என் மலர்tooltip icon

    சேலம்

    • கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
    • அணையில் 9.83 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

    நேற்று காலை அணைக்கு 3ஆயிரத்து 122 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 1560 கனஅடியாக குறைந்தது. மேலும் அணையின் நீர்மட்டமும் 35.38 அடியாக குறைந்து விட்டது. தற்போது அணையில் 9.83 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

    இதற்கிடையே கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அங்கு உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 481 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 11ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1592 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. 2 அணைகளுக்கும் வினாடிக்கு 17ஆயிரத்து 281 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2ஆயிரத்து 592 கனஅடி தண்ணீரே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    • கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை.

    பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுவதாக வெளியான அறிவிப்பு குறித்து, இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது பொதுச்செயலாளரின் முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு. கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள்; அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்," என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும் பேசிய அவர், "ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை அறிவித்த பிறகா தேர்தலை சந்திக்கின்றனர். மாநிலத்தின் உரிமையை காக்க பாராளுமன்றத் தேர்தலை அ.தி.மு.க. சந்திக்கும். தேர்தல் வந்தால் அழகாக பேசி ஏமாற்றும் அனைத்து தந்திரங்களையும் தி.மு.க. முன்னெடுக்கும்."

    "மகளிருக்கு இலவச பயணம் எனக் கூறிவிட்டு சில பஸ்களுக்கு மட்டும் பிங்க் நிற பெயின்ட் அடித்துள்ளனர். கொரோனாவில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீது தாங்க முடியாத சுமையை தி.மு.க. அரசு சுமத்தியுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில், கொடுக்கப்படாத வாக்குறுதிகளையும் சேர்த்து நிறைவேற்றி இருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

    • தமிழக கைத்தறி துறையின் கீழ் செயல்படும் சேலம் தங்கம் பட்டு மாளிகை ரூ.2 கோடியே 35 லட்சம் செலவில் நவீனப்படுத்தப்பட்டு இன்று திறக்கப்பட்டது.
    • அமைச்சர் நேரு முன்னிலை வகித்து நவீனப்படுத்தப்பட்ட விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். முதல் விற்பனையை கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    தமிழக கைத்தறி துறையின் கீழ் செயல்படும் சேலம் தங்கம் பட்டு மாளிகை ரூ.2 கோடியே 35 லட்சம் செலவில் நவீனப்படுத்தப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இதனை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். அமைச்சர் நேரு முன்னிலை வகித்து நவீனப்படுத்தப்பட்ட விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். முதல் விற்பனையை கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மேலாண்மை இயக்குனர் ஆனந்தகுமார், கைத்தறி துறை கமிஷனர் விவேகா னந்தன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் தொகுதி எம்.பி. பார்த்திபன், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் காந்தி நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    கோ ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை ரூ.2.35 கோடி மதிப்பில் புதுப்பொழிவுடன் நவீனப் படுத்தப்பட்டுள்ளது.

    இதுபோல் இந்தியா முழுவதும் 154 ஷோரூம்கள் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 105 ஷோரூம்கள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு 7.61 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்தது. தொடர்ந்து முதல்- அமைச்சரின் தீவிர நடவடிக்கையால் 2022-ம் ஆண்டு ரூ.9.45 கோடி லாபம் ஈட்டினோம். ரூ.10 கோடி செலவில் ஷோரூம்கள் சீரமைக்கப்பட்டன. தற்போது லாபம் ரூ. 22 கோடியாக உயர்ந்துள்ளது.

    வரவேற்பு

    தங்கம் பட்டு மாளிகை 1941-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.6 கோடியே 59 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. தற்போது அது ரூ.12 கோடியாக இலக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதற்காக 500 ரக சேலைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சில்க் சேலைகள், காட்டன் சேலைகள் கோட்டோ சேலைகள், ஷாப் சேலைகள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    கோ ஆப்டெக்ஸ்-ல் கெமிக்கல் இல்லாத ஆர்கானிக் பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. நீங்கள் டிசைன் போட்டு ஒரு ஆர்டர் கொடுத்தால் அதற்கு ஏற்றவாறு உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன. 86 விற்பனை நிலையங்களில் ஆன்லைன் மூலம் ரூ.1½ கோடி மதிப்பில் விற்பனை நடைபெற்றுள்ளது.

