என் மலர்
தேனி
- கம்பம் மெட்டு ராஜகுமாரி பகுதியில் ரகசியமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இடுக்கி கலால்துறை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- தப்பி ஓடிய சஜீவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையான கம்பம் அருகே கம்பம் மெட்டு ராஜகுமாரி பகுதியில் ரகசியமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இடுக்கி கலால்துறை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது அறிவுறுத்தலின் பேரில் கலால் சிறப்பு படை உதவி கலால் ஆய்வாளர் தாமஸ்ஜான், தலைமை நிர்வாக அதிகாரி மரியாஆல்பின் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதியில் தொடர்ந்து ரகசிய விசாரணை நடத்தினர். அதில் ராஜாக்காடு, கச்சிரபாலம், சஜீவன் என்பவர் சாராயம் காய்ச்சி அப்பகுதியில் உள்ள ரிசார்ட்ஸ் மற்றும் சிறு வியாபாரிகள் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரது தோட்டத்து வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பண்ணை வீட்டு கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 17 லிட்டர் சாராயம், இதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் கலால்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய சஜீவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டு தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
- தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
தேனி:
தமிழக பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தேனியில் தொடங்குகிறார். இதற்காக நாளை இரவு தேனிக்கு வரும் அவர் ஆண்டிபட்டியில் பிரசாரம் செய்ய உள்ளார்.
இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டு தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
அன்று இரவு தேனியில் தங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறுநாள் (24-ந் தேதி) தேனி அல்லிநகரம், பெரியகுளம், மூன்றாந்தல் ஆகிய இடங்களில் வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
- அரசரடி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று பழுதடைந்த நிலையில் பல வருடமாக காணப்பட்டது.
- நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ள நிலையில் வாக்குப்பதிவு மையத்தை சீரமைத்து என்ன பயன் என்றும் தெரிவித்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மேகமலை ஊராட்சிக்குட்பட்ட அரசரடி, இந்திரா நகர், பொம்முராஜபுரம், நொச்சிஓடை ஆகிய கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சராசரியாக 1500 வாக்குகள் பதிவாகும். வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமங்களில் எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை.
குறிப்பாக சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் போன்ற எந்த பணிகள் மேற்கொள்ள வேண்டுமானாலும் வனத்துறை அனுமதி பெற்றே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அரசரடி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று பழுதடைந்த நிலையில் பல வருடமாக காணப்பட்டது.
அதனை சீரமைக்க கூட வனத்துறை அனுமதிக்கவில்லை. பள்ளி கட்டிடம் பழுதான நிலையில் இருப்பதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவித்தும் கட்டிடத்தை சீர் செய்யவில்லை.
இது போன்ற காரணங்களால் மேற்படி 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அறிவிப்பு பலகை வைத்தனர். தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் ஏற்கவில்லை.
இந்நிலையில் இங்குள்ள அரசு பள்ளியில்தான் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதால் அந்த வாக்குப்பதிவு மையத்தை சீரமைக்க அதிகாரிகள் தலைமையில் பணியாளர்கள் வந்தனர்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் மாணவர்களுக்கு பாதிப்பு என்று நாங்கள் சொன்னபோது வராமல் வாக்குப்பதிவுக்காக மட்டும் பள்ளியை சீரமைக்க எதற்காக வந்தீர்கள் என கேள்வி எழுப்பினர். பள்ளியின் மேற்கூரையை இடித்து விட்டு நிரந்தரமாக கட்டிடத்தை சீரமைத்தால் அந்த பணியை மேற்கொள்ள வேண்டும். தற்காலிக பணி மேற்கொள்வதென்றால் வேண்டாம் என அவர்களுக்கு எச்சரித்தனர்.
மேலும் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ள நிலையில் வாக்குப்பதிவு மையத்தை சீரமைத்து என்ன பயன் என்றும் தெரிவித்தனர். இதனால் பணியை மேற்கொள்ளாமல் ஆணையாளர் தலைமையில் வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். இன்று திட்ட அலுவலர் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆந்திரா, மகாராஷ்டிராவில் இருந்து திராட்சை பழங்கள் வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகின்றன.
