என் மலர்tooltip icon

    நீலகிரி

    கோத்தகிரியில் அக்காள் வீட்டுக்கு வந்த தம்பியை குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி செம்மநாரையை சேர்ந்தவர் ரங்கன் (வயது 21). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நீலி (19). இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நீலியின் தம்பி பிரகாஷ் (18) உறவினராக வீட்டுக்கு வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு ரங்கனுக்கும், பிரகாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரங்கன் மனைவியின் தம்பியை கத்தியால் குத்தினார். கழுத்தில் பலத்த காயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் லூதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து ரங்கனை போலீசார் கைது செய்தனர்.
    திண்டுக்கல், தேனியில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை, சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கும்பக்கரை, சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான உத்தமபாளையம், கூடலூர், பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல்சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பெரியகுளம், தாமரைக்குளம், வடுகபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    பருவமழை ஏமாற்றிய நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சாரலாக தொடங்கி விடிய விடிய கன மழை பெய்தது. கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி, தேனி, ஆண்டிப்பட்டி, பெரிய குளம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காலை வரை நீடித்தது. தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் படிக்கட்டுகள் வரை நிரம்பி செல்வதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதேபோல் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு தடையை நீட்டித்துள்ளனர். மழை காரணமாக நெல் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடலூர், கம்பம் பகுதியில் இருந்து கேரள பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் இன்று செல்லவில்லை. முல்லைப் பெரியாறு கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவுறுத்தி உள்ளார்.
    போடி அருகே தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள புலியூத்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டத்திலும் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்தது. கொடைக்கானலில் இரவு முழுவதும் பெய்த மழையால் புதிய அருவிகள் உருவாகி உள்ளன. எங்கும் பசுமையாக சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் உள்ளது. அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கி உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.55 அடியாக உள்ளது. 1132 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1360 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 58.20 அடியாக உள்ளது. 1296 கன அடி நீர் வருகிறது. குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 960 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38 அடி. 42 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.20 அடி. 31 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்தக்கது.

    மழை அளவு மி.மீ. வருமாறு:- பெரியாறு 23, தேக்கடி 16, கூடலூர் 54, சண்முகாநதி அணை 52, உத்தமபாளையம் 35.3, வீரபாண்டி 35, வைகை அணை 20, மஞ்சளாறு 38, சோத்துப்பாறை 46, ஆண்டிப்பட்டி 32, அரண்மனைப்புதூர் 20, போடி 13.4, பெரியகுளம் 57.
    தேனி மாவட்டத்தில் மொத்தம் 389.7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. 
    மஞ்சூர் அருகே விடிய விடிய பெய்த மழையால் குந்தா பாலம் என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த மழையாகவும் பெய்கிறது.

    ஊட்டியில் நேற்று காலை வெயில் நிலவியது. இந்த நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவில் பலத்த மழையாக பெய்தது. இந்த மழை இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கடுங்குளிர் நிலவி வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமல் குளிரில் நடுங்கி கொண்டுள்ளனர். ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் தீ முட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். இதனால் வாகனங்களில் செல்பவர்களுக்கு தங்கள் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதன் காரணமாக முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றனர்.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கோடநாடு, சோலூர் மட்டம், கூக்கல்தொரை உள்பட பல பகுதிகளில் நேற்று இரவு- 10 மணி முதல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இன்று காலையும் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை வீட்டு வெளியில் வரமுடியாமல் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். தொடர் மழை பெய்வதால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    மஞ்சூரில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய பெய்தது. மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்தோடியதுடன் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் மழையுடன் பலத்த இடி, மின்னலும் ஏற்பட்டதால் அடிக்கடி மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

    மேலும் அதிகாலை 3 மணியளவில் மஞ்சூர் அருகே குந்தா பாலம் என்ற இடத்தில் சாலையோர மண் திட்டு இடிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் மஞ்சூரில் இருந்து ஊட்டி, குன்னூர் பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறங்களிலும் இருந்து சென்ற அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    தகவல் அறிந்த நெடுஞ்சாலைதுறை கோட்ட உதவி பொறியாளர் பாலச்சந்தர் தலைமையிலான சாலை ஆய்வாளர் நஞ்சுண்டன் மற்றும் சாலை பணியாளர்கள் விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மஞ்சூர் பகுதியில் இருந்து ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு மண்சரிவுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் மஞ்சூர் ஊட்டி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பபட்டது.

    நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் நேற்று ஒரே நாளில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:

    ஊட்டி&20, கல்லட்டி&4, கிளைன்மெர்கன்&6, நடுவட்டம்&2 அவலாஞ்சி&83, எம்ரால்டு&64, கெத்தை&36, கிண்ணக்கொரை&17, அப்பர் பவானி&10, குன்னூர்&31, பர்லியா&16, கேத்தி&51, கோத்தகிரி&38, கோடநாடு&35, கூடலூர்&3, தேவாலா&3-.

    இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழையாக பெய்து வருகிறது.
    இதனால் வெப்பம் குறைந்து இதமான குளிர் நிலவி வருகிறது. இதேபோல் பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. 
    குன்னூரில் இளம்பெண் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    ஊட்டி:

    குன்னூர் அருவங்காடு நேரு நகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது மகள் ஆனந்தி (22). இவர் கடந்த 25-ந் தேதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அருவங்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தற்கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆனந்தி சாவில் சந்தேகம் உள்ளது என கூறி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அருவங்காடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இது குறித்து ஆனந்தியின் உறவினர் பிரேமா கூறும் போது, ஆனந்தி இறந்த பின் சம்பவ இடத்தில் இருந்த பழைய அருவங்காடு பகுதியை சேர்ந்த வாலிபர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய வேண்டும்.

    ஆனந்தி மரணம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த வேண்டும். இந்த பிரச்சினையில் தீர்வு கிடைக்காவிட்டால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து மனு அளிப்போம் என்றார்.

    திருப்பூர், பல்லடம், கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மலை ரெயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த மழையாகவும் பெய்கிறது.

    கோத்தகிரி பகுதியில் நேற்று காலை வெயில் அடித்தது. மதியம் திடீரென வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து 2 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து 3 மணி நேரம் விடாமல் பெய்தது. இதனால் அங்குள்ள பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் கொடநாடு, கூக்கல்தொரை, கட்டப்பெட்டு, சோலூர் மட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழை காரணமாக மலைக்காய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    தொடர் மழை பெய்து வருவதால் தேயிலை விவசாயம் அதிகரித்து காணப்படுகிறது. தொடர் மழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். மேலும் கடுங்குளிர் நிலவியது.

    இதனால் காலையில் வேலைக்கு செல்வோர் சுவட்டர் அணிந்தபடி வேலைக்கு சென்றனர்.

    இதேபோல் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடுங்குளிர் மற்றும் பனிமூட்டமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு தங்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதன் காரணமாக தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றனர். மக்கள், ஆட்டோ டிரைவர்கள் தங்களை குளிரில் இருந்து காத்து கொள்ள தீமுட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    நேற்று மாலை பெய்த மழையால் குன்னூர் ஹில்குரோவ் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மலைரெயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்து கிடந்தன. இதனால் அவ்வழியாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு வந்த மலைரெயில் சிறிது தூரத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் 5 மணி நேரம் சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர். பின்னர் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து பாறைகளை அகற்றினர். இதனை தொடர்ந்து இன்று காலை முதல் மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைரெயில் இயக்கம் தொடங்கியுள்ளது.

    இதேபோல் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை கடும் வெயில் அடித்தது. இந்தநிலையில் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. கோவை மாநகரில் மிதமான மழையும், புறநகர் பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது.

