search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளராக்குமாறு மோடி - அமித் ஷா அழுத்தம் கொடுத்தார்களா?- பழனிசாமி விளக்கம்
    X

    அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளராக்குமாறு மோடி - அமித் ஷா அழுத்தம் கொடுத்தார்களா?- பழனிசாமி விளக்கம்

    • கடந்த 2 ஆண்டு காலமாக தமிழகத்தில் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது.
    • தி.மு.க. 520 தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் 10 சதவீத அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை.

    சேலம்:

    பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக கடந்த 25-ந்தேதி அ.தி.மு.க. அதிரடியாக அறிவித்தது.

    இந்த கூட்டணி முறிவு நாடகம் என்றும், மீண்டும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்து விடும் என்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்தன. இதற்கு அ.தி.மு.க. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    அதில் பாரதிய ஜனதா கட்சியுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி நீடிப்பதாகவும், சமரச பேச்சு நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கோவைக்கு வந்திருந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டு சேர திட்டமிட்டிருப்பதாக மீண்டும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் எடப்பாடியில் விரிவாக பேட்டி அளித்தார். அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணி முறிவில் உறுதியாக இருப்பதாக விளக்கம் அளித்தார்.

    எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி வருமாறு:-

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா நிர்வாகிகள் விரும்புவது என்பது அவர்களின் விருப்பம். ஆனால் நான் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன். நான் சேலம் மாநகர் மாவட்ட பூத் கமிட்டி நிகழ்ச்சியில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன்.

    25.9.2023 அன்று தலைமைக் கழகத்தில் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை அவர்கள் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிக் கொள்கிறது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் பா. ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் எந்த மாதிரி கூட்டணி அமையும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். நிச்சயமாக எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் சேரும் என்பதை பத்திரிகைகளுக்கும், ஊடகத்துக்கும் தெரிவிப்போம்.

    பா.ஜனதா மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கூறி இருப்பதற்கு, நான் என்ன கருத்து சொல்ல முடியும். எங்களுடைய கருத்து நான் சொன்னது தான். எங்களுடைய முடிவுகள் அதுதான். 2 கோடி தொண்டர்களின் உணர்வு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது.

    வேண்டுமென்றே திட்டமிட்டு தினந்தோறும் கேள்வி கேட்டால் நான் என்ன சொல்வது? எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். எங்கள் கட்சியை பற்றித்தான் நாங்கள் பேச முடியும்.

    நாங்கள் தனித்து நிற்பதால் தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாது. மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. வாக்களித்த பிறகு முடிவு தெரியும். எங்களை பொருத்தவரை அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி புதுச்சேரி உள்பட 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

    2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் 7 எம்.பி. தொகுதிகளுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். சேலத்தில் மட்டும் 2 லட்சத்து 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம். இப்படி பல இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம்.

    சிதம்பரம் தொகுதியில் 324 வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தோம். ஈரோட்டில் 7,800 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றோம். நாமக்கல்லில் 15,400 ஓட்டுகள் தான் குறைவு. இந்த 3 தொகுதியிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். இந்த 10 தொகுதிகளும் எளிதாக வெற்றி பெற வேண்டியது.

    கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், கடலூர் என 10 பாராளுமன்ற தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாகத்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். 1 லட்சம் வாக்குகளுக்கு கீழ் 7 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பறி போனது. எனவே 100-க்கு 100 சதவீதம் 40 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.

    கடந்த 2 ஆண்டு காலமாக தமிழகத்தில் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. தி.மு.க. 520 தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் 10 சதவீத அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை. ஆனால் முதலமைச்சர் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பச்சை பொய்யை சொல்கிறார்.

    தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. வீட்டு வரி 100 சதவீதம், கடை வரி 150 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது மக்கள் வாழ்க்கை நடத்துவதே இன்று சவாலாக இருக்கிறது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் தலைமையில் அமையும் கூட்டணிக்கு பாராளுமன்ற தேர்தல் சாதகமாக இருக்கும்.

    எம்.பி., எம்.எல்.ஏ.க்களை மக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். வீட்டிலேயே இருந்து விட்டால் அதை யார் நிறைவேற்றி தருவது. அதற்காகத்தான் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.