    நடவடிக்கை

    சில்வர் தங்கம் எவ்வளவு உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் நீங்கள் எங்கு ஜவுளி வாங்கினாலும் அதை அந்த மெஷினில் கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம். அதில் தரம் குறைவாக இருந்தால் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. போலி பட்டு சேலை தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டியில் சொசைட்டி இல்லாமல் இருந்தது. தற்போது சொசைட்டி தொடங்கப்பட்டு மலைவாழ் மக்களுக்கு பயிற்சி கொடுத்து துணிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஜயகுமார் (24).
    • நிலை தடுமாறிய விஜயகுமார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி படுகாயம் அடைந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஜயகுமார் (24) சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் ஏ.வி.ஆர் ரவுண்டானா பைபாஸ் சாலையில் கொண்டலாம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறிய விஜயகுமார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி படுகாயம் அடைந்தார். அந்த வழியில் சென்றவர்கள் இவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த விஜயகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பெரியசாமி மகள் ஜனனி(17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு மகளிர் தனியார் கல்லூரியில் பி. ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
    • நேற்று முன்தினம் ஓமலூரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று வருவதாக கூறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி கிராமம் புதூர் காடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் ஜனனி(17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு மகளிர் தனியார் கல்லூரியில் பி. ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஓமலூரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று வருவதாக கூறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பெரியசாமி குடும்பத்தினர் அக்கம் பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் எங்கும் கிடைக்காத நிலையில் தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சுரேஷ் (33), மெக்கானிக். இவர் சேலம் பள்ளப்பட்டி ஆலமரத்துக்காட்டில் மோட்டார் சைக்கிள் சரி செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.
    • பணம் கொடுக்காததால் போலி துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூரை சேர்ந்தவர் சுரேஷ் (33), மெக்கானிக். இவர் சேலம் பள்ளப்பட்டி ஆலமரத்துக்காட்டில் மோட்டார் சைக்கிள் சரி செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.

    பணம் கேட்டு மிரட்டல்

    இவரது பட்டறை அருகில் சந்தோஷ் என்பவர் புல்லட் மோட்டார் சைக்கிள் சரிசெய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவரது உறவினர் கார்த்திக் (25). சந்தோஷ் மூலம் கார்த்திக், சுரேசிடம் அறிமுகம் ஆனார். இதனால் 2 பேரும் அடிக்கடி சந்தித்து வந்தனர்.

    இந்த நிலையில் கார்த்திக், சுரேசிடம் செலவுக்கு பணம் கேட்பதும், அவரும் பணத்தை கொடுத்து சில நாட்களுக்கு பிறகு திரும்ப வாங்குவார், வழக்கம் போல சம்பவத்தன்று கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான அருண் (30), அனேக் (28) ஆகியோர் சுரேஷ் பட்டறைக்கு வந்தனர். பின்னர் சுரேசிடம் செலவுக்கு பணம் கேட்டனர்.

    அப்போது அவர் பணம் கொடுக்காததால் போலி துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற பள்ளப்பட்டி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    சிறையில் அடைப்பு

    அப்போது கார்த்திக் தப்பியோடி விட்ட நிலையில் அங்கிருந்த அருண், அனேக் ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து போலி துப்பாக்கி, கத்தியை பறிமுதல் செய்த போலீசார் 2 ேபரையும் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான கார்த்திக்கை தேடி வந்தனர். அவரும் நேற்று போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    • தேர்தல் வரும்போது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுவார்கள். கவர்ச்சிகரமாக பேசுவார்கள்.
    • பேசி பேசி மக்களை மயக்கி ஆட்சிக்கு வந்தது தான் தி.மு.க. இதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    ஒரு கட்டிடம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் அதன் அஸ்திவாரம் வலுவாக இருக்க வேண்டும். அதுபோல ஒரு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால் இந்த பூத் அமைப்பு வலிமையாக இருக்க வேண்டும். அப்படி வலிமையாக இருந்தால்தான் நாம் நிறுத்தும் வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும்.

