என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை கொள்ளை
விராலிமலை:
புதுக்கோட்டை அருகே உள்ளது கட்டியாவயல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுர் என்ற ஊரில் உள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார்.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தனது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். வீட்டில் அவரது மனைவியும் பிள்ளைகளும் இருந்தனர். பாப்பு என்ற பெயர்கொண்ட வளர்ப்பு நாய் ஒன்றை தங்களின் பாதுகாப்புக்காக வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில், பொன்னமராவதியில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, சுப்பையாவின் மனைவியும் அவரது இரண்டு பிள்ளைகளும் நேற்று முன்தினம் மாலையில் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றனர். வீட்டில் நாய் மட்டும் காவலுக்கு இருந்தது.
இதனை நோட்டமிட்ட திருடர்கள், வீட்டைக் கொள்ளை அடிக்க திட்டமிட்டனர். அன்று இரவே வீட்டின் காவலுக்காக கட் டிப் போட்டிருந்த நாய்க்கு எலியை சாகடிக்க பயன்படுத்தும் பிஸ்கட்டை வைத்துள்ளனர். இதனை சாப்பிட்ட நாய் பரிதாபமாக இறந்தது.
பிறகு, வீட்டுக்குள் நுழைந்து பீரோ, அலமாரி போன்றவற்றை உடைத்து அதிலிருந்து கிடைத்ததை சுருட்டி கொண்டு கிளம்பி விட்டனர். திருவிழா முடிந்து நேற்று இரவு வீடு திரும்பிய சுப்பையாவின் மனைவி, வீடு திறந்து கிடந்ததோடு, நாய் இறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
வீட்டுக்குள் நுழைந்தவருக்கு இன்னும் அதிர்ச்சிக் காத்திருந்தது. பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை மற்றும் கொள்ளை போயிருந்தது. இதுபற்றி உடனடியாக அவர் தனது கணவருக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .






