என் மலர்
திருநெல்வேலி
- அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம்.
- டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது.
நெல்லை:
ம.தி.மு.க நெல்லை மண்டல தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம் வரவேற்றார்.
பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்திலதிபன் ஆகியோர் கலந்து கொண்டு நிதியினை பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் நெல்லை மண்டலத்துக்குட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய கட்சி ரீதியிலான 10 மாவட்டங்கள் சார்பில் சுமார் ரூ.2 கோடி வரை தேர்தல் நிதி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் நிஜாம், ரைமன்ட், சுதா பாலசுப்பிரமணியன், உதயசூரியன், ஆர்.எஸ்.ரமேஷ், ரஞ்சன், வெற்றிவேல், வேல்முருகன், ரவிச்சந்திரன், கண்ணன் ஆகியோர் தலைமையில் நிதி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சதன் திருமலைகுமார் எம்.எல். ஏ., ரகுராமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி சிப்பிபாறை ரவிச்சந்திரன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் திவான், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராணி செல்வின், மாநில செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி மற்றும் திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள்? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம். அந்த குழு தி.மு.க.வில் அமைக்கப்படும் பேச்சுவார்த்தை குழுவுடன் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும்.
எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஓ.பி.எஸ்.சும் எங்கள் கூட்டணியில் வந்துள்ளார். அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம். அவர் அரசியல் அனுபவம் மிக்கவர்.
திராவிட இயக்கங்கள் விழிப்பாக உள்ளது. திருக்குறள் குறித்து பேசி தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். அது நடக்காது.
வாஜ்பாய் போன்று ஒரு தலைவரை நான் பார்க்கவில்லை. ஆனால் இப்போது பா.ஜ.கவின் நிலை வேறு. அதேபோல் அத்வானியும் ஒரு வினோதமான தலைவர் தான். அவரிடம் நான் மத சார்பின்மையை ஆதரிக்கிறீர்களா? என்று நேருக்கு நேர் நான் கேட்டபோது அவர் ஆம் என்று தைரியமாக சொன்னார். எனது குரல் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒலிப்பது குறித்து காலம் பதில் சொல்லும்.
நான் இதுவரை பாராளுமன்றத்தில் 1360 முறை பேசியுள்ளேன். அதனை 5 தொகுப்புகளாக புத்தகமாக வடிவமைத்து ஒவ்வொரு முக்கிய தலைவர்களையும் சந்தித்து வழங்கி வருகிறேன்.
வந்தே மாதரம் பாடலில் நீக்கப்பட்ட 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும், அதனை பள்ளி, கல்லூரிகளில் இசைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை ம.தி.மு.க. சார்பில் எதிர்க்கிறோம். இந்தியா என்பதை பாரத் என்று மாற்றவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும்.
அதேபோல் இந்தியாவின் தலைநகரான டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது. இது வரும் காலங்களில் அபாயகரமானதாக மாறும். இதனையும் அனைத்து மாநிலத்தவர்களும் சேர்ந்து முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும் என்றார்.
- மாணவர்கள் நமது தேசத்தலைவர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
- அவர்களது தியாகங்கள் நாட்டுக்கு அவர்கள் செய்த பங்களிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே கௌசால்யபுரம் பகுதியில் அமைந்துள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பி.சி.வி சர்வதேச பள்ளியில் (Holy Angels BCV International School) 2026-ம் ஆண்டு விழா ''சிற்பிகா 26'' என்ற பெயரில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கலந்து கொண்டு பள்ளியில் சிறந்து விளங்கிய மாணவிக்கு பொன்னாடை அணிவித்து விருதினை வழங்கி சிறப்புரையாற்றினர்.
அப்போது விஜய் வசந்த் எம்.பி. பேசியதாவது:-
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவ- மாணவிகள் இருக்க வேண்டும். அதை போல் மொபைல் போனை அவசியத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதனை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று மாணவ- மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.
மாணவர்கள் நமது தேசத்தலைவர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது தியாகங்கள் நாட்டுக்கு அவர்கள் செய்த பங்களிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை போல் நாமும் இந்த சமுகத்திற்கு தனது பங்களிப்பை செலுத்த வேண்டும். நமது தாய், தந்தைக்கு மரியாதை அளிக்க வேண்டும் என பேசினார்.