    திருப்பூர் பகுதியிலும் நேற்று மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இதேபோல் பல்லடத்தில் மாலை 3 மணி முதல் இரவு வரை கனமழை பெய்தது. அதன் பின்னர் தொடர்ந்து சாரல் மழையாக பெய்தது. இந்த மழை காரணமாக பல்லடம் பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளான அண்ணாநகர் உள்பட பல இடங்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

    உடுமலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் இதமான காற்றுடன் சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு: திருப்பூர் வடக்கு-11, திருப்பூர் தெற்கு-10, அவினாசி-1, பல்லடம்-19, ஊத்துக்குளி-14, காங்கயம்-10, தாராபுரம்-6.50, குண்டடம்-30, திருமூர்த்தி அணை-3, அமராவதி அணை-24, உடுமலை, 14, மடத்துக்குளம்-38, திருப்பூர் கலெக்டர் அலுவலகம்-14.30.
    கோத்தகிரி பகுதியில் குட்டிகளுடன் கரடிகள் தொடர்ந்து உலா வருவதால் தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் பீதியில் உள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து விடுவது வழக்கமாகி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அரவேனுவில் இருந்து கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் மூணுரோடு பகுதியில் குறுக்கே 2 குட்டிகளுடன் கரடி உலா வந்தது. இதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். மேலும் சற்று தொலைவிலேயே வாகனங்களை நிறுத்தினர். பின்னர் சிறிது நேரம் கழித்து கரடிகள் சாலையை விட்டு, அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்றன. அதன்பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.

    இதற்கிடையில் தேயிலை தோட்டத்துக்குள் சென்ற கரடிகள், அங்குள்ள மரங்களின் மீது ஏறி விளையாடின. இதை கண்ட பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள், தோட்டத்தை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். பின்னர் சிறிது நேரம் தேயிலை தோட்டத்திலேயே உலா வந்த கரடிகள், அதன்பிறகு அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றன.

    குட்டிகளுடன் கரடிகள் தொடர்ந்து அப்பகுதியில் உலா வருவதால் தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் பீதியில் உள்ளனர்.
    கோத்தகிரி மார்க்கெட்டில் கடைகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் மார்க்கெட் உள்ளது. இங்கு காய்கறி, மளிகை, துணி, இறைச்சி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை இரவில் பாதுகாக்கும் வகையில் காவலாளி ஒருவரை கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் பணியமர்த்தி உள்ளது. கடந்த சில நாட்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை மற்றும் இரவில் மழை பெய்து வருகிறது. இதனால் மார்க்கெட்டில் உள்ள கடைகளை முன்கூட்டியே பூட்டுவிட்டு வியாபாரிகள் தங்களது வீடுகளுக்கு திரும்பி விடுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மார்க்கெட்டில் கனகராஜ் என்பவர் நடத்தி வரும் காய்கறி மற்றும் வெற்றிலை கடைகளின் மரக்கதவுகளை மர்ம ஆசாமிகள் உடைத்தனர். பின்னர் கடைகளுக்குள் இருந்த 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை நாணயங்களை திருடி சென்றனர்.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்த உண்டியலை இரவில் மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காம்பாய் கடை பகுதியில் மாதவன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்தது. கோத்தகிரி பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். மேலும் சந்தேகம் படும்படியாக நபர்கள் மற்றும் வடமாநில நபர்களை கண்காணித்து ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    நீலகிரி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் கனமழை பெய்ததால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் ஊட்டியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்தது.

    மாலை 6 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து 2 மணி நேரம் பெய்ததால் ஊட்டி கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் சாலை, எட்டின்ஸ் சாலை, லோயர் பஜார், கூட்ஷெட் ரோடு, தொட்டபெட்டா செல்லும் சாலை உள்பட பல சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்த மழை காரணமாக சுற்றுலா தலங்கள் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இந்த மழை காரணமாக ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது. அந்த சமயம் அங்கு பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    இதேபோல் நகராட்சி மார்க்கெட் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மார்க்கெட் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லமுடியாமல் அவதியடைந்தனர்.

