என் மலர்
புதுக்கோட்டை
அதிமுக ஆட்சி மீது அவதூறுகளை பரப்பி வருகிறார்கள் எதிர்க்கட்சிகளுக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ரூ.619.7 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார். ரூ4.64 கோடி மதிப்பிலான 24 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். விழாவில் பழனிசாமி பேசியதாவது:
அதிமுக ஆட்சி மீது அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
டெங்கு காய்ச்சலை சவாலாக எடுத்துக்கொண்டு அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்கள் செயல்வடிவம் பெறும்போது அதன் வலிமையை மக்கள் உணர்வார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
டெங்குவை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அயராது உழைத்து வருகின்றனர். எதிர்கட்சிகள் டெங்கு காய்ச்சலையும் அரசியலாக்கி வருகின்றன.டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்க அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். டெங்கு காய்ச்சலை சவாலக எடுத்துக்கொண்டு அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரூ.81,49 கோடி வறட்சி நிவராணமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கப்பட்டதில் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். புதுக்கோட்டையில் 21 பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.ஏழைகளுக்கு பசுமை வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவை போற்றும் வகையிலும், அவர் ஆற்றிய பணிகள், அவர் பற்றிய வரலாறு இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் மிக சிறப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 30.6.2017 அன்று மதுரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா நடந்தது. தொடர்ந்து திருப்பூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று மாலை (14-ந்தேதி, சனிக்கிழமை) நடைபெறுகிறது.
தமிழக சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சிறப்புரை ஆற்றுகிறார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து ரூ.646.92 கோடி மதிப்பிலான முடிவுற்ற 71 திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், ரூ.4.64 கோடி மதிப்பிலான 24 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 32,066 பயனாளிகளுக்கு ரூ.190.19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசுகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் அமைச்சர்கள், அரசு தலைமை கொறடா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப.குமார், அன்வர்ராஜா, செந்தில்நாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் ரத்தின சபாபதி, ஆறுமுகம், வாரியத் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
முன்னதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வரவேற்கிறார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் நன்றி கூறுகிறார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று மதியம் 1 மணியளவில் எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் பி.கே. வைரமுத்து, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விழாவையொட்டி இன்று காலை புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், கடம் பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். அங்கு அவரை அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் எம்.பி.க்கள் ரத்தினவேல், குமார், கலெக்டர்கள் ராசாமணி, கணேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
அதனை ஏற்றுக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் புதுக்கோட்டை புறப்பட்டு செல்கிறார். மாலை 3 மணிக்கு விழா தொடங்குகிறது. விழா முடிந்ததும் இரவு 7 மணிக்கு திருச்சியில் விமானம் மூலம் புறப்பட்டு அவர் சென்னை செல்கிறார். விழாவையொட்டி புதுக்கோட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில் இன்று மாலை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதையொட்டி எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சியை செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். தமிழக அரசு அதில் தலையிடாது. நடிகர் சங்கமும், திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து தான் முடிவு செய்ய வேண்டும். விதிகளை மீறி தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பண்டிகை காலங்களில் எவ்வளவு பெரிய நடிகர்களின் படம் வெளிவந்தாலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறும்போது, தமிழகத்தில் இன்று முதல் 40 விநாடிகளில் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் எனக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில் எனக்கு டெங்கு காய்ச்சல் இல்லை. இதனால் மகிழ்ச்சியாக உள்ளேன். டெங்கு காய்ச்சல் என்னை பாதிக்காததால் சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
டெங்கு காய்ச்சலை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு கட்ட தீவிர நடவடிக்கைகளை மும்முரமாக எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன், தச்சு தொழிலாளி. இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் பைரவி (வயது 4). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல.கே.ஜி. படித்து வந்தாள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பைரவிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவளை அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது பைரவிக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பைரவியை அவரது பெற்றோர் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை. இதைத் தொடர்ந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பைரவி உயிரிழந்தாள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கந்தர் வக்கோட்டையை சேர்ந்த சிறுமி லலிதா மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியானாள். இந்நிலையில் இன்று பைரவி பலியான சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீரனூர்:
கீரனூர் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் பழனியம்பதி (வயது 38). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பழனியம்பதி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சிய டைந்த அவர்கள் அவரை கீழே இறக்கி, சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனை க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த கீரனூர் போலீசார், பழனியம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க அறந்தாங்கி நகர, ஒன்றிய தே.மு.தி.க சார்பில் அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க நகரச் செயலாளர் மணி காந்த் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமசாமி கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகர நிர்வாகி ஆனந்த், ஒன்றிய நிர்வாகி நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், டெங்கு காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்காததை கண்டித்தும், கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை கூடத்திற்கு தேவையான ஊழியர்களை நியமிக்ககோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவ மனை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப் பினர் ராமையன், மாவட்டக்குழு வீராச்சாமி, சித்ரவேல், பன்னீர் செல்வம், இளையராஜா, நாராயணசாமி, மணி, சாமிநாதன், மாரிமுத்து, புண்ணிய மூர்த்தி, சங்கிலிமுத்து, பழனியாண்டி, சசிகுமார், சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள களமாவூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 38). ரெயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று களமாவூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் கீரனூருக்கு வந்தார். அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கீரனூர் அருகே எதிரே வந்த லாரி ஒன்று எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல்ராயப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான ஜெயக்குமாருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள், ஒருமகன் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு ஒழிப்பு தினம் மற்றும் டெங்கு ஒழிப்பு உறுதிமொழியேற்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் விதம், அதன் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வுடன் பள்ளி மாணவ, மானவிகளுக்கு எடுத்துரைக்கபட்டது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகரா ஜன் தலைமை தாங்கினார்.
