என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • கூட்டணியால் மட்டுமே ஆட்சியை பிடித்து விட முடியாது.
    • தி.மு.க ஆட்சியில் சொத்து வரி உயர்ந்திருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை.

    நெல்லை:

    வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை டவுனில் உள்ள மணி மண்டபத்தில் அமைந்துள்ள வ.உ.சி. சிலைக்கு பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றுவதில் பிரதமர் மோடி முதல் நபராக இருக்கிறார். அறிவு திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தி விட்டு அதற்கு எதிராகவே தி.மு.க.வினர் பேசியிருக்கிறார்கள்.

    தி.மு.க.வினர் நாட்டு மக்கள் நலனுக்காக ஒரு போதும் உச்ச நீதிமன்றம் செல்வதில்லை. கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு எதிராகவே தமிழக அரசு போராடி வருகிறது. தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.

    எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்களை தி.மு.க அரசு தான் தூண்டிவிட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு இப்போது அவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

    தி.மு.க.வுக்காக வேலை பார்த்த பிரசாந்த் கிஷோரின் கட்சி, பீகார் தேர்தலில் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அவர்களை வைத்து வேலை பார்த்தால் என்னவாகும். விஜய், பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இணைவார் என சபாநாயகர் அப்பாவு பேசியிருக்கிறார். அவர்களுடைய ஆசை நிறைவேறும். கூட்டணி தொடர்பாக ஜனவரியில் பேசி முடிவெடுக்கப்படும்.

    கூட்டணியால் மட்டுமே ஆட்சியை பிடித்து விட முடியாது. இதற்கு முந்தைய காலங்களில் வலுவான கூட்டணி அமைத்த கட்சிகள் கூட தோல்வியை சந்தித்து இருக்கின்றன.

    தி.மு.க ஆட்சியில் சொத்து வரி உயர்ந்திருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. கிராமங்கள் தோறும் கஞ்சா புழக்கத்தில் உள்ளது. தி.மு.க அரசு அதை கண்டும் காணாமல் உள்ளது. மக்கள் நலனில் தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை. துணை முதலமைச்சர் உதயநிதியை முதலமைச்சர் ஆக்குவதற்காக தி.மு.க முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எஸ்.ஐ.ஆரை பார்த்து முதலமைச்சருக்கு எந்த பயமும் இல்லை.
    • எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய் துறை அலுவலர்களை தி.மு.க தூண்டி விடுவதாக கூறுகின்றனர்.

    நெல்லை:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு இன்று நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக விஜய் போராட வேண்டுமானால் டெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் மாநில அரசுக்கு எதிராக போராடுவது வெறும் கண்துடைப்பே.

    ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு அவர் போராடுகிறார். இப்படி போராடுபவர்களை மக்கள் நம்பவில்லை.

    எஸ்.ஐ.ஆருக்கு எதிராக போராட்டம் என்று கூறிவிட்டு எஸ்.ஐ.ஆருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தமிழக அரசுக்கு எதிராகவே பேசி இருக்கிறார் விஜய்.

    எஸ்.ஐ.ஆரை பார்த்து முதலமைச்சருக்கு எந்த பயமும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினந்தோறும் 50 வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கொடுக்கலாம் என தேர்தல் ஆணையமே கூறி இருக்கிறது. இது தமிழக வெற்றிக் கழகத்திற்கு தெரியாது.

    எஸ்.ஐ.ஆரை எதிர்த்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்தால் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் விஜய் ஒன்றுபட்டுள்ளார். எனவே அவர்கள் இருவரும் ஒன்றாக இணைவார்கள்.

    எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய் துறை அலுவலர்களை தி.மு.க தூண்டி விடுவதாக கூறுகின்றனர். அதுபோன்று தூண்டிவிடும் பழக்கம் தி.மு.க.வுக்கு கிடையாது.

    பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துகிறார்கள். அது அவர்களுடைய உரிமை. மத்திய அரசு உயர்த்திய உடனே மாநில அரசும் அகவிலைப்படி உயர்த்தி இருக்கிறது.

    மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காததாலேயே ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. மத்திய அரசு கடுமையான நிதி நெருக்கடியை கொடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் சன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்துள்ளது.
    • மத்திய மந்திரி அமித்ஷாவின் மகன் இன்று என்ன செய்கிறார்?

