என் மலர்
சிவகங்கை
சிவகங்கை:
காளையார் கோவில் அருகே உள்ள புலியடி தம்பத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (வயது 40). இவர் அந்தப்பகுதியில் மெடிக்கல் மற்றும் குளிர் பானக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடைகளை பூட்டிச் சென்றார்.
நள்ளிரவில் யாரோ மர்ம மனிதர்கள் அந்த கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
மறுநாள் காலை கடை திறக்க வந்த தண்டபாணி கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. காளையார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
கடைகளில் இருந்த ரூ. 48 ஆயிரம் மற்றும் ஒரு கிராம் தங்கம் கொள்ளை போயிருந்ததாக தண்டபாணி புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
சிவகங்கை:
சிவகங்கை நகர் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் சேதுராமன் (வயது 44). இவர், சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரப்பனிடம் ரூ. 15 ஆயிரம் கடன் வாங்கினார்.
இந்த பணத்தை பல ஆண்டுகளாக திருப்பிக் கொடுக்காததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று சந்திரப்பன் பணம் கேட்டபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரப்பன், செந்தில் குமார், பிரவீன் குமார், அறிவுக்கரசு, ரெவன்ராஜ் ஆகியோர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து சேதுராமனை தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சிவகங்கை நகர் போலீசில் சேதுராமன் கொடுத்த புகாரின் பேரில் துணை சூப்பிரண்டு மங்களேசுவரன் விசாரணை நடத்தி, சந்திரப்பன், பிரவீன்குமார், ரெவன்ராஜ் ஆகியோரை கைது செய்தார்.
பிரவீன்குமார் என்ஜினீயரிங் கல்லூரியிலும் ரெவன்ராஜ் பாலிடெக்னிக்கிலும் படித்து வரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கல்லல் சாலையில் பால் விற்பனை கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு செந்தில்குமார் வீட்டுக்குச் சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லாவில் இருந்த 21 ஆயிரத்து 650 ரூபாயை திருடிக் கொண்டு தப்பினர்.
இன்று காலை கடையை திறக்க வந்த செந்தில்குமார் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பணம் கொள்ளை போயிருந்தது.
இது குறித்த புகாரின் பேரில் காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை நகர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரிசி கடை உள்ளிட்ட 3 கடைகளில் அடுத்தடுத்து தொடர் கொள்ளைகள் நடந்தன.
இந்த வாரமும் 3-க்கும் மேற்பட்ட கடைகளில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். நகரில் தொடரும் இந்த சம்பவத்தால் வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர். #tamilnews
சிவகங்கை மாவட்ட டி.டி.வி. தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அரண்மனை வாசலில் நடந்தது. மாவட்டச் செயலாளர் உமாதேவன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நடிகை சி.ஆர்.சரஸ்வதி பேசியதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க. செயலாளர் எச்.ராஜா வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறார். சுய மரியாதை கருத்துக்களை பரப்பிய பெரியார் சிலையை உடைக்குமாறு கூறி வருகிறார்.
எடப்பாடி-ஓ.பி.எஸ். ஆகியோர் பெரியார் படத்தை கட்சியில் பயன்படுத்துகிறார்கள். ராஜாவின் பேச்சை தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்தன. பல்வேறு போராட்டங்களை நடத்தினர். எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் மவுனமாக உள்ளனர்.
பெரியார் பற்றி தவறாக கருத்து கூறிய எச். ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார் என்று நான் கூறியது உண்மை தான்.
விரைவில் 18 எம்.எல்.ஏ.க்கள் பற்றிய நீதிமன்ற தீர்ப்பு வரும். டி.டி.வி. தினகரன் முதல்வராவார்.
இவ்வாறு அவர் பேசினார். #Tamilnews
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பெரியார் சிலை குறித்து பதிவிட்ட கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி திராவிட கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
எச். ராஜா உருவப்படம் எரிப்பு, ஆர்ப்பாட்டம் என போராட்டங்கள் தீவிரமடைந்ததால், காரைக்குடியில் உள்ள எச்.ராஜா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே எச்.ராஜா தனது கருத்தை மறுத்ததோடு, வருத்தமும் தெரிவித்தார். இருப்பினும் அவருக்கு எதிரான போராட்டங்கள் ஓயவில்லை.
