என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • மாற்றம் கைகூடுவதற்கு தெலுங்கானா, ஆந்திராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமே உதாரணம்.
    • அ.தி.மு.க. நேற்றைய மழையில் முளைத்த காளான் அல்ல... எம்.ஜி.ஆர். விதைத்து ஜெயலலிதா வளர்த்த விருட்சம்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருப்பதாவது:-

    ஒரு மாதத்தில் கூட மாற்றம் ஏற்பட்டு ஆட்சி மாற்றம் கைகூடி வரும். மாற்றம் கைகூடுவதற்கு தெலுங்கானா, ஆந்திராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமே உதாரணம்.

    அ.தி.மு.க. நேற்றைய மழையில் முளைத்த காளான் அல்ல... எம்.ஜி.ஆர். விதைத்து ஜெயலலிதா வளர்த்த விருட்சம் என்று கூறியுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய், அ.தி.மு.க. குறித்து விமர்சிக்காதததால் அதனுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், விஜயபாஸ்கர் ஆட்சி மாற்றம் கைகூடி வரும் என்று கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தை உற்று நோக்க வைத்துள்ளது. 

    • திருமணஞ்சேரியில் திருமணம் செய்துகொண்டனர்.
    • வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சனை.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தீதான் விடுதி கிராம த்தைச் சேர்ந்தவர் வீரையன் மகன் சுந்தரபாண்டியன் (வயது 23). விழுப்புரம் மாவட்டம் சேந்த நாடு புதுக்காலணியை சேர்ந்த விஜயன் மகள் விஜய தர்ஷினி(19).

    இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். அப்போது வர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த விஜய தர்ஷினி நேற்று முன்தினம் இரவு திருப்பூருக்கு வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு கறம்பக்குடிக்கு வந்தார்.

    தொடர்ந்து சுந்தரபாண்டியனும், விஜய தர்ஷனியும் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் இருவரும் திருமண கோலத்தில் கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    காதல் ஜோடி இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்தில் பிரச்சனை ஏற்படும் என கருதி காவல் நிலையம் வந்ததாக கூறினார்.

    • அரியாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், முருகானந்தம் ஆகியோர் சடலமாக மீட்பு.
    • வனப்பகுதிக்கு சென்று தேடிய நிலையில் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே முயல் வேட்டைக்கு சென்ற இருவரை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    அரியாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், முருகானந்தம் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.

    நேற்றிரவு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படும் நிலையில், வீடு திரும்பாததால் இருவரையும் உறவினர்கள் தேடி வந்தனர்.

    வனப்பகுதிக்கு சென்று தேடிய நிலையில் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.

    இருவரும் முயல் வேட்டைக்கு சென்றபோது, மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    • உழைப்புக்கு எடுத்துக்காட்டு தமிழ்நாடு முதலமைச்சர் தான்.
    • அ.தி.மு.க. கட்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது விஜய்க்கு தெரிந்துள்ளது.

    புதுக்கோட்டை:

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சியினுடைய கொள்கைகள் தமிழ்நாடு மக்களிடமிருந்து அகற்ற முடியாது என்பதை விஜய் கட்சி வெளியிட்டுள்ள ஜெராக்ஸ் காப்பியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும், எங்களுடைய கொள்கைகளை அதில் சில வெற்றிக்கு விளக்கங்களை கொடுத்திருக்கிறாரே தவிர திராவிட மாடல் ஆட்சியையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து செல்கின்ற கொள்கைகளையும் தமிழ்நாடு மக்களிடம் இருந்து எடுத்து விடவும் பிரித்து விடவும் முடியாது.

    உழைப்புக்கு எடுத்துக்காட்டு தமிழ்நாடு முதலமைச்சர் தான். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உலகத்திற்கே வழிகாட்டுகின்ற திட்டம். தமிழ்நாடு மக்களின் இதயங்களில் அவருக்கென்று தனி இடம் உள்ளது. உழைப்பின் மற்றொரு வடிவமாக திகழ்ந்து வருபவர் தான் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாடு மக்களிடையே அவர் உழைப்புக்கும் மரியாதை உள்ளது. இரவு பகல் பாராமல் உழைக்கக் கூடிய ஒன்று அரசியல் அது போக போக தெரியும்.