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை சபாநாயகர் அப்பாவு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    பணகுடி, வள்ளியூர், கூடங்குளம், திசையன்விளை உள்ளிட்ட ராதாபுரம் தொகுதியில் நடத்தப்பட்ட 15 நலம் காக்கும் முகாம்களிலும் காலை சிற்றுண்டி முதல் மதிய உணவு, மாலை தேநீர் வரையிலும் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது.

    முகாமில் பங்கேற்றோருக்கு முழு உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடல்நிலையை பதிவு செய்த தனிப்பட்ட பைல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை பரிசோதனைகளுக்கு வழக்கமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் இங்கு மக்கள் ஒரு ரூபாயும் செல வில்லாமல் சேவையைப் பெற்றுள்ளனர்.

    பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் சன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. அவர் ஒரு ஆலோசனை வழங்குபவர் தான். ஆனால் அவருக்கு களப்பணியில் உள்ள உண்மையான நிலைமை தெரியாது. அவர் யோசனை சொல்வார். ஆனால் அது அவர் சொந்த ஊரிலேயே செல்லுபடியாகவில்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?.

    பீகார் தேர்தலால் வாரிசு அரசியல் தோல்வியடைந்து விட்டது. அது தமிழ்நாட்டிலும் தொடரும் என பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது. மத்திய மந்திரி அமித்ஷாவின் மகன் இன்று என்ன செய்கிறார்?. ராணுவ மந்திரியின் மகன் என்ன செய்கிறார்?. பா.ஜ.க.வில் 287 வாரிசுகள் பதவியில் உள்ளனர். இத்தனை வாரிசுகளை வைத்திருக்கும் பா.ஜ.க. ஒரே ஒரு வாரிசு வைத்திருக்கும் தி.மு.க.வை குறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
    • விபத்து ஏற்பட்ட உடனே தகவல் கிடைத்ததால் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல்துறை அங்கு விரைந்து வந்தனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 60 பயணிகள் வரை பயணம் செய்தனர்.

    அந்த பஸ் கூடங்குளம் அருகே உள்ள முருகானந்தபுரம் பகுதியில் வந்தபோது எதிரே அந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக பஸ் டிரைவர் ஓரமாக நிறுத்த முற்பட்டுள்ளார். அப்போது சமீப காலமாக பெய்த மழையினால் சாலையோரம் இருந்த மண் ஈரப்பதத்துடன் இருந்ததால் பஸ் டயர் கீழே இறங்கவும், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 27 பேர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து ஏற்பட்ட உடனே தகவல் கிடைத்ததால் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல்துறை அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயங்கள் அதிகமாக இருந்த பயணிகள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் மத்திய அரசு மீது குறை சொல்கிறார்கள்.
    • தேர்தல் நேரத்தில் தான் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கிறது என்று கூறுகிறார்கள்.

    நெல்லை மாவட்ட பா.ஜா.க அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 190 இடங்களுக்கு மேலாக முன்னிலை வகித்து வருகிறது. இது ஏற்கனவே அங்கு நடைபெற்றுள்ள ஆட்சிக்கு மீண்டும் பொதுமக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாகவே கருதுகிறேன். இதனை நான் வரவேற்கிறேன்.

    நெல்லை தொகுதியில் தி.மு.க. தோற்க கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். நெல்லை தொகுதியை பொருத்தவரை நான் கேட்ட கல்லூரி உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றி தந்துள்ளார். தனிப்பட்ட முறையில் எனக்கும், அவருக்கும் உள்ள நட்பு ஆழமானது. அதற்காக கட்சிகள் என்று வரும்போது விட்டுக் கொடுக்க முடியாது.

    பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தல் ஆணையமும் பங்கு வகித்ததால் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படி என்றால் கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக இருந்ததா?

    பீகாரில் 65 லட்சம் வாக்கா ளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். அதில் சுமார் 30 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர். 28 லட்சம் வாக்காளர்கள் வரை வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள். பின்னர் நீக்க தானே செய்வார்கள்.

    தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை பொருத்தவரை தமிழகத்தில் தி.மு.க. வட்ட செயலாளர்களை வைத்துதான் இந்த வாக்காளர் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக அதிகாரிகளுக்கு நிர்பந்தம் கொடுக்கிறார்கள். அதிகாரிகள் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் புகார் மனு அனுப்பியுள்ளேன்.

    டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் மத்திய அரசு மீது குறை சொல்கிறார்கள். வெளிநாடுகளில் இது போன்ற சம்பவம் நடந்தால் எதிர்க்கட்சிகள் ஒன்றாக திரண்டு ஆதரவாக பேசுவார்கள். ஆனால் இந்தியாவில் தான் இப்படி குறை கூறும் சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு காரணம் இங்கு இருப்பவர்களின் தேசப்பற்று குறைந்துவிட்டது தான்.

    தேர்தல் நேரத்தில் தான் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கிறது என்று கூறுகிறார்கள். பீகாரில் தேர்தல் நடந்தது. டெல்லியில் கொண்டு வெடித்தது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எனது வீட்டை மர்ம நபர்கள் நோட்டமிட்டது குறித்து நான் அரசியலாக்க விரும்பவில்லை. அதேநேரம் எனக்கு யாரும் வெடிகுண்டு மிரட்டல் விடவில்லை.

    அ.தி.மு.க.வில் ஒரு காலத்தில் ஜே அணி, ஜா அணி என்று இருந்தது. பின்னர் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தார்கள். மிகப்பெரிய வெற்றியை பெற்றார்கள். அதேபோன்று தற்போது அ.தி.மு.க.வினர் அணிகளாக உள்ளனர். இது அ.தி.மு.க. வில் வழக்கமாக நிகழக்கூடிய ஒன்றுதான்.

    அதே நேரத்தில் எங்கள் கட்சி ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் கட்சி. தற்போது பீகாரில் பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதனை கொண்டாடுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளை நிற ஹெல்மெட் அணிந்தபடி ஒரே மொபட்டில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது வீட்டை புகைப்படம் எடுத்துள்ளனர்.
    • நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஏதும் விடுக்கப்பட்டதா? என்பது குறித்தும் உளவுத்துறை போலீசார் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    டெல்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனிடையே சமீப காலமாகவே தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. நேற்று அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 3 தி.மு.க. அமைச்சர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் நேற்று நெல்லையில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டை மர்ம நபர்கள் நள்ளிரவில் நோட்டமிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் உள்ள நயினார் நாகேந்திரன் வீட்டினை சுற்றி 3 புறங்களிலும் சாலைகள் செல்கின்றன. இந்நிலையில் இந்த சாலையில் நேற்று நள்ளிரவு 11.35 மணி அளவில் மர்ம நபர்கள் 2 பேர் ஹெல்மெட் அணிந்தபடி மொபட்டில் வந்துள்ளனர். அவர்கள் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு திரும்பும் சாலையில் மூலையில் நின்றபடி அவரது வீட்டை நோட்டமிட்டுள்ளனர். இதனை அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிக்கும் நபர்கள் நயினார் நாகேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கவே, அவரது உதவியாளர்கள் மூலம் வீட்டை சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.

    அப்போது வெள்ளை நிற ஹெல்மெட் அணிந்தபடி ஒரே மொபட்டில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது வீட்டை புகைப்படம் எடுத்துள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அந்த நபர்கள் மீண்டும் சிறிது நேரம் கழித்து அங்கு வந்து வீட்டை நோட்டமிட்டு சென்ற காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.

    இதைத் தொடர்ந்து பெருமாள்புரம் போலீசாருக்கு இன்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஏதும் விடுக்கப்பட்டதா? என்பது குறித்தும் உளவுத்துறை போலீசார் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று அவர் அறந்தாங்கியில் நடந்த பிரசார பயணத்தில் கலந்து கொண்டார். அங்கும் அவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

    இதனிடையே நேற்று நெல்லையில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்கள் நோட்டமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் யாரும் நேற்று வீட்டில் இல்லை. அவரது மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் வெளியூருக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் யாரும் இல்லை. இதனால் வந்த மர்மநபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நோக்கத்துடன் நோட்டமிட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் பயங்கர சதி திட்டத்துடன் நோட்டமிட்டார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    • தூத்துக்குடி மாநகர பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாகவே காட்சியளித்தது. வெயில் தலைகாட்டவில்லை. இந்நிலையில் மாலையில் திடீரென மாநகரின் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது. மேலும் மின்னலும் பலமாக இருந்தது.

    வண்ணார்பேட்டை, சந்திப்பு, டவுன், பேட்டை, பாளையங்கோட்டை, பெருமாள்புரம், சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் கொக்கிரகுளம் பழைய ஆற்றுப்பாலம், பாளையங்கோட்டை மார்க்கெட் மற்றும் பெருமாள்புரத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது.

