என் மலர்tooltip icon

    நீலகிரி

    கூடலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஓவேலி முல்லை நகரை சேர்ந்தவர் விஜய்ரத்தினம்(வயது 22). இவர் கடந்த 2017-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியிடம் நைசாக பேசி காட்டு பகுதிக்குள் அழைத்து சென்றார். பின்னர் அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். 

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் நியூஹோப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் ரத்தினத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக ஊட்டி மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. 

    வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் குற்றம் சாட்டப்பட்ட விஜயரத்தினத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மாலினி பிரபாகார் ஆஜரானார்.
    கோத்தகிரியில் பெய்து வரும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. கை, கால்களை கழுவதற்காக ஆற்றில் இறங்கிய மாணவியை வெள்ளம் அடித்து செல்லப்பட்டதில் பரிதாபமாக இறந்தார்.
    மஞ்சூர்:

    கோத்தகிரியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய,விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. தொடர் மழை காரணமாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் பகுதிக்கு செல்லும் சாலையில் 5 கி.மீ தூரத்திற்கு விரிசல் ஏற்பட்டது. மஞ்சூரில் பெய்த மழை காரணமாக ஊட்டி-மஞ்சூர் சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலைகளில் பாறைகளும், மரங்களும் விழுந்தன. இதேபோல் தமிழக- கேரள எல்லையோர கிராமமான கிண்ணக்கொரை-மஞ்சூர் சாலையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படும், மரங்கள் முறிந்து விழுந்தும் கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    கிண்ணக்கொரை ஜெயில் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வளைவில் மண் சரிவு ஏற்பட்டது. சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதனால் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கூடலூர் அருகே பந்தலூர் அட்டி பகுதியை சேர்ந்தவர் தர்ஷினி(19). இவர் கூடலூர் கோழிப்பாலத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

    இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள பாண்டியாற்றுக்கு சென்றார். அங்கு அவர்கள் அனைவரும் ஆற்றின் ஓரத்தில் நின்று விளையாடி கொண்டிருந்தனர். தர்ஷினி கை, கால்களை கழுவதற்காக ஆற்றில் இறங்கினார். அப்போது ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டு இருந்ததால் எதிர்பாராதவிதமாக தர்ஷினி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். 

    சிறிது தூரம் தொலைவில் மாணவி மயங்கி நிலையில் கிடந்தார். அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக கனமழை பெய்துவருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.

    நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 1493 கன அடி தண்ணீர் ஒரத்துப்பாளையம் அணைக்கு வந்தது. இதனால் ஒரே நாளில் அணையில் 15 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. ஆற்றில் வருகிற தண்ணீர் முழுவதும் அணையில் தேக்கப்படாமல் வினாடிக்கு 527 கன அடி தண்ணீர்  அணையிலிருந்து நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டது.
    நீலகிரி மாவட்டம் குன்னூரில் விற்பனைக்கு கொண்டு சென்ற இறைச்சியை நாய்கள் தின்னும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் 15-க்கும் மேற்பட்ட மாடு, கோழி, ஆடு விற்பனை செய்யும் இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன.

    இங்கு ஏராளமான மக்கள் வந்து இறைச்சி வாங்கி செல்வது வழக்கம். இந்த கடைகளுக்கு குன்னூர் டி.டி.கே.சாலை பகுதியில் செயல்பட்டு வரும் இறைச்சி அறுக்கும் கூடத்தில் இருந்து இறைச்சிகள் விநியோகம் செய்யப்படுகிறது.

    சம்பவத்தன்று இறைச்சி அறுக்கும் கூடத்தில் இருந்து இறைச்சிகளை அறுத்து 200 கிலோ இறைச்சியை விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் பணியாளர்கள் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் ஆட்கள் உள்ளே சென்றதும் ஆட்டோவில் ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளை தின்று கொண்டிருந்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இறைச்சி அறுக்கும் கூடத்தில் இருந்து ஏற்றப்படும் இறைச்சிகளை நாய்கள் சாப்பிடுகின்றன. அதன்பின்னர் அந்த இறைச்சிகள் கடைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இது தெரியாமல் மக்கள் வாங்கி சென்று சாப்பிடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு ரேபிஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் மார்க்கெட்டில் உள்ள இறைச்சி கடைகளில் தொங்கவிடப்பட்டிருந்த கறிகளை எலிகள் கடித்து தின்னும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து 700 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சுகாதாரமற்ற முறையில் கடையை வைத்திருந்த கடைக்கு சீல் வைத்து சென்றனர். தற்போது இறைச்சி அறுக்கும் கூடத்தில் இருந்து ஆட்டோவில் ஏற்றப்படும் கறிகளை நாய்கள் சாப்பிடும் காட்சி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் குன்னூர் மற்றும் கோத்தகிரியில் பலத்த மழை பெய்தது. இதனால் மஞ்சூர்-ஊட்டி சாலையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியது. இதனால் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்த நிலையில் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழையில் மஞ்சூர்-ஊட்டி சாலையில் குந்தாபாலம், குண்டி தொரை முடக்கு, மெரிலேன்ட் ஆகிய இடங்களில் சாலையோர மண் திட்டுகள் இடிந்து ரோட்டில் விழுந்தது. மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்ததால் இந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமவெளி பகுதிகளில் இருந்து சரக்குகள் ஏற்றி வந்த லாரிகள் மற்றும் தனியார் வாகனங்கள் மண் சரிவால் மேற்கொண்டு செல்ல முடியாமல் நேற்று நள்ளிரவு முதல் சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல் இன்று காலை மஞ்சூர் மற்றும் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் இருந்து சென்ற அரசு பஸ்களும் சாலையின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றது.

    இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் விஸ்வநாதன், உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பன் மேற்பார்வையில் உதவி பொறியாளர் பாலச்சந்திரன், சாலை ஆய்வாளர் நஞ்சுண்டன் உள்பட 10-க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். மஞ்சூர் பகுதியில் இருந்து பொக்லைன் எந்திரங்களும் கொண்டு வரப்பட்டு சாலையில் விழுந்த மண் சரிவுகள், மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதேபோல் கிண்ணக்கொரை, கோரகுந்தா, அப்பர் பவானி உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் ஏராளமான மரங்களும் விழுந்துள்ளது.

    இரவு 12 மணியளவில் பலத்த இடி, மின்னல் ஏற்பட்டதில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் மஞ்சூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. இதை தொடர்ந்து இன்று காலை குந்தா மின்பகிர்மான வட்ட உதவி செயற்பொறியாளர் சிவா தலைமையில் உதவி பொறியாளர் சுரேஷ் மற்றும் ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக ஊட்டி- மஞ்சூர் சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது நேற்று இரவு இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் ஊட்டி மஞ்சூர் சாலையில் மீண்டு மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலைகளில் உருண்டு விழுந்தன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்த வண்ணம் நிற்கின்றன. இதபோல் மஞ்சூர் அருகே கெத்தை பகுதியில் உள்ள 10 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதியடைந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் குந்தா பகுதியில் 12 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதற்கிடையே தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    கோத்தகிரி, கொடநாடு, கட்டபெட்டு, கூக்கல்தொரை, சோலூர் மட்டம் உள்பட பல பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்யத் தொடங்கியது. நேற்று இரவு 11 மணி முதல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இன்று காலையிலும் மழை பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக ஊட்டி-கோத்தகிரி சாலையில் கட்டப்பெட்டு பகுதியில் உள்ள மரம் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு அலுவலர் (பொ) ஜெகதிஷ் சந்திரபோஸ் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றினர். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.

    இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோல் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுடியது.

    மழை காரணமாக பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதேபோல் தேயிலை தோட்டங்களுக்கு பணிக்கு செல்வோரும் இந்த மழையால் வேலைக்கு செல்லவில்லை. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சுவர்ட்டர் அணிந்த படியும், குடை பிடித்து கொண்டும் பள்ளிக்கு சென்றனர்.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் வட்டப்பாறை, அருவங்காடு, கோனேரி உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோல் தொடர்ந்து மழை பெய்தால் பல இடங்களில் அபாயகரமான மரங்கள் கீழே விழும் நிலையில் உள்ளது. இதேபோல் பல இடங்களிலும் மண்சரிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதேபோல் ஊட்டி மற்றும் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஊட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீர் அதிகமாக செல்வதால் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன. தொடர் மழை காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. சிலர் கடுங்குளிரில் இருந்து தங்களை காத்து கொள்ள தீ முட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். தொடர் மழையால் நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மலைக் காய்கறிகளான பீட்ரூட், கேரட் உள்ளிட்டவை நீரில் மூழ்கின. மேலும் தேயிலை விவசாயம் பாதிகப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதேபோல் கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. மாலை 5 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால் கோவையின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். தொடர் மழை காரணமாக கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    ஊட்டி-26.4, நடுவட்டம்-27, கல்லட்டி-10, கிளன்மார்கன்-9, குந்தா-120, அவலாஞ்சி- 92, எமரால்டு-66, கெத்தை-109, கிண்ணக்கொரை-90, அப்பர்பவானி-74, குன்னூர்-50, கேத்தி-47, பர்லியார்-40, கோத்தகிரி- 37, கோடநாடு-27, கூடலூர்-27, தேவாலா-60.

