என் மலர்tooltip icon

    நீலகிரி

    கோடப்பமந்து பகுதியில் அடிப்படை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    ஊட்டி நகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட கோடப்பமந்து பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் பெரும்பாலான நிலப்பரப்பில், மலை காய்கறி சாகுபடி மேற் கொள்ளப்படுகிறது. இங்கு பொருத்தப்பட்டுள்ள, 10க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் எரிவதில்லை.

    இதனால், இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சமீபகாலமாக, காய்கறி தோட்டங்களில் புகுந்து விடும் காட்டெருமைகள், அவ்வப்போது, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், கோடப்பமந்து பிரதான சாலையில் இருந்து, குடியிருப்புக்குள் செல்லும் ஒத்தையடி பாதை மிகவும் சேதமடைந்துள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இரவு நேரத்தில் வந்தவர்கள் சிலர், காட்டெருமைகளின் அச்சத்தால், ஒத்தையடி பாதையில் வழுக்கி விழுந்து காயமடைந்தனர்.’தெரு விளக்குகளை எரிய செய்வதுடன், நடைபாதை உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, பல முறை நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

    இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கோடப்பமந்து சாலையில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஊட்டி போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், ஊட்டிகோத்தகிரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊட்டியில் பலத்த மழை காரணமாக ராட்சத பாறைகள் நடு ரோட்டில் சரிந்து விழுந்தது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இடைவிடாது பெய்த கன மழையால் மஞ்சூர், குந்தாபாலம், கிண்ணக் கொரை, கோர குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதுடன் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    மேலும் குந்தாபாலம், கெத்தை, ஒணிகண்டி உள்பட பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட விடகள் இடிந்து விழுந்தது. 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் முன், பின்புற பகுதிகளில் மண் சரிவுகள் மற்றும் தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்தது.

    குந்தா பாலம் பன்னிமேடு பகுதியை சேர்ந்த 20 குடும்பங்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததுடன் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

    இதற்கிடையே திடீரென கால நிலை மாற்றம் ஏற்பட்டதால் மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் கடும் மேக மூட்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காலை 11 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.

    சற்று நேரத்தில் பலத்த மழையாக மாறியது. விடு, விட்டு அரை மணி நேரத்திற்கு ஒரு முயை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மீண்டும் பலத்த மழை தொடங்கி உள்ளதால் மஞ்சூர் சுற்றுப்புற பகுதி மக்களிடையே மண் சரிவு அச்சம் ஏற்பட்டு உள்ளது.

    குன்னூர், எடப்பள்ளி, கட்டப்பெட்டு கோத்தகிரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இன்று கன மழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த கன மழையால் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவை செல்லும் நெடுஞ்சாலையில் கட்டபெட்டு அருகே சாலையில் சீகை மரம் விழுந்தது. இதனை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வாள் கொண்டு அறுத்தும், கயிறு கட்டி இழுத்தும் அப்புறப்படுத்தினார்கள்.

    இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குன்னூரில் மேக மூட்டத்துடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. கடும் மேக மூட்டம் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி சென்றது. மழை காரணமாக குன்னூர்- சேலாஸ் சாலையில் ராட்சத பாறைகள் நடு ரோட்டில் சரிந்து விழுந்தது. இதனை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.கடும் மேக மூட்டம் காணப்படுவதால் லாம்ஸ்ராக், டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

    ஊட்டியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    கோவையில் நேற்று காலை முதலே குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. இரவு மழை பெய்தது. கோவை காந்திபுரம், சாய்பாபா காலனி, சரவணம் பட்டி, கணபதி, ராமநாதபுரம், புலிய குளம், சிங்காநல்லூர், போத்தனூர், செல்வபுரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளிலும், சூலூர், கருமத்தம் பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்தது.

    மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அணைகளின் நீர் மட்டம் வருமாறு-

    குந்தா-87, கெத்தை-152, எமரால்டு-152, அவலாஞ்சி- 169, அப்பர் பவானி- 207, பால்ஸன்ஸ்வேலி- 52, போர்த்தி மந்து- 116, பைக்காரா- 85, முக்கூருத்தி- 16, சாண்டிநல்லா-43, கிளன் மார்கன்-24, மாயார்-15.

