என் மலர்tooltip icon

    சிவகங்கை

    மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள கல்லுவயலை சேர்ந்தவர் சின்னகருப்பன் (வயது 48). இவர் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். சம்பவத்தன்று சின்னகருப்பன் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் இருந்து வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அமராவதிபுதூர் பாலம் அருகில் அவர் வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கிவீசப்பட்ட சின்னகருப்பன் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்துபோனார். இந்த விபத்து குறித்து சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மானாமதுரை அருகே குழந்தைகளை தூக்கிச்சென்றதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணையக்குழு நேரில் விசாரணை நடத்தியது.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே உள்ள கொம்புகாரனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி கொந்தீசுவரி(வயது 21). இவர் கொம்புக்காரனேந்தல் சுயஉதவிக்குழுவில் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அந்த கடனை அவரால் செலுத்த முடியவில்லை. இதனால் சுயஉதவிக்குழு தலைவி வீராயி மற்றும் அதன் உறுப்பினர்கள் கொந்தீசுவரியின் குழந்தைகளை தூக்கிச்சென்றனர். இதனை அறிந்த கொந்தீசுவரி விரக்தியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

    இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மானாமதுரை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுயஉதவிக்குழு தலைவி வீராயியை கைது செய்துள்ளனர். மேலும் இறந்துபோன கொந்தீசுவரியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    இந்தநிலையில் கொந்தீசுவரி தற்கொலை தொடர்பாக விசாரிப்பதற்காக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய குழுவினர் கொம்புகாரனேந்தலுக்கு நேற்று வந்தனர். ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணை ஆணையர் முருகன் தலைமையிலான அந்த குழுவினர் கொந்தீசுவரியின் கணவர் கணேசன், தாயார் ஆகியோரிடம் நேரில் விசாரணை நடத்தினர். பின்னர் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, ஆதிதிராவிடர்-பழங்குடியின அமைப்புகள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.

    பின்னர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் கூறுகையில், வீராயியின் தொந்தரவு காரணமாகவே கொந்தீசுவரி இறந்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீராயியை கைது செய்துள்ளனர். தற்போது மத்திய அரசின் நிதியான ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்தை முதற்கட்டமாக கொந்தீசுவரியின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது கணவர் கணேசனுக்கு அரசு வேலை வழங்கவும், தாயாருக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவும், அவரது குழந்தைகளுக்கு நல்ல கல்வி தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது என்றார்.  #tamilnews
    வக்கீல்கள் தாக்கியதால் தற்கொலைக்கு முயன்ற அரசு பஸ் டிரைவர் தொடர்பான வழக்கில் வக்கீல்கள் 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிவகங்கை:

    சிவகங்கை- திருப்பத்தூர் ரோட்டில் இருந்து கோர்ட்டுக்கு செல்லும் பாதை குண்டும், குழியுமாக இருப்பதையும் அதனை சரி செய்ய வலியுறுத்தியும் சிவகங்கை வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்று சிவகங்கை பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.

    அப்போது பரமக்குடி செல்லும் அரசு பஸ், பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தது. பஸ்சை நிறுத்த முயன்ற வக்கீல் சங்க செயலாளர் தங்கப்பாண்டியன் தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது.

    இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஏராளமான வக்கீல்கள் திரண்டு பஸ்சை மறித்தனர். டிரைவர் செல்வராஜூக்கும், வக்கீல்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வக்கீல்கள், டிரைவர் செல்வராஜை சட்டையை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசாரும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மறியலும் கைவிடப்பட்டது.

    வக்கீல்களால் தாக்கப்பட்ட அரசு பஸ் டிரைவர் செல்வராஜ், நேற்று மாலை பணி முடிந்து தனது சொந்த ஊரான பரமக்குடி அருகே உள்ள பெருங்குளத்தூர் சென்றார். மன வேதனையில் இருந்த அவர், வி‌ஷம் குடித்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மயங்கிக் கிடந்தார்.

