என் மலர்
சேலம்
- சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன்.
- பெற்றோர் மீனாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சேலம்:
சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகள் மீனா (22). இவருக்கும் இவரது சகோதரிக்கும் நேற்று இரவு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த மீனா வீட்டில் திடீரென தூக்கு போட்டுக் கொண்டார். இதை கண்ட பெற்றோர் மீனாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (39).
- சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி பிடி ஆணை பிறப்பித்தார்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (39). இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த ஜெயபிரகாஷ் இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனால் சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி பிடி ஆணை பிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜெயபிரகாஷை கன்னங்குறிச்சி போலீசார் தேடி வந்த நிலையில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.
- சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 2 தம்பதிகளின் 14 வயது உடைய 2 மகள்கள் சேலம் கிச்சிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
- அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மாமன் உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 2 தம்பதிகளின் 14 வயது உடைய 2 மகள்கள் சேலம் கிச்சிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
இந்த 2 மாணவிகளும் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். பின்னர் மதியம் பள்ளியிலிருந்து சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அதில் ஒரு மாணவி தனது தாய் மாமனுக்கு போன் செய்து நாங்கள் இருவரும் வீட்டிற்கு செல்ல விருப்பமில்லாத காரணத்தால் வெளியூர் செல்கிறோம், எங்களை தேட வேண்டாம் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மாமன் உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர்.
இதையடுத்து போலீசார் மாணவிகளின் செல்போன் சிக்னலை கண்காணித்தபோது மாணவிகள் திருச்சி பஸ்சில் சென்று கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசார் உடனடியாக பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரின் செல்போன் எண்களை வாங்கி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் அந்த மாணவிகளை முசிறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கும்படி தெரிவித்துக் கொண்டனர். அதன்படி முசிறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட மாணவிகளை பள்ளப்பட்டி போலீசார் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று இரவு மீட்டு சேலத்திற்கு அழைத்து வந்தனர்.
- கடந்த 2 ஆண்டு காலமாக தமிழகத்தில் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது.
- தி.மு.க. 520 தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் 10 சதவீத அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை.
சேலம்:
பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக கடந்த 25-ந்தேதி அ.தி.மு.க. அதிரடியாக அறிவித்தது.
இந்த கூட்டணி முறிவு நாடகம் என்றும், மீண்டும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்து விடும் என்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்தன. இதற்கு அ.தி.மு.க. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில் பாரதிய ஜனதா கட்சியுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி நீடிப்பதாகவும், சமரச பேச்சு நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கோவைக்கு வந்திருந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டு சேர திட்டமிட்டிருப்பதாக மீண்டும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் எடப்பாடியில் விரிவாக பேட்டி அளித்தார். அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணி முறிவில் உறுதியாக இருப்பதாக விளக்கம் அளித்தார்.
எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி வருமாறு:-
அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா நிர்வாகிகள் விரும்புவது என்பது அவர்களின் விருப்பம். ஆனால் நான் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன். நான் சேலம் மாநகர் மாவட்ட பூத் கமிட்டி நிகழ்ச்சியில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன்.
25.9.2023 அன்று தலைமைக் கழகத்தில் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை அவர்கள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிக் கொள்கிறது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் பா. ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் எந்த மாதிரி கூட்டணி அமையும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். நிச்சயமாக எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் சேரும் என்பதை பத்திரிகைகளுக்கும், ஊடகத்துக்கும் தெரிவிப்போம்.
பா.ஜனதா மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கூறி இருப்பதற்கு, நான் என்ன கருத்து சொல்ல முடியும். எங்களுடைய கருத்து நான் சொன்னது தான். எங்களுடைய முடிவுகள் அதுதான். 2 கோடி தொண்டர்களின் உணர்வு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது.
வேண்டுமென்றே திட்டமிட்டு தினந்தோறும் கேள்வி கேட்டால் நான் என்ன சொல்வது? எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். எங்கள் கட்சியை பற்றித்தான் நாங்கள் பேச முடியும்.