    சுமார் 2 மணி நேரம் டவுன் பகுதியில் பெய்த கனமழையால் டவுன் வ.உ.சி. தெருவில் மழைநீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி கிடந்தது. ஏற்கனவே வாறுகால் அடைப்புகளால் சாக்கடை நிரம்பிய நிலையில் இரவு முழுவதும் சாக்கடை நீர் மழைநீருடன் கலந்து செல்வதற்கு வழியின்றி தேங்கியது. அதில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். பாளையங்கோட்டை மற்றும் நெல்லையில் தலா 3 சென்டிமீட்டர் மழை கொட்டியது.

    நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பகலில் வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், மாலையில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டாரத்தில் அதிகபட்சமாக 3½ சென்டி மீட்டர் மழை பதிவாகியது. அம்பையில் இன்று காலை விட்டு விட்டு மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை. பாபநாசம் அணை நீர்மட்டம் 109 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 98½ அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 116 அடியாகவும் இருக்கிறது. 52 அடி கொண்ட கொடுமுடியாறு அணையில் 45 அடி நீர் இருப்பு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 5 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைக்கு வினாடிக்கு 35 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 67¾ அடியாக உள்ளது. கடனா அணை நீர்மட்டம் 60 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 130½ அடியாக வும் உள்ளது.

    நகர் பகுதிகளை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதியான சிவகிரி சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து மாலை நேரங்களில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், நேற்றும் கனமழை கொட்டியது. இதனால் குளிர்ச்சியான நிலை அந்த பகுதிகளில் நிலவி வருகிறது.

    அதிகபட்சமாக சிவகிரியில் 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் லேசான சாரல் அடித்தது. இன்று காலை முதலே புளியங்குடி, சிவகிரி, பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர், கழுகு மலை, திருச்செந்தூர் சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. காடல்குடி, வைப்பார், சூரங்குடியில் பெய்த பரவலான மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    விளாத்திகுளம், கோவில்பட்டி, எட்டயபுரத்தில் சாரல் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாநகர பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    • பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் விஜயை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்.
    • எந்த தலைவரும் தன் தொண்டன் இறக்க வேண்டும் என எண்ண மாட்டார் என பேசியவர் முதல்வர்.

    நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கரூர் விவகாரத்தில் முதலமைச்சரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள்.

    * பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் விஜயை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்.

    * கரூர் நெரிசலில் 41 பேர் இறந்தபோது துண்டை காணோம், துணியை காணோம் என ஓடினர்.

    * எந்த தலைவரும் தன் தொண்டன் இறக்க வேண்டும் என எண்ண மாட்டார் என பேசியவர் முதல்வர்.

    * முதலமைச்சரின் பெருந்தன்மையை சாதாரண மக்கள் பாராட்டி கொண்டிருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார் கோவில்,

    நெல்லை:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் வினியோக கழகத்தில் கல்லிடைக்குறிச்சி விநியோக பிரிவு செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் ஒ.துலூக்கப்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஓ.துலூக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பளையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப் பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இதேபோல, வீரவநல்லூர் துணை மின்நிலையத்திற்கு உட்டபட்ட கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேச வநல்லூர், வெள்ளாங் குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    மேலும் அம்பாசமுத்திரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார் கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    மணிமுத்தாறு துணை மின் நிலையத்திற்குட்பட்ட மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்குபாப்பான்குளம் மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    கடையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கடையம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பண்டாரகுளம், பொட்டல் புதூர், திருமலையப்பபுரம் ரவணச்சமுத்திரம், வள்ளியம்மாள் புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்பபுரம், வெய்காலிபட்டி, மேட்டூர் ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாபநாசம், மணிமுத்தாறு அணையை இணைப்பதற்கான ஆய்வு நடத்தி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பணி நியமனத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலையை திறந்து வைத்த பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக எந்த கடிதமும் அ.தி.மு.க சார்பில் சட்டமன்ற பேரவைக்கு கொடுக்கப்படவில்லை. அவ்வாறு கடிதம் அளிக்கும் பட்சத்தில் மனு மீது பரிசீலனை நடத்தப்படும். அ.தி.மு.க. அளிக்கும் ஆவணத்தின் அடிப்படையில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் உயர் பதவியில் இருந்து கொண்டு தமிழகம் குறித்து இந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டாம். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள நிதீஷ் குமார் செய்யும் துன்பத்தால் தான் அங்கிருந்து புலம்பெயர்ந்து அங்கு உள்ளவர்கள் தமிழகம் வந்துள்ளனர். தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் துன்பமாக இல்லை. இன்பமாக இருக்கின்றனர்.