    காந்தல் பென்னட் மார்க்கெட் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊட்டி-கூடலூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மார்லிமந்து வனப்பகுதியில் மழை காரணமாக பலத்த சத்தத்துடன் இடி விழுந்தது. இதனால் ஊட்டி நகர் முழுவதும் மின் விநியோகம் தடைபட்டது. இந்த மழை நேற்று நள்ளிரவிலும் தொடர்ந்து பெய்தது.

    இதனால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இந்த குளிர் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வரமுடியால் அவதிப்பட்டனர். ஒரு சில இடங்களில் தீ மூட்டி பொதுமக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குடை பிடித்த படியும், சுவர்ட்டர் அணிந்தபடியும் சென்றனர்.

    தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர் சாக்கு அணிந்தபடி சென்றனர். கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகனங்களில் செல்வோர்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றனர். இதேபோல் ஊட்டியில் நடைபெறும் 2-வது சீசனுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளை விட்டு வெளியில் வரமுடியாமல் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    இதேபோல் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கோடநாடு, சோலூர்மட்டம், கொலக்கொம்பை, கூக்கல்தொரை, மசக்கல், கட்டபெட்டு, அட்டப்பள்ளம் பகுதிகளிலும் நேற்று மதியம் முதல் கனமழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    கூடலூர்-கேரள எல்லையான வழிக்கடவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அப்போது மழைதுளி சிவப்பு நிறத்தில் விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது மொபைல் போன்களில் படம்பிடித்து தங்களது உறவினர்களுக்கு அனுப்பினர். மேலும் சிலர் அந்த மழைநீரை குடம் மற்றும் பாட்டில்களில் சேகரித்து வைத்தனர். இதுகுறித்த தகவல் பரவியதும் கேரள வருவாய்த்துறை மற்றும் வானிலை ஆய்வு மையத்தினர் விரைந்து வந்து சோதனைக்காக மழைநீரை சேகரித்து சென்றனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பருவநிலை மாற்றம் காரணமாக மழைத்துளி சிவப்பு நிறத்தில் விழுந்து இருக்கலாம். இருப்பினும் ஆய்வுக்கு பின்னரே அதற்கான காரணம் தெரியவரும் என்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    கூடலூரில் சாலையில் கிடந்த ரூ.45 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    ஊட்டி:

    கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட செம்பாலா அட்டி பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன்(வயது 50). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் பயணிகளை அழைத்து கொண்டு செம்பாலாவில் இருந்து கூடலூருக்கு ஆட்டோவை ஓட்டி வந்தார். அப்போது அட்டி செம்பாலா இடையே வந்த போது சாலையில் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன. இதை கண்ட ஜாக்சன் உடனே ஆட்டோவை நிறுத்தினார்.

    பின்னர் சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தார். அதில் ரூ.45 ஆயிரம் இருந்தது. பின்னர் தனது ஆட்டோவில் வந்த பயணிகளை கூடலூருக்கு ஜாக்சன் அழைத்து சென்று விட்டார். தொடர்ந்து ஜாக்சன் தனது சக ஆட்டோ டிரைவர்களான தமிழ், கண்ணதாசன், மொரி, சியாபு, ஜீவா ஆகியோருடன் கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சிறப்பு தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சத்தி ஆகியோரை சந்தித்து விவரங்களை தெரிவித்தார். பின்னர் சாலையில் கிடந்த ரூ.45 ஆயிரத்தை சப்இன்ஸ்பெக்டர் பிரகாஷிடம் ஜாக்சன் ஒப்படைத்தார்.

    இதனிடையே செம்பாலா பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சிகாமணி (49) என்பவர் கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் கூடலூருக்கு வரும் போது தான் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் கீழே விழுந்து காணாமல் போய் விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். அதில் உண்மை தன்மை இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அந்த பணம் ஆட்டோ டிரைவர் ஜாக்சன் கையால் சிகாமணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
    கோத்தகிரியில் ஒரே நாளில் தி.மு.க. நிர்வாகி மற்றும் மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த இரு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது கீழ்கோத்தகிரி. இந்த பகுதியை சேர்ந்தவர் விசாலாட்சி (வயது 70). திருமணம் ஆகாதவர். தேனாடு ஊராட்சியில் துப்புரவு பணியாளராக இருந்தார். இவரது அண்ணன் மகன் மூர்த்தி (45). இவருக்கு அடைக்கலம் கொடுத்து மகனை போல் பராமரித்து வந்தார். மூர்த்திக்கு குடி பழக்கும் இருந்துள்ளது. 