    அன்னூர்-4, விமான நிலையம்-6.2, மேட்டுப்பாளையம்-31.2, சின்கோனா-2, வால்பாறை பி.ஏ.பி-6, வால்பாறை தாலுகா-5, சோலையார்-24, ஆழியார்-17.4, பொள்ளாச்சி-75, கோவை தெற்கு-27, பெரியநாயக்கன் பாளையம்-6, வேளாண்மை பல்கலைக்கழகம்-59.
    பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் தோல்விகளை கண்டு பயப்படக்கூடாது என்று ஊட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இலங்கை பிரதமர் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கே பேசியுள்ளார்.
    ஊட்டி:

    ஊட்டி பாலடாவில் உள்ள சர்வதேச பள்ளி விழாவில் இலங்கை கலினியா பல்கலைக்கழகத்தின் நிறுவன இயக்குனரும், இலங்கை பிரதமர் மனைவியுமான மைத்ரி விக்கிரமசிங்கே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    வாழ்வில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆர்வத்துடன் செயல்பட்டால் தான் நினைத்ததை முடிக்க முடியும். பெண்கள் கல்வி படிப்பை முடித்தவுடன் வேலை தேடி தங்களுடைய வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்வதுடன் சுயமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

    எனது கணவர் அரசியலில் நம்பிக்கை, விடா முயற்சியுடன் போராடியதால் வெற்றி பெற்று தற்போது பிரதமராக உள்ளார். இது அவரின் சுயநம்பிக்கைக்காகவும், தன்னம்பிக்கைக்காகவும் கிடைத்த வெற்றி.

    பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் தோல்விகளை கண்டு பயப்படக்கூடாது. அப்போது தான் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி காணும்போது நல்ல நண்பர்கள், தமது குடும்பம் ஆகியவற்றை சரியான முறையில் கையாள முடியும்,

    கல்வி நிறுவனங்கள் வளமாக பாரம்பரியத்தை இழக்காமல் மதிப்பு கூட்டப்பட்ட கல்வியை முறையாக மேம்படுத்த வேண்டும். மேற்கத்திய கலாச்சாரம் நமது கல்வி முறையை ஆக்கிரமிக்க கூடாது. சாதி, மதம் எல்லை தாண்டி பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட கல்வி முறைகளால் தீர்வு காண முடியும்.

    மாறிவரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவைக்கேற்ப நமது திட்டங்களை சீர்திருத்தம் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மேம்படுத்தப்பட்ட கல்வி திட்டங்களை கற்பிப்பதன் மூலம் எவ்வித சவால்களையும் அவர்கள் எதிர்கொள்ள முடியும். சர்வதேச அளவில் எழும் பிரச்சனைகளை தீர்வு காணும் முறைகள் பல்கலைகழகங்களில் திட்டங்கள், கல்விகள் அறிமுகப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து பள்ளியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஊட்டி-மஞ்சூர் இடையே 20 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    ஊட்டியில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் மதியம் திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து விடிய, விடிய பெய்தது. இதனால் ஊட்டி தாவரவியல் பூங்கா சாலை, ரோஜா பூங்கா சாலை, சேரிங்கிராஸ், தொட்டபெட்டா சிகரம் செல்லும் சாலை, ஊட்டி மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.

    இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று மதியம் தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை வீட்டு வெளியில் வர முடியாமல் தவித்தனர். மேலும் பள்ளி சென்று விட்டு வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் குடை பிடித்தபடி வீட்டிற்கு திரும்பி வந்தனர். இரவு பெய்த மழையால் கேத்தி, பாலாடா பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. கோலனி மட்டம், செல்வீப் நகர் போன்ற பகுதிகளில் உள்ள தாழ்வான விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் 50 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

    இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். படகு இல்லம் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு கீழ் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர் மழையால் இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவியது. இந்த குளிரால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அவர்கள் சுவர்ட்டர் அணிந்து கொண்டும், தீ மூட்டியும் குளிர் காய்ந்தனர்.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கோடநாடு, சோலூர் மட்டம், கூக்கல்தொரை, கட்டபெட்டு உள்ளிட்ட பல இடங்களில் நேற்று மாலை 5 மணியளவில் சாரல் மழை பெய்தது. இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் அழுகின. இதனால் விவசாயிகள் சோகம் அடைந்தனர். காலை முதல் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் வரமுடியால் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    இதேபோல் மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று பிற்பகல் 2 மணி முதல் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலை மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர்மழை காரணமாக குந்தா பாலம் ராமையா பிரிட்ஜ் அருகே சாலையின் மேல்புறத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பெரிய பெரிய பாறைகள் மற்றும் கற்கள் உருண்டு ரோட்டில் விழுந்தது. ஊட்டி-மஞ்சூர் இடையே 20 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து பாறைகளை வெடி வைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு பகுதி சரிசெய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. அந்த பகுதியில் வாகனங்களை மெதுவாக இயக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து பாறைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதேபோல் குந்தாபாலம் பழைய தாலுகா இடையேயும் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் சில இடங்களில் மழைக்கு மரங்களும் முறிந்து சாலைகளில் விழுந்தன.

    ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குன்னூர் அருவங்காடு அருகே உள்ள ரெயில்நிலைய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ரெயில் நிலையம் முழுவதும் மண்சூழ்ந்து காணப்படுகிறது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மண்ணில் புதைந்தன. குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒரு சில இடங்களில் ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, டேலியா, கெத்தை உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. கெத்தை அணை தனது முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நேற்று அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு

    ஊட்டி-38.1, நடுவட்டம் -2, கல்லட்டி - 13, கிளைன்மார்க்ன்-2, குந்தா-31, அவலாஞ்சி-8, எமரால்டு-7, கெத்தை - 15, கின்னகொரை-8, அப்பர்பவானி-7, குன்னூர்-15, கேத்தி-8, பரளியாறு-10, கோத்தகிரி-10, கொடநாடு-16, கூடலூர்-3.

    கோத்தகிரி பகுதியில் பெய்து வரும் கனமழையால் 35 ஏக்கர் காய்கறி தோட்டம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கடுங்குளிரில் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதற்கிடையில் கனமழை காரணமாக அந்த பகுதியில் உள்ள நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த பீட்ரூட், கேரட் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து காவிலோரை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது,

    தற்போது பெய்த கனமழையால் காவிலோரை, சுள்ளிக்கூடு, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 35 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் அதில் பயிரிடப்பட்டு இருந்த பீட்ரூட், கேரட் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. மழைக்காலத்தில் இதே நிலை தொடர்ந்து நீடிப்பதால் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி வருகிறோம்.

    எனவே நீரோடையை மீண்டும் தூர்வாரி, நன்கு ஆழப்படுத்த வேண்டும். இல்லையென்றாலும் நாங்களே சொந்த செலவில் அதை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். மேலும் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும் என்றனர்.

    இதேபோன்று குன்னூர் பாய்ஸ்கம்பெனி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது வீட்டுக்கு முன்பு கார், மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பெய்த கனமழையால் குன்னூர்- ஊட்டி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ரோட்டில் ஆர்ப்பரித்த வெள்ளம் ராஜாவின் வீட்டு காம்பவுண்டு சுவற்றில் பாய்ந்தது. இதில் காம்பவுண்டு சுவர் இடிந்து அங்கிருந்த கார், மற்றும் மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது.

    இதில் கார், மற்றும் மோட்டார் சைக்கிள் முற்றிலும் சேதம் அடைந்தது. இது தவிர அம்பிகாபுரம், உபதலை ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். கன மழையால் வெலிங்டன் கண்டோன்மெண்ட் சிங்காரதோப்பு ரே‌ஷன் கடைக்கு எதிரே உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

    கோத்தரிகியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரியை பிடித்த பொதுமக்கள் தர்மஅடித்து கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
    கோத்தகிரி:

    கோவை மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டை சேர்ந்தவர் ஜவகர்தீன்(வயது 43). வியாபாரி. இவர் தனது நண்பர் ஒருவருடன் காய்கறி வியாபாரம் செய்வதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆட்டோ மூலம் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கோத்தகிரிக்கு சென்றார். அங்கு வியாபாரம் செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது ஜவகர்தீனுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. இதற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டார். வீட்டில் 12 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார். சிறுமியிடம் தண்ணீர் வாங்கி குடித்த ஜவகர்தீன் வீட்டில் யாரும் இல்லாததால் சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார்.

    அவரது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டவரை பிடித்து தர்ம அடி கொடுத்து கோத்தகிரி போலீசில் ஒப்படைத்தனர்.

    அப்போது கோத்தகிரி போலீசார் அவரை குன்னூர் மகளிர் போலீசில் நிலையத்தில் ஒப்படைக்கும்படி கூறினர். இதையடுத்து ஜவகர்தீனை பொதுமக்கள் குன்னூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    நீலகிரி பந்திப்பூரில் 2 பேரை அடித்துக்கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி, கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.