    இது வரைக்கும் பல அரசியல் கட்சிகளுடைய ஏ டீம், பி டீம் பார்த்துள்ளோம். இது பாஜகவுடைய சி டீம். ஆளுநரை எதிர்த்து பேசினால் தான் தமிழ்நாட்டில் எடுபடும். தமிழ்நாடு மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிற ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசினால் எடுபடாது. வெறுப்புக்கு ஆளாகியுள்ள ஆளுநரை பற்றி பேசினால் அவருக்கு மரியாதை கிடைக்கும் என்பதால் ஆளுநரை எதிர்த்து விஜய் மாநாட்டில் பேசப்பட்டுள்ளதே தவிர இது முழுக்க முழுக்க பாஜகவின் ஏ டீம் பி டீம் அல்ல பா.ஜ.க.வின் சி டீம்.

    அவர் யாருடைய ஏ டீம், பி டீம் அல்ல என்று விஜய் கூறியுள்ளார். அவருக்கே தெரியும் அவர் சி டீம் என்று. ஆட்சிக்கு வரட்டும், அப்போது பாத்துக்கலாம். மக்களை சந்திக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்த வேண்டும். மக்களை சந்தித்து வாக்குகளை பெற வேண்டும். பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வர வேண்டும்.

    அதற்கு பிறகு தான் ஆட்சியில் பங்கு என்பதற்கெல்லாம் வாய்ப்பு. எங்களது கூட்டணியை யாரும் பிரித்து விட முடியாது. தமிழ்நாடு முதலமைச்சர் காட்டுகின்ற பாசத்தை விட்டு யாரும் சென்று விட மாட்டார்கள்.

    அ.தி.மு.க. கட்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது விஜய்க்கு தெரிந்துள்ளது. அ.தி.மு.க.வை அவர் கட்சியாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அங்கிருக்க தொண்டர்களை இழுக்க வேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோள். பா.ஜ.க.வுக்கு வலுவூட்டுகின்ற வகையில் அ.தி.மு.க. தொண்டர்களை தன் பக்கம் இழுப்பதற்காக அ.தி.மு.க.வைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை. ஊழலை பற்றி பேச வேண்டும் என்றால் 2011-21 பற்றி தான் பேச முடியுமே தவிர 21-26 ஐ பற்றி பேசுவதற்கு யாராலும் முடியாது. எந்த தவறுக்கும் நாங்கள் ஆளாகவில்லை.

    பழுத்த பழம் தான் கல்லடி படும். தி.மு.க.வை பற்றி தாக்கி பேசினால் தான் மக்கள் மன்றத்தில் ஏதாவது பேச முடியும். தமிழ்நாட்டில் அரசியலில் அண்ணா, பெரியார், கலைஞர் அதேபோல் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கக்கூடியவர் எங்களது தலைவர் மு.க. ஸ்டாலின். இதை மீறி யாரும் அரசியல் செய்ய முடியாது இவர்களைப் பற்றி பேசாமல் யாரும் அரசியல் செய்து விடவும் முடியாது.

    183 படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் தி.மு.க.வின் கொள்கைகளை பரப்புவதற்காக சிறந்த பேச்சாளர்களாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் அவர்கள் மூலமாக அடுத்த கட்ட பிரசாரத்தை திமுக இளைஞரிடத்தில் கொண்டு செல்லும்.

    தி.மு.க. நினைத்தால் 5 மடங்கு கூட்டத்தை கூட கூட்ட முடியும் எங்களின் இளைஞர் சக்தி அதிகரித்துள்ளது குறையவில்லை. இன்று இளைஞர்கள் நம்பி வரும் இயக்கமாக திமுக தான் இருக்கிறது. நேற்று நடந்த மாநாடு எங்களைப் பொறுத்தவரை சினிமா குறித்தான மாநாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசு சிறப்பாக செயல்பட பல தடைகளை ஆளுநர் உருவாக்கி இருக்கிறார்.
    • இரு மொழிக் கொள்ளைதான் திராவிட இயக்கங்களின் கொள்கை.

    புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "இந்தி மொழிக்கு நாங்கள் எதிரிகள் கிடையாது" என துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியதாவது:-

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அமைச்சரவையில் தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள் என்றால் அதற்கு ஆளுநர் முழு ஆதரவுடன் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநரால் பல்வேறு திட்டங்கள் தடைப்பட்டு உள்ளன. தமிழக அரசு சிறப்பாக செயல்பட பல தடைகளை ஆளுநர் உருவாக்கி இருக்கிறார். நீதிமன்றத்திற்கு சென்றுதான் தீர்ப்புகளை பெறவேண்டி இருக்கிறது.

    கனமழையில் இருந்து சென்னை மீண்டிருக்கிறது என்றால், அரசு நிர்வாகிகள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் தான் காரணம்.

    இந்தி மாத தினம் கொண்டாட்டும். இந்தி மொழிக்கு நாங்கள் எதிராளிகள் கிடையாது. ஆனால், அதே வேளையில் இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். இரு மொழிக் கொள்ளைதான் திராவிட இயக்கங்களின் கொள்கை.

    இருமொழிக் கொள்கை இருப்பதால்தான், உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் ஆளுமைகளாக இருக்கின்றனர். அதற்கு காரணம் ஆங்கில புலமை.

    மும்மொழிக் கொள்கையே இந்தியை திணிப்பதற்காக தான்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரெயில் ஓட்டுநரின் சாதுரியமான செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • தீ அணைக்கப்பட்டதை தொடர்ந்து மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு ராமேஸ்வரத்துக்கு விரைவு ரெயில் புறப்பட்டது சென்றது.

    புதுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த ராமேஸ்வரம் விரைவு ரெயில் புகை போக்கியில் தீ விபத்து ஏற்பட்டது. எஞ்சின் புகை போக்கியில் உள்ள டியூப் வெடித்ததால் பற்றி எரிந்த நெருப்பால் பயணிகள் பீதியில் உறைந்தனர்.

    உடனடியாக விரைவு ரெயிலை நிறுத்தி சாதுரியமாக செயல்பட்ட ரெயில் ஓட்டுநரின் செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீ அணைக்கப்பட்டதை தொடர்ந்து மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு ராமேஸ்வரத்துக்கு விரைவு ரெயில் புறப்பட்டது சென்றது. 

    • மறியலால் வேட்டனூர் பகுதியில் சென்ற வாகனங்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.
    • மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் வேட்டுனூர் சாலையானது நாகுடியிலிருந்து மாணவநல்லூர், வேட்டனூர் வழியாக நிலையூர், செல்லப்பன் கோட்டை, பானாவயல், தண்டலை உள்ளிட்ட கிராமங்களை கடந்து மணமேல்குடி கிழக்கு கடற்கரைச் சாலையை சென்றடைகிறது.

    சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் இணைப்புச்சாலையில் தினம்தோறும் அறந்தாங்கி, நாகுடி மற்றும் மணமேல்குடி வரை 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பள்ளி கல்லூரிக்கும், பொதுமக்கள் வேலைக்கும் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் வேட்டனூர் கிராமத்தில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சரி செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

    ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்ட அவர்கள் பேருந்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் இருந்ததால் அவர்களின் பணிகள் மற்றும் நலன் கருதி பொதுமக்கள் தாங்களாகவே சாலை மறியலை கைவிட்டனர்.

    மறியலால் வேட்டனூர் பகுதியில் சென்ற வாகனங்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.

    • ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை.

    புதுக்கோட்டை:

    வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மின்கட்டண உயர்வு, சொத்து வரி, தொழில் வரி, கட்டிட வரைபட அனுமதி கட்டண உயர்வு மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆலோசனை நடத்தி வருகிறது

    ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளார்.

    தமிழகத்தில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் வடநாட்டு தொழிலாளர்களை நம்பி தான் வணிகர்கள் உள்ளனர். அவர்கள் வரும்போது பான் மசாலா, குட்கா ஆகியவற்றோடு தான் வருகிறார்கள். இதனை தமிழகத்திற்குள் வரும் போதே அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    ஆன்லைன் வர்த்தகம் இனியும் தொடருமானால் 10 கோடி வணிகர்கள் காணாமல் போய்விடுவார்கள். விரைவில் பிரதமரை சந்திக்க உள்ளோம்

    இதேபோல் தமிழகத்தில் உயர்த்தப்படும் மின் கட்டண உயர்வு சொத்து வரி கட்டிட வரைபட கட்டண உயர்வு தொழில் வரி ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்து உள்ளோம்.

    வணிக வரித்துறை, உணவு பாதுகாப்பு துறை ஆகிய அதிகாரிகளால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சில தவறான அதிகாரிகள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு லஞ்சம் பெறுவதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மந்திரி சபை மாற்றப்படுவது அதிசயமான நிகழ்வு அல்ல, வாடிக்கையான ஜனநாயக நிகழ்வுதான்.
    • முதலமைச்சர் எடுக்கின்ற நிர்வாக முடிவு, இதில் விமர்சனம் செய்வது என்னை பொறுத்தவரையில் சரியானது அல்ல.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    முதலமைச்சரின் அதிகாரத்திற்கு உட்பட்டு உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது முதலமைச்சர் எடுக்கின்ற நிர்வாக முடிவு, இதில் விமர்சனம் செய்வது என்னை பொறுத்தவரையில் சரியானது அல்ல. ஒரு முதலமைச்சருக்கோ பிரதம மந்திரிக்கோ முழு அதிகாரம் உண்டு, யாரை வேண்டுமானாலும் அவர்கள் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளலாம்.

    மந்திரி சபை மாற்றப்படுவது அதிசயமான நிகழ்வு அல்ல, வாடிக்கையான ஜனநாயக நிகழ்வுதான். இந்திய அளவில் குடும்பங்களை மையமாக வைத்துதான் அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி மாநில கட்சிகள் பலவாக இருந்தாலும் சரி இது புரிவதில்லை. கட்சியில் இருப்பவர்கள் ஒருவரை தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டால் அதனை கட்சிக்கு வெளியே உள்ளவர்கள் விமர்சனம் செய்வது என்னை பொறுத்தவரையில் உகந்ததாக இருக்காது.

    செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த விதமான தடையும் கிடையாது, தண்டனை பெற்றால் மட்டுமே அமைச்சர் பதவியை ஏற்க முடியாது. அப்படி வழக்கு போட்டவர்கள் எல்லாம் அமைச்சராக முடியாது என்றால் பாஜக நினைத்தால் எல்லோர் மீதும் வழக்கு போட்டு யாரையுமே அமைச்சராக பதவி ஏற்க விடாமல் செய்துவிடும். கூட்டணி என்ற முறையில் நாங்கள் (காங்கிரஸ்) திமுகவோடு தோலோடு தோலாகதான் நிற்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காருக்குள் கிடந்த 5 பேரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • தற்கொலை செய்த தொழில் அதிபர் புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள நமுன சமுத்திரம் பகுதியில் நகர சிவ மடம் உள்ளது. இதன் காவலாளியாக அடைக்கலம் என்பவர் உள்ளார்.

    இந்த மடத்தில் இறந்தவர்களுக்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்த உறவினர்கள் இறுதி காரியங்கள் செய்து வருகின்றனர். இங்கு நேற்று மாலை டி.என். 77 எம். 1705 எண் கொண்ட ஒரு கார் வந்தது. அதில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் இருந்தனர்.

    இவர்கள் நேற்று மாலை அப்பகுதியில் நடமாடியதை சிலர் பார்த்துள்ளனர். பின்னர் வெளியே சென்றுவிட்டு திரும்பினர். இன்று காலை அந்தக் கார் வெகு நேரமாகியும் அங்கிருந்து புறப்படவில்லை.

    இதனால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அருகில் சென்று பார்த்தபோது 5 பேரும் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கைகளில் சாய்ந்து கிடந்தனர். உடனே காவலாளி அடைக்கலம் நமுன சமுத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது காருக்குள் கிடந்த 5 பேரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. தற்கொலை செய்தவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்கள்.

