என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் கவிதாசன் (வயது 41). இவர் கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கவிதாசனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வேலை முடித்து வீட்டிற்கு வந்த கவிதாசனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பெட்டட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாசி. விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டை பூட்டி வெளியில் சென்றுவிட்டார்.
மாலையில் வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த 30 பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்து மாசி அருவங்காடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர். நேற்று குன்னூர் குற்றப்பிரிவு போலீசார் பெட்டட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
குற்றப்பிரிவு போலீசார் அவரை அருவங்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெட்டட்டி பகுதியை சேர்ந்த குமார் என்பதும், இவர் தான் விவசாயி வீட்டில் 30 பவுன் நகை திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த 30 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட விவசாயிகள் உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், பூண்டு ஆகியவைகளுக்கு பயிர் காப்பீடு செய்ய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது :-
நீலகிரி மாவட்டத்தில் 6000 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி பயிர்களான உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், பூண்டு போன்ற பயிர்களும், கூடலூர் பகுதியில் இஞ்சி, வாழை மற்றும் மரவள்ளி பயிர்களும் அதிக அளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்கண்ட பயிர்களுக்கு அதிக முதலீடு தேவைப்படுவதால் எதிர்பாராத விதமாக ஏற்படும் மகசூல் பாதிப்புகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். மகசூல் இழப்பீட்டிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டம் நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு காரிப் பருவத்தில் 2333 விவசாயிகள் 963 ஹெக்டர் பரப்பில் பயிர்க்காப்பீடு செய்துள்ளனர். அண்மையில் ஊட்டி வட்டாரம் பாலடா பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் பாதிப்படைந்த விவசாயிகள், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நாள்வரை பயிர்க்காப்பீடு செய்துள்ள 16 விவசாயிகளுக்கு ரூ. 276319 காப்பீடு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விசாயிகளுக்கு பயிர் அறுவடை பரிசோதனையின் மூலம் பெறப்படும் மகசூலை கணக்கில் கொண்டு விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட உள்ளது.
இது போன்று எதிர்பாராத விதமாக ஏற்படும் வெள்ளம், வறட்சி, புயல், பனி, ஆலங்கட்டி மழை போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து விவசாயிகள் தங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீடு திட்டம் உதவியாக உள்ளது.
மேலும் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்ட 1362 விவசாயிகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து காய்கறி பயிர்களுக்கு 1 ஹெக்டேர் பரப்பிற்கு ரூ. 13,500வீதம் மொத்தம் ரூ. 58 லட்சம் நீலகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே நீலகிரி மாவட்ட மக்கள் அனைவரும் எதிர்பாராத விதமாக நிகழும் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின் அரசாணை ராபி பருவத்திற்கு வரும் பட்சத்தில் உருளைக்கிழங்கு, கேரட் முட்டைகோஸ், பீட்ரூட், பூண்டு, இஞ்சி, வாழை ஆகிய பயிர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பங்குகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் 55 டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகின்றன. தினசரி 1.50 கோடி வருவாய் வருகிறது. குறைந்தது 20 ஆயிரம் காலி மதுபாட்டில்கள் சேகரிக்கப்படுகிறது.
இதில் 32 கடைகளுக்கு பார் வசதி உள்ளது. 23 கடைகளுக்கு பார் வசதி இல்லை. இந்த கடைகளுக்கு மது அருந்த வரும் ‘குடி’மகன்கள் பார் வசதியில்லாததால் பொது இடங்களில் அமர்ந்து குடித்து விட்டு சாலையோரங்களில் மதுபாட்டில்களை வீசி செல்கின்றனர்.
மேலும் சிலர் மது வாங்கி சென்று வனப்பகுதியில் அமர்ந்து குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் வனப்பகுதி மற்றும் பொது இடங்களில் கிடக்கும் மதுபாட்டில்களால் சுகாதார சீர்கேடு மற்றும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
வனப்பகுதிகளில் தூக்கி எறியப்படும் மதுபாட்டில்கள் விலங்குகளில் கால்களில் கீறி காயம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து சுகாதார சீர்கேட்டை தடுக்க மது குடிப்பவர்கள் இனி பாட்டில்கள் அந்த பகுதிகளில் உள்ள குப்பை தொட்டிகளில் போட வேண்டும். அப்படி செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், “பொது இடங்களை சுகாதாரமாக வைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி காலி மதுபாட்டில்களை பொது இடத்தில் தூக்கி எறிபவர்களுக்கு உள்ளாட்சி விதிகளின் படி, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்,’’ என்றார்.
