search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கோத்தகிரி பகுதியில் கனமழை: 35 ஏக்கர் காய்கறி தோட்டம் தண்ணீரில் மூழ்கியது

    கோத்தகிரி பகுதியில் பெய்து வரும் கனமழையால் 35 ஏக்கர் காய்கறி தோட்டம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கடுங்குளிரில் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதற்கிடையில் கனமழை காரணமாக அந்த பகுதியில் உள்ள நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த பீட்ரூட், கேரட் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து காவிலோரை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது,

    தற்போது பெய்த கனமழையால் காவிலோரை, சுள்ளிக்கூடு, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 35 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் அதில் பயிரிடப்பட்டு இருந்த பீட்ரூட், கேரட் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. மழைக்காலத்தில் இதே நிலை தொடர்ந்து நீடிப்பதால் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி வருகிறோம்.

    எனவே நீரோடையை மீண்டும் தூர்வாரி, நன்கு ஆழப்படுத்த வேண்டும். இல்லையென்றாலும் நாங்களே சொந்த செலவில் அதை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். மேலும் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும் என்றனர்.

    இதேபோன்று குன்னூர் பாய்ஸ்கம்பெனி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது வீட்டுக்கு முன்பு கார், மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பெய்த கனமழையால் குன்னூர்- ஊட்டி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ரோட்டில் ஆர்ப்பரித்த வெள்ளம் ராஜாவின் வீட்டு காம்பவுண்டு சுவற்றில் பாய்ந்தது. இதில் காம்பவுண்டு சுவர் இடிந்து அங்கிருந்த கார், மற்றும் மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது.

    இதில் கார், மற்றும் மோட்டார் சைக்கிள் முற்றிலும் சேதம் அடைந்தது. இது தவிர அம்பிகாபுரம், உபதலை ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். கன மழையால் வெலிங்டன் கண்டோன்மெண்ட் சிங்காரதோப்பு ரே‌ஷன் கடைக்கு எதிரே உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

    Next Story
    ×