search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைப்பு
    X

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைப்பு

    • கர்நாடக அரசு பெயரளவில் தண்ணீர் திறந்து விட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.
    • இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு 1004 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    சேலம்:

    கர்நாடக அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய உரிய தண்ணீரை வழங்க மறுத்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து சுமார் 2 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    கர்நாடக அரசு பெயரளவில் தண்ணீர் திறந்து விட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.

    இதனால் பயிர் சாகுபடியை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக வினாடிக்கு 6,500 கன அடி வீதம் நீர் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்தது.

    நேற்றைய நிலவரப்படி நீர்வரத்து 1,514 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 34.42 அடியாகவும், நீர் இருப்பு 9.3 டி.எம்.சி. ஆகவும் இருந்தது. இதே நிலை நீடித்தால் இன்னும் 3 நாட்கள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் சூழ்நிலை உருவானது.

    இதையடுத்து அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் மீன் வளம் மற்றும் குடிநீர் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாசனத்திற்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் டெல்டா பாசனத்திற்கு 2,500 கன அடி குறைத்து வினாடிக்கு 4,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு 1004 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 33.58 அடியாக உள்ளது. 9.02 டி.எம்.சி. தண்ணீர் அணையில் உள்ளது.

    நீர் திறப்பு தொடர்ச்சியாக 4 ஆயிரம் கன அடி நீடித்தால் இன்னும் 2 வாரங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×