என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி ஆசிரியை பலி
அறந்தாங்கி:
தஞ்சாவூர் மாவட்டம் ஊமத்தநாடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராணி (வயது 47). இவர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல் குடியில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இதற்காக கோட்டைப்பட்டினம் அருகே உள்ள இரணி வயல் கிராமத்தில் வீடு எடுத்து தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் ஜெயராணிக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அருகில் இருந்த மருத்துமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாக வில்லை.
இதையடுத்து மணமேல்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகமானது.
இதனால் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக ஆம்புலன்சில் ஜெயராணியை அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் திடீரென ஆம்புலன்சில் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் தஞ்சையில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலையில் உள்ள ஒரு அரசு பள்ளி ஆசிரியை டெங்கு காய்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






