search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் இன்னசென்ட் திவ்யா"

    அடிப்படை வசதிகள் குறித்து வாக்குச்சாவடிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    குன்னூர் அருகே மேலூர் அரசு தொடக்கப்பள்ளி, தூதுர்மட்டம் அரசு நடுநிலைப்பள்ளி, சேலாஸ் லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி, வண்டிசோலை நடுநிலைப்பள்ளி, ஓட்டுப்பட்டரை சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, குன்னூர் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பது குறித்து தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனடியாக விடுபட்ட வசதிகளையும் ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

    முன்னதாக ஊட்டி அருகே உள்ள கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்ட ‘அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என்ற விழிப்புணர்வு குறும்பட பிரசார வாகனத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

    இதில் குன்னூர் தாசில்தார் தினேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜ், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ஊட்டியில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். #PolioDropsCamp
    ஊட்டி:

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக 770 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சிறப்பு வாகனங்கள் போலியோ சொட்டு மருந்து வழங்க பயன்படுத்தப்படுகிறது.

    பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட், சோதனைச்சாவடிகள், 29 கோவில்கள், 52 கிறிஸ்தவ ஆலயங்கள், 6 மசூதிகள் மற்றும் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. நகர்புற பகுதிகளில் 135 போலியோ சொட்டு மருந்து முகாம்களும், கிராம பகுதியில் 635 போலியோ சொட்டு மருந்து முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட அளவில் 42,558 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ நோயினை அறவே ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். #PolioDropsCamp
    இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தாமாகவே முன் வரவேண்டும் என்று ஊட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

    ஊட்டி:

    ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தேசிய வாக்காளர் தின விழா நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் 73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மீதமுள்ள 27 சதவீத வாக்குகள் பதிவாகவில்லை. எனவே இன்றைய இளைஞர்கள் 31.1.2019 அன்று வெளியிடப்படவுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் 18 மற்றும் 19 வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் தங்களது பெயர்களை சேர்த்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் தங்களது முகவரி பெயர் நீக்கல், சேர்த்தல், பிழைகள் போன்றவைகள் ஏதேனும் இருப்பின் அதனை சரி செய்து கொள்ள வேண்டும். 

    நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 683 வாக்குச்சாவடி மையங்களும், 354 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளிடம் பள்ளி பருவத்திலேயே வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் 18 வயதை அடைந்தவுடன் அவர்கள் தாமாகவே வாக்களிக்க முன் வரவேண்டும். நமது மாவட்டத்தில் சராசரியாக 5 லட்சத்து 62 ஆயிரத்து 883 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 625 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 90 ஆயிரத்து 280 பெண் வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு வாக்காளர் தொடர்பான குறைகள், கருத்துக்கள், தகவல்கள் குறித்து இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

    முன்னதாக வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதி மொழி கலெக்டர் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    அனைத்து வாக்காளர்களும் தேர்தல் சம்மந்தப்பட்ட தகவல்கள் பெற கருத்துக்கள் கூற புகார்கள் அளிக்க கலெக்டர் அலுவலகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் உதவி மையத்தினையும், நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டள்ள வாக்காளர் விழிப்புணர்வு மையத்தினை அதற்கான வழிகாட்டு புத்தகத்தினை மாவட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாடு திட்ட இயக்குநர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கீதா பிரியா, ஊட்டி கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன், உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    படுகர் இன மக்கள் ‘அட்டி’ என்று அழைக்கப்படும் கிராமங்களில் வசித்து வருகிறார்கள். படுக இன மக்களின் குல தெய்வமாக ஹெத்தையம்மன் உள்ளது. படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 24-ந் தேதி தொடங்க உள்ளது.
     
