search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி-மஞ்சூர் சாலையில் நிலச்சரிவு காரணமாக ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து கிடப்பதை காணலாம்
    X
    ஊட்டி-மஞ்சூர் சாலையில் நிலச்சரிவு காரணமாக ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து கிடப்பதை காணலாம்

    விடிய விடிய கனமழை: ஊட்டி-மஞ்சூர் சாலையில் 20 இடங்களில் நிலச்சரிவு

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஊட்டி-மஞ்சூர் இடையே 20 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    ஊட்டியில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் மதியம் திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து விடிய, விடிய பெய்தது. இதனால் ஊட்டி தாவரவியல் பூங்கா சாலை, ரோஜா பூங்கா சாலை, சேரிங்கிராஸ், தொட்டபெட்டா சிகரம் செல்லும் சாலை, ஊட்டி மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.

    இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று மதியம் தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை வீட்டு வெளியில் வர முடியாமல் தவித்தனர். மேலும் பள்ளி சென்று விட்டு வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் குடை பிடித்தபடி வீட்டிற்கு திரும்பி வந்தனர். இரவு பெய்த மழையால் கேத்தி, பாலாடா பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. கோலனி மட்டம், செல்வீப் நகர் போன்ற பகுதிகளில் உள்ள தாழ்வான விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் 50 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

    இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். படகு இல்லம் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு கீழ் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர் மழையால் இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவியது. இந்த குளிரால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அவர்கள் சுவர்ட்டர் அணிந்து கொண்டும், தீ மூட்டியும் குளிர் காய்ந்தனர்.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கோடநாடு, சோலூர் மட்டம், கூக்கல்தொரை, கட்டபெட்டு உள்ளிட்ட பல இடங்களில் நேற்று மாலை 5 மணியளவில் சாரல் மழை பெய்தது. இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் அழுகின. இதனால் விவசாயிகள் சோகம் அடைந்தனர். காலை முதல் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் வரமுடியால் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    இதேபோல் மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று பிற்பகல் 2 மணி முதல் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலை மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர்மழை காரணமாக குந்தா பாலம் ராமையா பிரிட்ஜ் அருகே சாலையின் மேல்புறத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பெரிய பெரிய பாறைகள் மற்றும் கற்கள் உருண்டு ரோட்டில் விழுந்தது. ஊட்டி-மஞ்சூர் இடையே 20 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து பாறைகளை வெடி வைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு பகுதி சரிசெய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. அந்த பகுதியில் வாகனங்களை மெதுவாக இயக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து பாறைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதேபோல் குந்தாபாலம் பழைய தாலுகா இடையேயும் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் சில இடங்களில் மழைக்கு மரங்களும் முறிந்து சாலைகளில் விழுந்தன.

    ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குன்னூர் அருவங்காடு அருகே உள்ள ரெயில்நிலைய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ரெயில் நிலையம் முழுவதும் மண்சூழ்ந்து காணப்படுகிறது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மண்ணில் புதைந்தன. குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒரு சில இடங்களில் ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, டேலியா, கெத்தை உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. கெத்தை அணை தனது முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நேற்று அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு

    ஊட்டி-38.1, நடுவட்டம் -2, கல்லட்டி - 13, கிளைன்மார்க்ன்-2, குந்தா-31, அவலாஞ்சி-8, எமரால்டு-7, கெத்தை - 15, கின்னகொரை-8, அப்பர்பவானி-7, குன்னூர்-15, கேத்தி-8, பரளியாறு-10, கோத்தகிரி-10, கொடநாடு-16, கூடலூர்-3.

    Next Story
    ×