என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையால் இன்று சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஏராளமானோர் 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இன்று காலை நெடுந்தீவு அருகே 8 பேர் 2 விசைப்படகுகள் மூலம் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், நெடுந்தீவு கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி 8 பேரையும் 2 விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் பெயர், விவரம் உடனடியாக தெரியவில்லை.

    இந்நிலையில் 8 பேர் இலங்கைகடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டதை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுக்கோட்டை  மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறி வந்த நிலையில், இன்று 8 பேர் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    பொன்னமராவதி பஸ் நிலையம் எதிரில் தெற்கு ஒன்றியம், பேரூர் மற்றும் மாவட்ட நெசவாளர் அணி சார்பில் திமுக பொதுக் கூட்டம் நடந்தது.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி பஸ் நிலையம் எதிரில் தெற்கு ஒன்றியம், பேரூர் மற்றும் மாவட்ட நெசவாளர் அணி சார்பில் திமுக பொதுக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு  மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் முத்துக் குமார் தலைமைவகித்தார். திருமயம் எம்.எ.ல்ஏ ரகுபதி ஈரோடு இறைவன், பொன்னேரி சிவா, முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் ராஜீ ஆகியோர் பேசினார்கள்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ ஆலவயல் சுப்பையா, நகரச் செயலாளர் அழகப்பன், வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்து, மாவட்ட துணைச் செயலாளர் சின்னையா, பொதுக்குழு உறுப்பினர் தென்னரசு, மாவட்டப் பிரதிநிதிகள் சிக்கந்தர், விஜயன், மணி முன்னாள் ஒன்றியச் செயலாளர்கள் அய்யாவு, ராமச்சந்திரன், அவைத் தலைவர் ராமு, முன்னாள் நகரச் செயலாளர் ராமன், நிர்வாகிகள் பழனிச்சாமி, ராஜா, கண்ணன், முரளிதரன், தட்சணாமூர்த்தி, தியாகு, வடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஒன்றியச் செயலாளர் அடைக்கல மணி வரவேற்றார். முடிவில் நகரச் செயலாளர் அழகப்பன் நன்றி கூறினார்.
    கறம்பக்குடியில் குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி அருகே பிலாவிடுதி ஊராட்சியை சேர்ந்தது ஆண்டான் தெரு. இங்கு சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக ஆண்டான்தெரு பகுதியில் குடிநீர் சரிவர வினியோகம் ஆகவில்லை. இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கறம்பக்குடிக்கு காலிக்குடங்களுடன் வந்தனர். பின்னர் கறம்பக்குடி ஒன்றிய அலுவலகம் முன்பு கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி ஒன்றிய ஆணையர் சதாசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் மற்றும் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    நல்லாண்டார்கொல்லையில் தீ விபத்து நிகழ்ந்த ஓ.என்.ஜி.சி. கழிவு சேகரிக்கும் கிணற்றை மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்காக புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு கல்லிக்கொல்லை, வானக்கண்காடு மற்றும் கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில், ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.

    இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு மற்றும் கோட்டைக்காடு பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் இரண்டாம் கட்டமாக 156 நாட்களை கடந்தும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை நல்லாண்டார்கொல்லை ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணற்றின் அருகே உள்ள கழிவு சேகரிக்கும் தொட்டியில் எதிர்பாராதவிதமாக திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தீ அந்த தொட்டி முழுவதும் மளமளவென பரவி எரிந்ததால் அந்த பகுதியே புகை மண்டலமானது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்தினர் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த சம்பவம் பற்றி அறிந்த கறம்பக்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு நேரில் சென்று பார்வையிட்டனர். சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட கறம்பக்குடி தாசில்தார் சக்திவேலை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    அப்போது, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று கலெக்டர் அளித்த உறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த தீ விபத்து சம்பவம் குறித்து வடகாடு போலீசார் விசாரித்து வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள கழிவு சேகரிக்கும் தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் தீ விபத்து நிகழ்ந்த நல்லாண்டார்கொல்லை ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணற்றின் அருகே உள்ள கழிவு சேகரிக்கும் தொட்டியை மூடுவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான பணிகள் இன்று நடக்கிறது. மூடாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய் கிணறு ஒன்றில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    புதுக்கோட்டை:
     
    புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் கிணறு ஒன்றில் இன்று திடீரென தீ பிடித்தது. தீ பிடித்ததால் ஏற்பட்ட புகை வானத்தில் கருமேகமாக சூழ்ந்தது. மக்கள் வசிப்பிடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் தீ விபத்து ஏற்பட்டதை கேட்டு வட்டாட்சியர் அங்கு விரைந்து வந்தார். அங்கு கூடியிருந்த மக்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளை மூட வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டனர்.