    தற்கொலை செய்த தொழில் அதிபர் புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. சேலத்திலும் அவர்கள் தொழில் நடத்தி வந்துள்ளனர். ஆனால் பெயர் விபரங்கள் குறித்து விசாரணை நடத்து வருகிறது.

    ஒரு தாய் மகள், தந்தை மகன் மாமியார் உறவு முறையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. காரில் போலீசார் சோதனை போட்டனர். அப்போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அதில் கடன் தொல்லை காரணமாக 5 பேரும் தற்கொலை செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடயங்களை சேகரித்தனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காருக்குள் விஷம் குடித்து பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி அரங்கேறி வருகிறது.
    • பொதுமக்கள் உஷாராக இருந்து செயல்பட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    இன்றைய நவீல உலகில் இணையதள பயன்பாடு அதிகமாக உள்ளது. சமூகவலைத்தளங்களை பார்வையிடுதல், அதில் பதிவேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பலரும் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மோசடியும் அரங்கேறி வருகிறது.

    இந்த சூழலில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு.அருணா பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருந்தது. அந்த முகநூல் பக்கத்தில் இருந்த தகவல்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் காணப்பட்டது. இதனால் பலரும் சந்தேகமடைந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதை அறிந்த கலெக்டர் மு.அருணா இதுபற்றி சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கலெக்டர் அருணாவின் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கியது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த போலி முகநூல் கணக்கை போலீசார் முடக்கினர்.

    சமூக வலைதளங்களில் உலாவரும் இதுபோன்ற மோசடிகளை தடுக்க சைபர் கிரைம் போலீசாரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் சிலரது பெயரில் போலி கணக்குகளை தொடங்கி அதன் மூலம் தற்போது பண மோசடி நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இதனால் போலி கணக்குகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    உங்கள் நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்கை தொடங்கி உங்களின் தனிப்பட்ட தகவலை பெறுவதற்கும் அல்லது அவசர நிலையை காரணம் காட்டி பணம் கேட்கவும் நட்பு கோரிக்கை விடுப்பார்கள். இதனால் பொதுமக்கள் உஷாராக இருந்து செயல்பட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    மேலும் இதுபோன்ற மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் 1930 என்ற உதவிமைய தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் https://cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம் என போலீசார் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    • தை பொங்கல் விழா மற்றும் புரட்டாசி மாதம் காய்கறி திருவிழா வெகு சிறப்பாக, கொண்டாப்படுவது வழக்கம்.
    • அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மெய்வழிச்சாலையில் மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம் என்னும் ஒரு மதத்தினர் உள்ளனர். இவர்கள் தங்கள் பெயருக்கு முன்பாக சாலை என சேர்த்துக்கொள்வார்கள்.

    இந்த மெய்வழி மதத்தில் 69 ஜாதிகளை சேர்ந்தவர்கள் ஒன்றாக உள்ளனர். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை, தை பொங்கல் விழா மற்றும் புரட்டாசி மாதம் காய்கறி திருவிழா வெகு சிறப்பாக, கொண்டாப்படுவது வழக்கம்.

    அதன்படி மெய்வழி தலையுக ஆண்டு புரட்டாசி மாதம், பிச்சை ஆண்டவர் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் மெய்வழி ஆலய வளாகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து காய்கறிகள், அரிசி, பருப்பு ஆகியவற்றை வைத்துக்கொண்டு வரிசையாக நின்றனர்.

    அப்போது மெய்வழி சபைக்கரர் சாலை வர்க்கவான் வந்து அனைவரிடமும் காய்கறிகள், அரிசி, பருப்புகளை பெற்றுக்கொண்டு ஆசீர்வாதம் வழங்கினார். பின்னர் அனைவரிடம் பெறப்பட்ட காய்கறிகள், அரிசி, பருப்பை கொண்டு சமையல் செய்து, அனைவருக்கும் சபைக்கரசர் வர்க்கவான் பிரசாதமாக வழங்கினார்.

    அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இவ்விழாவில், தமிழகம் மற்றும் வெளிமாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு காய்கறிகளை படைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

    ×