- திராட்சை பழங்களே சாலையோரங்களிலும், பழக்கடைகளிலும் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவு திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது.
மருத்துவ குணம் கொண்ட இப்பகுதியைச் சேர்ந்த பன்னீர் மற்றும் விதை இல்லா திராட்சை வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பகுதி திராட்சைக்கு புவிசார் குறியீடு வழங்குவதற்கான பரிசீலனையும் நடைபெற்று வருகிறது.
கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் அதிக அளவு திராட்சை பல்வேறு பகுதிகளுக்கு தொழிலாளர்களால் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆனால் வரத்து குறைந்துள்ளதால் பல ஊர்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. குறிப்பாக விதை இல்லா திராட்சைகள் வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும். இந்த வகை திராட்சை பழங்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். தற்போது ஆந்திரா, மகாராஷ்டிராவில் இருந்து திராட்சை பழங்கள் வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை பழங்களை சுத்தம் செய்ய ரசாயனங்களில் கலக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ரசாயனம் கலந்த திராட்சை பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் ½ மணி நேரம் ஊற வைத்து கழுவிய பின்னர் சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் திராட்சை பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் போது இது போன்ற எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படுவதில்லை.
இதனால் திராட்சையை வாங்கியவுடன் சாப்பிடும் பொதுமக்களுக்கு தொண்டை வலி, வயிறு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. தற்போது வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் திராட்சை பழங்களே சாலையோரங்களிலும், பழக்கடைகளிலும் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது. எனவே அதிகாரிகள் இது போன்ற திராட்சை பழங்களை எவ்வாறு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது? என்றும், அதில் ரசாயன கலப்பு உள்ளதா? என்பது குறித்தும் சோதனை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- மழை கைகொடுத்தால் மட்டுமே கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணமுடியும்.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
வருசநாடு:
வைகை அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை, வருசநாடு, அரசரடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை முற்றிலும் ஓய்ந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மூல வைகையாறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மூல வைகையாறு முற்றிலும் வறண்டு வருகிறது. குறைந்த அளவே தண்ணீர் வருவதால் பொதுமக்கள் மிகவும் கவலையடைந்து உள்ளனர். இதன் காரணமாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மழை கைகொடுத்தால் மட்டுமே கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணமுடியும். மூல வைகையாற்றில் நீர்வரத்து இல்லாததால் வைகை அணைக்கு 5 கனஅடி நீர் மட்டுமே வருகிறது.
அணையின் நீர்மட்டம் 64.52 அடியாக உள்ளது. பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4525 மி.கனஅடியாகும்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.20 அடியாக உள்ளது. 42 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 110.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
- ஆண்டுதோறும் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பராமரிப்பு பணிகள் குறித்து இக்குழு ஆலோசனை வழங்கும்.
- பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.80 அடியாக உள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பற்காக உச்சநீதிமன்றம் பரிந்துரையின் பேரில் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜய் சரண் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழகம் மற்றும் கேரள அரசு சார்பில் தலா 2 உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆண்டுதோறும் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பராமரிப்பு பணிகள் குறித்து இக்குழு ஆலோசனை வழங்கும். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டு மார்ச் 27-ந் தேதி இந்த குழு ஆய்வு நடத்தியது. இந்நிலையில் இந்த ஆண்டு இன்று ஆய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக நீர்வளத்துறையினர் செய்திருந்தனர்.
ஆனால் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இன்று நடைபெற இருந்த ஆய்வு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.80 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 64.60 அடியாக உள்ளது. 363 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 110.70 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- பாசனத்துக்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
கூடலூர்:
தமிழகத்தில் மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன.
தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2ம் போக நெல் சாகுபடி முடிந்ததால் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. எனவே தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு 711 கன அடியில் இருந்து இன்று 105 கன அடியாக குறைக்கப்பட்டது.