    இதையொட்டி வருகிற 26-ந் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால், நீலகிரியில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இதற்கு பதிலாக வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    விவசாயிகள் மருந்துகள் மூலம் விவசாயம் செய்வதை விட்டு இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை ஊராட்சியில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 100 விவசாய பயனாளிகளுக்கு விலையில்லா நுண்ணீர் பாசன கருவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கி கூறியதாவது,

    நீலகிரி மாவட்டம் இயற்கையும் பசுமையும் நிறைந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது விவசாயம் தான். விவசாயிகளான நீங்கள் மருந்துகள் மூலம் விவசாயம் செய்வதை விட்டு இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

    இயற்கை விவசாயம் செய்ய செலவு மிகவும் குறைவு. இங்குள்ள விவசாயிகள் விவசாயத்தில் மிகவும் ஈடுபாட்டுடனும், அக்கறையுடனும் இருக்கின்றீர்கள். கூக்கல்தொரை உழவர் உற்பத்தியாளர் குழு மாவட்டத்தில் மிகசிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள மற்ற உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு இது ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறை சார்பில் மகாத்மாகாந்தி வேலை உறுதிதிட்டத்தின்கீழ், கூக்கல்தொரை முதல் கம்பட்டி கம்மை பகுதி வரை ரூ.41 லட்சம் மதிப்பில் 700 மீ தூரம் நடைபெற்று வரும் சாலைப்பணியினையும், மகாத்மா காந்தி வேலை உறுதிதிட்டத்தின்கீழ், ரூ.1,95,000 மதிப்பில் கூக்கல் தொரை முதல் அரங்கிபுதூர் வரை 200மீ தூரம் சாலைப்பணியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    முன்னதாக, ஊட்டி நகராட்சிக்குட்பட்ட வேளாண் பொறியில் துறையின் சார்பில், ரூ.41 லட்சம் மதிப்பில் கோடப்பமந்து கால்வாய் தூர்வாரும் பணியினையும், கலெக்டர் பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் கோபாலகிருஷ்ணன் எம்.பி., தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர்சிவசுப்ரமணிய சாம்ராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநர்மீராபாய், தோட்டக்கலைத்துறை அலுவலர்சந்திரன், விவசாய பெருங்குடிமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரூ.6 லட்சம் மதிப்பில் ஊட்டசத்து உணவுகளை வழங்கினார். #CollectorInnocentDivya
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு 1,876 குழந்தைகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் ஊட்டசத்து உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலங்கள். பிறந்த குழந்தை 1 முதல் 5 வயது வரை தான் அதிக அளவு மூளை வளர்ச்சி அடைகிறது. அச்சமயத்தில் தான் குழந்தைகளுக்கு அதிகபடியான ஊட்டசத்து வழங்க வேண்டும். அப்பொழுது தான் ஊட்டசத்து குறைபாடு இல்லாத குழந்தைகளாக வளர்க்க முடியும்.

    மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு கர்ப்பிணி தாய்மார்களின் இறப்பு விகிதம் 100 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

    போ‌ஷன் அபியான் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நீலகிரி மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் தேசிய குடும்ப சுகாதாரம் மூலம் கணக்கெடுக்கப்பட்டதில் குள்ளத்தன்மை, ஊட்டச்சத்து குறைபாடு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை, எடைகுறைவு உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    மேற்கண்ட குறைபாடுகளை குறைக்க வேண்டுமெனில் புரதசத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவு பொருட்களை தவறாது உண்ண வேண்டும். இதன் அடிப்படையில் மாவட்டத்தில் 1,876 குழந்தைகளுக்கு மும்பையை சேர்ந்த இஷ்பிரவா என்ற அமைப்பின் மூலம் நெய், கடலைமிட்டாய், எள்ளுமிட்டாய், மற்றும் பேரீச்சம்பழம் ஆகிய ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறி அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கோப £லகிருஷ்ணன் எம்.பி., போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன், இஷ்பிரவா அமைப்பின் தலைவர் தர்சன்ஷா, அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #CollectorInnocentDivya
    கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் நில மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் நில மேம்பாட்டு பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நெடுகுளா ஊராட்சி கன்னேரி மற்றும் கொணவக் கரை ஊராட்சி ஆனந்தகிரி, அண்ணாகாலனி, கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட கன்னிகாதேவி காலனி பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலைவசதி, தெருவிளக்கு, குடிநீர் வசதிகள் போன்றவைகள் உள்ளனவா என பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    மேலும் காக்காசோலை, கன்னேரி பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.12 லட்சம் மதிப்பில் நிலமேம்பாட்டு பணியின் மூலம் தனிநபர் விவசாய நிலங்களில் உள்ள தேவையற்ற தாவரங்களை அகற்றும் பணியினை கலெக்டர் பார்வையிட்டு, இந்த நில மேம்பாட்டு பணியின் மூலம் தனிநபர் விவசாய நிலங்களை பராமரிக்க வசதியின்றி விவசாயம் செய்யாமல் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் நிலங்களை மேம்படுத்தி விவசாயம் செய்து பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரதி, கோல்டி சாராள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