இதில் சுகாதார அலுவலர் திருஞானம் சுகாதார கருத்துகள் கொண்ட உறுதி மொழியை மாணவர்களுக்கு எடுத்து கூறினார். அதனை தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இறுதியில் பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 42 மீனவர்கள் கடந்த 2 மாதங்களாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அவர்களை விடுவிக்கும்படி இலங்கை அரசுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்து இருந்தது.
அதை ஏற்று 42 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தீபாவளிபண்டிகையையொட்டி நல்லெண்ண அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைக்கான உத்தரவு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என தெரிகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கல்லிக்கொல்லை, வானக்கண்காடு மற்றும் கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைத்து ஆய்வு மேற்கொண்டது. இந்தநிலையில் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் 2 கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டாம் கட்ட போராட்டம் 174 நாட்கள் நடைபெற்று, தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
இதற்கிடையே, நல்லாண்டார்கொல்லையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் இருந்து வெளியேறும் கழிவுகள் சேகரிக்கும் தொட்டியில், சமீபத்தில் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அந்த தொட்டியை வருவாய்த்துறை அதிகாரிகள் மண்ணை கொட்டி மூடினர்.
அதேபோல், வானக்கண்காட்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ராட்சத ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கச்சா எண்ணெய் போன்று திரவ வடிவில் வெளியேறும் கழிவுகள் அருகில் உள்ள தொட்டியில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுவதோடு, கழிவில் தீப்பற்றி ஆபத்து நேரிடுமோ என்ற அச்சத்துடன் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வந்தனர். இதையடுத்து, ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின்போது, மாவட்ட கலெக்டரிடம் கழிவு தொட்டியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்தநிலையில் நேற்று அங்கு சென்ற ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் தொட்டியில் இருந்து கழிவுகளை எந்திரம் மூலம் உறிஞ்சி எடுத்தனர். பொக்லைன் எந்திரம் மூலமும் கழிவுகளை அகற்றினர். பின்னர் லாரிகள் மூலம் மணல் அள்ளி வந்து, தொட்டியில் கொட்டி மூடினர். இது குறித்து வானக்கண்காடு பகுதி மக்கள் கூறுகையில், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் தொட்டியில் இருந்த கழிவுகளை பாதி மட்டுமே எந்திரம் மூலம் உறிஞ்சி எடுத்தனர். பின்னர், அப்படியே மண்ணை கொட்டி தொட்டியை மூடிவிட்டு சென்றுவிட்டனர், என்றனர்.
முன்னதாக வடகாடு பகுதி இளைஞர்கள் கல்லிக்கொல்லையில் அமைக்கப்பட்டுள்ள ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறு அருகே திரண்டு ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் வந்த வாகனத்தை முற்றுகையிட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வடகாடு போலீசார் வானக்கண்காடுக்கு அதிகாரிகளை அழைத்து சென்றனர்.
மதுரையில் இருந்து சென்னையை நோக்கி இன்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே அந்த கார் சென்றது.
அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ், விராலிமலை ஊருக்குள் செல்வதற்காக கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில் திரும்பிய போது, காரும், பஸ்சும் ஒன்றுக் கொன்று மோதிக்கொண்டன.
இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த 4 பேர் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தனர். பஸ் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் காயமடைந்து காருக்குள் மயங்கிய நிலையில் கிடந்த 4 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காரை போலீசார் சோதனையிட்ட போது, அதற்குள் 8 கிலோ எடையுள்ள மரகதலிங்க சிலை இருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.20 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் காரில் வந்தவர்கள் மரகத சிலைகளை கடத்தி வந்துள்ளதும், விராலிமலை அருகே வரும் போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற போலீசார், அங்கு மயக்கம் தெளிந்த நிலையில் இருந்த சிலை கடத்தல்காரர்கள் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்களது பெயர், விபரம் உடனடியாக தெரியவில்லை.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் 4 பேரும் மரகத சிலைகளை எங்கிருந்து கடத்தி வந்தார்கள், அதனை எங்கு கொண்டு சென்றார்கள் என்ற விவரம் தெரியவரும்.
கடத்தல்காரர்கள் வந்த காரில் அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் காரின் முன்பு அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அ.தி.மு.க. பிரமுகர்களாக இருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் திருச்சி-புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






