என் மலர்
சேலம்
- தி.மு.க-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
சேலம்:
சேலம் மாநகராட்சி அவசர மற்றும் இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையாளர் டாக்டர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் துணை மேயர் சாரதா தேவி மற்றும் மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் 12 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்குவதால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் மண் சாலைகளை தார் சாலையாக மாற்றுவது, வரிகளை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில் வார்டு கவுன்சிலர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் பணிகள் தொடங்கி வைக்கப்படுகிறது. மேலும் எனது வார்டில் பல்வேறு குறைகள் உள்ளன .ஆனால் எந்த குறைகளும் நிறைவேற்றப்படவில்லை. குறைந்த தொகைக்கு டெண்டர் கோரியவர்களுக்கு கொடுக்காமல் அதிக தொகை டெண்டர் கோரிய அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. கவுன்சிலர்கள் கூச்சலிட்டனர். இதனால் தி.மு.க-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே 45-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுஹாசினி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தியை கையால் தாக்கினார். தொடர்ந்து கன்னத்திலும் ஓங்கி அடித்தார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. போலீசாரும் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்.
தொடர்ந்து யாதவ மூர்த்தியை தி.மு.க. கவுன்சிலர் முருகனும் பிடித்து தள்ளினார். இதனால் மேலும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் யாதவ மூர்த்தியை கவுன்சிலர்கள் சமாதானப்படுத்தினர். மேலும் தி.மு.க. கவுன்சிலர் சுகாசினியை தி.மு.க. கவுன்சிலர்கள் அங்கிருந்து வெளியே அழைத்து சென்றனர். இதற்கு இடையே கூட்டம் முடிந்ததாக அறிவித்து தேசிய கீதம் பாடிய நிலையில் மேயர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் மாநகராட்சி கூட்ட அரங்கத்தில் மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து யாதவமூர்த்தி கூறுகையில், ஆளுங்கட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வருகிறோம். நாங்கள் தவறாக ஏதும் பேசவில்லை ஒவ்வொரு டெண்டரிலும் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறுகிறது ஆதாரங்களுடன் பேசி வருகிறோம். இந்த நிலையில் 45-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுகாசினி தகாத வார்த்தைகள் பேசி என்னை தாக்கினார். அந்த கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அதுவரை இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்றார்.
இதனால் மாநகராட்சியில் பரபரப்பு நிலவி வருகிறது.
- அணைக்கு நேற்று வினாடிக்கு 4070 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 4927 கனஅடியாக அதிகரித்துள்ளது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு நேற்று வினாடிக்கு 4070 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 4927 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 112.18 அடியை எட்டியுள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 81.54 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- சேலம் மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- மேட்டூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களையும், கட்சியினரையும் சந்திக்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து அரசின் திட்டங்களை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அதேபோல் சேலம் மாவட்டத்திலும் வருகிற 12ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி சேலம் வருகிறார்.
இதற்காக சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை இன்று சேலம் மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர்அமைச்சர் ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மேட்டூர் அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வருகிற 11-ந் தேதி சேலம் வருகிறார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் மேட்டூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களையும், கட்சியினரையும் சந்திக்கிறார். தொடர்ந்து இரவு மேட்டூரில் தங்குகிறார்.
தொடர்ந்து மறுநாள் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று 1 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1200 கோடி மதிப்பிலான நல உதவிகளை வழங்கி பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் பிருந்தாதேவி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், கூடுதல் கலெக்டர் பொன்மணி, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், போலீஸ் துணை கமிஷனர் வேல்முருகன், டீன் தேவிமீனாள் மற்றும் அரசு அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 548 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
- மேட்டூர் அணை பகுதியில் நேற்று 4.2 மி.மீட்டர் மழை பெய்தது.
சேலம்:
தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 878 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 3 ஆயிரத்து 548 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 111.73 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை பகுதியில் நேற்று 4.2 மி.மீட்டர் மழை பெய்தது.
- எடப்பாடி பழனிசாமியின் சேலம் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது
- மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
கடந்த மாதம் இதேபோன்று சென்னையில் உள்ள இபிஎஸ் இல்லத்திற்கு மிரட்டல் வந்தபோது சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அணைக்கு வினாடிக்கு 2878 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 111.60 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 2878 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் டெல்டா விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- மூதாட்டி சரஸ்வதியை கொடூரமாக கொன்று கொள்ளையடித்த நரேஷ் குமார் சங்ககிரி அருகே மலையடிவாரத்தில் பதுங்கி இருந்துள்ளார்.
- நரேஷ் குமார் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே மூதாட்டியை கொன்ற கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 20-ந்தேதி மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி சரஸ்வதியை கொடூரமாக கொன்று கொள்ளையடித்த நரேஷ் குமார் சங்ககிரி அருகே மலையடிவாரத்தில் பதுங்கி இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்ற நரேஷ் குமாரின் காலில் துப்பாக்கியால் போலீசார் சுட்டனர்.