    திருப்பூர் மாவட்ட ம் உடுமலை பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கூடலூரில் லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் குணசீலன் (வயது 19). இவர் கூடலூர் அரசு கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் மகன் கலைச்செல்வன் (20). இவர் கூடலூர் தோட்ட தொழிலாளர் குழந்தைகள் தொழிற்பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலையில் தீபாவளி பண்டிகை என்பதால் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பின்னர் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கூடலூருக்கு புறப்பட்டனர். கூடலூர் சென்று விட்டு மீண்டும் கோழிப்பாலம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கலைச்செல்வன் ஓட்டினார். பின்னால் குணசீலன் உட்கார்ந்து இருந்தார்.

    அப்போது கூடலூர் நந்தட்டி பகுதியில் வந்தபோது லாரி ஒன்று நாடுகாணி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் லாரியை முந்தி செல்வதற்காக மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினார். அப்போது வலதுபுற சாலையோரம் மோட்டார் சைக்கிளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதில் மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை சற்று திருப்பியபோது எதிர்பாராதவிதமாக லாரியின் பக்கவாட்டில் மோட்டார் சைக்கிள் மோதியது. மேலும் கண்இமைக்கும் நேரத்தில் லாரியின் சக்கரத்தில் கலைச்செல்வன், குணசீலன் ஆகியோர் சிக்கினார்கள். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

    இதனை கவனித்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து உடனடியாக கூடலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கூடலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், ராஜாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அப்போது மாணவர்கள் 2 பேரின் உடல்களை பார்த்த அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இது பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கூடலூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி:

    கூடலூர் கோழிபாலத்தை சேர்ந்தவர் குணசீலன் (20) கூடலூர் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த கலைசெல்வன் (18) கூடலூர் தோட்ட தொழிலாளர் ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார்.

    சம்பவத்தன்று 2 பேரும் தனது நண்பர்கள் 2 பேருடன் 3 மோட்டார் சைக்கிளில் கூடலூருக்கு சென்று இறைச்சி வாங்கி விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது நந்தட்டி முருகன் கோவில் அருகே வரும்போது எதிர்பாராத விதமாக குணசீலன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அருகில் வந்த நண்பர் மோட்டார் சைக்கிளில் இடித்து முன்னாடி சென்ற லாரி டயரில் சிக்கியது.

    இதில் படுகாயமடைந்த குணசீலன், கலைசெல்வன், 2 பேரையும் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கூடலூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கோவை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு 111 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கக்படும் என அரசு போக்கவரத்து கழகம் மேலாளர் தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஏராளமானேர் குடும்பத்துடன் ஊட்டி நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

    இதனை கருத்தில் கொண்டு ஊட்டி அரசு போக்குவரத்து கழகம் நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவை புதிய பஸ் நிலையத்திற்கு 66 சிறப்பு பஸ்களை இன்று முதல் இயக்குகிறது.

    இதே போல திருச்சி, மதுரை மற்றும் சென்னை போன்ற வெளி மாவட்டங்களுக்கு 45 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 111 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மேலும், பயணிகள் தேவைக்கேற்ப அறிவிக்கப்படாத திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற பகுதிகளுக்கும் இடங்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்கவும் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

    இந்த சிறப்பு பஸ்கள் இன்று முதல் ஊட்டியில் இருந்து இயக்கப்பட உள்ளது. பண்டிகை முடிந்ததும் வெளியூர்களுக்கு செல்ல ஏற்றவாறு வரும் 29-ந்தேதி வரையிலும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வெளியூர்களில் இருந்து ஊட்டிக்கு வரும் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயனடைவார்கள்.

