search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "to be a destination"

    • தாரமங்கலம் நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பேசிய வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சேம் கிங்ஸ்டன், நகர மன்றத் துணைத் தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அடிப்படை தேவைகள்

    கூட்டத்தில் பேசிய வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து 23-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வேதாச்சலம் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இதுவரை எந்த அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்து வெளியேறினார்.

    5-வது வார்டு உறுப்பினர் தனபால் பேசும்போது தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிற்ப கலைக்கு சான்றாக விளங்கும் ஓர் அரிய பொக்கிஷமாகும்.

    இந்த கைலாசநாதர் ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள், மாநி லங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இங்கு அமைந்துள்ள அதிசய எண்கோண வடிவ தெப்பக்குளமும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

    சுற்றுலா தலம்

    அதேபோல் தாரமங்கலம் நகராட்சியின் பராமரிப்பில் உள்ள தாரமங்கலம் ஏரி 163 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரி தமிழக அரசின் காவிரி உபரி நீர் திட்டத்தில் நீர் நிரம்ப ஏற்பாடு செய்யப்பட்ட ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு உபரி நீர் திட்டத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றபடாத காரணத்தினால் ஏரி வறண்டு காட்சியளிக்கிறது.

    இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஏரியை தூய்மைப்படுத்தி, தூர்வாரி தண்ணீர் நிரப்பி பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் சுற்றுலாத்தலமாக்க ஏற்பாடுகள் செய்து நகராட்சிக்கு வருவாய் பெருக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஏரியை சுற்றுலா தலமாக்கும் முயற்சிக்கு அனைத்து வார்டு உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று உறுதி அளித்தனர்.

    சுகாதார பணிகள்

    14-வது வார்டு உறுப்பினர் பாலசுப்ரமணியம் பேசும்போது, மழைக்காலம் என்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் எந்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தி சுகாதாரப் பணிகளை தீவிரபடுத்தமாறு கோரிக்கை விடுத்தார்.

    4-வது வார்டு உறுப்பினர் சாமுண்டீஸ்வரி தனது வார்டு பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யவில்லை என்று தலைவர் மற்றும் ஆணையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆணையாளர் உரிய பரிசீலனை செய்து குறைகள் நிறைவேற்றித் தரப்படும் என்று கூறினார். தொடர்ந்து கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×