என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஞ்சூர்- ஊட்டி சாலையில் குந்தா பாலம் பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்தது.
    X
    மஞ்சூர்- ஊட்டி சாலையில் குந்தா பாலம் பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்தது.

    குன்னூர், கோத்தகிரியில் பலத்த மழை: மண்சரிவால் மீண்டும் பாறைகள் உருண்டு விழுந்தன

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் குன்னூர் மற்றும் கோத்தகிரியில் பலத்த மழை பெய்தது. இதனால் மஞ்சூர்-ஊட்டி சாலையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியது. இதனால் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்த நிலையில் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழையில் மஞ்சூர்-ஊட்டி சாலையில் குந்தாபாலம், குண்டி தொரை முடக்கு, மெரிலேன்ட் ஆகிய இடங்களில் சாலையோர மண் திட்டுகள் இடிந்து ரோட்டில் விழுந்தது. மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்ததால் இந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமவெளி பகுதிகளில் இருந்து சரக்குகள் ஏற்றி வந்த லாரிகள் மற்றும் தனியார் வாகனங்கள் மண் சரிவால் மேற்கொண்டு செல்ல முடியாமல் நேற்று நள்ளிரவு முதல் சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல் இன்று காலை மஞ்சூர் மற்றும் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் இருந்து சென்ற அரசு பஸ்களும் சாலையின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றது.

    இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் விஸ்வநாதன், உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பன் மேற்பார்வையில் உதவி பொறியாளர் பாலச்சந்திரன், சாலை ஆய்வாளர் நஞ்சுண்டன் உள்பட 10-க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். மஞ்சூர் பகுதியில் இருந்து பொக்லைன் எந்திரங்களும் கொண்டு வரப்பட்டு சாலையில் விழுந்த மண் சரிவுகள், மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதேபோல் கிண்ணக்கொரை, கோரகுந்தா, அப்பர் பவானி உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் ஏராளமான மரங்களும் விழுந்துள்ளது.

    இரவு 12 மணியளவில் பலத்த இடி, மின்னல் ஏற்பட்டதில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் மஞ்சூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. இதை தொடர்ந்து இன்று காலை குந்தா மின்பகிர்மான வட்ட உதவி செயற்பொறியாளர் சிவா தலைமையில் உதவி பொறியாளர் சுரேஷ் மற்றும் ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக ஊட்டி- மஞ்சூர் சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது நேற்று இரவு இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் ஊட்டி மஞ்சூர் சாலையில் மீண்டு மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலைகளில் உருண்டு விழுந்தன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்த வண்ணம் நிற்கின்றன. இதபோல் மஞ்சூர் அருகே கெத்தை பகுதியில் உள்ள 10 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதியடைந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் குந்தா பகுதியில் 12 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதற்கிடையே தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    கோத்தகிரி, கொடநாடு, கட்டபெட்டு, கூக்கல்தொரை, சோலூர் மட்டம் உள்பட பல பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்யத் தொடங்கியது. நேற்று இரவு 11 மணி முதல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இன்று காலையிலும் மழை பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக ஊட்டி-கோத்தகிரி சாலையில் கட்டப்பெட்டு பகுதியில் உள்ள மரம் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு அலுவலர் (பொ) ஜெகதிஷ் சந்திரபோஸ் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றினர். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.

    இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோல் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுடியது.

    மழை காரணமாக பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதேபோல் தேயிலை தோட்டங்களுக்கு பணிக்கு செல்வோரும் இந்த மழையால் வேலைக்கு செல்லவில்லை. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சுவர்ட்டர் அணிந்த படியும், குடை பிடித்து கொண்டும் பள்ளிக்கு சென்றனர்.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் வட்டப்பாறை, அருவங்காடு, கோனேரி உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோல் தொடர்ந்து மழை பெய்தால் பல இடங்களில் அபாயகரமான மரங்கள் கீழே விழும் நிலையில் உள்ளது. இதேபோல் பல இடங்களிலும் மண்சரிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதேபோல் ஊட்டி மற்றும் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஊட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீர் அதிகமாக செல்வதால் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன. தொடர் மழை காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. சிலர் கடுங்குளிரில் இருந்து தங்களை காத்து கொள்ள தீ முட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். தொடர் மழையால் நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மலைக் காய்கறிகளான பீட்ரூட், கேரட் உள்ளிட்டவை நீரில் மூழ்கின. மேலும் தேயிலை விவசாயம் பாதிகப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதேபோல் கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. மாலை 5 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால் கோவையின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். தொடர் மழை காரணமாக கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    ஊட்டி-26.4, நடுவட்டம்-27, கல்லட்டி-10, கிளன்மார்கன்-9, குந்தா-120, அவலாஞ்சி- 92, எமரால்டு-66, கெத்தை-109, கிண்ணக்கொரை-90, அப்பர்பவானி-74, குன்னூர்-50, கேத்தி-47, பர்லியார்-40, கோத்தகிரி- 37, கோடநாடு-27, கூடலூர்-27, தேவாலா-60.

    அன்னூர்-4, விமான நிலையம்-6.2, மேட்டுப்பாளையம்-31.2, சின்கோனா-2, வால்பாறை பி.ஏ.பி-6, வால்பாறை தாலுகா-5, சோலையார்-24, ஆழியார்-17.4, பொள்ளாச்சி-75, கோவை தெற்கு-27, பெரியநாயக்கன் பாளையம்-6, வேளாண்மை பல்கலைக்கழகம்-59.
    Next Story
    ×