    பூத் கமிட்டி அமைப்பு என்பது தேர்தல் நேரத்தில் நமது வாக்காளர்களை அழைத்து வருவது, தேர்தல் நடக்கின்ற இடத்தில் பூத் ஏஜெண்டாக அமர்ந்து கள்ள ஓட்டு போடுவதை தடுப்பது, அதோடு புதிய வாக்காளரை சேர்ப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    மகளிர் அணியை சேர்ந்தவர்கள் அந்த பூத்துக்கு உள்பட்ட பகுதியில் வாக்காளர்களை சந்தித்து அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள், அதனால் மக்கள் பெற்ற பலன்கள், நன்மைகளை எடுத்து சொல்ல வேண்டும். அது நமது வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கும்.

    மேலும் 2½ ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். எனவே காலத்திற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும். தேர்தல் பணிகளை உடனே தொடங்குங்கள்.

    இப்போது முதலமைச்சர் பேசும்போது, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 95 சதவீதம் அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஒரு பச்சை பொய்யை கூறுகிறார்.

    இதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற தி.மு.க. ஆட்சியில் எந்தெந்த திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்ற புள்ளி விவரத்தோடு நீங்கள் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். இது பூத் கமிட்டியின் பொறுப்பு.

    தேர்தல் வரும்போது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுவார்கள். கவர்ச்சிகரமாக பேசுவார்கள். பேசி பேசி மக்களை மயக்கி ஆட்சிக்கு வந்தது தான் தி.மு.க. இதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றினோம். கொடுக்கப்படாத மக்கள் சார்ந்த நன்மைகள் கொண்ட திட்டத்தையும் அறிவித்தோம். இதுதான் அ.தி.மு.க.வின் சாதனைகள்.

    அ.தி.மு.க. ஆட்சியில் மிக்சி, கிரைண்டர் என மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டது. ஆனால் தி.மு.க. அரசு 10 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தான் அதிகமான கல்லூரிகள் திறக்கப்பட்டன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கண்ணுபையன் மகன் அய்யனார் (34 ). இவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரிகளை வெள்ளைத் தாளில் அச்சிட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார்.
    • தாரமங்கலம் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு செல்போனும், ரூ.500 பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கோழிக்கட்டானூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணுபையன் மகன் அய்யனார் (34 ). இவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரிகளை வெள்ளைத் தாளில் அச்சிட்டு அதனை தனது செல்போனில் படம் பிடித்து பொது மக்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி பரிசு விழுந்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி விற்பனை செய்து கொண்டிருந்தவரை தாரமங்கலம் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு செல்போனும், ரூ.500 பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    • தெற்கு ரெயில்வேயில் பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 2006-ம் ஆண்டு சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது.
    • சென்னைக்கு சேலத்தில் இருந்து பகலில் விரைவு ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

    சேலம்:

    தெற்கு ரெயில்வேயில் பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 2006-ம் ஆண்டு சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது தெற்கு ரெயில்வேயில் உள்ள கோட்டங்களில் சிறப்பான செயல்பாட்டில் சேலம் கோட்டம் முன்னிலையில் உள்ளது.

    சிறந்த சேவை

    குறிப்பாக பயணிகள் சேவை, சரக்கு மற்றும் பார்சல் போக்குவரத்து ஆகியவற்றில் சிறப்பான நிலையில் சேலம் ரெயில்வே கோட்டம் உள்ளது. ஆனால் கோட்டத்தின் தலைமையிடமாக சேலம் இருந்தும் இங்கிருந்து புதிதாக எந்த ஒரு ரெயிலும் இயக்கப்படாதது மக்களையும், ரெயில்வே ஆர்வலர்களையும் வருத்தமடைய செய்துள்ளது.

    மாநிலத் தலைநகராக இருக்கும் சென்னைக்கு சேலத்தில் இருந்து பகலில் விரைவு ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஆனால் அது செயல்பாட்டுக்கு வராமல் உள்ள நிலையில் இது போல ரெயில்வே சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் மக்களிடம் உள்ளன.