நரேஷ் குமார் கத்தியால் வெட்டியதில் 2 போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நரேஷ் குமார் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. நரேஷ் குமார் வயதான மூதாட்டிகளையும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து நகை கொள்ளையடித்து விட்டு அவர்களை கொலை செய்து வந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
- சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
- போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஏற்காடு மலைப்பாதை இன்று முதல் ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டில் ஆண்டு தோறும் மே மாதத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கோடை விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
நடப்பாண்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. இந்த கோடை விழாவின் தொடக்க விழா இன்று மாலை 4 மணியளவில் ஏற்காடு கலையரங்கில் நடக்கிறது.
தமிழ்நாடு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து அவர்கள் வேளாண்மை துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சித்துறை, பட்டுவளர்ச்சித்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனர்.
இந்த விழாவில் கலெக்டர் பிருந்தாதேவி மற்றும் எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, மலையரசன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் அண்ணா பூங்காவில் 1½ லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி, பழங்கள் மற்றும் காய்கறி கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வன விலங்குகளை பாதுகாத்து வனத்தை பாதுகாப்போம் என்ற உணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் யானை, காட்டு மாடு, குதிரை, முயல், முதலை, குரங்கு உள்பட வன விலங்குகளின் வடிவமைப்புகள், மேட்டூர் அணை உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் வண்ண மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அண்ணா பூங்கா வளாகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளை கொண்ட மலர் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் ஆகியவற்றிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பக்கோடா பாயிண்ட், லேடீஸ்சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோவில் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த கோடை விழாவையொட்டி குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலா துறை சார்பில் படகு போட்டி, கால்பந்து, கிரிக்கெட் போட்டிகள், கால்நடைத்துறை சார்பில் நாய் கண்காட்சி உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
கோடை விழாவையொட்டி சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு இயக்கப்படும் 12 பஸ்களுடன் கூடுதலாக 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஏற்காடு மலைப்பாதை இன்று முதல் ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. அதாவது ஏற்காட்டுக்கு செல்லும் போது வாகனங்கள் கோரிமேடு-அடிவாரம் வழியாகவும், அங்கிருந்து கீழே இறங்கும் போது கொட்டச்சேடு-குப்பனூர் வழியாகவும் செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.
- சேலத்தில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
- தற்போது பண்டிகை சீசன் காலம் முடிந்ததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.
சேலம்:
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதேபோல சேலத்தில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த சில வாரங்களாக திருமண நிகழ்ச்சிகள், பல்வேறு விஷேசங்கள் மற்றும் திருவிழாக்களையொட்டி தேவை அதிகரித்து பூக்கள் விலை உயர்ந்தது. தற்போது பண்டிகை சீசன் காலம் முடிந்ததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.
குறிப்பாக கடந்த சில மாதங்களாக ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்த குண்டு மல்லிகை இன்று கிலோவுக்கு ரூ.900 வரை விலை குறைந்து ரூ.320 என விற்கப்பட்டு வருகிறது.
அதே போல கடந்த காலங்களில் ரூ.600-க்கு விற்ற முல்லை பூ ரூ.400 வரை விலை குறைந்து இன்று ரூ.200 என விற்கப்படுகிறது. மற்ற ரக பூக்களின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது.
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்) :-
மல்லிகை-ரூ.320, முல்லை-ரூ.200, ஜாதி மல்லி, காக்கட்டான்-ரூ.160, கலர் காக்கட்டான்-ரூ.100, மலை காக்கட்டான்-ரூ.160, ஏற்காடு மலை காக்கட்டான்-ரூ.160, சம்மங்கி-ரூ.20, சாதா சம்மங்கி-ரூ.50, அரளி-ரூ.100, வெள்ளை அரளி-ரூ.100, மஞ்சள் அரளி-ரூ.160, செவ்வரளி-ரூ.160, ஐ.செவ்வரளி-ரூ.120, நந்தியா வட்டம்-ரூ.300, சின்ன நந்தியா வட்டம்-ரூ.400, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எதிர்வரும் வைகாசி, ஆனி மாதங்களில் முகூர்த்த நாட்கள் வருவதால் அந்த சமயத்தில் பூக்கள் விற்பனை நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
- கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- 29-ந் தேதி கலையரங்கத்தில் நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை (23-ந் தேதி) தொடங்கி 29-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் பல்வேறு துறைகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
நாளை காலை 7 மணிக்கு ஏற்காடு மலைப்பாதையில் ஆண்கள், பெண்களுக்கான மலையேற்றம் நடக்கிறது. தொடர்ந்து ஏற்காடு கலையரங்கத்தில் புலியாட்டம், சிலம்பாட்டம், நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளன.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான கால்பந்து போட்டியும், ஏற்காடு கலையரங்கத்தில் குழந்தைகளுக்கான இளம் தளிர் நடைபோட்டி, அடுப்பில்லா சமையல், நடைவண்டி, உப்பு மூட்டை தூக்குதல், தவளும் போட்டிகளும் நடக்கிறது. இதையடுத்து கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
25-ந் தேதி திறந்தவெளி அரங்கத்தில் நாய்கள் கண்காட்சியும், மிமிக்கிரி, செமி கிளாசிக் நடனம், கோலாட்டம், பம்பை இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், 26-ந் தேதி காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், படகு இல்லத்தில் படகுப்போட்டியும் நடக்கிறது.