    உடனடியாக அவரை பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தற்கொலை முயற்சி காரணம் குறித்து செல்வராஜ் எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். வக்கீல்களால் தாக்கப்பட்ட போது, என்னை காப்பாற்ற போலீசார் வராமல் வேடிக்கை பார்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் வி‌ஷம் குடித்து விட்ட தாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல்கள் தங்கப்பாண்டியன், மதி, செந்தில், வால்மிகிநாதன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    திருப்பத்தூரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ரதி தேவி (வயது 27). இவருக்கும், கோவையைச் சேர்ந்த வடிவேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

    இந்த நிலையில் ரதி தேவி திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில், குழந்தை இல்லாததால் எனது கணவர் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாகவும், இதற்கு உடந்தையாக அவரது தாயார் பாப்பா இருக்கிறார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நிர்மலா விசாரணை நடத்தி வடிவேல், அவரது தாயார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். #tamilnews
    சிவகங்கையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை நகர் மேலூர் ரோட்டில் பழமையான அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கூடத்தில் தற்போது 753 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்திற்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றும், மாணவிகளுக்கு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்றும் கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் லதா ஆகியோர் நேற்று சிவகங்கை அரசு பெண்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுடன் முதன்மைக்கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்டக்கல்வி அதிகாரி சகிதா, சிவகங்கை கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் உமாராணி ஆகியோர் சென்றனர்.

    பின்னர் புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்ததாவது:-

    சிவகங்கையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தற்போது கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடங்கள் தேவை என்று தெரிவித்தனர்.

    அத்துடன் பள்ளிக்கு விளையாட்டு மைதானமும் தேவை என்றனர். இதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. விரைவில் இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    சிவகங்கை அருகே நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை ரெயில் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு சூப்பர்வைசர் வழக்கம்போல் கடையை பூட்டிச் சென்றார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லாவில் இருந்த ரூ.16 ஆயிரத்து 640-ம், 33 மதுபாட்டில்களையும் திருடிச் சென்றனர்.

    மறுநாள் கடை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் சிவகங்கை டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து சப்-இன்ஸ் பெக்டர் கருப்பசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகங்கை நகரில் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து 5 கடைகளில் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போனது. இங்கு திருடிய கும்பல்தான் டாஸ்மாக் கடையிலும் கைவரிசை காட்டியதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    நகரில் நடைபெற்றுவரும் தொடர் திருட்டுகள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. #tamilnews

    சிவகங்கை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் 300 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சிவகங்கை:

    ஆசிரியர்கள், அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து தற்போது மின் வாரிய ஊழியர்களும் ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்பக்கோரியும் இன்று முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் தமிழகம் முழுவதும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை,காரைக்குடி ஆகிய 4 மின் வாரிய கோட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இதன் காரணமாக மின் வினியோகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மின் கட்டண வசூல் மையங்களும் அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். #tamilnews

    வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி சிறுமியை காரில் கடத்திச் சென்று கற்பழித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா பேரணிப்பட்டி கிரா மத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தாய் மற்றும் உறவினர்களுடன் வீட்டில் இரவில் படுத்திருந்தார்.

    அப்போது அங்கு ஒரு காரில் 2 பேர் வந்தனர். அவர்கள் வீடு புகுந்து சிறுமியை எழுப்பினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி வெளியே அழைத்து சென்ற அவர்கள் சிறுமியை காரில் கடத்தி சென்று விட்டனர்.

    சிறிது தூரம் சென்ற நிலையில் சிறுமியை கற்பழித்துவிட்டு வழியில் இறக்கி விட்டுவிட்டு மாயமாகிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் சிறுமி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews 

    மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் குறித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது30). இவருக்கும், மானாமதுரை தாலுகா கீழபசலையை சேர்ந்த முருகன் (34) என்பவருக்கும் 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரமேஸ்வரி தனது மகனுடன் பரமக்குடியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் முருகன் மனைவிக்கு தெரியாமல் காஞ்சனா என்ற பெண்ணை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த பரமேஸ்வரி மானாமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    அதில், எனது கணவர் எனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து கொண்டார். மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை துன்புறுத்தினார். இதற்கு உடந்தையாக அவரது தாயார் ராமலட்சுமி, உறவினர்கள் ராஜம்மாள், லதா, சேது, கீதா, முத்துராமு, காஞ்சனா ஆகியோர் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அமிர்தம் வழக்குப்பதிவு செய்து முருகன் உள்பட 8 பேரை தேடி வருகிறார். #tamilnews

    திருப்பத்தூரில் பெட்ரோல் பங்க் மற்றும் அரசு பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணம் திருடிய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகரில் உள்ள மதுரை சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு தானிப்பட்டியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 54) என்பவர் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட வந்தார்.

