த.வெ.க.வின் வளர்ச்சி தி.மு.க.வின் தூக்கத்தை கெடுத்துள்ளது - நாஞ்சில் சம்பத்

தி.மு.க. ஒரு மூடநம்பிக்கை; அது முஸ்லிம்களை காக்க தவறிவிட்டது.அனைத்து கடற்கரை மக்களும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்.
த.வெ.க.வின் வளர்ச்சி தி.மு.க.வின் தூக்கத்தை கெடுத்துள்ளது - நாஞ்சில் சம்பத்
Published on

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஆகிய முப்பெரும் விழா பஜார் திடலில் நடைபெற்றது.

இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

த.வெ.க. தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதனால் அச்சம் உருவாகிவிட்டது. அண்ணா, எம்.ஜி.ஆர். எழுதிய அரசியல் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை விஜய் எழுதப்போகிறார்.

தி.மு.க.வுக்கு மாற்றாக உருவான கட்சிகள் இன்று தி.மு.க.விடம் தங்களை இழந்துவிட்டது. தி.மு.க.-விற்கு மாற்றாக தொடங்கிய ம.தி.மு.க.வை, தி.மு.க.விடம் தொலைத்துவிட்டு மதுரை, திருச்சி என கட்சியின் தலைவர் வைகோ ம.தி.மு.க.வை தேடி வருகிறார்.

தி.மு.க.வுக்கு மாற்றாக தொடங்கப்பட்ட தே.மு.தி.க.வை துண்டு துண்டாக வெட்டி விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விற்பனை செய்ய தயாராகிவிட்டார். மாற்று என டார்ச் விளக்குடன் வந்த கமல்ஹாசன் அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் ஓய்வு எடுக்கிறார். தி.மு.க. ஒரு மூடநம்பிக்கை. அது முஸ்லிம்களை காக்க தவறிவிட்டது.

தமிழக வெற்றிக் கழகம் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று அரசியல் கட்சி மட்டுமல்ல. ஆட்சி மாற்றத்திற்கான கட்சி.

தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை சொல்வதற்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயங்குகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி தி.மு.க.வின் தூக்கத்தை கெடுத்துள்ளது. எங்களுக்கு எதிரி தி.மு.க. தான் என விஜய் அறிவித்த பின்னர் முதலமைச்சர் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்.

தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரித்துவிட்டது. அதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் தவறிவிட்டார். தமிழகம் போதையில் தள்ளாடுகிறது. அதனை காப்பாற்ற முதலமைச்சர் தவறிவிட்டார். ஆளும் கட்சி மெஷின் பவர், மணி பவர் ஆகியவற்றுடன் செயல்படுகிறது. இப்போது மசில் பவரை அதாவது தசை பலத்தை காட்டி தி.மு.க. குண்டர்களை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் தாக்கப்படுகிறார்கள். எங்கள் தலைவர் விஜய்க்கு மக்கள் பவர் அதிகரித்து வருகிறது.

இஸ்லாமியர்களின் பாதுகாவலன் என சொல்லும் தி.மு.க. இஸ்லாமியர்களுக்காக கொண்டுவரப்பட்ட 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அனைத்து கடற்கரை மக்களும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். அனைத்து சாலைகளும் பனையூரை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டது. போகிற போக்கை பார்த்தால் எல்லையில் நாட்டை பாதுக்கும் ராணுவ கேப்டன் கூட விசில் அடிக்கக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிடுவார் என தோன்றுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com