என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இன்று சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம், மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 150 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இன்று அதிகாலையில் அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந் தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் வந்தது.

    இதைப்பார்த்த புதுக்கோட்டை மீனவர்கள் பலர் தங்கள் வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஆனாலும் செல்வமணி என்பவருக்கு சொந்தமான படகை மட்டும் இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

    மேலும் மீனவர்களின் படகில் ஏறிய கடற்படையினர் அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை பறித்துக் கொண்டதோடு, அந்த படகில் இருந்த தமிழ்செல்வன் (வயது 55), அப்பாதுரை (52), ரெங்கசாமி (45), ஜீவா (55) ஆகிய 4 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகாம் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இன்று மதியம் அவர்கள் 4 பேரும் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

    அதன்பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரிய வரும். மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தினகரன் அணி இணைய முதல்வர் பழனிச்சாமிதான் முட்டுக்கட்டையாக உள்ளார் என்று ரத்தினசபாபதி எம்.எல்.ஏ.நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ.வும், தினகரன் ஆதரவாளருமான ரத்தினசபாபதி, விவசாயிகளுக்கு முறையாக பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க கோரி புதுக்கோட்டை கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அறந்தாங்கி தொகுதியில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முறையாக இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. தொகுதியின் வளர்ச்சி பணிகள் முற்றிலும் முடங்கி போயுள்ளது. தொகுதியில் இருந்த 3 சார்பதிவாளர்கள் அலுவலகங்களையும் உள்நோக்கத்துடன் மூட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். தினகரன் மீது தமிழக அரசு தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது கண்டனத்துக் குரியது. தனியாக செயல்படும் தினகரன் அணியை அ.தி.மு.க.வுடன் இணைப்பதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டேன். தினகரனும் இணைப்பிற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் முதல்வர் பழனிச்சாமிதான் முட் டுக்கட்டையாக உள்ளார்.

    இதற்கு அவர் கூறும் காரணங்கள் ஏற்று கொள்ளக் கூடியதாக இல்லை. இப்போதைய சூழ்நிலையில் பழனிச்சாமி அணியுடன், தினகரன் அணி இணைவதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வை மட்டுமல்ல, ஆட்சியையும் வழி நடத்தி செல்ல தகுதியானவர் தினகரன் தான். அ.தி.மு.க.வை விட்டு விட்டு அவர் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும். அவ்வாறு அவருக்கு தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் நடைபெற்ற 2-ம் கட்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி அனுமதி வழங்கியது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர் பாதிப்புக்குள்ளாகி, வாழ்வாதாரமான விவசாயம் அழிந்துவிடும். இதனால் இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரி மாதம் 16-ந் தேதி முதல் நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வடகாட்டில் தொடர் போராட்டம் நடைபெற்றது. பின்னர் அந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    இந்நிலையில் நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனங்களுக்கு மார்ச் 27-ந் தேதி மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கையெழுத்திட்டு அனுமதி வழங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள், ஏப்ரல் 12-ந் தேதி நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 2-ம் கட்ட போராட்டத்தை தொடங்கினர். இதில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பல்வேறு நூதன போராட்டங்களை தினமும் நடத்தி வந்தனர். 2-ம் கட்ட போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மத்திய, மாநில அரசுகளும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.

    இந்தநிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 174-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில், போராட்டக்குழுவின் உயர்மட்டக்குழுத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஷ்பராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன், அண்ணாபரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது போராட்டக்குழுவின் உயர்மட்டக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து உயர்மட்டக்குழு தலைவர் புஷ்பராஜ் கூறியதாவது;-

    மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாய வேலைகள், மக்களின் வாழ்வாதார தொழில்களை துறந்து தான் இதுவரை அமைதி வழி போராட்டத்தை மக்கள் நடத்தி வந்தனர். முதல் கட்டமாக 22 நாட்களும், 2-ம் கட்டமாக 174 நாட்களும் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் மத்திய, மாநில அரசுகள் போராடும் மக்களை கண்டுகொள்ளவில்லை.

    இந்த நிலையில், பலமாதங்களாக போராடும் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, தற்போது விவசாய காலம் தொடங்கியுள்ளதால் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதாவது காந்தி பிறந்த நாளில் காந்திய வழி போராட்டம் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளப்படும். மக்கள் போராடவில்லையே என்று எரிவாயு எடுக்க அனுமதித்து உள்ள ஜெம் நிறுவனத்தை ஊருக்குள் அனுப்ப மத்திய அரசு நினைத்தால் அடுத்து நடப்பது அமைதி வழி போராட்டமாக இருக்காது. அமைதி வழிப் போராட்டம் காந்தி பிறந்த நாளோடு முடிந்துவிட்டது. மீண்டும் நெடுவாசல் போராட்டம் தொடங்க வேண்டுமா? நிறுத்த வேண்டுமா? என்பதை மத்திய, மாநில அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறினார்.
    புதுக்கோட்டை:

