தலைவர் விஜய், வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறினார்.
இதற்கிடையே, விஜயை சந்தித்தால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க கோரிக்கை வைப்பேன் என்று நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
* விஜய் இரண்டாம் கட்ட தலைவர்களை விசுவாசிகளாக நியமித்திருந்தால் கரூர் கோர சம்பவம் நடந்திருக்காது.
* கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் தனித்துவிடப்பட்டுள்ளார்.
* நேரத்தை முறையாக பின்பற்றி இருந்தால் இந்த கோர சம்பவம் நிகழ்ந்திருக்காது.
* கூட்டணி தொடர்பாக என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும் என்றார்.
- தகவல் அறிந்த மாணவியின் சக நண்பர்களான மாணவர்கள் சிலர் ஆத்திரமடைந்து, சம்பந்தப்பட்ட பேராசிரியரை தாக்கினர்.
- புகாரின் அடிப்படையில், கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் செயல்பட்டு வரும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சமீபத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கேரளாவின் மூணாறு பகுதிக்கு சென்றனர்.
அப்போது, உடன் சென்ற பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் சக நண்பர்களான மாணவர்கள் சிலர் ஆத்திரமடைந்து, சம்பந்தப்பட்ட பேராசிரியரை தாக்கினர்.
இச்சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கல்லூரியில் பேராசிரியர்கள் இருக்கும் அறைக்குள் புகுந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை மாணவர்கள் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், கல்லூரி பேராசிரியரை மாணவர்கள் சரமாரியாகத் தாக்குவதும், சிலர் நாற்காலிகளையும், பேக்குகளையும் தூக்கி எறிவதும், கைகளால் தாக்குவதும் போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.
இதனிடையே பாலியல் புகாருக்கு உள்ளான சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியரை 'சஸ்பெண்டு' செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.