படிப்பு மட்டும் இல்லாமல் விளையாட்டு, நடனம் மற்றும் உங்களது திறமைகளை அறிந்து அதை வெளி கொணர வேண்டும். தாய், தந்தையர்களும் உங்களது குழந்தைகளின் திறமைகளை அறிந்து வெளி கொண்டு வர உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு விஜய் வசந்த் எம்.பி. பேசினார்.
நிகழ்ச்சியில் குழந்தைகளின் கண்கவர் நடனம் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- நெல்லை மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் உடனடியாக நீதிமன்றத்திற்கு விரைந்தனர்.
- நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு மேலும் கூடியது.
நெல்லை:
நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் பாளையங்கோட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
இந்த நீதிமன்றத்தின் வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம், மகளிா் சிறப்பு நீதிமன்றம், போக்சோ சிறப்பு நீதிமன்றம் என ஏராளமான நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் வருவதற்கு தனி நுழைவு வாயில் உள்ளது. இதை தவிர கோர்ட்டுக்கான மெயின் நுழைவாயில் மற்றும் வக்கீல்கள் செல்லும் நுழைவு வாயில் என மொத்தம் 3 வாயில்கள் உள்ளன. இந்த வாசல்களில் போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம்.
தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த நீதிமன்றத்திற்கு வந்து செல்வதால் எப்போதும் நீதிமன்ற வளாகம் பரபரப்பாகவே காணப்படும்.
இங்கு இன்று காலை வழக்கம்போல் நீதிமன்ற பணிகள் தொடங்கிய நிலையில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற அலுவலக மின்னஞ்சலுக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலின்பேரில், நெல்லை மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் உடனடியாக நீதிமன்றத்திற்கு விரைந்தனர். நீதிமன்ற வளாகம் முழுவதும் மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா்.
நீதிபதியின் ஓய்வு அறைகள், நிர்வாக கட்டிடங்கள், கழிப்பிடங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் போலீசார் அங்குலம் அங்குலமாக மெட்டல் டிடெக்டர் மூலமாக தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு மேலும் கூடியது.
ஏற்கனவே கடந்த மாதம் 22-ந்தேதி இதே போல் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
மேலும் சரியாக 12.20 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பணியாளர்களை வெளியே அனுப்பிவிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- காதலர் தினத்தை முன்னிட்டு அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சலுகையை வழங்குகிறேன்.
- காதல் என்பது வெறும் டீன் ஏஜ் வயதினருக்கோ அல்லது இளைஞர்களுக்கோ மட்டுமே உரித்தானது அல்ல.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.
இவர் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று தொடங்கி 3 நாட்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஒரு டீ 1 ரூபாய் மட்டுமே என்று கூறி கடை முன்பு விளம்பர பலகையும் வைத்துள்ளார்.
இந்த அறிவிப்பு விளம்பர பலகையாக வைக்கப்பட்டதில் இருந்தே அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஜெயக்குமார் கூறுகையில், எங்கள் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பஸ் பயணிகள் மற்றும் சினிமா தியேட்டருக்கு வருபவர்கள் என மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

காதலர் தினத்தை முன்னிட்டு அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சலுகையை வழங்குகிறேன். சுத்தமான பசும்பால் மற்றும் இஞ்சி சேர்த்து சுவையாக தயாரிக்கப்படும் இந்த டீ, அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே எனது ஆசை.
காதல் என்பது வெறும் டீன் ஏஜ் வயதினருக்கோ அல்லது இளைஞர்களுக்கோ மட்டுமே உரித்தானது அல்ல. அது 20 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைத்து தரப்பினருக்குமானது. காதல் என்பது புனிதமானது. அது வெறும் வயது சம்பந்தப்பட்டது அல்ல. காதலை யாரும் கொச்சையாக பார்க்க வேண்டாம். காதல் என்ற உணர்வை அன்போடு அணுக வேண்டும். மக்களிடையே அன்பும், மகிழ்ச்சியும் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியை எடுத்தோம்.
