என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொருநை அருங்காட்சியகத்தை இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி
    X

    பொருநை அருங்காட்சியகத்தை இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி

    • இந்த கட்டிடத்தின் முகப்புகளிலும், உட்பகுதிகளிலும் உள்ளூர் கவின்கலைகள் மிளிர்கின்றன.
    • தமிழ்நாட்டின் தொன்மையை அறிய அறிவியலோடும், இயற்கையோடும் இணைந்து அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நெல்லை:

    நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை இன்று முதல் பொதுமக்கள் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    தமிழகத்தின் தொன்மையான வரலாற்றினை உலகறியசெய்யும் பொருட்டு கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்த பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந்தேதி திறந்து வைத்தார்.

    இந்த அருங்காட்சியக வளாகத்தில் அறிமுகக்கூடம், சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய கட்டிடத்தொகுப்புகள் 54,296 சதுரஅடிப் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டிடத்தொகுப்பும் முற்றம், தாழ்வாரம் போன்றவற்றுடன் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என்ற வகையில் இப்பகுதியின் கட்டிடக்கலையைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன.

    இந்த கட்டிடத்தின் முகப்புகளிலும், உட்பகுதிகளிலும் உள்ளூர் கவின்கலைகள் மிளிர்கின்றன. இவற்றுடன் நிகழ்த்து கலைகளைக் காணும் திறந்த வெளி அரங்கம், தொல்லியல் மாதிரிகள் மற்றும் உள்ளூர் கைவினைப்பொருட்களின் விற்பனையகம், மின்கலத்தால் இயங்கும் வாகனம், பொதுமக்கள் செல்ல எளிதான நடைபாதை, இயற்கையை ரசிக்க ஆங்காங்கே மரங்கள், குறுஞ்செடிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், இளைப்பாற ஆங்காங்கே இருக்கைளும் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிய அறிவியலோடும், இயற்கையோடும் இணைந்து அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பொருநை அருங்காட்சிகத்தினை இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.

    மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் சென்று பார்வையிட வசதியாக பஸ்கள் இயக்கப்படவுள்ளது.

    இன்று நெல்லை சந்திப்பில் இருந்து பஸ் இயக்கப்படுகிறது. பொருநை அருங்காட்சியம் செல்வதற்கு திங்கள் முதல் சனி வரை தினசரி நெல்லை சந்திப்பில் இருந்து 11 நகர பஸ்களும், விடுமுறை நாட்களில் கூடுதலாக 7 நகர பஸ்களும், நெல்லை சந்திப்பிலிருந்து வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், சாராள் தக்கர் கல்லூரி, விலக்கு வழியாக பொருநை அருங்காட்சியகத்திற்கு இயக்கப்படுகிறது. அருங்காட்சியகத்தில் அதே வழியில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கும் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×