நாங்கள் தனித்து நிற்பதால் தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாது. மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. வாக்களித்த பிறகு முடிவு தெரியும். எங்களை பொருத்தவரை அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி புதுச்சேரி உள்பட 40 இடங்களிலும் வெற்றி பெறும்.
2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் 7 எம்.பி. தொகுதிகளுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். சேலத்தில் மட்டும் 2 லட்சத்து 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம். இப்படி பல இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம்.
சிதம்பரம் தொகுதியில் 324 வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தோம். ஈரோட்டில் 7,800 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றோம். நாமக்கல்லில் 15,400 ஓட்டுகள் தான் குறைவு. இந்த 3 தொகுதியிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். இந்த 10 தொகுதிகளும் எளிதாக வெற்றி பெற வேண்டியது.
கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், கடலூர் என 10 பாராளுமன்ற தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாகத்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். 1 லட்சம் வாக்குகளுக்கு கீழ் 7 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பறி போனது. எனவே 100-க்கு 100 சதவீதம் 40 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.
கடந்த 2 ஆண்டு காலமாக தமிழகத்தில் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. தி.மு.க. 520 தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் 10 சதவீத அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை. ஆனால் முதலமைச்சர் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பச்சை பொய்யை சொல்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. வீட்டு வரி 100 சதவீதம், கடை வரி 150 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது மக்கள் வாழ்க்கை நடத்துவதே இன்று சவாலாக இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் தலைமையில் அமையும் கூட்டணிக்கு பாராளுமன்ற தேர்தல் சாதகமாக இருக்கும்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்களை மக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். வீட்டிலேயே இருந்து விட்டால் அதை யார் நிறைவேற்றி தருவது. அதற்காகத்தான் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.
இங்கிருக்கும் பல தி.மு.க. அமைச்சர்கள் போய் டெல்லியில் பா.ஜனதா மந்திரிகளை சந்தித்தனர். அப்படியென்றால் தி.மு.க.வை அவர்கள் கூட்டணி சேர்த்துக் கொண்டார்களா? பல மத்திய மந்திரிகள் தமிழ்நாட்டுக்கு வரும் போது அந்த நிகழ்ச்சியில் தி.மு.க. அமைச்சர்கள் பங்கு பெறுகிறார்கள். அந்த மாதிரிதான் இதுவும். அந்த பகுதி தென்னை விவசாயிகளின் நலன் கருதியும், அவர்கள் வைத்த கோரிக்கை அடிப்படையிலும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கோவை வந்த போது தென்னை விவசாயிகள் படும் கஷ்டங்களை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரிடம் எடுத்து கூறி நிவாரணம் கேட்டுள்ளனர்.
அதற்காகத்தான் சந்தித்தார்கள். ஆனால் உடனே கூட்டணி என்கிறீர்கள். தி.மு.க. அமைச்சர்கள் சந்தித்தால் எதுவும் கேள்வி கேட்பதில்லை. காவிரி பிரச்சனைக்கு மத்திய நீர்வளத்துறை மந்திரியை போய் பார்த்தார்கள். அப்போதெல்லாம் இந்த கேள்வி வரவில்லையே?
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கடமையை செய்வதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். கூட்டணிக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது. ஏற்கனவே கூட்டணியில் இருந்து விலகுவது என்று எடுக்கப்பட்டது உறுதியான முடிவு.
பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது நாடகம் என்று தி.மு.க. தலைமை என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இந்தியா கூட்டணிதான் நாடகம். மத்திய பிரதேச மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற வேட்பாளர்களை தனியாக அறிவித்து விட்டது.
இந்தியா கூட்டணியில் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் கொண்ட கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன. அது இன்னும் முழு வடிவத்தையே பெறவில்லை. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி, எங்களுக்கு கம்யூனிஸ்டு கட்சியுடன் உடன்பாடு இல்லை என்கிறார்.
