என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பா.ஜ.க. தேசிய செயலாளரும் இந்திய ரெயில்வே பயணிகள் நல மேம்பாட்டுக்குழு தலைவருமான எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிளக்ஸ் போர்டுகள் வைப்பது தொடர்பான கோர்ட் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. இருப்பவர் படம் வைக்கக்கூடாது இறந்தவர் படம் வைக்கலாம் என்பது சரியாக இல்லை.
கருவேலமரம் கிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அகற்றப்படவேண்டும் என்று தென் தமிழகத்தில் உள்ள 6 மாவட்ட கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. பணிகளும் நடந்தன. ஆனால் சென்னை கோர்ட்டு அது குறித்து தடை அறிவித்தது. அதனால் கோர்ட்டு தீர்ப்பு என்பது மக்கள் மதிப்பதாக இருக்கவேண்டும். முதலில் ஒரு அறிவிப்பு, பிறகு ஒரு அறிவிப்பு சரியானதாக இல்லை.
நெல்லையில் கந்துவட்டி காரணமாக ஒரு குடும்பத் தினர் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே தீ வைத்து கொண்ட கொடுமை பார்க்க முடியவில்லை. மனம் வேதனைப்படுகிறது. கந்து வட்டி இறப்புக்கு பிறகு மாநில அரசு கந்து வட்டி தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெங்கு போன்ற கொடிய நோய்களில் இருந்து காப்பாற்றத்தான் மத்திய அரசு 2014ல் தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் நோக்கமே சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்பது தான். தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் அறிந்து சரியாக செயல்படுத்தி இருந்தால், தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு இந்த அளவில் இருந்து இருக்காது. தற்போது டெங்கு ஒழிப்பு பணியின் போது தூய்மை இந்தியா திட்டம்போல சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதை அனைவரும் உணர வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் உட்பட தமிழகத்தில் மற்றும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இருநாட்டு அரசுகளும் தொடர்ந்து பேசி வருகிறது. மேலும் விரைவில் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து தி.மு.க. சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. தி.மு.க. வழக்கை வாபஸ் பெற்றால் தேர்தல் குறித்து அறிவிப்பு வரும். வாபஸ்பெறவேண்டும் என்று நான் கூறவில்லை. இருப்பினும் ஒரு வழக்கு இருக்கும் போது ஒரு அறிவிப்பு என்பது வருவது தாமதமாகத்தான் இருக்கும்.
நடைபெறவுள்ள குஜராத் தேர்தலில் மக்கள் ஆதரவு நல்லபடியாக உள்ளது. அதனால் பா.ஜ.க.விற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பாஜக. மாநில செயற்குழு உறுப்பினர் செல்வக்குமார், முன்னாள் நகரசபை துணைத் தலைவர் முரளிதரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள வேம்பங்குடி மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 60). வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு, சென்னையில் வேலை செய்யும் தனது மகன் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்று இருந்தார். இந்த நிலையில் நேற்று ராஜசேகர் சென்னையில் இருந்து வேம்பங்குடி மேற்கு கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்றபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த பீரோக்களை உடைத்து, அதில் இருந்த தங்க நகைகள், ரூ.ஆயிரத்து 500 மற்றும் வீட்டில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டுபோன தங்க நகைகள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து ராஜசேகர் கீரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வேம்பங்குடி பகுதியில் கடந்த பல மாதங்களாகவே ஆள் இல்லாத வீடுகளில் திருட்டு சம்பவம் நடப்பது தொடர்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட கடலோர பகுதிகளான அறந்தாங்கி, மணமேல்குடி, நாகுடி, கோட்டைப்பட்டினம், திருவப்பாடி உள்ளிட்ட பகுதியில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் தற்போது விவசாயிகள் பலர் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். அதற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதே போன்று திருச்சி மாநகரிலும் இன்று அதிகாலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இலுப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் இலுப்பூர், அன்னவாசல் பகுதியில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்த அவர், டெங்கு தடுப்பு முறைகளை பொது மக்களுக்கு விளக்கி கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது,
தமிழக அரசின் சீரிய முயற்சியால் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு, டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அங்குள்ள பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், மாணவர்களிடம் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதா? என்று மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மீன்துறை அலுவலக அனுமதியுடன் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 160 விசைப் படகுகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
அவர்கள் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மின்னல் வேகத்தில் வந்தது.
இதனை பார்த்த புதுக்கோட்டை மீனவர்கள் அச்சத்துடன் அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் அதில் ஜான்பீட்டர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகினை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். இந்த பகுதியில் மீன் பிடிக்க கூடாது என பல முறை எச்சரித்தும் எந்த தைரியத்துடன் வந்தீர்கள் என்று கூறி திட்டியுள்ளனர்.

பின்னர் அந்த படகில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் உள்ளிட்ட மீன்களை அபரித்துக்கொண்ட இலங்கை கடற்படையினர் மீனவர்கள் இன்னாசி (வயது 40), ஜெமினி (42), கருப்பசாமி (47), பூமி 52), சுதாகர் (19) ஆகிய 5 மீனவர்களையும் கைது செய்தனர்.
மேலும் மீனவர்களின் படகையும் பறிமுதல் செய்து இலங்கையில் உள்ள காரை நகர் துறைமுக காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இன்று பிற்பகலில் அங்குள்ள கோர்ட்டில் புதுக்கோட்டை மீனவர்கள் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரியவரும்.
கடந்த சில மாதங்களாக சிறைப்பிடிப்பு சம்பவங்கள் இல்லாமல் புதுக்கோட்டை மீனவர்கள் மீன் பிடித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த பெருங்காடு பகுதியில் சினேகா என்ற மெடிக்கல் இயங்கி வருகிறது. சங்கீதா என்பவரின் பெயரில் உரிமம் உள்ள இந்த மெடிக்கலை ஆவுடையார்கோவில் அருகே உள்ள வேட்டனூரைச் சேர்ந்த சின்னையா மகன் துரை (வயது 40) என்பவர் நடத்தி வருகிறார்.