    வட மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வசிப்பவர்களும் இலவச பஸ் பயணம், படிப்பில் உதவித்தொகை உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்களால் பயன்பெற்று வருகின்றனர்.

    பாபநாசம், மணிமுத்தாறு அணையை இணைப்பதற்கான ஆய்வு நடத்தி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் வனத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சில சிக்கல்கள் இருக்கிறது. எனினும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அந்த சிக்கல்களை தீர்த்து அணைகளை இணைக்க நடவடிக்கை எடுத்து விடுவார்.

    நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 பணி இடங்களை நேர்மையாக வெளிப்படை தன்மையோடு அண்ணா பல்கலைக்கழக உதவியுடன் அமைச்சர் நேரு நியமனம் செய்துள்ளார். பணி நியமனத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை.

    அமலாக்கத்துறை தமிழக டி.ஜி.பி.க்கு பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக விசாரணை நடத்த கடிதம் அனுப்பி உள்ளது. இந்த கடிதம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். உறுதிப்படுத்தப்படாத ஆவணங்கள் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை அல்லது விசாரணை ஆகியவையை அனுமதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    மணல் ஊழல், டாஸ்மாக் ஊழல் என உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வைத்து தேர்தல் நேரத்தில் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற நோக்கத்தில் இது போன்று அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பாதி மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். மீதி மசோதா அவரிடமே கிடப்பில் உள்ளது என்றார். 

    • தி.மு.க. ஆட்சி பழிவாங்கும் ஆட்சியாக இருக்கிறது.
    • தேர்தல் வர இருப்பதால் இந்தாண்டு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் கூட கொடுப்பார்கள்.

    இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அப்போது அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு, நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா மற்றும் திரளான பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நிருபர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து மரியாதை செலுத்தியது குறித்து நான் கருத்துக்கள் ஏதும் சொல்ல விரும்பவில்லை.

    தமிழக முதலமைச்சர் பீகாரை பற்றி பேசியதை தான் பிரதமர் மோடியும் பேசி இருக்கிறார். தமிழக முதலமைச்சர் தான் பிரிவினையை தூண்டும் விதமாக பேசுகிறார். அவர் வட மாநிலம், தென் மாநிலம் என்னும் பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட வேண்டாம். அவருக்கு தோல்வி பயம் வந்துள்ளது. அதன் காரணமாக ஒவ்வொரு கால கட்டத்திலும் பொய்யையே பேசி வருகிறார். இந்த ஆட்சியே பொய் சொல்லும் ஆட்சியாக உள்ளது.

    இந்த ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என பல உயர்வு கொண்டு வரப்பட்டு மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளனர். தேர்தல் வர இருப்பதால் இந்தாண்டு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் கூட கொடுப்பார்கள்.

    தி.மு.க. ஆட்சி பழி வாங்கும் ஆட்சியாக இருக்கிறது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற நிலை இருக்கிறது.

    தமிழக நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர்கள் நியமனத்தில் கோடிக்க ணக்கில் ஊழல் நடந்ததாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில், தேர்தல் காலங்களில் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பர்களும், நிரந்தர பகைவர்களும் இல்லை. நாங்கள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

    • அணு உலைகளில் பராமரிப்பு பணி, எரிபொருள் நிரப்பும் பணி உள்ளிட்டவற்றின்போது மின் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவது வழக்கம்.
    • அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும்.

    நெல்லை:

    நாட்டின் அணுசக்தித் துறையில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணி கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில், புதிதாக 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த அணு உலைகளில் பராமரிப்பு பணி, எரிபொருள் நிரப்பும் பணி உள்ளிட்டவற்றின்போது மின் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பராமரிப்பு மற்றும் அணு எரிபொருளை மறுநிரப்பும் பணிகளுக்காக அணு உலை 2-ன் முழு உற்பத்தித் திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அணு உலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய தொகுப்பில் பகிரப்பட்டாலும், மின் பகிர்வு ஒப்பந்தத்தின்படி தமிழகத்திற்கு அதிகபட்சமாக 562 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மின் உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

    நீண்ட காலத்திற்கு பிறகு அலகு 2-ல் மேற்கொள்ளப்படும் இந்த முழுமையான பராமரிப்பு பணிகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் பணி சுமார் 2 மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×