    கேரள மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.57¼ லட்சம் வெள்ள நிவாரணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ஊட்டி:

    கேரள மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு, மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்ட மக்களுக்கு உதவிடும் பொருட்டு மாவட்ட சமூக நலத்துறை சார்பில் புடவைகள், சேனிட்டரி நாப்கின்ஸ், குழந்தைகளுக்கான ஆடைகள், சோப்பு, சேம்பு, மற்றும் ஆண்களுக்கான பேண்டுகள், டிசர்ட்டுகள் ஆகியவைகளும், உதகை நகராட்சி சார்பில் பிஸ்கட், சோப்பு, அரிசி போன்ற பொருட்களும், தோட்டக் கலைத்துறை சார்பில் கடநாடு, உல்லத்தி, இத் தலார், மீக்கேரி, சோலாடா, கேத்தி, கூக்கல்தொரை ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுப்பண்ணை மற்றும் உழவர் உற்பத்தி நல குழு சார்பில் 3 டன் காய்கறிகள் மற்றும் 800 கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை, சோப்பு, பிஸ்கட் போன்ற பொருட்கள் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவியும், 1 டன் பால் பவுடர், மலப்புரம் மாவட்டத்திற்கு 6 டன் அரிசி மற்றும் 1 டன் பால் பவுடர் 500 சமையல் பாத்திர பண்டங்கள் மொத்தம் ரூ.47 லட்சம் 20 ஆயிரம் மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் சார்பில் ரூ.25,150, (கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி, பிரிதெளஸ் பாத்திமா ரூ.1,122, பைக்காராவை சேர்ந்த ஜெயராமன் ரூ.1000, சண்முகம் ரூ.2000, கேப்டன் கே.ஆர்.மணி ரூ.10,000, ஓட்டல் ஜெம்பார்க் பணியாளர்கள் சார்பில் ரூ.61,605, மாவட்ட ஹோட்டல் பார் அசோஷியேசன் சார்பில் ரூ.1,00,000, ஓட்டல் மோனார்க் சார்பில் ரூ.60,000, வருவாய்துறை அலுவலர்கள் சார்பில் ரூ.80,000, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் ரூ.1,05,000, கக்குச்சி ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.20,000, பேலிதளா ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.13,000, அதிகரட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.50,000, ஆர்.கே.பி லைன் ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.37,500 ,கோத்தகிரி ஓட்டல் அண்டு ரிசார்ட் சங்கம் உதகை சார்பில் ரூ.50,000, குந்தசப்பை ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.13,000, உழவர்சந்தை டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் உதகை சார்பில் ரூ.25,000, எல்லநள்ளி வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் ரூ.1,06,300 ஆக மொத்தம் ரூ.4,54,317 மதிப்பில் கேரள முதல்-மந்திரி பொது நிவாரண நிதிக்கு காசோலையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மருந்து கட்டுப் பாட்டு துறை அலுவலர்கள், மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ரூ.1,00,000 மதிப்பில் அத்தியாவசிய மருந்து பொருட்கள் மற்றும் ரூ.1,45,000 நிதியுதவியும் ஆக மொத்தம் ரூ.57,25,677மதிப்பில் இதுவரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் மற்றும் பல்வேறு அமைப்புகள், தனியர்கள், மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    மேலும், நீலகிரி மாவட்டத்திலிருந்து மூன்று குழுக்கள் போதிய மருந்துகளுடன் மருத்துவர்கள் சென்று பொதுமக்களுடன் முகாமில் தங்கி அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளித்தார்கள். அதற்காக பொது மக்களும், அங்குள்ள மருத்து வர்களும் தக்க சமயத்தில் உதவி செய்ததற்காக மருத்துவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்தனர் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    ஊட்டியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பேசிய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாணவர்கள் காலத்திற்கேற்ப திறமைகளை வளர்க்க வேண்டும் என்றார்.