    இந்நிலையில் நேற்று இரவு குடித்துவிட்டு மூர்த்தி வீட்டுக்கு சென்றார். அப்போது விசாலாட்சுக்கும், மூர்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி மூதாட்டியை தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயத்துடன் கிடந்த விசாலாட்சி மண்எண்ணை ஊற்றி தீ வைத்து எரிக்க வைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த விசாலாட்சியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே விசாலாட்சி பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து சோலூர் மட்டம் போலீசார் வழக்குபதிவு செய்து மூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதேபோல், கோத்தகிரி அருகேயுள்ள சோலூர்மட்டம் நீர்கண்டி எஸ்டேட் பகுதியை சேர்ந்த முன்னாள் தி.மு.க.., நிர்வாகி பாண்டியன் (80). இவர் அதே பகுதியில் கோழிகடை வைத்து நடத்தி வந்தார். இவரது மகன் சின்னபாண்டி (40). மனைவி பிரிந்து சென்ற நிலையில், சின்னபாண்டி தனது தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று குடிபோதையில் சென்ற சின்னபாண்டி, தனது தந்தை பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சின்னபாண்டி தந்தையை தள்ளிவிட்டார். 

    இதில் பலத்த காயம் அடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சோலூர்மட்டம் போலீசார் வழக்குபதிவு செய்து சின்னபாண்டியை கைது செய்தனர். 
    கூடலூரில் அருகே டெய்லர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி:

    கூடலூர் அருகே மேல்கூடலூர் ஓ.வி.எச். சாலை பகுதியை சேர்ந்தவர் திருச்செல்வம்(வயது 47). டெய்லர்.

    நேற்று முன்தினம் திருச்செல்வம் வழக்கம் போல் கடைக்கு வந்தார். ஆனால் இரவு வீடு திரும்பவில்லை. உடனே அவரை குடும்பத்தினர் செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டனர். ஆனால் திருச்செல்வம் செல்போனை எடுத்து பேசவில்லை.

    இதனால் இரவு 9 மணிக்கு திருச்செல்வத்தை தேடி அவரது குடும்பத்தினர் கடைக்கு வந்தனர். அப்போது கடைக்குள் தூக்கில் தொங்கியவாறு திருச்செல்வம் பிணமாக இருந்தார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடலூர் போலீசார் விரைந்து வந்து திருச்செல்வத்தின் உடலை கைப்பற்றினர்.

    பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதற்கிடையில் கடைக்குள் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர் எழுதிய கடிதம் சிக்கியது. ஆனால் அதில் எழுதி இருந்த விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர். இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் டெய்லர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குன்னூரில் தனியார் பள்ளியில் மாணவரை தாக்கிய ஆசிரியை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி:

    குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருபவர் சாதிக். இவரது மகன் சாகின் (5). இவர் பெட்போர்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறார். சம்பவத்தன்று வகுப்பாசிரியை வெண்டி அனைத்து மாணவர்களுக்கும் பென்சில்களை வழங்கினார்.

    பென்சிலை உடைக்காமல் திரும்ப கொடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் சாகினுக்கு கொடுக்கப்பட்ட பென்சில் ஏற்கனவே உடைந்துள்ளதாக வகுப்பாசிரியை வெண்டியிடம் சிறுவன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் சாகினை தாக்கினார். இதில் சிறுவனின் காதில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுவன் தனக்கு காது வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    பின்னர் சாகின், குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று சேர்த்தனர்.

    இதுகுறித்து மேல் குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் வகுப்பாசிரியை வெண்டியை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
    ×