என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 43, 892 கனஅடியாக அதிகரிப்பு
- கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சேலம்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டு வருகிறது.
கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நேற்று தமிழகத்துக்கு வினாடிக்கு 63 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று வினாடிக்கு 81 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
கபினி அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 31 ஆயிரத்து 644 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 52 ஆயிரத்து 829 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 51 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
2 அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 81 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வந்து கொண்டு இருக்கிறது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.73 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 114 அடியை எட்டியது.
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 43 ஆயிரத்து 892 கனஅடி தண்ணீர் வ்ந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட 81 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வரத்தொடங்கினால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






