என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    பொன்னமராவதியில் சந்தை நாளான சனிக்கிழமையன்று மின்தடை செய்யும் மின்வாரியத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதியில் சந்தை நாளான சனிக்கிழமையன்று மின்தடை செய்யும் மின்வாரியத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு நகர கமிட்டி செயலர் குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் நாகராஜன், சேக் தாவூத், பாலாஜி ,கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் சங்கர், ஒன்றிய செயலர் பக்ருதீன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் பிரதாப்சிங் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நாவலர், சிங்காரம், பிச்சையம்மாள், மாயழகு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் பிச்சை நன்றி கூறினார். #tamilnews
    மதுரை அருகே இன்று அதிகாலை கார்-லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    திருவாரூர் மாவட்டம், மாவூர் அருகே உள்ள குன்னியூரைச் சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 42). இவர் லாரிகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இவருடன் ஆதமங்கலத்தைச் சேர்ந்த சேவியர் (49), மங்கப்பட்டினத்தைச் சேர்ந்த ரங்கசாமி (60) ஆகியோரும் இதே பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    வேலை வி‌ஷயமாக இவர்கள் 3 பேரும் திருவாரூரில் இருந்து நேற்று இரவு காரில் திருநெல்வேலிக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 2 மணியளவில் மதுரை அருகே உள்ள துவரிமான் 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நடுரோட்டில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது.

    அந்த சமயத்தில் எதிரே வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த லாரன்ஸ், ரங்கசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.

    படுகாயம் அடைந்த சேவியரை அந்தப் பகுதியினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணமேல்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    மணமேல்குடி:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மணமேல்குடி கடைவீதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் ராமநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணமேல்குடி ஒன்றிய பகுதி முழுவதும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை உடனடியாக கணக்கெடுப்பு செய்து மத்திய, மாநில அரசுக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்.

    விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தொகை ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். வேளாண் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

    ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் அளவை உயர்த்தி ஒரு குடும்ப அட்டைதாரருக்கு 50 கிலோ வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் சலோமி, பழனிசாமி சேகர், ராஜமாணிக்கம் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். #tamilnews
    கந்தர்வகோட்டை அடுத்த கல்லாக்கோட்டையில் டி. டி.வி தினகரன் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை  கந்தர்வக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட  மட்டங்கால், புதுப்பட்டி, வீரடிப்பட்டி, பெரியக்கோட்டை, நம்புரான்பட்டி, நாயக்கர்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம்விடுதி, பல்லவராயன்பட்டி. நடுப்பட்டி ஆகிய 10 ஊராட்சி கழக செயலாளர்கள் கிளைக் கழக செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கல்லாக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய அவைத் தலைவர் ஒ.என்.பி. அப்துல்ரஜாக் தலைமை தாங்கினார். கூட்டத்தில் டி டி வி தினகரன் அணியின் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.ஜி.செங் கொடியான் கலந்து கொண்டு கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, புதிய கிளைகள் தொடங்குவது, பொறுப்பாளர்கள் நியமனம்,கட்சியின் எதிர்கால திட்டம் போன்ற பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். 

    கூட்டத்தில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோ.அண்ணாதுரை, அம்மா பேரவை சக்திவேல், அண்டனூர் முருகானந்தம், முத்து சிதம்பரம், முன்னாள் கவுன்சிலர்கள் பெருமாள், வீரமணி, முன்னாள் ஊராட்சி மன்ற  தலைவர்கள் எஸ்.ஆர்.முருகேசன், மகாதேவன், கடம்பையன், கல்லாக்கோட்டை சுரேஷ், செந்தில்குமார், வாசுகி பொன்ராமன், வடுகப்பட்டி சந்திரசேகர் மட்டங்கால் பிரவின் உள்ளிட்ட 10 ஊராட்சி மன்றங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #tamilnews
    கந்தர்வக்கோட்டை அருகே இன்று காலை கார் மீது லாரி மோதிய விபத்தில் டாக்டர் மற்றும் அவரது நண்பர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள குறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 38). ஓமியோபதி டாக்டரான இவர் அதே பகுதியில் மருத்துவமனை வைத்துள்ளார்.

    இவரது நண்பர் உதயகுமார். இவர்கள் இன்று காலை சொந்த வேலை காரணமாக புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி காரில் சென்றனர். காரை புதுக்கோட்டை கம்பன் நகரை சேர்ந்த டிரைவர் கனகராஜ் (40) ஓட்டிச்சென்றார்.