    இங்கிருக்கும் பல தி.மு.க. அமைச்சர்கள் போய் டெல்லியில் பா.ஜனதா மந்திரிகளை சந்தித்தனர். அப்படியென்றால் தி.மு.க.வை அவர்கள் கூட்டணி சேர்த்துக் கொண்டார்களா? பல மத்திய மந்திரிகள் தமிழ்நாட்டுக்கு வரும் போது அந்த நிகழ்ச்சியில் தி.மு.க. அமைச்சர்கள் பங்கு பெறுகிறார்கள். அந்த மாதிரிதான் இதுவும். அந்த பகுதி தென்னை விவசாயிகளின் நலன் கருதியும், அவர்கள் வைத்த கோரிக்கை அடிப்படையிலும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கோவை வந்த போது தென்னை விவசாயிகள் படும் கஷ்டங்களை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரிடம் எடுத்து கூறி நிவாரணம் கேட்டுள்ளனர்.

    அதற்காகத்தான் சந்தித்தார்கள். ஆனால் உடனே கூட்டணி என்கிறீர்கள். தி.மு.க. அமைச்சர்கள் சந்தித்தால் எதுவும் கேள்வி கேட்பதில்லை. காவிரி பிரச்சனைக்கு மத்திய நீர்வளத்துறை மந்திரியை போய் பார்த்தார்கள். அப்போதெல்லாம் இந்த கேள்வி வரவில்லையே?

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கடமையை செய்வதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். கூட்டணிக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது. ஏற்கனவே கூட்டணியில் இருந்து விலகுவது என்று எடுக்கப்பட்டது உறுதியான முடிவு.

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது நாடகம் என்று தி.மு.க. தலைமை என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இந்தியா கூட்டணிதான் நாடகம். மத்திய பிரதேச மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற வேட்பாளர்களை தனியாக அறிவித்து விட்டது.

    இந்தியா கூட்டணியில் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் கொண்ட கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன. அது இன்னும் முழு வடிவத்தையே பெறவில்லை. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி, எங்களுக்கு கம்யூனிஸ்டு கட்சியுடன் உடன்பாடு இல்லை என்கிறார்.

    கேரளாவில் கம்யூனிஸ்டு தலைவர்கள் காங்கிரசுடன் இணைய மாட்டோம் என்கிறார்கள். டெல்லி, பஞ்சாப்பிலும் முரண்பாடுகள் உள்ளன.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக மேட்டூர் அணை நீரை டெல்டா பாசன விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு திறந்தார். அப்போது அவர் தன்னை டெல்டாக்காரன் என்றார். இப்போது அந்த வார்த்தையை காணோம்.

    உங்களை நம்பித்தான் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் சுமார் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்துள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பதை அறிந்தீர்களா? அங்கு போய் பார்த்தீர்களா? தண்ணீர் இல்லாமல் 3½ லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி விட்டதாக தகவல் வருகிறது. விவசாயிகள் மீது முதலமைச்சர் அக்கறை கொண்டிருந்தால் காவிரி நீரை மாதா மாதம் கேட்டு பெற்றிருக்க வேண்டும்.

    இந்தியா கூட்டணியில் சேரும் போதே காவிரி நதி நீர் பிரச்சனையை எடுத்து வைத்திருக்கலாம். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற போது தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதை அவர்களிடம் எடுத்து சொல்லி இருந்தால் நிச்சயமாக நமக்கு ஒரு சாதகமான முடிவு எட்டப்பட்டு இருக்கும். அந்த நல்ல வாய்ப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நழுவ விட்டு விட்டார்.

    கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி இருக்கிறது. அப்போதே தண்ணீரை கேட்டு பெற்றிருந்தால் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. இதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமைத்து வெற்றி பெற்று மக்களுக்கு தேவையான திட்டங்களை அளிப்போம்.

    அடுத்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பா.ஜனதா அழுத்தம் கொடுத்ததாக கூறுகிறீர்கள். அது தவறான செய்தி. அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இப்போது நான் அதை தெளிவு படுத்துகிறேன். பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இங்கே நடந்த நிகழ்வுகள் எங்கள் தொண்டர்களின் மனதை காயப்படுத்தி விட்டது.

    ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் தொண்டர்கள் உழைக்க வேண்டும். எனவே எங்கள் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையில் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

    இப்போது தெளிவுபடுத்துகிறேன். அவர்கள் எந்த சீட்டும் பேசவில்லை. 20 சீட், 15 சீட் என்று எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அதைப் பற்றி பேசவும் இல்லை.

    இங்குள்ள பா.ஜனதா மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்ததாக கூறப்பட்ட அந்த தகவலும் தவறானது. நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×