    அப்போது அங்கு வந்த திருச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், ஜெயச்சந்திரனின் கைப்பையில் இருந்த ரூ. 5 ஆயிரத்தை திருடினான்.

    இதைப்பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சிறுவனை பிடித்து திருப்பத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முகமது வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார்.

    திருப்பத்தூர் புது குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (50). இவர் நேற்று திருப்பத்தூரில் இருந்து திருமயத்திற்கு அரசு பஸ்சில் சென்றார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கடலூரைச் சேர்ந்த பவதாரணி (38) என்பவர் பழனியம்மாள் வைத்திருந்த ரூ. 4 ஆயிரத்து 500-யை திருடினார்.

    இதை பார்த்த சக பயணிகள், பவதாரணியை பிடித்து திருப்பத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய பெண்ணை கைது செய்தனர். #tamilnews

    தேவகோட்டை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திருவேகம்பத்தூர் அருகே உள்ள பகந்தன்குடியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சாந்தா. இவர் நேற்று வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் சாந்தாவிடம் ஒரு துண்டு சீட்டை காண்பித்து முகவரி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் திடீரென்று சாந்தா கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு காரில் தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருவேகம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது வழக்குப்பதிவு செய்து நகை பறித்த நபர்களை தேடி வருகிறார். கொள்ளையர்கள் காரில் வந்து நகை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மானாமதுரை அருகே கடனை திருப்பி செலுத்தாததால் இளம்பெண்ணின் குழந்தைகளை மகளிர் குழுவினர் தூக்கிச்சென்றனர். இதனால் விரக்தியடைந்த அப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கொம்புகாரனேந்தல் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 27). இவர் கோவையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கொங்கேசுவரி(21). இவர்களுக்கு கதிர்வேல்(4), பிரியங்கா(2½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கொங்கேசுவரி அப்பகுதியில் மகளிர் சுயஉதவி குழுவில் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அந்த கடனை அவரால் செலுத்த முடியவில்லை. இதனால் மகளிர் குழுவினர் அவரை கடனை திருப்பி செலுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். கடனை செலுத்த முடியாததால் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கொங்கேசுவரி, கலியனேந்தலில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் நேற்று கொம்புகாரனேந்தல் மகளிர் சுயஉதவி குழுவினர் கலியனேந்தலில் உள்ள கொங்கேசுவரியின் பெற்றோர் வீட்டிற்கு கடனை கேட்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு கொங்கேசுவரி இல்லை. இதனையடுத்து மகளிர் குழுவினர் கொங்கேசுவரியின் தாயார் நாகம்மாள், தம்பி மாயகண்ணன்(8) மற்றும் அவருடைய குழந்தைகள் கதிர்வேல், பிரியங்காவை அழைத்துக்கொண்டு கொம்புகாரனேந்தலுக்கு சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து அறிந்த கொங்கேசுவரி குழந்தைகளை தூக்கி சென்ற விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் கொங்கேசுவரியின் உடல் மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கொங்கேசுவரி இறந்த செய்தியை அறிந்த மகளிர் குழுவினர் அவருடைய தாயாரையும், குழந்தைகளையும் விடுவித்தனர். இதனையடுத்து தாயார் நாகம்மாள், குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். குழந்தைகளுடன் அங்கு இருந்த நாகம்மாளுக்கு ஆதரவாக யாரும் இல்லாததால் பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து கொங்கேசுவரியின் கணவர் கணேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
    இந்த சம்பவம் குறித்து பழையனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×