நேற்று மட்டும் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் வந்தனர். இன்று 300 பேரை தாண்டி மக்கள் வந்து டீ அருந்தி செல்கின்றனர். இது வெறும் லாபத்திற்காக செய்வது அல்ல, இந்த காதலர் தினத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பமே காரணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
காதலர் தினத்தை ஒரு வணிக நோக்கமாக பார்க்காமல், சமூகத்தில் அன்பை பகிரும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் இவரின் செயலை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
- போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோல்டன் நகரை சேர்ந்தவர் ஞானசுந்தர் (வயது 35). இவர் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் வீடு இருக்கும் நிலையில், சுந்தர் தனது குடும்பத்தினருடன் வி.கே.புரத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இதனால் கோல்டன் நகரில் உள்ள வீடு பூட்டிக்கிடந்தது. அவ்வப்போது அவர் தனது வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை ஞானசுந்தர் கோல்டன் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 ஆயிரம் பணம், குத்துவிளக்கு உள்ளிட்ட பித்தளை பொருட்கள் திருட்டு போயிருந்தது.
வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருப்பதை அறிந்த ஞானசுந்தர், கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
- தி.மு.க. ஒரு மூடநம்பிக்கை; அது முஸ்லிம்களை காக்க தவறிவிட்டது.
- அனைத்து கடற்கரை மக்களும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்.
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஆகிய முப்பெரும் விழா பஜார் திடலில் நடைபெற்றது.
இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது:-
த.வெ.க. தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதனால் அச்சம் உருவாகிவிட்டது. அண்ணா, எம்.ஜி.ஆர். எழுதிய அரசியல் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை விஜய் எழுதப்போகிறார்.
தி.மு.க.வுக்கு மாற்றாக உருவான கட்சிகள் இன்று தி.மு.க.விடம் தங்களை இழந்துவிட்டது. தி.மு.க.-விற்கு மாற்றாக தொடங்கிய ம.தி.மு.க.வை, தி.மு.க.விடம் தொலைத்துவிட்டு மதுரை, திருச்சி என கட்சியின் தலைவர் வைகோ ம.தி.மு.க.வை தேடி வருகிறார்.
தி.மு.க.வுக்கு மாற்றாக தொடங்கப்பட்ட தே.மு.தி.க.வை துண்டு துண்டாக வெட்டி விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விற்பனை செய்ய தயாராகிவிட்டார். மாற்று என டார்ச் விளக்குடன் வந்த கமல்ஹாசன் அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் ஓய்வு எடுக்கிறார். தி.மு.க. ஒரு மூடநம்பிக்கை. அது முஸ்லிம்களை காக்க தவறிவிட்டது.
தமிழக வெற்றிக் கழகம் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று அரசியல் கட்சி மட்டுமல்ல. ஆட்சி மாற்றத்திற்கான கட்சி.
தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை சொல்வதற்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயங்குகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி தி.மு.க.வின் தூக்கத்தை கெடுத்துள்ளது. எங்களுக்கு எதிரி தி.மு.க. தான் என விஜய் அறிவித்த பின்னர் முதலமைச்சர் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்.
தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரித்துவிட்டது. அதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் தவறிவிட்டார். தமிழகம் போதையில் தள்ளாடுகிறது. அதனை காப்பாற்ற முதலமைச்சர் தவறிவிட்டார். ஆளும் கட்சி மெஷின் பவர், மணி பவர் ஆகியவற்றுடன் செயல்படுகிறது. இப்போது மசில் பவரை அதாவது தசை பலத்தை காட்டி தி.மு.க. குண்டர்களை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் தாக்கப்படுகிறார்கள். எங்கள் தலைவர் விஜய்க்கு மக்கள் பவர் அதிகரித்து வருகிறது.
இஸ்லாமியர்களின் பாதுகாவலன் என சொல்லும் தி.மு.க. இஸ்லாமியர்களுக்காக கொண்டுவரப்பட்ட 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அனைத்து கடற்கரை மக்களும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். அனைத்து சாலைகளும் பனையூரை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டது. போகிற போக்கை பார்த்தால் எல்லையில் நாட்டை பாதுக்கும் ராணுவ கேப்டன் கூட விசில் அடிக்கக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிடுவார் என தோன்றுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- திடீரென கூடங்குளம் ஊராட்சியை இணைப்பில் இருந்து நீக்கிவிட்டனர்.
- கூடங்குளம் பஜார் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் கிராமத்தில் நீண்ட நாட்களாக குடிநீர் பற்றாக்குறை பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண வள்ளியூர் வட்டார பகுதியில் செயல்படுத்தப்படும் ரூ.605 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்தில் கூடங்குளம் கிராமத்தை இணைத்திட முதலில் உத்தரவிடப்பட்ட நிலையில் திடீரென கூடங்குளம் ஊராட்சியை இணைப்பில் இருந்து நீக்கிவிட்டனர்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கூடங்குளம் பஞ்சாயத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை மாற்றி, புதிய குடிநீர் திட்டத்தில் கூடங்குளம் கிராமத்தையும் இணைக்க வேண்டும் எனக்கோரி கிராம மக்கள் கூட்டம் போட்டு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.
தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக தமிழக அரசை கண்டித்து கூடங்குளம் கிராமத்தில் உள்ள வீடுகளில் மக்கள் இன்று கருப்பு கொடி கட்டினர். கூடங்குளம் பஜார் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கூடங்குளம் ஊராட்சிக்கு சுனாமி மற்றும் கே.கே.என்.பி.பி. குடிநீர் திட்டங்களின் மூலம் வழங்கப்பட வேண்டிய 8 லட்சம் லிட்டர் குடிநீர் முழுமையாக வழங்கப்படவில்லை. தற்போது புதிய குடிநீர் திட்டத்திலும் எங்களை சேர்க்கவில்லை.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தையும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளையும் கண்டிக்கிறோம் என தெரிவித்தனர்.
- எங்கள் கூட்டணியில் பிரச்சனை என்கிறார்கள், ஆனால் தி.மு.க. கூட்டணியில் தான் பிரச்சனை உள்ளது.
- தமிழ்நாட்டில் இதுவரை தி.மு.க. தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது.
நெல்லையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எங்கள் கூட்டணியில் பிரச்சனை என்கிறார்கள், ஆனால் தி.மு.க. கூட்டணியில் தான் பிரச்சனை உள்ளது.
* தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? அல்லது விஜய் கட்சிக்கு செல்லுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
* உதயநிதி ஸ்டாலின் நாளைக்கு முதலமைச்சராக வேண்டும் என நினைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
* எதையாவது சொல்ல வேண்டும் என நினைத்து தான் ஆட்சியில் பங்கு ஒத்துவராது என முதல்வர் கூறி உள்ளார்.
* தமிழ்நாட்டில் இதுவரை தி.மு.க. தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது.
* தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்.
* தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்களே முதலமைச்சர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டசபை தேர்தல் முடியும் வரை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருவார்கள்.
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் பிரதமர் மோடி ஆட்சி நடத்த வேண்டும்.
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பாரதிய ஜனதா கட்சியால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
* சட்டசபை தேர்தல் முடியும் வரை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருவார்கள்.
* அமெரிக்காவிடம் பிரதமர் தலைகுனியக்கூடாது, அவர் தலைகுனிவது இந்தியாவே தலைகுனிவது போன்றது.
* இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் பிரதமர் மோடி ஆட்சி நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல்லையப்பர் கோவிலில் சமபந்தி விருந்தில் சுமார் 900 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
- என்னுடன் அமர்ந்திருந்த பெண் வீட்டிற்கு உணவு வேண்டும் என கேட்டார்.
நெல்லையப்பர் கோவில் சமபந்தியில் நரிக்குறவர் சிறுவர்கள் அனுமதிக்கப்படவில்லை என புகார் எழுந்ததையடுத்து, தவறான தகவலை திட்டமிட்டு பரப்புவதாக நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
* அண்ணா நினைவு நாள் சமபந்தியில் நரிக்குறவரின சிறுவர்கள் விரட்டியடிப்பு என திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது.
* நெல்லையப்பர் கோவிலில் சமபந்தி விருந்தில் சுமார் 900 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. நானே நேரில் ஆய்வு செய்தேன்.
* பிற்பகல் 1.20 மணிக்கு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
* சமூக நீதி கடைபிடிக்கப்பட்டு அனைவருக்கும் சமமான உணவு வழங்கப்பட்டது.
* தானும் சபாநாயகரும் அங்கு இருந்தவர்களுடன் அமர்ந்து சமபந்தி உணவை அருந்தினோம்.
* என்னுடன் அமர்ந்திருந்த பெண் வீட்டிற்கு உணவு வேண்டும் என கேட்டார். அவருக்கும் பார்சல் செய்து கொடுத்தோம்.
* வதந்தி பரப்பும் நபர் உணவு தீர்ந்த பின்னர் குழந்தைகளை அழைத்து வந்தார்.
* முறையாக கோவில் ஊழியர் அவரிடம் உணவு இல்லை என்பதை எடுத்துரைத்தார்.
