என் மலர்
செய்திகள்

தினகரன் அணி இணைய முதல்வர் முட்டுக்கட்டை: ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. பேட்டி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ.வும், தினகரன் ஆதரவாளருமான ரத்தினசபாபதி, விவசாயிகளுக்கு முறையாக பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க கோரி புதுக்கோட்டை கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அறந்தாங்கி தொகுதியில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முறையாக இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. தொகுதியின் வளர்ச்சி பணிகள் முற்றிலும் முடங்கி போயுள்ளது. தொகுதியில் இருந்த 3 சார்பதிவாளர்கள் அலுவலகங்களையும் உள்நோக்கத்துடன் மூட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். தினகரன் மீது தமிழக அரசு தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது கண்டனத்துக் குரியது. தனியாக செயல்படும் தினகரன் அணியை அ.தி.மு.க.வுடன் இணைப்பதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டேன். தினகரனும் இணைப்பிற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் முதல்வர் பழனிச்சாமிதான் முட் டுக்கட்டையாக உள்ளார்.
இதற்கு அவர் கூறும் காரணங்கள் ஏற்று கொள்ளக் கூடியதாக இல்லை. இப்போதைய சூழ்நிலையில் பழனிச்சாமி அணியுடன், தினகரன் அணி இணைவதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வை மட்டுமல்ல, ஆட்சியையும் வழி நடத்தி செல்ல தகுதியானவர் தினகரன் தான். அ.தி.மு.க.வை விட்டு விட்டு அவர் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும். அவ்வாறு அவருக்கு தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






