என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • இந்த வழக்கில் ஏற்கனவே 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்ட நிலையில் கேரள ஏஜெண்டுக்கு போலீசார் வலை.

    நெல்லையில் கேரள மாநில மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில், சுத்தமல்லி காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு பதிவு செய்யப்பட்டு, 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும், முக்கூடல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சீதற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் ஏற்கனவே 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்ட நிலையில் கேரள ஏஜெண்டுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

    • சேரன்மகாதேவியில் சட்டக்கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, கீழ நடுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (22). சென்னையிலுள்ள தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாளுக்கு முன் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.

    இந்நிலையில், இன்று காலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவரை கமிட்டி நடுநிலைப்பள்ளி அருகே ஒருவர் வழிமறித்து கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை உறவினர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இன்று உயிரிழந்தார். இதுதொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக மணிகண்டனை சேரன்மகாதேவியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.

    நெல்லைப் பகுதியில் ஒரே நாளில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • 3 நாட்களுக்குள் கேரள அரசு பொறுப்பேற்று கழிவுகளை அகற்ற வேண்டும்- தேசிய பசுமை தீர்ப்பாயம்.
    • 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று கொட்டப்பட்டு கழிவுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

    கேரளா மாநில மருத்துவக் கழிவுகள், திடக்கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டன.

    இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் 3 நாட்களுக்குள் கேரள அரசு பொறுப்பேற்று கழிவுகளை அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கேரள அரசு ஒரு குழுவை அமைத்து கழிவுகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டது.

    அதனைத்தொடர்ந்து 8 பேர் கொண்ட கேரள மாநில அதிகாரிகள் குழு இன்று கழிவுகள் கொட்டப்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. எந்த வகையான கழிவுகள் கொட்டப்பட்டன. அவைகள் அபாயகரமானதா? என்பது குறித்த தரவுகளை இந்த குழுவினர் சேகரித்தனர். இது தொடர்பாக அவர்கள் கேரள மாநில அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய இருக்கின்றனர்.

    இந்த நிலையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் குழு "மருத்துவக் கழிவுகளில் சோதனைக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகளே அதிகம் உள்ளன. கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அபாயகரமானது இல்லை. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி கழிவுகளை அகற்றுவது பற்றி கேரள அரசு நடவடிக்கை எடுக்கும்" எனத் தெரிவித்துள்ளது.

    • கோர்ட்டு முன்பு உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • கொலைக்கு பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி என்ற பல்லு மாயாண்டி (வயது 28).

    இவரது தந்தை மணி பால் வியாபாரம் மற்றும் பந்தல் கட்டும் தொழில் செய்து வந்தார். மாயாண்டி தனது தந்தைக்கு உதவி செய்து வந்ததோடு, கூலி வேலைக்கும் சென்று வந்தார்.

    மாயாண்டி மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கில் ஆஜராவதற்காக மாயாண்டி இன்று காலை நெல்லை மாவட்ட நீதிமன்றத்துக்கு தனது தம்பி மாரிச்செல்வத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    இவர்கள் கே.டி.சி. நகர்-திருச்செந்தூர் ரோட்டில் கோர்ட்டு முன்பு வந்தனர். அப்போது காரில் ஒரு மர்மகும்பல் வந்தது. அதில் இருந்து இறங்கிய ஒருவர் மாயாண்டியை நோக்கி அரிவாளால் வெட்டுவதற்காக ஓடி வந்தார்.

    இதைப்பார்த்த மாயாண்டியும், மாரிச்செல்வமும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஆளுக்கொரு திசையில் ஓட்டம் பிடித்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய மேலும் 3 பேர் சேர்ந்து மாயாண்டியை விரட்டினர்.

    அந்த கும்பல் கோர்ட்டு முன்பு மாயாண்டியை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. மாயாண்டியின் கை மணிக்கட்டை துண்டாக்கிய கும்பல், கால் மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டியதோடு தலையையும் சிதைத்தது.

    இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மாயாண்டி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    உடனே கொலையாளிகள் காரில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அங்கு நின்ற ஒரு வக்கீல், ஒரு போலீஸ்காரர் சேர்ந்து, கும்பலில் இருந்த ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். மற்ற கொலையாளிகள் காரில் ஏறி தப்பிச்சென்றனர்.