பாசனத்துக்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அணைக்கு 83 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 118.35 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 64.50 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 417 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை 1202 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 110.83 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- பணம் ஈட்டுவதற்காக நான் வெவ்வேறு ஊர்களுக்கு செல்லவில்லை.
- வருகிற தேர்தலில் மோடி வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் ஆவார்.
மேலசொக்கநாதபுரம்:
யூ-டியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான அகோரி சாமியார் தற்போது தேனி மாவட்டம் போடியில் வந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவதுடன் தான் இங்கேயே ஜீவசமாதி அடைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி புதுக்காலனி அன்னை இந்திரா ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வந்தவர் கலையரசன். இவர் இங்குள்ள சந்தனமாரியம்மன் ஆசியால் அருள்வாக்கு கூறும் சித்தராக மாறி தற்போது அகோரி சாமியாராக உருவெடுத்துள்ளார்.
காசிக்கு சென்று அங்குள்ள பெரியவர்களிடம் தீட்சை பெற்றதாக கூறும் இவர் கடந்த சில மாதமாக கோவையில் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் பிரபலமான அகோரி கலையரசன் சந்தனமாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய பின்பு அங்கு வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், சித்திரை திருவிழாவுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள எனது சொந்த ஊருக்கு வந்துள்ளேன்.
நான் போடியில் பிறந்து வளர்ந்த காலத்தில் இறைவனின் அருள் எனக்கு கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காளி தேவியின் அருளால் அகோரியாக மாறி என்னை பிரகனப்படுத்திக் கொண்டபிறகு பல்வேறு ஊர்களில் இருந்து என்னைத் தேடி பக்தர்கள் வரத் தொடங்கினர்.

அகோரியாக மாறிய நான் விஜயகாந்த் சமாதிக்கு சென்று வழிபாடு செய்தது ஏன்? என கேட்கிறார்கள். விஜயகாந்த் இறப்பது எனக்கு முன்பே தெரியும். அவர் இறந்த சமயத்தில் நான் காசியில் இருந்தேன். இதனால் அப்போது அவரை பார்க்க வரமுடியவில்லை. என்னைப் பொறுத்தவரை அது சமாதி கிடையாது. கோவில். மக்களுக்காக வாழ்ந்த மனிதக்கடவுள்.
எனவே அவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும். எனக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல. பணம் ஈட்டுவதற்காக நான் வெவ்வேறு ஊர்களுக்கு செல்லவில்லை. என்னை யார் வேண்டுமானாலும் இழிவாக பேசட்டும். எனக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்ததால் அதனை காண்பதற்காக காசியில் இருந்து வந்தேன். நான் பிரேமானந்தாவோ, நித்யானந்தாவோ கிடையாது. மக்களுக்கு என்னால் ஆன நல்ல காரியங்களை செய்வதற்காகவே இங்கு வந்துள்ளேன்.
எனது இறுதி காலம் போடியில்தான் இருக்க வேண்டும். எனக்கு இங்கே ஜீவசமாதி அமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான இடத்தையும் பக்தர்களை தேர்வு செய்ய கூறியுள்ளேன். சமீப காலமாக ஆன்மீகத்துக்கு எதிராக பலர் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு கடவுள் உரிய தண்டனை கொடுப்பார். தமிழகத்தில் ஆன்மீகத்துக்கு எதிராக பேசும் நபர்களால் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழும். வருகிற தேர்தலில் மோடி வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் ஆவார். மோடி சித்தர் வடிவானவர். அதனால்தான் அவருக்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்டி அதனை திறப்பு விழா நடத்தும் பாக்கியம் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அகோரி கலையரசன் போடிக்கு வந்திருப்பதை அறிந்ததும் தேனி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் அவரை காணக் குவிந்தனர். அவர்களுக்கு அருளாசி வழங்கியபடி அவர் மற்ற கோவில்களில் தரிசனம் செய்ய செல்வதாக கூறிச் சென்றார்.
- தையல் தொழிலாளர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களின் அளவை எடுத்து சீருடை தைக்க வேண்டும்.