    அந்த கோரிக்கைகளுக்கு சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், தொழில் துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

    பகல் நேர ரெயில்

    கோரிக்கைகள் குறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது,

    சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டதும் மாவட்டத்தில் புதிய ரெயில் பாதைகள் அமைப்பு, புதிய ரெயில்கள் இயக்கம் என திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சேலம் வழியே செல்லும் பழைய ரெயில் வழித்தடங்கள் மட்டுமே இன்று வரை உள்ளது.

    ஆத்தூரில் இருந்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் ஆத்தூர்-அரியலூர் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் தற்போது வரை ஆய்வுக்கான அறிவிப்பு கூட இல்லாமல் உள்ளது.

    இதுபோல அண்டை மாவட்டமான கள்ளக்குறிச்சியை இணைக்கும் சின்னசேலம், கள்ளக்குறிச்சி புதிய ரெயில் பாதை திட்டம் சுமார் 22 கிலோ மீட்டர் நீளம் மட்டுமே இருந்தாலும் கூட ரெயில் பாதை அமைக்கும் பணி பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

    சேலம்-விருத்தாச்சலம் வழித்தடத்தில் சென்னைக்கு பகல் நேரத்தில் விரைவு ரெயில் இயக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பிய நிலையில் அதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

    இரட்டை வழித்தடம்

    சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளில் உள்ள வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி வட்டங்களை சேர்ந்த மக்களில் பல்லாயிரம் பேர் சென்னையில் பணியாற்றியும், கல்லூரிகளில் படித்தும் வருகின்றனர். ஆனால் அவர்கள் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர் வருவதற்கு இடம் கிடைக்காமல் சுமார் 5 மணி நேரம் பேருந்துகளில் நின்று கொண்டே பயணிக்கும் அவலம் நீடிக்கிறது.

    ரெயில்கள் தாமதம்

    தீபாவளி, பொங்கல் உள்பட எந்த ஒரு பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சேலம்-விருத்தாச்சலம் வழித்தடத்தில் சிறப்பு ரெயில்கள் இதுவரை இயக்கப்பட்டதும் இல்லை. சேலம் மாவட்டத்தின் வழி யாக செல்லும் முக்கிய பாதையில் சேலம்-விருத்தாச்சலம் ரெயில் பாதை உள்ளது. இது போக்குவரத்து அதிகம் கொண்ட சேலம் மற்றும் விருத்தாச்சலம் ரெயில் நிலையங்களை இணைக்கும் பாதையாக உள்ளது.

    ஆனால் இந்த பாதை ஒற்றை வழித்தடமாக இருப்பதால் சேலம்-விருத்தாச்சலம் வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கம் அடிக்கடி தாமதமாகிறது. எனவே இதை இரட்டை வழித்த டமாக மாற்ற வேண்டும் என்பது சேலம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண சேலம் ரெயில்வே கோட்டம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில்வே திட்டங்களை பெற்று தர சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொழில்துறை அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைவரும் ரெயில்வே துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கூடுதல் ரெயில்கள்

    தெற்கு ரெயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் ஹரிஹரன் பாபு கூறுகையில், தமிழகத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மாவட்டமாக சேலம் உள்ளது. எனவே சேலத்தில் இருந்து தென் மாவட்டங்கள், வடகிழக்கு மாவட்டங்கள் ஆகியவற்றுக்கு கூடுதல் ெரயில்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதிய ரெயில்களை சேலத்தில் இருந்து இயக்குவதற்கு பிட்லைன் எனப்படும் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு மையம், ரெயில் என்ஜினை ரெயில் பெட்டிகளில் மாற்றி இணைக்கும் வசதி ஆகியவை தேவை. இவை ஒரு ரெயில்வே கோட்டத்தில் இருக்க வேண்டிய அத்தியாவசியமான தேவைகள்.

    சேலத்தில் பிட்லைன் அமைத்தால் இங்கேயே ரெயில் பெட்டிகளை பராமரிக்க வசதி கிடைக்கும். இதன் மூலம் சேலத்தில் இருந்து புதிய வழித்தடங்களில் ரெயில்களை இயக்க முடியும். சேலத்தில் பிட் லைன் வசதி ஏற்படுத்தப்பட்டால் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பகல் முழுவதும் வீணாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சேலம்-சென்னை எழும்பூர் விரைவு ரெயில் பராமரிப்பு செய்து சேலம்-கோவை அல்லது சேலம்-திருச்சி என குறுகிய வழித்தடங்களில் இயக்க வாய்ப்பு ஏற்படும்.