    கோர்ட்டு முன்பு ஏராளமான வக்கீல்கள், போலீசார் மற்றும் பொது மக்கள் திரண்டிருந்த நிலையில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்துக்கு மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா, கிழக்கு மண்டல துணை கமிஷனர் விஜயகுமார், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் மாயாண்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    கொலை செய்யப்பட்ட மாயாண்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ராஜாமணி (33) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மாயாண்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக பிடிபட்ட கீழநத்தம் இந்திரா காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற வாலிபரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கொலை நடந்த சமயத்தில் கோர்ட்டு முன்பு ஏராளமான போலீசார் இருந்தும் குற்றவாளிகள் தப்பிச்சென்ற போது அவர்களை பிடிக்க முடியாமல் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர்.

    இதைத்தொடர்ந்து வக்கீல்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதற்கிடையே கோர்ட்டு முன்பு உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கொலை கும்பல் கேரள பதிவெண் கொண்ட ஒரு காரில் வந்து கொலை செய்ததும், அந்த காரிலேயே தப்பிச்சென்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து காரின் அடையாளத்தை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

    இதன் பயனாக கொலையில் தொடர்புடைய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமகிருஷ்ணன், சுரேஷ், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், சிவா, தங்க மகேஷ், மனோ ராஜ் ஆகியோரும் கைதாகி உள்ளனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • நெல்லை நீதிமன்ற வளாகத்தில் கொலை சம்பவம் அரங்கேறியதால் பரபரப்பு.
    • கொலை செய்த கும்பல் காரில் தப்பியோட்டம்.

    நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞரை அரிவாளால் வெட்டிய நான்கு பேர் கும்பல் அவரது முகத்தை சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

    ஊராட்சி மன்ற துணை தலைவர் கொலை வழக்கில் ஆஜராக சென்ற போது மாயாண்டியை நான்கு பேர் கொண்ட கும்பல் மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதியில் வைத்தே வெட்டிக் கொன்றது. இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    படுகொலை செய்யப்பட்ட மாயாண்டி மீது கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற வாசலில் கொலை நடைபெற்ற நிலையில் காவலர்கள் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

     


    கொலை சம்பவம் அரங்கேறியதை அடுத்து நீதிமன்றம் முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என்றும், வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், கொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆறு மாதங்களுக்கு முன் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கொலை செய்த கும்பலோடு வந்ததாக போலீசார் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    • நெல்லை நீதிமன்ற வளாகத்தில் கொலை சம்பவம் அரங்கேறியதால் பரபரப்பு.
    • கொலை செய்த கும்பல் காரில் தப்பியோட்டம்.

    நெல்லை நீதிமன்ற வாசலில் மாயாண்டி endraஇளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞரை அரிவாளால் வெட்டிய நான்கு பேர் கும்பல் அவரது முகத்தை சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

    ஊராட்சி மன்ற துணை தலைவர் கொலை வழக்கில் ஆஜராக சென்ற போது மாயாண்டியை நான்கு பேர் கொண்ட கும்பல் மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதியில் வைத்தே வெட்டிக் கொன்றது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மாயாண்டியை கொலை செய்ய ஏற்கனவே இரண்டு முறை முயற்சி நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நீதிமன்ற வளாகத்திலேயே கொலை சம்பவம் அரங்கேறிய நிலையில், நான்கு பேர் கும்பல் காரில் ஏறி தப்பியோடியது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்த நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வெட்ட வெளிச்சத்தில் படுகொலை சம்பவம் அரங்கேறியது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

    • 7 பேர் கும்பல் வழிமறித்து தாக்குதல்.
    • தோள்பட்டை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடி கிராமம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் செய்யது மசூது (வயது 55). இவர் அப்பகுதியில் பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    வழக்கம்போல் நேற்று இரவு 11.25 மணி அளவில் அவர் ஓட்டலில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் அம்பை-ஆலங்குளம் சாலையில் சென்றபோது எதிரே 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. இதனால் பயந்துபோன மசூது அருகில் உள்ள தெருவுக்குள் ஓட்டம் பிடித்தார்.


    உடனே மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய 4 பேர் கும்பல் மசூதுவை ஓட ஓட விரட்டிச்சென்று கை, தோள்பட்டை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாப்பாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்த மசூதுவை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்போது அந்த பகுதியில் பள்ளிவாசல் தெருவில் உள்ள ஒருவீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு போலீசார் விரைந்து சென்றனர்.