இதனைத் தொடர்ந்து எச்.ராஜாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து திரும்பிய அவருக்கு, காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 10 பேர் இதில் ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை ஒட்டன்சத்திரம் சென்ற எச்.ராஜாவோடு, அவர்களும் பாதுகாப்பு பணிக்காக சென்றனர்.
காரைக்குடி சுப்பிரமணிய புரத்தில் உள்ள எச்.ராஜா வீட்டிலும் இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. #tamilnews
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே உள்ள பொன்னக்குளம் அழகுநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் கனகா (வயது 26). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் பாபு (32) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
அப்போது 10 பவுன் நகை, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.
இந்த நிலையில் கனகா மானாமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.அதில், எனது கணவர் கூடுதலாக பணம் கேட்டு சித்ரவதை செய்வதாகவும், இதற்கு அவரது பெற்றோர் முத்து- மீனாம்பிகை உடந்தையாக இருப்பதாக வும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கார்த்திக் பாபு, அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா கீழநீர்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 70). உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், வாழ்க்கையில் விரக்தியடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து வந்தார்.
இது குறித்து அவரது மனைவி மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் எஸ்.பி. மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இளையான்குடி தாலுகா நகரக்குடியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (29). மனநிலை பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜபாண்டி இறந்தார்.
இது குறித்து அவரது தாயார் முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைத்து அகற்றப்படும் என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்தார்.
எச்.ராஜாவின் கருத்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிபுராவில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எச்.ராஜாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. எனவே சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 10-வது வீதியில் (வடக்கு) உள்ள எச்.ராஜா வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வழக்கமாக 2 போலீசார் எச்.ராஜா வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தற்போது கூடுதலாக 4 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போலீஸ் ரோந்து வாகனமும் அங்கு நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். #Tamilnews
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள ரணசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மருது. இவரது மகள் கல்பனா (வயது 18). ஒட்டக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டி என்ற அருண்குமார் (23). கல்பனாவும், அருண்குமாரும் காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் கல்பனாவை திருமணம் செய்வது என்ற முடிவில் அருண்குமார் உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில் அருண்குமார் தனது நண்பர்கள் 8 பேருடன் கல்பனா வீட்டுக்குள் புகுந்தார். அங்கிருந்த கல்பனாவை கடத்த முயன்றனர். அவர்களை கல்பனாவின் தம்பி கண்ணப்பன் (16) தடுக்க முயன்றான். அவனை தாக்கிய அந்த கும்பல் செல்போனை பறித்தது. பின்னர் கல்பனாவை கடத்திச் சென்று விட்டது.
கும்பல் தாக்கியதில் காயமடைந்த கண்ணப்பன் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனது மகள் கடத்தப்பட்டது குறித்து கல்பனாவின் தாயார் செல்வி திருப்பத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார். #tamilnews
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள கீரணிப்பட்டியைச் சேர்ந்தவர் சக்திபிரியா (வயது 23). இவருக்கும், தேவகோட்டை தாலுகா சிறுவாச்சியைச் சேர்ந்த நாகராஜனுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எம்.காம் படித்துள்ள நாகராஜன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நாகராஜன் கூடுதல் நகை-பணம் வாங்கி வருமாறு சக்தி பிரியாவிடம் நச்சரிக்கத் தொடங்கினார்.
நீங்கள் கேட்கும் நகை-பணத்தை எனது பெற்றோர் தரும் நிலையில் இல்லை. அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்று சக்தி பிரியா கூறினார். அதையெல்லாம் நாகராஜன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சக்தி பிரியா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் சக்தி பிரியா திருப்பத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் கணவர் நாகராஜனை தன்னுடன் சேர்த்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு பிரச்சனை தொடர்பாக நாகராஜன், அவரது தாயார் முத்து மீனாள், உறவினர் விக்னேஷ், மற்றொரு நாகராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.
கோர்ட்டு உத்தரவுப்படி திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #Tamilnews