    இது குறித்து ஊட்டி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மோகன் கூறியதாவது:-

    கோவையில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் இருப்பார்கள் என்பதால், 66 சிறப்பு பஸ்கள் கோவைக்கு இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் வெளி மாவட்டம் செல்லும் பயணிகளின் கூட்டத்தை பொருத்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், வெளி மாவட்டங்களில் பணியாற்றி வரும் உள்ளூர் மக்கள் தீபாவளி பண்டிகையின் போது தங்கள் சொந்த ஊர்களுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கூடலூரில் இருந்து நேரடியாக கோவை, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் சேலம் மற்றும் ஈரோடு போன்ற பகுதிகளுக்கு பயணிகளின் கூட்டம் பொருத்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள மார்வாளா அடுத்துள்ள அத்திகம்பையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (வயது 29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முத்துமாரி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

    அங்கு மனம் உடைந்து காணப்பட்ட முத்துமாரி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அவரது தந்தை பால்ராஜ் இது குறித்து கோத்தகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோத்தகிரி அருகே குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி டேன்டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே அரசு தேயிலை தோட்ட கழகத்துக்கு(டேன்டீ) சொந்தமான தேயிலை தோட்டம் மற்றும் தொழிற்சாலை உள்ளது. இங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு குயின்சோலை மற்றும் தேனாடுகூப்பு பகுதிகளில் குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. அந்த குடியிருப்புகளில் அவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 

    இதற்கிடையில் டேன்டீ நிர்வாகம் ந‌‌ஷ்டத்தை காரணம் காட்டி குடியிருப்புகளை முறையாக பராமரிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் சீராக குடிநீர் வினியோகமும் செய்யப்படுவது இல்லை என தெரிகிறது. இதனால் அசுத்தமான தண்ணீரை குடிப்பதற்கு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். எனவே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று டேன்டீ அதிகாரிகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு எஸ்.கைக்காட்டி பகுதியில் உள்ள டேன்டீ மேலாளரின் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே தொழிலாளர்களுடன், டேன்டீ மேலாளர் கவுதம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அங்கிருந்து தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் டேன்டீ உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை ஏற்று தொழிலாளர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 54-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.

    ஊட்டி உள்ளிட்ட இடங்களில் மழை குறைந்தும், குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நீலகிரி மாவட்டம் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் தற்போது தொடங்கி உள்ள வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கோத்தகிரி மற்றும் மஞ்சூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் விளை நிலங்களில் வெள்ளம் சூழ்ந்தது. பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள்.

    கனமழை காரணமாக நேற்று மாலை குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டேரி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குன்னூரில் ராணுவ முகாம் செல்லும் ஆரஞ்சு குரோவ் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதில் 3 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் பகுதியில் மண் சரிவு, மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து தடைபட்டு 5 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தீயணைப்பு துறையினர், போலீசார், நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் மண் சரிந்து விழுந்ததாலும், மரம் விழுந்ததாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டடதால் குன்னூர் நகரமே ஸ்தம்பித்தது.

    ஊட்டியில் இருந்து பஸ்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    ஊட்டி காய்கறி சந்தையில் மழை நீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் பாதிப்பு அடைந்தனர்.

    குன்னூர் அருகே உள்ள கெந்தளா பகுதியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் கிடக்கும் ராட்சத பாறைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் நேற்று இரவு மழை பெய்தது. இதனால் மஞ்சூர்- கோவை சாலையில் கெத்தை, பெரும் பள்ளம், மந்து உள்ளிட்ட 6 இடங்களில் இன்று அதிகாலை மண் சரிவு ஏற்பட்டது. மேலும் மரங்களும் ரோட்டில் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண் சரிவு, சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டத்தில் 54-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.

    குன்னூரில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக குன்னூர் அருகே உள்ள கொலகம்பை பாரதி நகரில் வசித்து வரும் பெரியசாமி, இளங்கோ, சண்முக ராஜா, பாட்டாயி, கந்தசாமி, பாலமுத்து, பாலு, மற்றும் பழனியம்மாள் உள்ளிட்ட 21 பேரின் வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது.

    அவர்களை அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சேதம் அடைந்த வீடுகளை கிராம நிர்வாக அலுவலர் பீரவீனா, ஆய்வாளர் மணி ஆகியோர் பார்வையிட்டனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதனால் மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    மழை காரணமாக குந்தா, அவலாஞ்சி, ரேலியா ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    ஊட்டி- 33, நடுவட்டம்- 56, கல்லட்டி-12, கிளன்மார்கன்-27, குந்தா-19,அவலாஞ்சி-27, எமரால்டு-17, கெத்தை- 11, கின்னகொரை - 11, அப்பர் பவானி-23, குன்னூர்-5, கேத்தி- 9, பர்லியார்- 5, கோத்தகிரி- 5.2, கொடநாடு- 39, கூடலூர்-48, தேவாலா- 59.