    இங்கு சவுடஹள்ளி பகுதியில் கடந்த 8-ந் தேதி மாடு மேய்த்த சிவலிங்கப்பா (வயது 55) என்பவரை புலி தாக்கி கொன்றது. ஏற்கனவே ஒருவரையும் இந்த புலி தாக்கி கொன்றதால் புலியை பிடிக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து 4 கால்நடை டாக்டர்கள் மேற்பார்வையில், வன ஊழியர்கள், போலீசார் இணைந்து 4 குழுக்களாக பிரிந்து, புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக 120 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது. மேல்கம்மனஹள்ளி பகுதியில் புலியின் நடமாட்டம் பதிவாகியிருந்தது.இதனையடுத்து அதனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பக யானைகள் முகாம் மற்றும் மடிக்கேரி யானைகள் முகாமிலிருந்து, 8 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.

    போக்கு காட்டி வந்த புலியை, மகுவினாஹள்ளி அருகே சித்திக்காடு பகுதியில் கும்கி யானையுடன் சென்ற குழுவினர் நேற்று மாலை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். 7 வயதுடைய இந்த ஆண் புலியை, மைசூரு விலங்கியல் பூங்காவுக்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
    மஞ்சூர் அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அணையில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள இத்தலார் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது56). விவசாயி. இவருடைய மனைவி புனிதா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் முருகனுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் பிரிந்தனர். இதையடுத்து முருகன் தனது தாயுடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே முருகன் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று தனது தாயிடம் வெளியில் சென்று வருவதாக கூறி சென்ற முருகன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தாய் அக்கம்பக்கம் உள்ள உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் எமரால்டு போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான முருகனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மஞ்சூர் அருகே உள்ள போர்த்தி அணையில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்தவரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அணையில் பிணமாக மிதந்தவர் காணாமல் போன முருகன் என்பதும், அவர் அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. 

    இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நீலகிரி மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    மலை மாவட்டமான நீலகிரியில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ‘ஏடிஸ்’வகை கொசுக்கள் உற்பத்தியாவதில்லை. ஆனால், சமவெளி பகுதிகளுக்கு சென்று வரும் பொதுமக்களிடம் இருந்து டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

    தற்போது இந்த மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் காய்ச்சலுக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நடந்த பரிசோதனையில் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சுகாதார துறை இணை இயக்குனர் பொற்கொடி கூறுகையில்,

    நீலகிரியை பொறுத்த வரையில் டெங்கு பாதிப்பு யாருக்கும் இல்லை. வெளியூர் சென்று வந்தவர்களில், 7 பேருக்கு அறிகுறி தென்பட்டதை அடுத்து, அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தினமும் வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்காக, அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு உள்ளது என்றார்.
    சந்திரயான்-2 தொடர்பாக தனக்கு கடிதம் எழுதிய நீலகிரி மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
    ஊட்டி:

    ‘இஸ்ரோ’ விண்வெளி மையம் கடந்த செப்டம்பர் மாதம் சந்திரயான்-2 விண்கலத்தை நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பியது. தரையிறங்க 2½ கி.மீட்டர் தூரத்தில் இருந்தபோது லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    உலகமே ஆர்வமுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் முக்கட்டி அரசு பள்ளி மாணவர்கள் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு செப்டம்பர் 10-ந்தேதி ஒரு கடிதம் எழுதினர். அதில் அறிவியல் ஆய்வுகளுக்கு தோல்வி என்பதே இல்லை என்று கூறியிருந்தனர்.

     நீலகிரி மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் எழுதிய பதில் கடிதம்

    இதற்கு சிவன் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுபோன்ற அன்பாலும், ஆதரவாலும் நம் இந்திய விண்வெளித்துறை மென்மேலும் சாதனைகள் படைக்கும். சந்திரயான்-2 லேண்டர் தரை இறங்காமல் இருந்தாலும் ஆர்பிட்டர் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் கருவிகள் 7 ஆண்டுகளுக்கு தகவல்களை அனுப்பும். மாணவர்களின் லட்சிய ஆசைகள் நிறைவேற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

    தமிழில் எழுதி கையெழுத்திட்டுள்ள அவரின் கடிதத்தின் பிரதிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அனைவரையும் ஆசிரியர்கள் படிக்க செய்தனர். தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் கூறும்போது, உலக தபால் தினத்தில் நாட்டின் சிறந்த மனிதரிடம் இருந்து வந்த கடிதம் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, எங்கள் ஆறுதலையும், ஆசையையும் தெரிவித்தோம். இஸ்ரோ தலைவர் எங்களுக்கு பதில் கடிதம் எழுதியது மகிழ்ச்சி மற்றும் ஊக்கம் அளிக்கிறது என்றனர்.
    ×