    அப்போது அந்த பகுதியில் வசிக்கும் பாய் வியாபாரியான மைதீன்(52) என்பவரது வீட்டின் கதவு மற்றும் ஜன்னலை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு பெட்ரோல் குண்டை மர்ம கும்பல் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

    அதன்பின்னரே அந்த சம்பவத்தில் தொடர்புடைய அதே கும்பல் ஓட்டல் தொழிலாளியான மசூதுவை வெட்டிவிட்டு சென்றுள்ளது. அந்த கும்பல் பாப்பாக்குடி மற்றும் நந்தன்தட்டை பகுதிகளில் உள்ள 6 வீடுகளின் கதவுகளை அரிவாளால் வெட்டியதோடு, முக்கிய பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களையும் உடைத்து விட்டு தப்பிச்சென்றது.

    இந்த சம்பவம் தொடர்பாக பாப்பாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ் கண்ணா வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையில் மசூதுவை வெட்ட அரிவாளுடன் மர்ம கும்பல் ஓடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நள்ளிரவில் கும்பல் பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வாலிபரை வெட்டிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில் பாப்பாக்குடி, பள்ளக்கால் பொதுக்குடி உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இடைகால் உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் பேரிகார்டுகள் போடப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளக்கால் பொதுக்கு டியில் உள்ள அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பாப்பாக்குடியை சேர்ந்த செல்வசூர்யா என்ற மாணவன் கடந்த 2022-ம் ஆண்டு பள்ளியில் நடந்த தகராறில் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பள்ளக்கால் பொதுக்குடி, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் செல்வசூர்யாவின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக அவருக்கு நெருக்கமானவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த முன்விரோதத்தில் அவரது கொலையில் தொடர்புடையவர்களின் உறவினர்கள் வீடுகளை குறி வைத்து அரிவாளால் கதவுகளை வெட்டியும், பெட்ரோல் குண்டு வீசியும் அட்டகாசம் செய்துள்ளனர்.

    மேலும் சமீபத்தில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஊருக்குள் வேகமாக சென்றதை தட்டிக் கேட்டவர் வீடு, தங்களுக்கு வழக்கமாக கடையில் பொருட்களை கடனாக வழங்கிய நிலையில் தற்போது பொருட்கள் வழங்க மறுத்த கடைக்காரர் வீடு என அனைத்து தரப்பினரின் வீடுகளையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 

    • திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக் கூடும்.

    தெற்கு அந்தமான் கடல் பகுதியின் மேல் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

    இதன் காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.

    இதற்கிடையே திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் விழுப்புரம், தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • தாமிரபரணி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.
    • தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் நீரேற்று நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர்.

    வி.கே.புரம்:

    நெல்லை மாவட்டம் அம்பை, முக்கூடல், வீரவநல்லூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று காலையில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் குளங்களில் இருந்து உபரி நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் தற்போது சுமார் 50 ஆயிரம் கன அடி வரை வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் முக்கூடல் பகுதி தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள நீரேற்று நிலை யத்திற்கு அங்கு பணி யாற்றும் ஊழியர்களான ராஜரத்தினம், லோகராஜ், சங்கர சுப்பிரமணியன், சங்கர நாராயணன் ஆகிய 4 பேர் சென்றுள்ளனர். தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் நீரேற்று நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி வினோத்குமார் தலைமையில், அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் அவர்கள் கயிறு கட்டி, கடும் வெள்ளத்தில் நீரேற்று நிலையத்திற்குள் சென்று அங்கு சிக்கியிருந்த 4 பேரையும் அதே கயிறு மூலமாக பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தாதன்குளத்தில் நின்று செல்ல வேண்டிய இந்த ரெயில் நிற்காமல் சென்றது.
    • சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை 7.50 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் ரெயில் நிலையம் வழியாக திருச்செந்தூர் நோக்கி பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    ஆனால் தாதன்குளத்தில் நின்று செல்ல வேண்டிய இந்த ரெயில் நிற்காமல் சென்றது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை பின்னோக்கி கொண்டு சென்றார். இதனால் ரெயில் மீண்டும் தாதன்குளம் ரெயில் நிலையத்துக்கு சென்றது. இதை அங்கிருந்த பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் இருந்து சென்ற பாலக்காடு ரெயில் கச்சானாவிளை ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற காரணத்தினால் மீண்டும் பின்னோக்கி வந்தது. இந்த காட்சிகளில் அடிப்படையில் அந்த ரெயில் மதுரை செல்லும் போது உடனடியாக என்ஜின் டிரைவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இன்று தாதன்குளம் ரெயில் நிலையத்தில் பின்னோக்கி வந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் பின்னோக்கி இயக்கப்பட்ட பயணிகள் ரெயிலின் என்ஜின் டிரைவர் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டுள்ளார்.