- கேன்வாஸ், பட்டன் காஜாவுக்கே ரூ.20 செலவாகும்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெண்கள் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1680க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகளை தைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக சட்டைக்கு ரூ.22, கால்சட்டைக்கு ரூ.42 கூலி வழங்கப்படுகிறது. பெரும்பாலான சீருடைகள் மாணவர்கள் அணியும் நிலையில் இல்லை என்றும், தரமாக தைக்கப்படவில்லை என்றும் புகார் வந்ததையடுத்து சமூக நலத்துறை அலுவலர் சியாமளா தேவி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.
அதன்படி தையல் தொழிலாளர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களின் அளவை எடுத்து சீருடை தைக்க வேண்டும். கேன்வாஸ் வைத்து தரமான பட்டன் காஜா வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.
ஆனால் கேன்வாஸ், பட்டன் காஜாவுக்கே ரூ.20 செலவாகும். இந்த தொழிலை நம்பி ஏராளமான மாற்றுத் திறனாளிகள், விதவைகள் உள்ள நிலையில் அவர்களுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
எனவே இந்த உத்தரவுகளை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினர். ஆனால் அதற்கு ஷியாமளா தேவி மறுத்ததுடன் சங்கத்தை பூட்டி விட்டார். உங்களுக்கு வேலை கிடைக்காது என்று தெரிவித்தார். இதனால் தையல் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் முருகேஸ்வரி தலைமையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தொழிலாளர்களின் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தால் அது குறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஷியாமளா தேவி உறுதியளித்தார். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
- குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை.
- பல ஆண்டுகள் தங்கள் கோரிக்கைக்காக போராடி எந்த பலனும் கிடைக்கவில்லை.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள வெள்ளிமலை வனப்பகுதியில் அரசரடி, பொம்முராஜபுரம், நொச்சியோடை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்து வரும் நிலையில் மின்சாரம், சாலைவசதி என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் அளித்து வந்தனர்.
இப்பகுதி வனத்துறைக்கு கட்டுப்பட்ட இடம் என கூறி எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தனர். வனத்தை சேர்ந்து வாழ்ந்து வந்த இப்பகுதி மக்கள் தங்கள் நிலங்களுக்கு உரம், பூச்சி மருந்து போன்றவற்றை வாங்கி செல்லக்கூட முடியவில்லை.
மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. சேதம் அடைந்த தங்கள் வீடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் கூட வனத்துறையினர் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மலை கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதன்பின்பு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தங்கள் கிராமத்திற்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராததால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தராததால் தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அரசியல் கட்சியினர் யாரும் ஓட்டு கேட்டு இங்கு வர வேண்டாம் எனவும் மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கருப்புக் கொடி ஏற்றப்பட்ட கிராமங்களுக்கு ஆண்டிபட்டி தாசில்தார் காதர் செரீப் தலைமையிலான அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், பல ஆண்டுகள் தங்கள் கோரிக்கைக்காக போராடி எந்த பலனும் கிடைக்கவில்லை. ஓட்டு கேட்க மட்டும் ஊருக்கு வரும் கட்சியினர் அதன்பிறகு தங்களை கண்டுகொள்வதே இல்லை எனவும் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிபெற நாம் கடுமையாக உழைப்போம்.
- வருகிற தேர்தலிலும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் களம் காண்போம்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எருமலைநாயக்கன் பட்டியில் நடந்த தே.மு.தி.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்று விஜய பிரபாகரன் பேசியதாவது:-
தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி அமைத்து பணத்தை சுரண்டி வளமாக வாழ்ந்து வருகின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிபெற நாம் கடுமையாக உழைப்போம்.
பொருளாதார வசதி இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் தேர்தலை எதிர்கொள்வோம். அமைச்சர் உதயநிதியின் தாத்தா முன்னாள் முதல்வர் கருணாநிதி பல முறை முதலமைச்சராக இருந்தவர்.