கேரளாவில் கம்யூனிஸ்டு தலைவர்கள் காங்கிரசுடன் இணைய மாட்டோம் என்கிறார்கள். டெல்லி, பஞ்சாப்பிலும் முரண்பாடுகள் உள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக மேட்டூர் அணை நீரை டெல்டா பாசன விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு திறந்தார். அப்போது அவர் தன்னை டெல்டாக்காரன் என்றார். இப்போது அந்த வார்த்தையை காணோம்.
உங்களை நம்பித்தான் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் சுமார் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்துள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பதை அறிந்தீர்களா? அங்கு போய் பார்த்தீர்களா? தண்ணீர் இல்லாமல் 3½ லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி விட்டதாக தகவல் வருகிறது. விவசாயிகள் மீது முதலமைச்சர் அக்கறை கொண்டிருந்தால் காவிரி நீரை மாதா மாதம் கேட்டு பெற்றிருக்க வேண்டும்.
இந்தியா கூட்டணியில் சேரும் போதே காவிரி நதி நீர் பிரச்சனையை எடுத்து வைத்திருக்கலாம். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற போது தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதை அவர்களிடம் எடுத்து சொல்லி இருந்தால் நிச்சயமாக நமக்கு ஒரு சாதகமான முடிவு எட்டப்பட்டு இருக்கும். அந்த நல்ல வாய்ப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நழுவ விட்டு விட்டார்.
கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி இருக்கிறது. அப்போதே தண்ணீரை கேட்டு பெற்றிருந்தால் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. இதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமைத்து வெற்றி பெற்று மக்களுக்கு தேவையான திட்டங்களை அளிப்போம்.
அடுத்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பா.ஜனதா அழுத்தம் கொடுத்ததாக கூறுகிறீர்கள். அது தவறான செய்தி. அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இப்போது நான் அதை தெளிவு படுத்துகிறேன். பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இங்கே நடந்த நிகழ்வுகள் எங்கள் தொண்டர்களின் மனதை காயப்படுத்தி விட்டது.
ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் தொண்டர்கள் உழைக்க வேண்டும். எனவே எங்கள் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையில் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
இப்போது தெளிவுபடுத்துகிறேன். அவர்கள் எந்த சீட்டும் பேசவில்லை. 20 சீட், 15 சீட் என்று எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அதைப் பற்றி பேசவும் இல்லை.
இங்குள்ள பா.ஜனதா மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்ததாக கூறப்பட்ட அந்த தகவலும் தவறானது. நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்எல்-க்கள் சந்தித்தது தொகுதி பிரச்சனைக்காகவே.
- முரண்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் புதிய திட்டங்களை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* பாஜகவுடன் கூட்டணி முறிவு என்பது ஏற்கனவே அறிவித்ததுதான்.
* தொண்டர்களின் உணர்வுக்கு இணங்கவே பாஜகவுடன் கூட்டணி முறிவு என முடிவு எடுக்கப்பட்டது.
* பாஜகவுடன் கூட்டணி இல்லையென எடுக்கப்பட்ட முடிவில் அதிமுக உறுதியாக உள்ளது.
* பல தொகுதிகளில் அதிமுகவினர் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தனர்.
* 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
* மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏ-க்கள் தொகுதி பிரச்சனைக்காகவே சந்தித்தனர் .
* முரண்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.
* காவிரி நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
* காவிரியில் உரிய நீரை பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை.
* உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முத்துநகை கடந்த 30-ந்தேதி விடுதியில் சீலிங்பேனில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
- தற்கொலைக்கான காரணம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முத்துநகை (33), இவர் சேலம் வீரபாண்டியார் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வார்டனாக பணியாற்றி வந்தார்.
இவரும் குறிச்சி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து சேலம் சின்னதிருப்பதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். சந்தோஷமாக மண வாழ்க்கையை தொடங்கிய அவர்கள் வாழ்க்கையில் 2 மாதங்களில் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் முத்து நகையின் பெற்றோர் வேலையை விட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி வருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முத்துநகை கடந்த 30-ந்தேதி விடுதியில் சீலிங்பேனில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த விடுதி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
பின்னர் தூக்கில் தொங்கிய அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு முத்து நகை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி பிணவறையில் திரண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.