    காந்தி ஜெயந்தியையொட்டி புதுக்கோட்டை காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காந்திய சிந்தனைகள், கொள்கைகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜெயலலிதா இறந்ததற்கு பிறகு ஒரு ஆட்சி நடப்பதாகவே தெரியவில்லை. அ.தி.மு.க. உட்கட்சி மோதலால், தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப்பயன்படுத்தி மத்திய அரசு, தமிழக அரசை ஆட்டி வைத்துக்கொண்டு இருக்கிறது. அதன்படி அ.தி.மு.க. தலைவர்கள் தலையாட்டி கொண்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் உள்ள இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், தமிழக அரசு தார்மீக பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். 1937-க்கு பிறகு தமிழகத்தில் இது போன்ற ஒரு மோசமான ஆட்சியை நான் கண்ட தில்லை. தமிழகத்தில் மாற்று அரசியலை கொண்டு வருவதற்காக தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட முயற்சியை மக்கள் புறக்கணித்து விட்ட னர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுக்கோட்டை அருகே மரத்தில் கார் மோதியதில் நண்பர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    நார்த்தாமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள மேலத்தானியம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவருடைய மகன் சதாம் உசேன்(வயது 28), அதே பகுதியை சேர்ந்த உதுமான் மகன் அசாருதீன் (25), இக்பால் மகன் ராசித்அலி (25). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இந்நிலையில் 3 பேரும் நேற்று சொந்தவேலை காரணமாக புதுக்கோட்டைக்கு காரில் செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி ஒரு காரில் மேலத்தானியத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்தனர். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு, அதே காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். புதுக்கோட்டை பெருமாநாடு அருகே உள்ள செல்லுகுடி விளக்கு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் காரில் வந்த 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காரின் இடிபாடுகளில் சிக்கி பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் வந்த 3 பேரும் இறந்து போனதால் காரை ஓட்டி வந்தவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.

    இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கார் விபத்தில் இறந்த சதாம் உசேன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளதும், அவர் விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது விபத்தில் சிக்கி பலியானதும் தெரியவந்தது. மேலும் ராசித்அலி மொபைல் கடை நடத்தி வந்ததும், அசாருதீன் புதுக்கோட்டையில் ஐ.ஏ.எஸ். அகாடமி நடத்தி வந்ததும் தெரியவந்தது. ஒரே ஊரை சேர்ந்த நண்பர்கள் 3 பேரும் கார் விபத்தில் பலியான சம்பவம், மேலத்தானியத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
    பயிர் காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 167 பேரை போலீசார் கைது செய்து விடுதலை செய்தனர்.
    அறந்தாங்கி:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி பகுதி குழு சார்பில், பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்காப்பீட்டு தொகையை பாரபட்சம் இல்லாமல் வழங்கவேண்டும், விவசாயிகளின் பயிர்கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும், காவேரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் தென்றல்கருப்பையா முன்னிலை வகித்தார். ஊர்வலமாக புறப்பட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேகோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பொன்னுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 31 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமையன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் பீமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 38 பெண்கள் உட்பட 112 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 167 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
    புதுக்கோட்டை பேருந்து நிலைய கழிவறையில் பதினாறு ஐம்பொன் சாமி சிலைகள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுக்கோட்டை:

    இந்தியா முழுவதும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவில்களில் இருந்து விலையுயர்ந்த மற்றும் கலைநயம் மிக்க ஐம்பொன் சாமி சிலைகளை கடத்தி வெளிநாடுகளில் விற்கும் சர்வதேச கும்பல் இயங்கி வருகிறது. தமிழகத்தில் அரியலூர், நெல்லை, அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்ட சாமி சிலைகள் சமீபத்தில் மீட்கப்பட்டன.

    இதில் தொடர்புடைய சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு சிலைகளை மீட்டனர். இது தொடர்பாக விசாரிக்கவும், திருடு போன சிலைகளை மீட்கவும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே புதுக்கோட்டையில் இன்று 16 ஐம்பொன் சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    புதுக்கோட்டை பேருந்து நிலையம் இன்று காலை பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது. வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் பலர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பஸ்களில் ஏறி சென்று கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள கழிவறை பகுதியில் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்தனர். அப்போது அங்கு கேட்பாரற்று கிடந்த பையை பிரித்து பார்த்த போது, அதில் ஏராளமான சாமி சிலைகள் இருந்தன.

    அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், இது குறித்து நகராட்சி ஆணையர் சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் புதுக்கோட்டை தாசில்தார் செந்தமிழ்குமரன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் பேருந்து நிலையத்திற்கு சென்று சிலைகள் இருந்த பையை பார்வையிட்டனர். அப்போது பையில் சிறிய அளவிலான 16 ஐம்பொன் சாமி சிலைகள் மற்றும் ஒரு காமாட்சி ஐம்பொன் விளக்கு ஆகியவை இருந்தது. குறிப்பாக அதில் விநாயகர், ஆஞ்சநேயர், தவழும் கிருஷ்ணர், நரசிம்மர், வில் ஏந்திய ராமர் உள்ளிட்ட சாமி சிலைகள் இருந்தன.