பிளஸ்-2 வரை மட்டுமே படித்துள்ள துரை, அந்த மெடிக்கலுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவரைப் போல ஊசி போட்டும், குளுக்கோஸ் போட்டும் சிகிச்சை அளித்து வந்துள்ளார். முறையாக படிக்காமல் துரை அலோபதி மருத்துவரைப்போல சிகிச்சை அளித்து வருவது குறித்து சுகாதாரத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
தகவலின்பேரில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் சுரேஷ்குமார் தலைமையில், மருந்து ஆய்வாளர் லெட்சுமணராஜ் உள்ளிட்டோர் பெருங்காடு வந்து, துரைக்கு சொந்தமான மெடிக்கலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் மெடிக்கலின் உள்புறம் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றும் கருவிகள் இருந்தன.

மேலும் நோயாளிகளுக்கு போடப்பட்ட ஊசிகள், தீர்ந்து போன குளுக்கோஸ் பாட்டில்களும் இருந்தன. இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் துரையிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் மெடிக்கலுக்கு வரும் நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவரைப் போன்று ஊசி மற்றும் குளுக்கோஸ் ஏற்றியதை ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் கொடுத்த தகவலின் பேரில் ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் உஷாராணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் கொடுத்த புகாரின் பேரில் போலி மருத்துவர் துரையை போலீசார் கைது செய்தனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் ஜோனா. இவர் பசுமை வீடு திட்டத்திற்கு விண்ணப்பித்த பயனாளிகளிடம் ரூ.2ஆயிரம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ரெங்க நாயகி என்பவர் புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து ஜோனாவை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த போலீசார், ரசாயனம் தடவிய பணத்தை ரெங்கநாயகியிடம் கொடுத்து அனுப்பினர். அவர் இன்று காலை ஜோனாவிடம் பணத்தை கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜோனாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:
சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் மாவட்ட சித்த மருத்துவ கழகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்கத்தலைவர் மாருதி மோகன்ராஜ் தலைமையில் புதுக்கோட்டை 3ம் வீதி பெருமாள் கோவில் மார்க்கெட் அருகில் டெங்கு விழிப்புணர்வு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.
முகாமில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் பார்த்திபன், நகர் மன்ற முன்னாள் துணைத் தலைவர் நைனாமுகம்மது, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் ஆறுமுகம், காப் பீடு திட்ட மாவட்ட அலுவலர் சாமிநாதன், மெஸ் மூர்த்தி முன்னிலை வகித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார்.
முகாமில் பிரசாத், யோகா பாண்டியன், அசோகன், சுப்பையா, வக்கீல் குஞ்சிதபாதம், ராதாகிருஷ்ணன், சிவலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆவுடையார்கோவில் ஒன்றியம் பாதிரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வசேகர் (வயது 55). இவர் நேற்று ஆவுடையார்கோவிலில் உள்ள அறந்தாங்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆவுடையார்கோவிலை சேர்ந்த உத்திராபதி மகன் ரமேஷ் (30) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக செல்வசேகர் மீது மோதியது.
இதில் செல்வசேகர், ரமேஷ் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்வசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ரமேஷ் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று (19.10.2017) நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவக் கல்லூரியில் காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ரத்த பரிசோதனை மையத்தையும் பார்வையிட்டார்.
காய்ச்சல் சரியான பின்னரும் கூடுதலாக இரண்டு நாட்கள் மருத்துமனையில் இருக்க நோயாளிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளிக்க சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தை ஆய்வு செய்த போது அங்கு துப்புரவு பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து துப்புரவு பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக ஒப்பந்த பணியாளர் சேதுராமனை நிரந்தர பணி நீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டார்.
அதேபோல் ரத்த பரிசோதனை மையத்தை பார்வையிட்ட அமைச்சர் 24 மணி நேரமும் ரத்த பரிசோதனை மையத்தின் கவுண்டர்கள் செயல்படுவதற்காக ரூ.3 லட் சம் தொகை ஒதுக்கி உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சாரதா மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று காலை தனது சொந்த ஊரான இலுப்பூரில் இருந்து தஞ்சை புறப்பட்டார். வழியில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.
அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் தனி வார்டுக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் டாக்டர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளிடமும் குறைகளை கேட்டார்.
தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தை ஆய்வு செய்தபோது அங்கு துப்புரவு பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து துப்புரவு பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக ஒப்பந்த பணியாளர் சேதுராமனை நிரந்தர பணி நீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டார்.
அதேபோல் ரத்த பரிசோதனை மையத்தை பார்வையிட்ட அமைச்சர் 24 மணி நேரமும் ரத்த பரிசோதனை மையத்தின் கவுண்டர்கள் செயல்படுவதற்காக ரூ.3 லட்சம் தொகை ஒதுக்கி உத்தரவிட்டார்.
அறந்தாங்கி:
தஞ்சாவூர் மாவட்டம் ஊமத்தநாடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராணி (வயது 47). இவர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல் குடியில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இதற்காக கோட்டைப்பட்டினம் அருகே உள்ள இரணி வயல் கிராமத்தில் வீடு எடுத்து தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் ஜெயராணிக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அருகில் இருந்த மருத்துமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாக வில்லை.
இதையடுத்து மணமேல்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகமானது.
இதனால் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக ஆம்புலன்சில் ஜெயராணியை அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் திடீரென ஆம்புலன்சில் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் தஞ்சையில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலையில் உள்ள ஒரு அரசு பள்ளி ஆசிரியை டெங்கு காய்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