நீலகிரியில் கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரியின் சுற்று சூழலை பாதுகாக்க, கடந்த சில ஆண்டுகளாக ஆழ்துளை கிணறு அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மணப்பாறையில் சமீபத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலியான சம்பவத்தை அடுத்து பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட அரசு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி, உள்ளாட்சி அமைப்புகள் பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறு குறித்து கள ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.
அதன்படி, மாவட்டத்தில், 883 ஆழ்துளை கிணறுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், ஊட்டி 40, குன்னூர் 10, கோத்தகிரி, 7, கூடலூர், 20 என, மொத்தம், 77 பயனற்று கிடக்கும் ஆழ் துளை கிணறுகள் கண்டறியப்பட்டு, அவைகளை உடனடியாக மூட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது நீலகிரியில் நடந்த ஆய்வின் போது கண்டறியப்பட்ட பயனற்று கிடக்கும் 77 ஆழ்துளை கிணறுகளை மூடும் பணி வேகமாக நடந்து வருகிறது என்றார்.
பந்தலூர் அருகே சேரம்பாடி பஜார் அருகில் உள்ள சேரன் நகரை சேர்ந்தவர் மனோகரன்(வயது33). இவரது மனைவி உமா(30). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த உமா தனது கணவரை பிரிந்து சேரம்பாடி டான்டீ பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் உமா சேரன் நகர் பகுதியில் உள்ள மகளிர் குழுவுக்கு பணம் செலுத்துவதற்காக வந்தார்.
அப்போது மனைவி உமாவை பார்த்த மனோகரன் இனி நான் தகராறில் ஈடுபட மாட்டேன். நாம் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று கூறி வீட்டிற்கு அழைத்து சென்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மனோகரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உமாவை குத்தினார். இதில் அவருக்கு தலை உள்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மனோகரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து உமாவை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக மேப்பாடி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்திய மனோகரனை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக இங்குள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் இதமான காலநிலை காணப்படுவதால் இங்குள்ள சிம்ஸ் பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின் நோஸ், கோத்தகிரியில் உள்ள கேத்ரின் அருவி, நேரு பூங்கா, கொடநாடு காட்சிமுனை, உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த கால நிலையினை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமில்லாது கேரளம், கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக ஊட்டியில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, குன்னூரில் உள்ள டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிகாலை நேரங்களில் லேசான பனிப்பொழிவும், பகல் நேரங்களில் சில்லென்று இதமான காற்றும் வீசுகிறது. இந்த காலநிலையினை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகளில் பாறைகளும், மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
குன்னூர் பகுதியில் நேற்று காலை லேசான சாரல் மழை பெய்தது. குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி என்ற பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவரின் வீட்டின் சுவர் மழைக்கு இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
இதேபோல் குன்னூர்- பழைய அருவங்காடு பகுதியில் உள்ள சாலையில் இருந்த மரம் முறிந்து விழுந்து வெடிமருந்து தொழிற்சாலையின் கட்டிடம் சேதம் அடைந்தது. மவுண்ட்பேட்டன் சாலையில் 4 இடங்களில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சில இடங்களிலும் மரங்கள் சாலைகளின் நடுவே விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதேபோல் குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து ஓட்டுப்பட்டறை செல்லும் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டு சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது.
இதனை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் கோவையில் இருந்து தீயணைப்பு துறை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையிலான 60 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர் குன்னூர் சென்று குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் 2 வண்டிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே குன்னூர் பகுதிக்கு 40 பேர் கொண்ட மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் வந்துள்ளனர். அவர்கள் பர்லியார், காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று குன்னூரில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மஞ்சூரில் நேற்று காலை 11 மணியளவில் தேவர் சோலை என்ற இடத்தில் மழைக்கு மண்சரிந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அந்த சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்ணை அகற்றி போக்குவரத்து செல்ல ஏற்பாடு செய்தனர்.