    மேலும், அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி எண்னெய் கிணற்றில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
    புதுக்கோட்டையில் உள்ள அரசு மதுபானக் குடோன் சுமைப்பணித் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன் கிழைமயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் உள்ள அரசு மதுபானக் குடோன் சுமைப்பணித் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன் கிழைமயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுபானப் பெட்டிகளை ஏற்றி, இறக்குவதற்கான கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். நிர்வாகத்தால் பிடிக்கப்பட்டுள்ள பி.எப். பணத்தை உரிய நேரத்தில் அலுவலகத்தில் செலுத்தி அதற்கான ரசீதுகளை தொழிலாளர்களிடம் வழங்க வேண்டும். மது பானக் குடோன்களில் தொழிலாளர்களுக்கு ஓய்வறை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் குடோன் சுமைப் பணித் தொழிலாளர் சங்கத்தின் சி.ஐ.டி.யு புதுக்கோட்டை கிளைத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யு. மாவட்டத் துணைத் தலைவர்கள் சண்முகம், எம்.ஜியாவுதீன், சுமைப்பணித் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொதுச்செயலாளர் பிச்சை முத்து உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
    கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கீரனூர்:

    கீரனூரை அடுத்துள்ள வத்தனாக்கோட்டையை சேர்ந்தவர் பிச்சை முத்து (வயது 45). இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் நேற்று பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். மாலை 4 மணி அளவில் கீரனூர் அருகே கிள்ளனூரை அடுத்து உள்ள பெரம்பூர் விலக்கு சாலையில் ஒரு வளைவில் சென்ற போது மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரின் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்து பிச்சைமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தகவல் அறிந்ததும் உடையாளிபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிச்சை முத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன பிச்சைமுத்துவுக்கு 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடதக்கது.

    திருமயம் தாலுகா, நமணசமுத்திரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, நமணசமுத்திரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நமணசமுத்திரம் கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமயம் வடக்கு ஒன்றிய செயலாளர் திருமா பாண்டியன் தலைமையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவி அனிதா மரணத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை பாதிக்கும் நீட் தேர்வை முற்றிலும் நீக்க வேண்டும், தமிழக அரசு மத்திய அரசு டன் போராடி நீட் தேர்வை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலைவேந்தன், அழகப்பன், துரைசாமி, அம்மையப்பன், உதயம்சிவா, ரமேஷ், சுடர் வளவன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்செல்வன் கண்டன உரை நிகழ்த்தினார். மாநில துணைச்செயலாளர் கலைமுரசு நன்றி கூறினார்.

    மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வழங்கினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் புதுக்கோட்டை நகர நிலவரித்திட்டத்தின் சார்பில் 26 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களுக்கான ஆணைகளும், சமூக நலத்துறையின் சார்பில் சுயதொழில் பயிற்சி முடித்த 15 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்க்கு ரூ.2 லட்சம் மதிப்பில் சுயதொழில் தொடங்க நிதியுதவிக்கான காசோலைகளும்,

    9 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்கார்ப் இந்தியா நிறுவனத்தின் மூலம் ரூ.80,000 மதிப்பில் தொழில் கடன் நிதி உதவித்தொகைக்கான காசோலைகளும் வழங்கினார்.

    மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மாதாந்திர உதவித்தொகை கோரி 5 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 2 மனுக்களும், வங்கிக் கடனுதவி கோரி 3 மனுக்களும், அங்கன்வாடி பணியிடம் கோரி 5 மனுக்களும், மருத்துவத்துறையில் வேலை கோரி 1 மனுவும் என மொத்தம் 16 மனுக்களை பெற்று இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்த பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான தேனிமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்த பெற்ற முருகன் கோவில்களில் ஒன்று தேனிமலை முருகன் கோவிலாகும். தேனீக்கள் அதிகம் இங்கு உள்ளதால் இது தேனிமலை எனக்கூறப்படுகின்றது. புதுக்கோட்டை மகாராஜாவின் தீராத வயிற்று வலியை தீர்த்த ஸ்தலம் என வரலாற்று சாசனத்தில் உள்ளது.

