என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
சேலத்தில்தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
- கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- இந்த போராட்டத்தில் விவசாய கருவிகளை வாங்க வற்புறுத்தும் அதிகாரிகளை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சேலம்:
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் விவசாய கருவிகளை வாங்க வற்புறுத்தும் அதிகாரிகளை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
பல்நோக்கு சேவை மையம் உட்கட்டமைப்பு நிதி சட்டத்தின் கீழ் சங்கங்கள் தங்களுக்கு பயன்படுகிறதோ இல்லையோ டிராக்டர், நெற்கதிர் அறுக்கும் எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம், பறக்கும் மருந்து தெளிப்பான், லாரிகள், சிறு சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட ஏதோ ஒரு உபகரணத்தை அல்லது 2, 3 கட்டாயமாக வாங்க வேண்டுமென கூட்டுறவு துறை அதிகாரிகள் வற்புறுத்தி வாங்க வைக்கின்றனர்.
அதேபோன்று சங்க வளாகத்தில் தேவை இருக்கிறதோ இல்லையோ கிட்டங்கிகளை கட்டியாக வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் லாபத்தில் உள்ள சங்கங்கள் மட்டும் இவ்வாறான பணிகளை செய்தால் போதும் என்று தெரிவித்தனர். தற்போது நஷ்டத்தில் செயல்படும் சங்கங்களும் ஏதாவது ஒரு பணியினை மேற்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறது.
இதனால் சுமார் ரூ.2 லட்சம் முதல் ரூ.1½ கோடி வரை முதலீடு செய்ய வேண்டி உள்ளது. இதுவரை வாங்கப்பட்ட எந்திரங்களினால் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நட்டம் ஏற்படுவது அறிந்தும் அதிகாரிகள் இந்த திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தொடர்ந்து இதற்கு முடிவு கிடைக்காவிட்டால் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






