என் மலர்
உள்ளூர் செய்திகள்

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை
புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நீர்மட்டம் உயரவில்லை
- வாழப்பாடி அருகே அருநூற்றுமலை பெரியகுட்டிமடுவு, சந்துமலை மற்றும் தருமபுரி மாவட்டம் சித்தேரி பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து வசிஷ்டநதி உற்பத்தியாகிறது.
- 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 263.86 ஏக்கர் பரப்பளவில் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருநூற்றுமலை பெரியகுட்டிமடுவு, சந்துமலை மற்றும் தருமபுரி மாவட்டம் சித்தேரி பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து வசிஷ்டநதி உற்பத்தியாகிறது.
இந்நதியின் குறுக்கே 67.25 அடி உயரத்தில் 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 263.86 ஏக்கர் பரப்பளவில் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.
பாசன வசதி
இந்த அணையால் குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பா ளையம், சந்தர பிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும் நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.
கடந்தாண்டு இறுதியில் ஆனைமடுவு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பருவ மழையால் நிகழ்வாண்டு ஜனவரி மாதம் அணையின் நீர்மட்டம் 53.71 அடியாக உயர்ந்தது. அணையில் 149 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.
இதனால் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென நேரடி ஆற்றுப்பாசன பழைய ஆயக்கட்டு விவசாயிகள் மற்றும் அணை வாய்க்கால் பாசன புதிய ஆயக்கட்டு விவசாயிகளும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தண்ணீர் திறப்பு
இதனையடுத்து அணையில் இருந்து மே மற்றும் ஜூன் மாதத்தில் சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஜூலை மாதத்தில் அணையின் நீர்மட்டம் 30.83 அடியாக சரிந்து 46.64 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே கிடந்தது.
தொடர்ந்து 2 மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் தற்போது 26 அடியாக சரிந்து 36 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
விவசாயிகள் கவலை
எதிர் வரும் மாதங்களில் போதிய மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் தான் அணை பாசனத்தை நம்பி கரையோர கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள பாக்கு மற்றும் தென்னை மரங்களை வறட்சியிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வழக்கம் போல, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிகழ்வாண்டும் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பருவ மழை பெய்யும். எனவே, அணையின் நீர்மட்டம் 2 மாதங்களில் படிப்படியாக உயர்ந்து முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பும் என பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு பொறியாளர்கள், விவசாயிகளுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.