    திருவண்ணாமலை கிரிவலத்திற்கு நிகராக தேனிமலை கிரிவலம் சிறப்புடையது. இவ்வளவு சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஐந்து நிலை ராஜ கோபுரம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மேல புதிதாக மண்டபம் கட்டப்பட்டுள்ளது கட்டிடப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 1ம் தேதி தொடங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பூஜை நடத்தப்பட்டு நேற்று காலை 9.40மணிக்கு பிள்ளை யார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் தேனிமலை ராஜப்பக்குருக்கள்,பாபு குருக்கள் போன்ற சிவாச்சா ரியார்கள் கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். கும்பத்தில் புனித நீர் ஊற்ற கருடபகவான் எப்போது வருவார் என சிவாச்சாரியார்கள்,பக்த கோடிகள் அனைவரும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பர். ஒரு சில கோவில்களில் கருடன் வரும் ஒரு சில கோவில்கள் வராமல் இருந்தாலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபி ஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

    ஆனால் இந்த தேனிமலை கோவிலில் ஒரு கருடன் முன்னே வர அதனை பின் தொடர்ந்து 12கருட பகவான்கள் வர சிவாச்சாரியார்களும் பக்தர்களும் ஆச்சரியத்துடன் காணாத காட்சியாக இருந்தது. சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுத்தலைவர் ராமசாமி, பரம்பரை அறங்காவலர்கள், ஊர்பொதுமக்கள் மற்றும் நகரத்தார்கள் செய்திருந்தனர்.
    அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு மத்திய அரசே காரணம் என்றும் ஜெயலலிதா இருந்திருந்தால் இது போன்று நடந்திருக்காது என்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பூலாங்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு தன்னால் முயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. நீட் தேர்வில் இருந்து விலக்கு தருவதாக நம்பிக்கை தெரிவித்த மத்திய அரசு, அவசர சட்டத்தை நிறைவேற்ற கூறிய தோடு, அதற்கு சட்டத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகமும் அனுமதி கொடுத்து விட்டு சுப்ரீம் கோர்ட்டில் வந்து நாங்கள் அனுமதி கொடுத்ததை ரத்து செய்து விட்டோம் என்கிறது.

    நாட்டில் எந்த ஒரு மாநிலத்திற்கும் இது போன்ற அநீதியை மத்திய அரசு செய்ததில்லை. அனிதாவின் துயர மரணத்திற்கு மத்திய அரசே காரணம். மாநில அரசு தவறு செய்தால் முதலில் கண்டிப்பது நான்தான். நீட் விவகாரத்தில் தமிழக அரசு இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது.

    மாணவர்கள் தங்கள் சொந்த கிராமத்திற்கு சென்று கோவில், குடிநீர்,நூலக வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மதிப்பெண் குறைந்தாலும், தேர்வில் தோல்வியுற்றாலும் கவலைப் படாமல் இருக்க பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் என்று அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் இன்று நாம் தமிழர் கட்சியினர்- கமல் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, இன்று முதல் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின.

    புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் இந்தாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, இன்று முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கியது.

    முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் கலந்து கொண்டு வகுப்புகளை தொடங்கி வைக்க இருந்தார். இந்நிலையில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் நடிகர் கமல் நற்பணி மன்றத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முன்பு திரண்டனர்.

    அவர்கள் அனிதா மரணத்திற்கு காரணமான மத்திய- மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் கல்லூரிக்குள் நுழைய முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போராட்டக்காரர்கள் போலீஸ் தடையை மீறி கல்லூரிக்குள் நுழைந்தனர். அங்கு முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற இருந்த கலையரங்கம் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    அப்போது நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி கோ‌ஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் கணேஷ் கலந்து கொண்டு வகுப்புகளை தொடங்கி வைத்தார்.

    கரூரில் இன்று புதிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. அதில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பங்கேற்க இருப்பதால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் பங்கேற்கவில்லை என கூறப்பட்டது. ஆனால் கரூர் நிகழ்ச்சியிலும் அமைச்சர் பங்கேற்கவில்லை.


    அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த போராட்டம் நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    திருச்சி தூயவளனார் கல்லூரி மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதேபோல் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் டோல்கேட் அருகே மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.

    திருச்சி காந்தி மார்க்கெட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் அனைத்திந்திய மாணவர் மன்றம் சார்பில் நீட் தேர்வை எதிர்த்து இன்று 3-வது நாளாக காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    ×