    • ஏராளமான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர், களக்காடு, அம்பை, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், முக்கூடல், கோபாலசமுத்திரம், சுத்தமல்லி, மேலச்சவல் பத்தமடை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    முக்கூடல் பகுதியில் இருந்து கடையம் நோக்கி செல்லும் சாலையில் இடை கால் அருகே சாலையில் முழங்கால் அளவுக்கும் மேலாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நேற்று இரவு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    24 மணி நேரமாக கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந் துள்ள அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை 2 நாட்களாக பெய்து வருவதால் களக்காடு தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் அம்பை சுற்றுவட்டாரத்தில் சுமார் 22 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதே போல் பாப்பாக்குடி, இடைகால், சீதபற்ப நல்லூர், வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக ஏராளமான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    வீரவநல்லூர் பகுதியில் 25 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக வறண்டு கிடந்த குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் சரகம் புதூர் அருகே நான்கு வழி சாலையில் உள்ள முதியோர், பெண்கள் காப்பகம் ரோட்டின் தாழ்வான பகுதியில் உள்ளதால் மழை தண்ணீர் சூழ்ந்தது. முதியோர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    நெல்லை மாநகரப் பகுதியில் நெல்லையில் மட்டும் 20 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மாநகரில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக டவுன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    டவுன் முகமது அலி தெருவில் நேற்று நள்ளிரவில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. டவுன் காட்சி மண்டபம் பகுதியில் தடிவீரன் கோவில் தெரு, செண்பகம் பிள்ளை தெரு உள்ளிட்ட ஏராளமான தெருக்களில் மழை நீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதி அடைந்தனர்.

    காட்சி மண்டபம் அருகே உள்ள ஊசி மாடன் கோவில்களுக்குள் தண்ணீர் புகுந்தது. நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளிலும் மழை நீர் குளம் போல் தேங்கி கிடந்தது. நெல்லையப்பர் கோவிலில் வடக்கு மண்டபம் பகுதியில் தண்ணீர் புகுந்தது.

    டவுன் குறுக்குத்துறை முருகன் கோவிலை மூழ்கடித்தபடி தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    பாளையங்கோட்டை பகுதியிலும் மனக்காவலம் பிள்ளை நகரில் ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. அதிகாலையில் புகுந்த வெள்ள நீர் காரணமாக தங்கள் குழந்தைகளுடன் கடும் சிரமத்துக்கு இடையே பொதுமக்கள் வெளி யேறினர்.

    இதேபோல் கே.டி.சி நகரில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்பு களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாநகரின் விரிவாக்க பகுதிகளிலும் மழை நீர் தேங்கி கிடப்பதால் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நெல்லை மாநகர பகுதியில் மட்டும் சுமார் 2000 வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் நேற்று இரவு வரை பெய்த மழையிலேயே பஸ் நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்தது. இன்று அதிகாலை 3 மணி அளவில் பஸ் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள சிந்து பூந்துறை தெருவில் வெள்ள நீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதி அடைந்தனர். அங்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.

    நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள வங்கி கட்டிடத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. பேட்டை பழைய பேட்டை இணைப்பு சாலையில் வெள்ளநீர் கரை புரண்டு வருவதால் அங்குள்ள ஆதாம் நகர் பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது.

    இதேபோல் மாநகரின் பெரும்பாலான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. அவற்றை தீயணைப்புத் துறையினர் உடனடியாக சென்று அப்புறப்படுத்தி னர். ஒரு சில இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டாலும் மின் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு அவற்றை சரி செய்தனர்.

    டவுன் மேலநத்தம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் தெரியாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதன் காரணமாக மேலப்பாளையத்தில் இருந்து டவுனுக்கு செல்லும் அந்த சாலை ஆனது துண்டிக்கப்பட்டது. இன்று காலையில் மழை சற்று குறைய ஆரம்பித்த நிலையில் ஏராளமான பொது மக்கள் தரைபாலத்தை பார்வையிட்டனர்.