குந்தாபாலம் மேட்டுச்சேரி குடியிருப்பு பகுதிகளில் 15 இடங்களில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றன. இதையடுத்து அந்த பகுதியில் வசித்து வரும் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மழை குறையும் வரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பகல் நேரங்களில் வீடுகளிலும், இரவு நேரத்தில் முகாம்களிலும் தங்கி வருகின்றனர். இதேபோல் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் ராக்கி என்பவரின் வீடு மழைக்கு இடிந்து விழுந்தது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர் மழை காரணமாக குந்தா, அவலாஞ்சி, அப்பர்பவானி அணைகள் முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தொடர் மழை பெய்து வருவதால் பந்தலூர் மற்றும் தேவாலா தாலுகாவிற்குட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:
ஊட்டி-11, நடுவட்டம்-20, கிளன்மார்கன்-1, குந்தா-12, அவலாஞ்சி-11, கெத்தை-14, எமரால்டு-8, கிண்ணக்கொரை-22, அப்பர்பவானி-22, குன்னூர்-11, கேத்தி-4, கோத்தகிரி-6, கொடநாடு-11, கூடலூர்-11, தேவாலா-59.
நீலகிரி மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கடத்தி செல்வதாக 18 பேர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் 407 நியாய விலைக்கடைகளில் 2,13,023 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று சில சமூக விரோதிகள் லாப நோக்கத்துடன் வெளிமாநிலங்களுக்கு கடத்தி சென்று வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதையடுத்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்படி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குடிமைபொருள் வழங்கல் துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடந்த 2 மாதங்களில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 1218 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 6 வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டு இதில் ஈடுபட்ட 18 பேர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போல் நடக்கும் முறைகேடுகளை தடுக்க கடந்த மாதம் குடிமை பொருள் வழங்கல் மற்றும் கூட்டுறவு துறையினரால் நியாயவிலைக்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது 198 இடங்களில் அந்தந்த நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ரூ.36,260 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களை வெளிமாவட்டம் அல்லது வெளிமாநிலங்களுக்கு கடத்தி செல்வதாக தெரிய வந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

திருச்சி, மணப்பாறையில் இரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சம்பவத்தை அடுத்து, ‘மாவட்ட வாரியாக ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுப்பு நடத்தி பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும்,’ என, அரசு உத்தரவிட்டது. நீலகிரியின் பல இடங்களில், கடந்த மூன்று ஆண்டுகளில் பல இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்தது. அதில், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வரவில்லை. அந்த இடங்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் முறையாக மூடியுள்ளனரா என்பது தெரியவில்லை.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், தற்போது, பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா கூறுகையில், ‘‘மாவட்டத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து, உள்ளாட்சி அமைப்புகள் கணக்கெடுத்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்
ஊட்டி நகராட்சியில் 6-வது வார்டுக்கு உட்பட்டது மேல் கோடப்பமந்து பகுதியாகும். இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி ஊட்டி-கோத்தகிரி நெடுஞ்சாலையையொட்டி அமைந்து உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், கூலி வேலைக்கு செல்கிறவர்கள் அரசு பஸ்களில் சென்று வருகின்றனர். பஸ் நிறுத்தத்தில் இறங்கி செங்குத்தாக வீடுகளுக்கு நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் நடைபாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் நடைபாதையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதனை சுற்றி புதர்கள் வளர்ந்து உள்ளது. அப்பகுதியில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டும் சரிவர எரிவது இல்லை. அதன் காரணமாக வேலைக்கு சென்று வருகிறவர்கள் இரவு நேரத்தில் நடைபாதையில் செல்ல மிகவும் சிரமம் அடைகின்றனர். குழி இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து வருகிறார்கள். மேலும் அங்கு காட்டெருமைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதுகுறித்து மனுக்கள் அளித்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவதால் தெருவிளக்குகளை சரிசெய்து தரக்கோரி ஊட்டி-கோத்தகிரி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மாணவர்கள் சிலர் சிறப்பு வகுப்பு முடிந்து இரவு நேரத்தில் வீடுகளுக்கு திரும்புகின்றனர். அந்த சமயத்தில் நடைபாதை சரியில்லாததாலும், தெருவிளக்குகள் எரியாததாலும் காட்டெருமைகள் நடமாட்டத்துக்கு இடையே அவர்கள் அச்சத்துடன் வீட்டிற்கு வருகிறார்கள். நடைபாதை பழுதுடைந்து காணப்படுவதால், முதியோர்கள், நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, நடைபாதை, தெருவிளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதோடு, காட்டெருமைகள் குடியிருப்புக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