    அந்த சிலைகளை அங்கு போட்டு விட்டு சென்றது யார் என்று தெரியவில்லை. மதுரையை சேர்ந்த 2 பேர் சிலைகளை கடத்தி வந்ததும், புதுக்கோட்டை வந்ததும் போலீசாருக்கு பயந்து அதனை பேருந்து நிலைய கழிவறை பகுதியில் போட்டு விட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    இது தொடர்பாக வருவாய்த்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி, சிலைகளை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் மீட்கப்பட்ட 16 ஐம்பொன் சாமி சிலைகள் மற்றும் ஐம்பொன் விளக்கு ஆகியவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி அருகே திருமணம் தாமதம் ஆனதால் மனமுடைந்த காதலர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த வல்லவாரி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் பாரதி (வயது 22), வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊரான வல்லவாரிக்கு வந்திருந்தார். பாரதியும் அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணான ராமச்சந்திரன் மகள் கண்ணாத்தாள் (16) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

    பாரதி தனக்கு, கண்ணாத்தாளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெண் வீட்டில் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் கண்ணாத்தாளின் அக்காவிற்கு திருமணம் முடிந்த பின்பு தான் 2-வது பெண்ணான கண்ணாத்தாளுக்கு திருமணம் செய்ய முடியும் எனக்கூறியுள்ளனர்.

    இதற்கிடையே நேற்று அப்பகுதியில் நிகழ்ந்த துக்க நிகழ்விற்காக பாரதியின் வீட்டில் இருந்தவர்கள் சென்று விட்டனர். இதை அடுத்து கண்ணத்தாள் பாரதி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது காதலர்கள் தங்கள் திருமணம் தள்ளிப்போவதை எண்ணி இருவரும் மனமுடைந்தனர்.

    உடனே அவர்கள் வயலில் தெளிக்கப்படும் குருணை மருந்தை எடுத்து அருந்தி உள்ளனர். வி‌ஷமருந்து குடித்ததால் மயக்கம் அடைந்த 2 பேரையும் அவர்களது உறவினர்கள் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் காதலர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். அறந்தாங்கி அருகே காதலர்கள் வி‌ஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    டெங்கு காய்ச்சலால் பெண்- சிறுமி பலியான சம்பவம் புதுக்கோட்டை பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மட்டாங்கால் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைசாமி. இவரது மனைவி அம்பிகாபதி (வயது 45). இவருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அம்பிகாபதி மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அம்பிகா பதி இறந்தார். அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    இதே போல புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள காசிம் புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணப்பன், கூலி தொழிலாளி. இவரது மகள் ராதிகா(13). ராதிகாவிற்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவரது தாயார் லோகாம்பாள் கீரமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு ராதிகாவை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் போகும் வழியிலேயே ராதிகா பரிதாபமாக உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலால் பெண்- சிறுமி பலியான சம்பவம் புதுக்கோட்டை பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கொத்தனார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் செந்தில் (வயது 32). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி வசந்தி (29) என்ற மனைவியும், மணிகண்டன் (7) என்ற மகனும், மணிமேகலை(5) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்திலுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை. இதைத்தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் நேற்று பரிதாபமாக இறந்தார். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கொத்தனார் இறந்த சம்பவம் சுப்பிரமணியபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டாரத்தில் வேளாண் வணிகத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டாரத்தில் வேளாண் வணிகத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் கந்தர்வக்கோட்டை வட்டாரம, புதுப்பட்டி சமத்துவபுரத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உலர்களம் கட்டுமானப் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் சமுத்திரப்பட்டியில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உலர்களம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம் மாநில திட்டக்குழுவினரால் அனுமதி வழங்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய வட்டாரங்களில் மட்டும் பல்வேறு துறையினரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆய்வின் போது நடைபெறும் பணிகளை தரமான பொருட்களை கொண்டு கட்டி முடித்து உலர்களத்தினை விரைவில் பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார்.
    புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் வழங்கினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொது மக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, காவல்துறை நடவடிக்கைகள், வேலைவாய்ப்பு, பசுமைவீடு, சாலை வசதி, குடிநீர் வசதி, கல்வி உதவித்தொகை, முதியோர், விதவை உதவித்தொகை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 274 மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கினார்.

    மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 21 மனுக்கள் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெறப்பட்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தாட்கோ திட்டத்தின் மூலம் 1 பயனாளிக்கு மானிய விலையில் வாகனம் வாங்க ரூ.6,26,970 மதிப்பில் வங்கி கடன் உதவித் தொகைக்கான காசோலையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 நபர்களுக்கு ரூ.8,25,000 மதிப்பில் உதவித் தொகைக்கான காசோலைகளும், சவுதி அரேபியாவில் பணிபுரிந்த பொழுது மரணம் அடைந்த சக்தி சுப்ரமணியன் என்பவரின் தந்தைக்கு ரூ.3,24,091 மதிப்பில் மரண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையும் மாவட்ட கலெக்டர் கணேஷ் வழங்கினார்.
    ×