முத்துநகையின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. தற்கொலைக்கான காரணம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நேற்று இரவு வெகு நேரம் ஆகியும் ஜெகதீஷ் மொய்த் சாப்பிட வராததால் இவரது அக்கா மகன் இன்று அதிகாலை 2 மணி அளவில் இவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
- இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது ஜெகதீஷ் மொய்த் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
சேலம்:
மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் மொய்த் (47).
தொழிலாளி
இவர் கொண்ட லாம்பட்டி அருகே சிவதாபுரம் மொரம்புக்காடு பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடும்பத்தினரை சொந்த ஊரில் விட்டு விட்டு சேலத்திற்கு வந்தவர் தொடர்ந்து மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இறந்து கிடந்தார்
நேற்று இரவு வெகு நேரம் ஆகியும் ஜெகதீஷ் மொய்த் சாப்பிட வராததால் இவரது அக்கா மகன் இன்று அதிகாலை 2 மணி அளவில் இவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஜெகதீஷ் மொய்த் அசைவின்றி கிடந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது ஜெகதீஷ் மொய்த் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக கொண்டலாம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெகதீஷ் மொய்த் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாததால் ஜெகதீஷ் மொய்த் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இன்று அதிகாலை 4.30 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சில் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
- ஒரு வாலிபர் திடீரென சுகவனேஷ் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சுகவனேஷ் (வயது 18).
இவர் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சில் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் திடீரென சுகவனேஷ் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகவனேஷ் கூச்சலிட்டார்.
இதை பார்த்த ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பள்ளப்பட்டி போலீஸ் ஏட்டு திருப்பதி செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய வாலிபரை விரட்டிச் சென்று பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர் கிச்சிப்பாளையம் சுந்தர் தெருவை சேர்ந்த பாபு என்கிற பக்ருதீன் (34) என்பது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிகாலை நேரத்தில் புதிய பஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டு வாலிபரை துரத்தி பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
- புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி விலை படிப்படியாக சரிந்து கடந்த வாரம் 97 ரூபாய்க்கு விற்பனையானது.
சேலம்:
நாமக்கல் மண்டலத்துக்கு உட்பட்ட நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி விலை படிப்படியாக சரிந்து கடந்த வாரம் 97 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விலை மேலும் சரியும் என அசைவ பிரியர்கள் காத்திருந்தனர். ஆனால் அதற்கு மாறாக கறிக்கோழி விலை உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து நேற்று 106 ரூபாய்க்கு விற்பனையானது.
இதைத் தொடர்ந்து இன்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி, தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் கறிக்கோழி கிலோவுக்கு மேலும் 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாமக்கல் மண்டலத்தில் 106 ரூபாயாக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை மேலும் 2 ரூபாய் அதிகரித்து 108 ரூபாயாக உயர்ந்தது. கறிக்கோழி விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- இந்த போராட்டத்தில் விவசாய கருவிகளை வாங்க வற்புறுத்தும் அதிகாரிகளை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சேலம்:
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் விவசாய கருவிகளை வாங்க வற்புறுத்தும் அதிகாரிகளை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
பல்நோக்கு சேவை மையம் உட்கட்டமைப்பு நிதி சட்டத்தின் கீழ் சங்கங்கள் தங்களுக்கு பயன்படுகிறதோ இல்லையோ டிராக்டர், நெற்கதிர் அறுக்கும் எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம், பறக்கும் மருந்து தெளிப்பான், லாரிகள், சிறு சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட ஏதோ ஒரு உபகரணத்தை அல்லது 2, 3 கட்டாயமாக வாங்க வேண்டுமென கூட்டுறவு துறை அதிகாரிகள் வற்புறுத்தி வாங்க வைக்கின்றனர்.