    அவர்களது கார் இன்று காலை 6 மணியளவில் கந்தர்வக்கோட்டையை அடுத்த வளவம்பட்டி அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி பிரிவு ரோடு பகுதியில் சென்றது. அதே நேரத்தில் தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக அதிக வேகத்தில் வந்த காரும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் கார் அடையாளம் காண முடியாத அளவிற்கு முற்றிலும் நொறுங்கியது. காரின் மேற்பகுதியே இல்லாத நிலை ஏற்பட்டது.

    காருக்குள் இருந்த டாக்டர் சுந்தர்ராஜ், அவரது நண்பர் உதயகுமார், டிரைவர் கனக ராஜ் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள். தகவல் அறிந்ததும் அருகே உள்ள ஆதனக்கோட்டை மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    மேலும் ஆதனக்கோட்டை போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களை இரும்புக்கம்பியால் உடைத்து பெரும் சிரமத்திற்கிடையே மீட்டனர். பின்னர் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

    விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மஞ்சப் பேட்டையை சேர்ந்த மணிகண்டனை பிடித்து விசாரித்து வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், டி.எஸ்.பி. ஆறுமுகம், கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த விபத்து காரணமாக தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  #tamilnews
    அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த 2 பேரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் சக்கராப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரை இலுப்பூர் பகுதியை சேர்ந்த குமாரசாமி, மலைராஜா ஆகியோர் அணுகினர். அவர்கள் ரவிச்சந்திரனிடம், உங்களது மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருகிறோம். அதற்கு நீங்கள் ரூ.3½ லட்சம் தர வேண்டும் என்றனர்.

    இதையடுத்து ரவிச்சந்திரன், 2பேரிடமும் ரூ.3½ லட்சம் பணத்தை கொடுத்தார். அதனை பெற்றுக் கொண்ட இருவரும், ரவிச்சந்திரனின் மகளுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு வருடம் ஆகியும் அந்த வேலை நிரந்தரமாக்கப்படவில்லை.

    இது குறித்து ரவிச்சந்திரன், குமாரசாமி, மலைராஜாவிடம் முறையிட்டுள்ளார். மேலும் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறும் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனராம்.இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரவிச்சந்திரன் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 2பேரையும் கைது செய்தனர்.

    பேராசிரியர் பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கியதாக கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

    அன்னவாசல் அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் மிதந்தது. அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நார்த்தாமலை: 

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் இருந்து சித்தன்னவாசல் செல்லும் சாலையில் தங்கவேல் மனைவி எழுவி என்பவருக்கு சொந்தமான கிணற்றுடன் கூடிய வயல் ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் நேற்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இதுபற்றி இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடதுக்கு வந்த நிலைய அலுவலர் கருணாநிதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி, பிணத்தை கட்டில் கட்டி மேலே கொண்டு வந்தனர். இதற்கிடையில் கிணற்றில் பிணம் மிதந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கிணற்றில் பிணமாக மிதந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் ஊதா நிற கைலியும், கட்டம் போட்ட சட்டையும் அணிந்திருந்தார். இறந்தவர் யார் என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் கிராம நிர்வாக அதிகாரி ரவி கொடுத்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை மர்மநபர்கள் கொலை செய்து, உடலை கிணற்றில் வீசி சென்றார்களா? என்பன உள்பட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ- மாணவிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று பஸ்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக் மற்றும் போலீசார், கல்லூரி முதல்வர் உமாராணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கல்லூரி முதல்வர் உமாராணி போராட்டத்தில் ஈடுபடும் அனைத்து மாணவிகளும், தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள கல்லூரி அடையாள அட்டையை கழற்றி கொடுத்து விட்டு, போராட்டத்தில் ஈடுபடுங்கள் என கூறினார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு, வகுப்புகளுக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று மகளிர் கல்லூரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    மாட்டுப்பொங்கலன்று மாடுகள் அவிழ்த்து விடப்பட்டதில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பழைய கந்தர்வகோட்டையில் மாட்டுப்பொங்கலன்று மாடுகள் அவிழ்த்து விடப்பட்டதில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் ஒரு பகுதிக்குள் புகுந்து தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கந்தர்வகோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தடையைமீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ரத்தினவேல் தலைமை வகித்தார். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் நாகை மாலி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர்,  சின்னதுரை, மாவட்டச் செயலாளர் கவிவர்மன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், ராமையன், சங்கர், உடையப்பன், பொன்னுசாமி,  துரைச்சந்திரன், ஸ்ரீதர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஜீவானந்தம்,  அன்புமணவாளன்,  கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் அன்பழகன்,  தங்கவேல், லட்சாதிபதி, பீமராஜ், பாலசுந்தரமூர்த்தி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 500க்கும்  மேற்பட்டோர் பங்கேற்றனர். #tamilnews
    தமிழக அரசு உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தில் 50 சதவீதத்தை குறைக்க வேண்டும் என புதுக்கோட்டையில் ஜி.கே.வாசன் கூறினார்.
    புதுக்கோட்டை:

    அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து, தற்போது தமிழக அரசு பஸ் கட்டணத்தை குறைத்துள்ளது மக்களை ஏமாற்றும் செயல். ஏனெனில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தில் 50 சதவீதத்தையாவது குறைக்க வேண்டும். தமிழகத்தில் வார்டு மறுசீரமைப்பு செய்வதில் பல குளறுபடிகள் உள்ளது. எனவே முறையாக வார்டு மறுசீரமைப்பு செய்த பின்னர் தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். இதையும் மீறி உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முயற்சித்தால் பலர் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்படும்.

    ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும், இந்த விவகாரம் இருதரப்பிலும் தொடர்ந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை அரசு மீன்பிடி தடை சட்டத்தை கொண்டு வந்து உள்ளது கண்டிக்கத்தக்கது.

    இதனால் தமிழக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள், இலங்கை அரசை கண்டித்து இந்த சட்டத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கமல், ரஜினி இருவரும் தங்களது அரசியல் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை தெரிவித்த பின்னர் தான், த.மா.கா. அவர்களை பற்றி விமர்சனம் செய்யும். மக்கள் நலனை பிரதிபலிக்கும் அரசாக மத்திய, மாநில அரசுகள் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #gkvasan
    புதுக்கோட்டை அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை அருகே உள்ளது கட்டியாவயல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுர் என்ற ஊரில் உள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார்.

    பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தனது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். வீட்டில் அவரது மனைவியும் பிள்ளைகளும் இருந்தனர். பாப்பு என்ற பெயர்கொண்ட வளர்ப்பு நாய் ஒன்றை தங்களின் பாதுகாப்புக்காக வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில், பொன்னமராவதியில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, சுப்பையாவின் மனைவியும் அவரது இரண்டு பிள்ளைகளும் நேற்று முன்தினம் மாலையில் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றனர். வீட்டில் நாய் மட்டும் காவலுக்கு இருந்தது.

    இதனை நோட்டமிட்ட திருடர்கள், வீட்டைக் கொள்ளை அடிக்க திட்டமிட்டனர். அன்று இரவே வீட்டின் காவலுக்காக கட் டிப் போட்டிருந்த நாய்க்கு எலியை சாகடிக்க பயன்படுத்தும் பிஸ்கட்டை வைத்துள்ளனர். இதனை சாப்பிட்ட நாய் பரிதாபமாக இறந்தது.

    பிறகு, வீட்டுக்குள் நுழைந்து பீரோ, அலமாரி போன்றவற்றை உடைத்து அதிலிருந்து கிடைத்ததை சுருட்டி கொண்டு கிளம்பி விட்டனர். திருவிழா முடிந்து நேற்று இரவு வீடு திரும்பிய சுப்பையாவின் மனைவி, வீடு திறந்து கிடந்ததோடு, நாய் இறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டுக்குள் நுழைந்தவருக்கு இன்னும் அதிர்ச்சிக் காத்திருந்தது. பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை மற்றும் கொள்ளை போயிருந்தது. இதுபற்றி உடனடியாக அவர் தனது கணவருக்கு தகவல் கொடுத்தார்.

    இதனையடுத்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .

    புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து கலெக்டர் கணேஷ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். முன்னதாக அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வரவேற்று அழைத்து வந்தார்.

    இதையடுத்து காலை 8 மணிக்கு கலெக்டர் கணேஷ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்க விட்டார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். மேலும் அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 274 பேருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    பின்னர் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 8 துறைகளின் மூலம் 31 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 69 ஆயிரத்து 836 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, சப்-கலெக்டர சரயு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சரோஜா, மாவட்ட கல்வி அலு வலர் சத்தியமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் நகராட்சி ஆணையாளர் ஜீவா சுப்பிரமணியம் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். #Tamilnews
    ×