என் மலர்tooltip icon

    நீலகிரி

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெடி மருந்து கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் இன்ஸ்பெக்டர் அம்மாத்துரை தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் ஈரோடு மாவட்டம் சத்திநாயக்கன் பாளையம் உக்கிரம் பகுதியை சேர்ந்த குப்புசாமி (46) வந்தார். அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் ஒன்றரை கிலோ வெடி மருந்து இருந்தது.

    அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். குப்புசாமி கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் கூறியதாவது-

    குப்புசாமி திருவிழா காலங்களில் வாண வேடிகைக்கு வெடிகளை சப்ளை செய்பவர் ஆவார். திருப்பூரில் இருந்து வெடி பொருட்களை வாங்கி வந்ததாக கூறினார். இந்த வெடி பொருட்களுடன் கன் பவுடர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேர்த்து பன்றிக்கு வைக்கும் வெடி தயாரிக்கப்படுகிறது.

    குப்புசாமி யாருக்கு சப்ளை செய்ய இந்த வெடி மருந்துகளை கொண்டு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    முதுமலை வனப்பகுதியில் புலி ஒன்று கம்பீரமாக நடை நடந்து வந்தது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
    ஊட்டி:

    ஊட்டி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் பந்திபூர் புலிகள் காப்பகம், இந்தியாவின் சிறந்த புலிகள் காப்பகங்களாக திகழ்ந்து வருகின்றன.

    புலிகளை பாதுகாக்க மத்திய அரசு கடந்த பல ஆண்டுகளாக இந்த இரண்டு புலிகள் காப்பகங்களிலும் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட புலிகளும், பந்திபூர் புலிகள் காப்பகத்தில் 100-க்கும் மேற்பட்ட புலிகளும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் முதுமலை வனப்பகுதியில் புலி ஒன்று கம்பீரமாக நடை நடந்து வந்தது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். சிறிது நேரம் வனப்பகுதில் உள்ள சாலையில் நடந்து வந்த புலி பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

    குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை மாற வேண்டும் என்று ஊட்டியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பேசினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டி சேரிங்கிராசில் உள்ள தோட்டக்கலைத்துறை அரங்கில் நடைபெற்றது. மேலும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பள்ளி இடைநிற்றலால் ஏற்படும் பிரச்சினைகள், பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டம் போன்றவை குறித்த கண்காட்சி நடந்தது. அதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- 18 வயது பூர்த்தி அடையாமல் திருமணம் செய்வது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, மன ரீதியான துன்புறுத்துவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. தேநீர் கடை, உணவு விடுதி, கட்டிட தொழிலில் குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவதும் நடந்து வருகிறது. அதனை முற்றிலும் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

    குழந்தைகள் பாதுகாப்பிற்காக கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. நீலகிரியில் 60 சதவீத குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கு செல்கிறார்கள். மீதம் உள்ள 40 சதவீதத்தினர் குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை மாற வேண்டும். குழந்தை திருமணத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் தைரியமாக முன்வந்து குழந்தை பாதுகாப்பு மையத்தின் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார். அதனை தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நாட்டின் சுதந்திரம் ஒருமைப்பாடு ஆகியவற்றை காக்கவும், வலுப்படுத்தவும் என்னை அர்ப்பணித்து செயல்படுவேன். நான் ஒரு போதும் வன்முறையில் ஈடுபட மாட்டேன். மதம், மொழி, வட்டாரம் மற்றும் அரசியல் அல்லது பொருளாதார பேதங்களுக்கு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டும் தீர்வு காண தொடர்ந்து பாடுபடுவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) இமிலிசா மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
    குன்னூரில் மழை வெள்ள பாதிப்பை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 16-ந் தேதி நள்ளிரவு முதல் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. அப்போது கிரு‌‌ஷ்ணாபுரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது மேலும் 19 வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஆங்காங்கே பாறைகளுடன் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் குன்னூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த கலெக்டர் கூறியதாவது:-

    பலத்த மழையால் குன்னூர் அருகே உள்ள கிரு‌‌ஷ்ணாபுரம், வேளாங்கண்ணி நகர், கன்னிமாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. கிரு‌‌ஷ்ணாபுரம் ஆற்றின் அகலம் குறைவாக உள்ளது. அங்கு பாலங்களை உயர்த்தி கட்டவும், ஆற்றை சுற்றி தடுப்புச்சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். வேளாங்கண்ணி நகரில் தடுப்புச்சுவர் இடிந்து, வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. அங்குள்ள மக்களுக்கு மாற்று இடங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் கன்னிமாரியம்மன் கோவில் தெருவில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை கடுமையாக சேதம் அடைந்து உள்ளது. அந்த சாலை விரைவில் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    கோத்தகிரி அருகே தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் தீ மூட்டி குளிர் காய்ந்த தம்பதியினர் மூச்சு திணறி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கோத்தகிரி:

    கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதி விசில்வாடியை சேர்ந்தவர் மாரிசாமிஷெட்டி. இவரது மகன் பிரதாப்(வயது24). இவரது மனைவி நாகம்மாள்(32).

    இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சி பகுதியில் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் அந்த நிறுவனம் சார்பில் அந்த பகுதியில் ஒதுக்கப்பட்ட குடியிருப்பில் தங்கி வேலைக்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் இரவு பிரதாப்பும், நாகம்மாளும் தொழிற்சாலை வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அங்கு வசித்து வரும் மக்கள் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து கர்நாடகாவில் உள்ள அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பிரதாப், நாகம்மாள் சம்பவத்தன்று தீ முட்டி குளிர் காய்ந்துள்ளனர். அப்போது மூச்சுதிணறி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர்கள் எப்படி இறந்தனர் என்பது தெளிவாக தெரியவரும்.

    தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் தம்பதியினர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பன்னட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன வெள்ளையன் என்கிற ராமையா(வயது 70).

    இவர் உலிக்கல் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை பணியில் இருந்தபோது அங்கு வந்த காட்டெருமை ராமையாவை முட்டி தூக்கி வீசியது.

    இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு காட்டெருமையை அங்கிருந்து விரட்டினர். இதுகுறித்து குன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த ராமையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் லாலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி:

    பந்தலூர் அருகே கொளப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் தலைமை போலீசார் சந்திரன், மோகன் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொளப்பள்ளி குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (60), சண்முகம் (55) ஆகிய இருவரும் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

    நெல்லியாளம் பகுதியில், கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேவாலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது கொடிவேல் (42) என்பவரின் மளிகை கடையில், போதைப்பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    மது வாங்க பணம் தர மறுத்ததால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
    பந்தலூர்:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு அரசு தேயிலை தோட்டம் ரேஞ்சு-1 பகுதியை சேர்ந்தவர் கணே‌‌ஷ் ராஜ்(வயது 42). தொழிலாளி. இவருடைய மனைவி சிட்டு(36). மதுப்பழக்கத்துக்கு அடிமையான கணே‌‌ஷ் ராஜ், தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் மது வாங்க பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்து உள்ளார்.

    கடந்த மாதம் 28-ந் தேதி கணே‌‌ஷ் ராஜ் மது வாங்க சிட்டுவிடம் பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கணே‌‌ஷ் ராஜ் வீட்டில் இருந்த மண் எண்ணெயை எடுத்து சிட்டு மீது ஊற்றி தீ வைத்து விட்டார். தீயில் கருகிய அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். உடனே அங்கிருந்து கணே‌‌ஷ் ராஜ் தப்பி ஓடிவிட்டார். பின்னர் படுகாயம் அடைந்த சிட்டுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் சம்பவம் குறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனிடையே உடல் நிலை மோசமானதை தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிட்டு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நீதிபதி அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது மது வாங்க பணம் கொடுக்காததால் தன் மீது கணே‌‌ஷ் ராஜ் மண் எண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டதாக வாக்குமூலம் அளித்தார். பின்னர் கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிட்டு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

    இந்த நிலையில் மது வாங்க பணம் தர மறுத்த மனைவியை மண் எண்ணெயை ஊற்றி எரித்து கொலை செய்ததாக கணே‌‌ஷ் ராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

    ஊட்டி:

    ஊட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (23). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். எமரால்டு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30). கூலித் தொழிலாளி. இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

    இது குறித்து அச்சிறுமியின் பெற்றோர் ஊட்டி ரூரல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செல்வராணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது மணிகண்டன், பிரகாஷ் ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.70 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் உள்ளிட்ட 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

    இந்த பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுரைப்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது, பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பது, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனையை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதற்காக துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட 34 குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களையும், 18 கிலோ பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்து ரூ.70 ஆயிரத்து 450 அபராதம் விதிக்கப்பட்டது.

    இனிவரும் காலங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    அதேபோல் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணிகளின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ.டி.எம்.,களை பயன்படுத்திட வேண்டும் என்றனர்.
    குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி முதியவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ள வெலிங்டன் அருகே உள்ள பிளாக் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்தவர் சைமன்(வயது 87). இவர் இன்று காலை குன்னூரில் உள்ள வங்கிக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து பிளாக் பிரிட்ஜ் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து வந்தார்.

    அப்போது வழியில் ஏராளமான காட்டெருமைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன.

    இதை அவர் கவனிக்காமல் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கூட்டமாக நின்ற காட்டெருமைகளுள் ஒரு காட்டெருமை ஓடி வந்து சைமனை தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு வயிறு, கால், கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வெலிங்டன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர் அருகே காட்டுயானைகளிடம் இருந்து கடைகளை பாதுகாக்க வியாபாரிகள் மின்வேலி அமைத்து உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இங்குள்ள வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை காட்டுயானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ந‌‌ஷ்டத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அது நீண்ட காலத்துக்கு பலனிப்பது இல்லை.

    இந்த நிலையில் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பார்வுட் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதனருகில் பொதுமக்களின் குடியிருப்புகள், தொட்ட தொழிலாளர்களின் வீடுகள் உள்ளன. இங்கு சாலையோரத்தில் அமைந்து உள்ள கடைகளை, இரவில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகள் உடைத்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

    இதனை தடுக்க வியாபாரிகள் புதிய யுக்தியை கையாண்டு உள்ளனர். அதன்படி கடைகளை சுற்றிலும் மின்வேலி அமைத்து உள்ளனர். இரவில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளிடம் இருந்து கடைகளை பாதுகாக்கவே மேற்கண்ட நடவடிக்கை எடுத்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பார்வுட் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் காட்டுயானைகள் நுழைவது தொடர்ந்து வருகிறது. அவை கடைகளை உடைத்து, உள்ளே இருக்கும் பொருட்களை தின்றும், சிதறடித்தும் அட்டகாசம் செய்கின்றன. இதனால் பெரும் ந‌‌ஷ்டத்துக்கு ஆளாகி வருகிறோம். வனத்துறையினரிடம் தெரிவித்தால், அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை.

    இதனால் நாங்களே எங்கள் கடைகளை பாதுகாக்க முன்வந்து உள்ளோம். கடைகளை சுற்றி மின்வேலி அமைத்து உள்ளோம். இதனால் இரவில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகள் கடைகளில் அருகில் வருவதை தவிர்த்து விடும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×