27-ந் தேதி காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் பத்திரிகையாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியும், கலையரங்கத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும், 28-ந் தேதி கதக் மற்றும் குச்சிபுடி நடனமும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியும், 29-ந் தேதி கலையரங்கத்தில் நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மண்டலம் மூலம் பொதுமக்களின் வசதிக்காக ஏற்காட்டுக்கு இயக்கப்படும் 12 பஸ்களுடன் கூடுதலாக 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் நலனுக்காக ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான ஏற்காடு ஏரி, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் கூடுதலாக 2 உள்வட்ட பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
- வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்பட அனைத்து விதமான ஏழை மக்களும் உடனடி பண தேவையை தங்கத்தை அடகு வைத்து தான் பூர்த்தி செய்து வருகிறார்கள்.
- வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு இந்த திட்டம் தேவையில்லாதது.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலத்தை சேர்ந்த மாம்பழம் மற்றும் தக்காளி மொத்த வியாபாரியான தக்காளி ஆறுமுகம் என்பவர் கூறியதாவது:
வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்பட அனைத்து விதமான ஏழை மக்களும் உடனடி பண தேவையை தங்கத்தை அடகு வைத்து தான் பூர்த்தி செய்து வருகிறார்கள்.
ஆனால் ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பில் அடகு வைக்கும் நகைகளை திருப்ப முழு தொகையும் வங்கியில் செலுத்தி திருப்ப வேண்டிய நிலை உள்ளதால் அதற்கான பணத்தை திரட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளை பொதுமக்கள் நாடும் நிலை உள்ளது. இதில் ஒரு நாளைக்கு ஒரு மாத வட்டி செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் பொதுமக்களுக்கு பொருளாதார பேரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது
மேலும் ஒவ்வொருவருக்கும், தனது தாய் மற்றும் மனைவியின் பெற்றோர் மூலம் தங்க நகைகள் கிடைக்கிறது. இந்த நகைகளை தங்களுக்குள்ளது என்று எப்படி யாரிடம் சான்று வழங்க முடியும், இது முடியாத செயல், இதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
கடந்த காலங்களில் நகைகளின் மதிப்பில் 90 சதவீதம் கடன் கொடுத்த நிலையில் தற்போது 75 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதால் தொழிலுக்கு போதுமான பணத்தை திரட்ட முடியாத நிலை ஏற்படும். இதனால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படும்.
எனது வியாபாரத்திற்கு தேவையான பணத்தை பெற அரசு வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ளேன். இதன் மூலம் வங்கிகளுக்கு லட்சக்கணக்கில் வட்டி கட்டி வருகிறேன். இனி வரும் நாட்களில் புதிய அறிவிப்புகளால் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு என்னை போன்றவர்கள் செல்லும் நிலை உள்ளது. இதனால் அரசு வங்கிகளுக்கு வருமான இழப்பு ஏற்படும்.
நகைக்கு தர உறுதி சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற அறிவிப்பால் அதற்கு தனியாக செலவு செய்யும் நிலை உள்ளது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு இந்த திட்டம் தேவையில்லாதது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகள் தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு உதவுவது போல அமைந்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் உள்ள என்னை போன்ற நடுத்தர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த புதிய அறிவுப்புகளை உடனடியாக ரிசர்வ் வங்கி திரும்ப பெற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தக்காளி ஆறுமுகம் - ஆட்டோ டிரைவர் ஏழுமலை
வேலூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஏழுமலை கூறுகையில்,
ஆட்டோ ஓட்டும் தொழில் மூலம் சில நேரங்களில் போதிய வருமானம் கிடைப்பதில்லை. அவசர தேவை மற்றும் பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக கடன் வாங்க வேண்டி உள்ளது.
ஏற்கனவே வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்கும் போது மொத்தமாக பணத்தைக் கட்டி அதனை மீட்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளதால் நகைகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் நகைகளை எளிதில் வங்கிகளில் அடகு வைக்க முடியாது. 20 ஆண்டுக்கு முன்பு வாங்கிய தங்க நகைக்கான ஆதாரத்தை எங்கிருந்து நாங்கள் கொண்டு வருவோம். இதுபோன்ற கட்டுப்பாடுகளால் கந்து வட்டி வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கும் என்றார்.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
- நீர் வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு கன்னடம் மாவட்டம் மங்களுரு, குடகு, மாண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த இரு அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 6,233 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 9,698 கன அடியாக அதிகரித்தது.
இன்று நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 12,819 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.33 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 110.03 அடியாக உயர்ந்துள்ளது.
நீர் இருப்பு 78.45 டி.எம்.சி.உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.