    2-வது ரெயில் முனையம்

    இதேபோல அயோத்தியாப் பட்டணத்தை சேலத்தின் 2-வது ரெயில் முனையமாக ஏற்படுத்தினால் சேலம்-மயிலாடுதுறை விரைவு ரெயில், சேலம்-கோவை பயணிகள் ரெயில், சேலம்-காட்பாடி பயணிகள் ரெயில் ஆகியவற்றை அயோத்தியாப் பட்டணத்தில் இருந்து இயக்கும்போது சேலம் டவுன், சேலம் செவ்வாய்பேட்டை ரெயில் நிலையத்துக்கு உட்பட்டவர்களுக்கு நேரடி ரெயில் வசதி கிடைக்கும். இதற்காக சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே உள்ள பொன்னம்மாப் பேட்டையில் செயல்பட்டு வந்த சேலம் கிழக்கு ரெயில் நிலையத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் ரெயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பரமத்திவேலூரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித் துள்ளதாக வேலூர் பேரூராட்சிக்கு தகவல் கிடைத்தது.
    • துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் மற்றும் தூய்மை பணியாளர்கள் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித் துள்ளதாக வேலூர் பேரூராட்சிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் மற்றும் தூய்மை பணியாளர்கள் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 100 கிலோ பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பாலிதீன் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ.4,300 அபராதம் விதித்து பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மானிய விலையிலான வெங்காய விதைகளுடன் வெங்காய இருப்பு கிடங்கு அமைப்பதற்கான பணி உத்திரவாத ஆணை வழங்கப்பட்டது.
    • பழ மரக்கன்றுகள் மற்றும் இடுபொருள்கள், குறைந்த விலையிலான வெங்காய விதைகள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதி விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மானிய விலையிலான வெங்காய விதைகளுடன் வெங்காய இருப்பு கிடங்கு அமைப்பதற்கான பணி உத்திரவாத ஆணை வழங்கப்பட்டது. வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அட்மா திட்டக்குழு தலைவர் பரமசிவம் அப்பகுதி விவசாயிகளுக்கு பலன் தரும் பழ மரக்கன்றுகள் மற்றும் இடுபொருள்கள், குறைந்த விலையிலான வெங்காய விதைகள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    இதனை தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சரஸ்வதி நல உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர் தாமரைச்செல்வி, உதவி அலுவலர்கள் குப்புசாமி, ராஜா, செந்தில்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்தாலும் இன்னும் மழை காலம் முழுவதும் நிறைவு பெறவில்லை.
    • சேலம் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்கள் உள்ளன.

    சேலம்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அதிக அளவிலும், அதே போல கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழையும் அதிக அளவில் பெய்யும், ஆனால் சேலம் மாவட்டம் 2 பருவமழைகளும் அதிக அளவில் பெய்யும் சிறப்பு வாய்ந்த மாவட்டமாக உள்ளது.

    அதன்படி தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை பெய்யும், நடப்பாண்டில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்த அளவே பெய்துள்ளது.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவாக 406.4 மி.மீ. பெய்யும், ஆனால் இந்த ஆண்டு 380.4 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. இதனால் வழக்கத்தை விட 26 மி.மீ. மழை குறைவாக பெய்துள்ளது. இது ஆண்டு சராசரி மழை அளவை விட 6 சதவீதம் குறைவாகும்.

    தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்தாலும் இன்னும் மழை காலம் முழுவதும் நிறைவு பெறவில்லை. இதனால் இன்னும் சில நாட்கள் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்கள் உள்ளன. இதில் பெரிய ஏரிகளில் டேனீஸ்பேட்டை ஏரி, எடப்பாடி பெரிய ஏரி உள்பட சில ஏரிகள் மட்டுமே நிரம்பி உள்ளன. மேலும் பல ஏரிகள் பாதியளவும், ஒரு சில ஏரிகள் தண்ணீர் இல்லாமலும் காட்சி அளிக்கின்றன. இதனால் சேலம் மாவட்டத்தில் வழக்கத்தை விட நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ×