என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் இன்று நாம் தமிழர் கட்சியினர், கமல் ரசிகர்கள் போராட்டம் நடத்திய காட்சி.
    X
    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் இன்று நாம் தமிழர் கட்சியினர், கமல் ரசிகர்கள் போராட்டம் நடத்திய காட்சி.

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் போராட்டம்

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் இன்று நாம் தமிழர் கட்சியினர்- கமல் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, இன்று முதல் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின.

    புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் இந்தாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, இன்று முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கியது.

    முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் கலந்து கொண்டு வகுப்புகளை தொடங்கி வைக்க இருந்தார். இந்நிலையில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் நடிகர் கமல் நற்பணி மன்றத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முன்பு திரண்டனர்.

    அவர்கள் அனிதா மரணத்திற்கு காரணமான மத்திய- மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் கல்லூரிக்குள் நுழைய முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போராட்டக்காரர்கள் போலீஸ் தடையை மீறி கல்லூரிக்குள் நுழைந்தனர். அங்கு முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற இருந்த கலையரங்கம் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    அப்போது நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி கோ‌ஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் கணேஷ் கலந்து கொண்டு வகுப்புகளை தொடங்கி வைத்தார்.

    கரூரில் இன்று புதிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. அதில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பங்கேற்க இருப்பதால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் பங்கேற்கவில்லை என கூறப்பட்டது. ஆனால் கரூர் நிகழ்ச்சியிலும் அமைச்சர் பங்கேற்கவில்லை.


    அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த போராட்டம் நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    திருச்சி தூயவளனார் கல்லூரி மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதேபோல் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் டோல்கேட் அருகே மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.

    திருச்சி காந்தி மார்க்கெட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் அனைத்திந்திய மாணவர் மன்றம் சார்பில் நீட் தேர்வை எதிர்த்து இன்று 3-வது நாளாக காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×