அதேபோன்று சங்க வளாகத்தில் தேவை இருக்கிறதோ இல்லையோ கிட்டங்கிகளை கட்டியாக வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் லாபத்தில் உள்ள சங்கங்கள் மட்டும் இவ்வாறான பணிகளை செய்தால் போதும் என்று தெரிவித்தனர். தற்போது நஷ்டத்தில் செயல்படும் சங்கங்களும் ஏதாவது ஒரு பணியினை மேற்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறது.
இதனால் சுமார் ரூ.2 லட்சம் முதல் ரூ.1½ கோடி வரை முதலீடு செய்ய வேண்டி உள்ளது. இதுவரை வாங்கப்பட்ட எந்திரங்களினால் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நட்டம் ஏற்படுவது அறிந்தும் அதிகாரிகள் இந்த திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தொடர்ந்து இதற்கு முடிவு கிடைக்காவிட்டால் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் நெல்லை கதிரவன் மற்றும் செயலாளர் சங்கர் உள்ளிட்ட பொதுமக்கள் மீது போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.
- சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
சேலம்:
நாகர்கோவில் கிருஷ்ணன் வீதியில் 5 பட்டா கேட்டு போராட்டம் நடத்திய திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் நெல்லை கதிரவன் மற்றும் செயலாளர் சங்கர் உள்ளிட்ட பொதுமக்கள் மீது போலீசார் லேசாக தடியடி நடத்தினர். மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்ட திராவிட தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் செல்வ முருகேசன் உள்ளிட்ட சிலர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் கலெக்டர் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இது குறித்து திராவிட தமிழர் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கூறும்போது, அருந்ததியர் மக்களுக்கு பட்டா கேட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்திய பொதுச்செயலாளர் உள்ளிட்ட 9 பேரை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். தாக்குதல் நடத்திய நாகர்கோவில் டி.எஸ்.பி. மற்றும் காவல்துறையினர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சூரமங்கலம் பகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் 3 ரோட்டில் உள்ள வரலட்சுமி மகாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ, பகுதி செயலாளர்கள் பாலு, மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உரிமை
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதில் ஏதோ பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் மட்டும் எடுத்த முடிவு அல்ல. 2 கோடி கட்சி தொண்டர்களின் உணர்வை பிரதிபலிப்பின் அடிப்படையில் எடுத்த முடிவு.
இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் அனைவரின் சம்மதம் இருந்தால் தான் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அதன் அடிப்படையில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறி உள்ளது.
யார் பிரதமர்? என்று கூறி தேர்தலை சந்திப்பீர்கள்? என சிலர் கேட்கிறார்கள். ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரா மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை அறிவித்தா தேர்தலை சந்திக்கிறார்கள்?. அந்தந்த மாநில உரிமைகளை பாதுகாக்க தேர்தலை சந்திக்கின்றனர்.
அதேபோல் தமிழக மக்களின் உரிமையை பாதுகாக்க அ.தி.மு.க. போராடுகிறது. நமது உரிமையை பாதுகாக்க பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பா ளர்களுக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்வோம்.
40 இடங்களில் வெற்றி
அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழக மக்கள் நலன் தான் முக்கியம். அவர்கள் தான் எஜமானர்கள். அவர்களின் எண்ணங்களை தான் அ.தி.மு.க. பிரதிபலிக்கிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 இடங் களிலும் அமோக வெற்றிபெறும். இதற்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அயராமல் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கூட்டத்தில் அவைத் தலைவர் பன்னீர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பேரவை செயலாளர் சரவணமணி, பகுதி செயலாளர்கள் பாண்டியன், சரவணன், முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டு ராமச்சந்திரன், ஜான் கென்னடி, உமாராஜ், வக்கீல் கனகராஜ், கவுன்சிலர்கள் கே.சி.செல்வராஜ், ஜனார்த்தனன், சசிகலா, சந்திரா கிருபாகரன் மற்றும் வார்டு செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