உதயநிதியின் தந்தை ஸ்டாலின் முன்னாள் மேயர், தற்போதைய முதலமைச்சராக உள்ளார். அண்ணாமலைக்கு பா.ஜ.க. கட்சி உள்ளது. ஆனால் இது போன்ற எந்த பின்புலமும் இல்லாமல் விஜயகாந்த் மக்களை நம்பியே தேர்தலை சந்தித்தார். அதே போல் வருகிற தேர்தலிலும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் களம் காண்போம். நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். தயவு செய்து ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். நான் தேனி அல்லது விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு உள்ளது. தேனி தொகுதி கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன். யார் போட்டியிடுவார் என்பதை கட்சி தலைமை முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜய பிரபாகரன் மைக்கை எடுத்து பேசத் தொடங்கியதும் மின் தடை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியில் சிறிது நேரம் அருகில் இருந்த நிர்வாகிகளிடம் இந்த நேரத்தில் மின் தடை ஏற்படுமா எனக் கேட்டார். மின் தடை ஏற்படாது என்று தொண்டர்கள் தெரிவித்தனர். நான் பேச ஆரம்பிக்கும் நேரத்தை அறிந்து மின் இணைப்பை துண்டித்துள்ளனர். இது போன்ற பல இடையூறுகள் ஏற்படுத்தினாலும் நாம் சோர்ந்து விடக்கூடாது என தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
- சிறிது காலம் வேலையை நிறுத்திவிட்டு கனகராஜ் மீண்டும் வீடு கட்டும் பணியை தொடங்கினார்.
- இடம் தனக்கு உரிமையானது என்று கூறிய கனகராஜ் வாதிட்டார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே அமைந்துள்ளது சிலமலை கிராமம். இங்கிருந்து போடி செல்லும் ராணி மங்கம்மாள் சாலை அருகே ஜமீன் பைபாஸ் வண்டிப் பாதையில் சுமார் 34 சென்ட் நிலம் போடி சரக போக்குவரத்து போலீஸ் நிலையம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீண் உமேஷ் டோங்கரே தலையீட்டின் பேரில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
மேலும் சிலமலை ஊராட்சி மன்ற கூட்டத்தில் போலீஸ்நிலையம் கட்டுவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் புதிய போக்குவரத்து போலீஸ் நிலையம் கட்டுவதற்கு அனுமதி பெற்று நிதி ஒதுக்கீடு கூறி விண்ணப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் சிலமலை அருகில் உள்ள ராணி மங்கம்மாள் சாலை வண்டிப்பாதை அருகே வசித்து வரும் கனகராஜ் என்பவர் போலீஸ் நிலையம் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 34 சென்ட் நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து புதிதாக வீடு கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு கட்டிடப் பணிகளை தொடங்கினார்.
அஸ்திவாரங்கள் தோண்டப்படும் நிலையில் தகவல் அறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட நபரை எச்சரித்து பணியை நிறுத்துமாறு கூறினார். இதனால் சிறிது காலம் வேலையை நிறுத்திவிட்டு கனகராஜ் மீண்டும் வீடு கட்டும் பணியை தொடங்கினார்.
தற்போது அஸ்திவாரங்களில் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு சுவர் எழுப்பப்படும் நிலையில் தகவல் அறிந்த போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கனகராஜிடம் வேலையை நிறுத்தும்படியும், இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
மேலும் அப்பகுதியை சர்வே செய்ததில் அப்பகுதியில் உள்ள 34 சென்ட் நிலம் சிட்டா அடங்கல் பட்டாவில் வண்டிப்பாதையாக குறிப்பிட்டுள்ளது.
இருந்தபோதும் இந்த இடம் தனக்கு உரிமையானது என்று கூறிய கனகராஜ் வாதிட்டார். அதனையடுத்து ஆவணங்களை காட்டி இந்த இடம் உங்களுடையது இல்லை என கூறினார். மேலும் அப்பகுதிக்கு ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு வந்து புதிதாக கட்டப்பட்ட சுவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கனகராஜ் தானே புதிதாக கட்டிய சுவர்களை அகற்றினார். அதன்பின் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.






