என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 வயது சிறுமி உள்பட 5 பேருக்கு டெங்கு பாதிப்பு
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 வயது சிறுமி உள்பட 5 பேருக்கு டெங்கு பாதிப்பு

    • காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் பிரத்யேக வார்டு திறக்கப்பட்டுள்ளது.
    • கடந்த மாதம் 44 பேருக்கு டெங்கு உறுதியான நிலையில், இந்த மாதம் தற்போது வரை 26 பேர் சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயில், மழை, குளிர் என்று சீதோஷ்ண நிலைகள் அடிக்கடி மாறி வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 79 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 வயது சிறுமி உட்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் பிரத்யேக வார்டு திறக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நரிமேடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க மாநகராட்சி ஊழியர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அப்பகுதியில் நடமாடும் மருத்துவமனை மூலமாக சளி இருமல் காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது.

    கடந்த மாதம் 44 பேருக்கு டெங்கு உறுதியான நிலையில், இந்த மாதம் தற்போது வரை 26 பேர் சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    கிராமப்புறங்களில் பலரும் குடும்பம் குடும்பமாய் காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர். 10 நாட்கள் வரை பாதிப்பு நீளுவதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாள்தோறும் 44 மருத்துவ முகாம்கள் என்ற அடிப்படையில் ஆயிரத்து 237 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில், 34 ஆயிரத்து 142 பேருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

    இதே போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டம் முழுவதும் 100 நாள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மாவட்டத்தில் மேலும் டெங்கு பாதிப்பு அதிகரிக்காமல் தடுக்க சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×