    குன்னூரில் இன்று காலை லாரிக்கு வழிவிட முயன்றபோது பஸ் நிலைதடுமாறி சுவற்றில் மோதி 20 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது. பஸ்சில் சிக்கி தவித்த 25 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    குன்னூர்:

    மதுரையில் இருந்து ஊட்டிக்கு 25 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. இன்று காலை மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே உள்ள காட்டேரி பூங்கா அருகே ஒரு வளைவில் அந்த பஸ் வந்தபோது எதிரே ஒரு லாரி வந்தது.

    லாரிக்கு வழிவிட முயன்றபோது பஸ் நிலைதடுமாறி சுவற்றில் மோதியது. சுவர் இடிந்து 20 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து 20 அடி பள்ளத்தில் சிக்கி தவித்த 25 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு 25 பேரையும் ஊட்டிக்கு அனுப்பி வைத்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இது தவிர இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கலெக்டர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
    மஞ்சூர்:

    தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரி கடல் முதல் ஆந்திர கடலோர பகுதிவரை நீடித்து வருகிறது.

    இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் உள்ள பல பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டியது.

    இந்நிலையில் தமிழகத்தில் குறிப்பாக நீலகிரி உள்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கலெக்டர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார். 
    கலெக்டர் இன்னசன்ட் திவ்யா
    நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
    ஒரு மொழி, ஒரு நாடு என்ற நிலையை கொண்டு வர பா.ஜனதா முயற்சிக்கிறது. இந்த முயற்சி சாத்தியமாகாது என்று டிகே ரங்கராஜன் கூறியுள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஊட்டியில் கம்யூனிஸ்டு இயக்கத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். விழாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினரும், மேல்சபை எம்.பி.யுமான டி.கே. ரங்கராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

    பொருளாதார, சமூக நெருக்கடிகளில் இருந்து மக்களை மீட்க மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு இந்த நூற்றாண்டு விழாவை பயன்படுத்துகிறது. நாட்டில் எதிர் கட்சிகளே இல்லாமல் செய்யும் பணியை பாரதீய ஜனதா செய்து வருகிறது. ஒரு மொழி, ஒரு நாடு, ஒரு இனம், ஒரு கட்சி என்ற நிலையை கொண்டு வர பா.ஜனதா முயற்சிக்கிறது. பாரதீய ஜனதாவின் இந்த முயற்சி சாத்தியமாகாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள் காமராஜ், பொன்னுதாய், பத்ரி, ரவீந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மின்நிலையங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், 12 மின் நிலையம், 13 அணை மற்றும் 30க்கு மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன.

    கெத்தை, அவலாஞ்சி, காட்டுகுப்பை, பைக்காரா, மாயார், மசினகுடி உள்ளிட்ட பெரும்பாலான மின் நிலையங்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே சரிவான பகுதியில் அமைந்துள்ளன. இங்குள்ள மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு, 70 ஆண்டுகள் கடந்து விட்டன.

    கடந்த ஆகஸ்டு மாதம் இரண்டு வாரம் பெய்த கன மழையில் அவலாஞ்சி, அப்பர்பவானி உட்பட மின் நிலையங்களில் தண்ணீர் புகுந்தது. மின் சாதன கருவிகள், ராட்சத குழாய் செல்லும் பாதைகள் சேதமானதால் ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

    தற்போது, வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. மின் நிலையம், அணை மற்றும் இரவு நேரங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதை தொடர்ந்து, சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்வாரிய அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்டு, நீலகிரி மாவட்ட மின் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் ரவி கூறுகையில், ஆகஸ்ட் மாதம் பெய்த கன மழையில், 20 கோடி ரூபாய் வரை, நீலகிரி மின் நிலையங்களில் நஷ்டம் ஏற்பட்டது. வட கிழக்கு பருவமழை துவங்கியிருப்பதால், மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட கூடாது.’’ இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள ஆலோசனைகள் உயர் அதிகாரிகள் தரப்பில் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து, நீலகிரியிலும், மின் வாரிய முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடத்தப்பட்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது,’’ என்றார்.

    ×