    இதே போல் ஆபத்தை உணராமல் வண்ணார் பேட்டை கொக்கிரகுளம் ஆற்று பாலம், வடக்கு புறவழிச்சாலை ஆற்று பாலங்களில் நின்றபடி வெள்ளத்தை கண்டு ரசித்தனர். ஏராளமானார் தங்களது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டதையும் காண முடிந்தது.

    கோவில்பட்டி பகுதியில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை இடை விடாது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் கோவில்பட்டி நகர் முழுவதும் சாலை களில் மழைநீர் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது.

    கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகத்தின் பின்பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் வளாகம் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. அங்குள்ள கார் இருசக்கர வாகனங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

    அப்பகுதியில் இருக்கக்கூடிய 30-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் மழை நீர் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த சமையல் பொருட்கள், டி.வி., வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்ற பொருட்களும் சேதம் அடைந்துள்ளன. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து இருந்துள்ளனர். தங்களது குழந்தைகளை அருகில் உள்ள உறவினர் வீட்டில் கொண்டு விட்டுள்ளனர்.

    பழனி ஆண்டவர் கோவில் அருகே உள்ள நீர் வரத்து ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் குறிஞ்சான் குளத்திற்கு செல்ல வேண்டிய மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. அதுமட்டுமல்லாது இ.எஸ்.ஐ.மருந்தக வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் இருந்து வரக்கூடிய மழை நீரும் வீடுகளுக்குள் புகுந்து வரும் சூழ்நிலை உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீர் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

    கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 22-வது வார்டு பகுதியில் உள்ள காமராஜர் தெரு பகுதியில் உள்ள 20 வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது. வீட்டில் இருந்த சமையல் பொருட்கள், கியாஸ் சிலிண்டர் அனைத்துமே மழைநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் புது ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    பலத்த மழையின் காரணமாக இனாம் மணியாச்சி, அத்தைக்கொண்டான் கண்மாய்கள் முழுவதும் நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் இளையரசனேந்தல் சாலையில் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    அந்த பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியே வர முடியாமல் உள்ளன. மேலும் அண்ணா பஸ் நிலையத்திற்குச் சென்ற அரசு பஸ் மழைநீரில் சிக்கி வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளது.

    அதேபோன்று அப்பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க், லாரி செட்டுகள், தனியார் நிறுவனங்களிலும் மழை நீர் புகுந்து வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தென்காசி மாவட்டத்திலும் நேற்று அதிகாலையில் தொடங்கிய மழை இன்று காலை 9 மணி வரையிலும் பரவலாக பெய்தது. சிறிது நிமிடங்கள் கூட இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் வறண்டு கிடந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அந்த குளங்களில் 70 சதவீதம் தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.

    ஏற்கனவே குறைந்த அளவு தண்ணீர் கிடந்த குளங்கள் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளது.

    பல ஆண்டுகளாக நிரம்பாத குளங்கள் கூட நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒரு சில இடங்களில் கோவில்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நேர் புகுந்தது. 2 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர் சாலை துண்டிக்கப்பட்டது. அங்குள்ள புது குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பிய நிலையில் மறுகால் பாய்ந்ததால் மெயின் ரோட்டில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    ஆலங்குளம் பஞ்சாயத்து அலுவலக தெருவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த பகுதியில் தெருக்களில் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் கரைபுரண்டு ஓடியது.

    சங்கரன்கோவில், திருவேங்கடம், கரிவலம்வந்தநல்லூர், வாசுதேவநல்லூர், சிவகிரி, கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்ததன் காரணமாக ஏராளமான குளங்கள் நிரம்பியது. முக்கிய இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இது தவிர தென்காசி மாவட்டம் ராமநதி, கடனாநதி அணைகளில் இருந்தும் தண்ணீர் அதிக அளவில் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு பகுதிகளில் இருந்து கால்வாய்கள் மூலமாகவும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வருவதால் இன்று காலை நிலவரப்படி 60 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது.

    இதனால் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதி களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசு நிவாரண முகாம்களுக்கு வந்து தங்கவும், தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் அறிவுறுத்தி உள்ளார். 

    • தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது.
    • அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    வானிலை ஆய்வு மையம் அதிகனமழைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது/ Tirunelveli Tenkasi district Schools tomorrow Leave for Heavy rains

    வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. சில மாவட்டங்களில் இன்னும் பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    இன்று காலை முதல் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    தொடரந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    ×