* அரசியல் தூண்டுதலின் பேரில் குறிப்பிட்ட நபர் வேண்டுமென்றே வதந்தி பரப்பு வருகிறார்.
* சமூக நீதிக்கு இழுக்கு ஏற்படுத்தும் எந்த செயலும் நெல்லையப்பர் கோவிலில் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- விருந்தில் சிறுவர், சிறுமிகள் அமர்ந்து சாப்பிடுவதற்காக சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
- ஓட்டலுக்கு அழைத்துச்சென்று உணவு வாங்கி கொடுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகள் பரவியது.
நெல்லை:
பேரறிஞர் அண்ணா நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் மதியம் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்த விருந்தில் சிறுவர், சிறுமிகள் அமர்ந்து சாப்பிடுவதற்காக சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிறுவர், சிறுமிகள் பேசும் வீடியோ காட்சிகளும், அவர்களை ஓட்டலுக்கு அழைத்துச்சென்று உணவு வாங்கி கொடுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகள் பரவியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் அண்ணா நினைவு தினத்தன்று நடைபெற்ற சமபந்தியில் சபாநாயகர், மேயர், துணை மேயர், முன்னாள் அமைச்சர், மண்டலகுழுத் தலைவர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்குழுத் தலைவர், அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை ஒருவர் முகநூல் பக்கத்தில், கோவில் சமபந்தி விருந்தில் பேட்டையைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் புறக்கணிக்கப்பட்டனர் என்று தவறாக வதந்திகளை பரப்பி வருகிறார். சமபந்தி விருந்து என்பது பொதுவானது, இதில் யாரும் புறக்கணிக்கப்படவில்லை, வந்திருந்த 792 பயனாளிகள் உணவு சாப்பிட்டு விட்டு தான் சென்றனர். தனிநபர் பெயர் வாங்குவதற்காக கோவில் நிர்வாகம் தொடர்பாக தவறான செய்திகளை பதிவிட்டு வருகிறார். அவர் முகநூலில் பதிவிட்ட கருத்துகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று கோவில் நிர்வாகம் சார்பில் மறுக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- கடந்த 2021-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்திற்கு பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
- இலவச பயணம் என்றாலும் பயணிகள் கண்டிப்பாக டிக்கெட் வாங்க வேண்டும்.
நெல்லை:
தமிழக அரசு, பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மகளிர் விடியல் பயண திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணித்து வருகிறார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்திற்கு பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் அரசு டவுன் பஸ்சில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 2 பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.
அதாவது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை டவுன் பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன்பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளிடமும் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்தனர். அதில், அந்த பஸ்சில் பயணித்த 2 பெண்களிடம் டிக்கெட் இல்லை. இதனால் டிக்கெட் பரிசோதகர்கள், 2 பெண்களுக்கும் தலா ரூ.100 அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பஸ்சில் பயணம் செய்த பெண் பயணிகள் கூறும்போது, ''கண்டக்டர்கள் டிக்கெட் கொடுக்கும்போது 3 பேருக்கும் சேர்த்து ஒரு டிக்கெட், 6 பேருக்கு சேர்த்து ஒரு டிக்கெட் என மொத்தமாக கொடுக்கிறார்கள். ஆனால் டிக்கெட் வாங்கிய நபர் அவரது நிறுத்தம் வந்ததும் இறங்கி சென்றுவிட்டால் மற்றவர்களுக்கு டிக்கெட் இருக்காது.
இதுபோன்ற குளறுபடியான சம்பவத்தினாலேயே அந்த 2 பெண் பயணிகளிடம் டிக்கெட் இல்லை. இதுகுறித்து அவர்கள் விளக்கம் அளித்தும் அபராதம் விதித்துள்ளனர்'' என்றனர்.
இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பெண் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எந்த தகவலும் எங்கள் கவனத்துக்கு வரவில்லை. இருப்பினும் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் டிக்கெட் பரிசோதகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலவச பயணம் என்றாலும் பயணிகள் கண்டிப்பாக டிக்கெட் வாங்க வேண்டும். கண்டக்டர்களும் தனித்தனியாக அனைவருக்கும் டிக்கெட் கொடுத்திருக்க வேண்டும்.
எனினும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பெண் பயணிகளிடம் அபராதம் வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்களை எச்சரித்து அனுப்பி இருக்கலாம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