    ஊட்டி:

    ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். மாணவர்கள் தங்களின் திறமைகளை காலத்திற்கேற்ப ஆர்வத்துடன் வளர்த்து கொள்ள வேண்டும். தமிழக அரசு உங்களுக்காக புதிய தொழில் தொடங்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே ஒவ்வொருவரும் திட்டங்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். அவ்வாறு செய்தால் நீங்களே ஒரு தொழில் தொடங்கி அதன் மூலம் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கலாம்.

    படித்து விட்டு அரசாங்க தொழிலையே நம்பாமல் தாங்களாகவே தொழில் தொடங்கி கடுமையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். அதன் மூலம் வாழ்வில் முன்னேறி நல்ல நிலைக்கு வர முடியும் எனவும் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், இப்பயிற்சி கூட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலைக் கல்லூரிகளில் நடத்தப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன உதவி இயக்குநர் டேனியல் பிரேம்நாத், கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெறுவதை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், குடிநீர்வசதி, கலைநிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாகவும், அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி விழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மருத்துவக்குழு மற்றும் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி நகராட்சி பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் சரியாக உள்ளதா? என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் சரியாக உள்ளதா? என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.

    முள்ளிக்கொரை பகுதியில் வசிக்கும் மக்களிடம் அடிப்படை வசதிகளான சாலைவசதி, குடிநீர்வசதி, மின்சார வசதி, தனிநபர் கழிப்பறை வசதி போன்றவை உள்ளனவா என்றும், சுகாதாரம் குறித்தும் ஆய்வு செய்து அப்பகுதி பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் வீட்டுமனைப்பட்டா இல்லாதவர்கள் முறையாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் எனவும், வீட்டுமனைப்பட்டா உள்ளவர்கள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெற்று வீடு கட்டி தர முறையாக மாவட்ட நிர்வாகத்தை அணுகி பயன் பெறுமாறும் தெரிவித்தார்.

    மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பை எடுக்க வரும் தூய்மை காவலர்களிடம் கொடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும், சுற்றுலாப்பயணிகளிடம் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடுமாறும் அறிவுறுத்தினார்.

    பின்னர் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள கழிவு நீர் கால்வாயை பார்வையிட்டு அதை சுத்தம் செய்யுமாறும், பேருந்து நிலையத்திற்கு செல்லும் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்றுமாறும் நகராட்சி ஆணையாளர்(பொ) ரவிக்கு உத்தரவிட்டார். அதன்டிப்படையில் நடைபாதை கடைகள் உடனடியாக அகற்றப்பட்டன. இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் (பொ) ரவி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொட்டபெட்டா ஊராட்சிக்குட்பட்ட சின்கோனா பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் 400 மீட்டர் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியினை பார்வையிட்டார்.

    தும்மனட்டி ஊராட்சி முனியாபுரம், எப்பநாடு ஊராட்சி கோயில்மேடு, கங்கா நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் பழங்குடியினர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு, போக்குவரத்து வசதி போன்றவை உள்ளனவா? என்றும் சுகாதாரம் குறித்தும் ஆய்வு செய்து அப்பகுதி பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பில் 1500 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் தூனேரி ஊராட்சி அலுவலக கட்டிட பணியினையும் அவர் பார்வையிட்டார்.

    மேலும் வேளாண் பொறியியல் துறை சார்பில் கடநாடு ஊராட்சிக்குட்பட்ட பெந்தட்டி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 2010 மீட்டர் வெள்ள தடுப்பு மேம்படுத்துதல் பணிகளையும்,

    ஆக மொத்தம் ரூ.33 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணிகளை விரைவில் முடிக்குமாறு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொறுப்பு) சுமதி, செயற்பொறியாளர் பசுபதி, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் பாலசுப்ரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமன், நாகராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×