என் மலர்tooltip icon

    நீலகிரி

    மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது. இதில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக கடந்த 16-ந் தேதி முதல் 29 -ந் தேதி வரை மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ரெயில் பாதையை சீரமைத்த பின்னர் 1-ந் தேதி வழக்கம்போல் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டு சென்றது இதனிடையே கல்லாறு- ஹில் குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மீண்டும் ஒரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் வரும் மலை ரெயில் மீண்டும் குன்னூருக்கு திருப்பி இயக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. ரெயில் பாதையில் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு-குன்னூர் ரெயில் நிலையங்கள் இடையே 19 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து மீண்டும் 9-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.

    ரெயில் பாதையை சீரமைப்பதற்காக கடந்த 2-ந் தேதி மேட்டுப்பாளையத்திலிருந்து பி.டி .ரெயிலில் கம்பரசர் மற்றும் பொக்லின் எந்திரங்கள் ஏற்றப்பட்டு மலைப்பாதையில் மண்சரிவு, பாறை உருண்டு விழுந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது மலை ரெயில் இருப்புபாதை பொறியாளர்கள் ஜெயராஜ், நாகராஜ் ஆகியோர் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

    ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் நேற்று மாலையுடன் முடிவடைந்தது .

    சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்ததையொட்டி மலை ரெயில் போக்குவரத்து 8 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது வழக்கம்போல் காலை 7 .10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டுச் சென்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

    குன்னூர் மற்றும் கோத்தகிரியில் 3-வது நாளக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குளிரால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
    குன்னூர்:

    குன்னூரில் 3-வது நாளாக மழை பெய்தது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது.

    இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டும், மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில வீடுகளும் இடிந்து விழுந்தது.

    கடந்த 4 நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது. இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்றும் இரவும் மழை பெய்தது. குன்னூரில் இரவு 10.30 மணி முதல் 2 மணி வரை மழை நீடித்தது.

    இதேபோல் கோத்தகிரியிலும் நேற்று இரவு லேசான மழை பெய்தது. குன்னூர், கோத்தகிரியில் கடந்த 3 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் பிளாஸ்டிக் போர்வைகளை அணிந்த படி சென்று வருகிறார்கள். குன்னூரில் இரவு மழை பெய்தாலும் பகலில் மழை இல்லை. வானம் மேக மூட்டத்ததுடன் காணப்படுகிறது.
    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தூளில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தூளில் கலப்படம் செய்வது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரித்துள்ளனர்.

    இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகையான தேயிலை தூள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் கீழ் தரத்தினை உறுதி செய்யும் வகையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் தேயிலை தூளில் கலப்படம் செய்வது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    நீலகிரி மாவட்டத்தில் தயாரிப்பாளர்கள், தேயிலை ஏல விற்பனை மையம், மறு பொட்டலமிடுவோர் மற்றும் மொத்த, சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முழுமையான பொட்டல மிடுதல் மற்றும் சீட்டிடுதல் விதிகளை பின்பற்ற வேண்டும்.

    மேலும், உணவு பொருளின் பெயர், உணவு பாதுகாப்பு உரிமம் எண், தயாரிப்பாளர், மறு பொட்டலமிடுவோர், விநியோகிஸ்தர் முழு அஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண், தயாரிப்பு மற்றும் பொட்டலமிடப்பட்ட தேதி , உபயோகப்படுத்துவதற்கான கால அளவு, நிகர எடை, தொகுப்பு எண், விலை, ஊட்டச்சத்து விவரம், சேர்மான பொருட்கள் விவரம், சைவ குறியீடு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    இந்த தகவல்கள் இல்லாமல் விற்கப்படும் தேயிலை தூள் பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பனை செய்வோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு பிறந்த மகனுக்கு17 வயதும், 2-வது மனைவிக்கு பிறந்த மகளுக்கு 13 வயதும் ஆகிறது.

    இந்த நிலையில் தனது தங்கையை 17 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் சித்தி தேவாலா அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    இதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவன் கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.
    தமிழக வனத்துறையில் முதல் திருநங்கை, நீலகிரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார்.
    ஊட்டி:

    கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். நீலகிரி மாவட்ட வனத்துறையில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு மதுபாலன் என்ற மகனும், தீப்தி(வயது 21) என்ற திருநங்கையும் உள்ளனர். அதில் தீப்தி, பி.காம். பட்டதாரி ஆவார். இதற்கிடையில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த வாகன விபத்தில் சுப்பிரமணியன் உயிரிழந்தார். இதையடுத்து தந்தையின் வேலையை அவரது வாரிசான தனக்கு வழங்கும்படி தீப்தி அரசுக்கு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, நீலகிரி மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் தீப்திக்கு பணியிடம் ஒதுக்கி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று ஊட்டியில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் மாவட்ட வன அதிகாரி குருசாமியிடம், தீப்தி பணி நியமன ஆணையை காண்பித்து பணியில் சேர்ந்தார். அவருக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தீப்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்ட வனத்துறையில் பணி கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய முயற்சிப்பேன். எனக்கு தனியார் தொண்டு நிறுவனத்தினர், திருநங்கை நண்பர்கள் ஊக்கம் அளித்தனர். தந்தை இறந்த பிறகு தைரியமாக இருக்க பழகினேன். சமூகத்தில் திருநங்கைகள் அரசு வேலைகளில் சேர்ந்து உயர வேண்டும். ஏற்கனவே திருநங்கைகள் காவல்துறையில் பணிகளில் உள்ளனர். நான் வனத்துறையில் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்து பதவிகளில் உயர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னுடன் பணிபுரிபவர்களுக்கு பணியில் ஒத்துழைப்பு அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து அவருடன் வந்திருந்த நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக வனத்துறையில் முதன் முறையாக திருநங்கை பணியில் சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்த முயற்சித்தனர்.
    பந்தலூர்:

    பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கையுன்னியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் முருகேசன் (வயது 49). இவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தேவாலா மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு முருகேசனை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை 11 மணிக்கு கையுன்னி அரசு பள்ளி முன்பு கைதான ஆசிரியர் முருகேசனின் மனைவி, மகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
    இது குறித்து தகவல் அறிந்த சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, வருவாய் ஆய்வாளர் காமு மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

    கையுன்னி அரசு பள்ளி வளாகத்தில் பழமை வாய்ந்த மாமரம் இருந்தது. அந்த மரத்தை வெட்ட சில ஆசிரியர்களும், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினரும் முயன்றனர். இதற்கு ஆசிரியர் முருகேசன் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கடந்த வாரம் நடந்த பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டத்தில் மரத்தை வெட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கான ஆவணத்தில் ஆசிரியர் முருகேசன் கையெழுத்திடவில்லை. எனினும் இரவோடு, இரவாக பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வெட்டி கடத்தப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்துவிடுவார் என்ற அச்சத்தில் ஆசிரியர் முருகேசன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த புகாரை வாபஸ் பெற வேண்டும். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மரத்தை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதை கேட்ட அதிகாரிகள், உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையில் பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தை வெட்டி கடத்தியதாக தலைமை ஆசிரியர், பெற்றோர்- ஆசிரியர் கழக நிர்வாகி மீது எருமாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சேரம்பாடி வனச்சரகர் சின்னதம்பி தலைமையிலான வனத்துறையினர் பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.
    மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளில் சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதையடுத்து 20 மணி நேரத்திற்கு பிறகு குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் மீண்டும் வாகனங்கள் இயக்கப்பட்டன.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 2 நாட்களாக அதிகாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    எம்.ஜி.நகர், சுராகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதேபோல் மவுண்டன் பகுதியில் மழைக்கு 2 பேரின் வீடுகள் இடிந்து விழுந்தன. இதையடுத்து எம்.ஜி.ஆர்.நகர், சுராகுப்பம் மற்றும் வீடு இடிந்தவர்கள் உள்பட 17 குடும்பத்தினர் அந்த பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மற்றும் வருவாய்த்துறையினர் பெட்கள், வாளிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.

    தொடர்ந்து பெய்த மழையால் குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் பல இடங்களில் மண்சரிவும், மரங்களும் முறிந்து விழுந்தன. குன்னூர் நந்தகோபால் பாலம் குறுகிய சாலையில் 14 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்ட ராட்சத பாறை உருண்டு விழுந்தது.

    இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் வழியாக செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன.

    இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் அந்த ராட்சத பாறையை இரண்டாக உடைத்து அகற்றினர்.

    தொடர்ந்து சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து 20 மணி நேரத்திற்கு பிறகு மாலை 4 மணி முதல் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் மீண்டும் வாகனங்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து மழை பெய்தால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் முடிவு செய்துள்ளனர்.

    நேற்று முன் தினம் இரவு நீலகிரி மாவட்டம் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக மேட்டுப் பாளையம்- ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு, குன்னூர் ரெயில் நிலையங்கள் இடையே மீண்டும் 19 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரெயில் பாதையில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தது. மேலும் மண் சரிந்து ரெயில் பாதையை மூடியது ரெயில் பாதை ஓரத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து ரெயில் பாதையின் குறுக்கே விழுந்தன.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து மற்றும் ஊட்டி மேட்டுப்பாளையம் மலை ரெயில் போக்கு வரத்து இன்றுமுதல் வருகிற 8-ந் தேதி வரை 5 நாட்கள் மீண்டும் ரத்து செய்யப்படுகிறது. ரெயில்வே பணியாளர்கள் பாறைகள் மற்றும் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோத்தகிரியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் சோலூர் மட்டத்தை சேர்ந்த அருள்தாஸ், கட்டப் பெட்டு பாரதி நகரை சேர்ந்த சரவணன், சுண்டப் பட்டியை சேர்ந்த சிவகுமார், கிளப்ரோட்டை சேர்ந்த பிரதீஷ், தவிட்டுமேட்டை சேர்ந்த சரசு ஆகியோரின் வீடுகளின் ஒருபகுதி இடிந்து விழுந்தது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோத்தகிரி தாசில்தார் மோகனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை வழங்கினார்.

    கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கட்டப்பெட்டு என்ற இடத்தில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோத்தகிரியில் மட்டும் 11 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் சாலைகளிலும் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு வாகனங்கள் மாற்றுபாதையில் இயக்கப்பட்டன.

    இதேபோல் கூக்கல் தொரை பகுதியில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மலைக் காய்கறிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து கோத்தகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடுங்குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    ஊட்டியில் ஏராளமான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. கேத்தி காந்தி நகரில் ஏற்பட்ட மண்சரிவால் 4 வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. பாலாடாவில் 2 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. விளைநிலங்களில் இருந்து அடித்துவரப்பட்ட மணல் கால்வாயில் படிந்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. கேத்தி பாலாடாவில் இருந்து சேலாஸ் செல்லும் சாலையில் 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து சாலையில் கிடந்த பாறைகள் மற்றும் மண்சரிவை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    தொடர் மழை காரணமாக ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. ரோஜா பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியது. தொடர் மழையால் டால்பின்ஸ் நோஸ் மற்றும் லேம்ஸ்ராக் பகுதிகளுக்கு பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி அருகே மூலிகை தாவரங்கள் மூலம் ரூ.25 லட்சத்துக்கு தைலங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இந்த தைலங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சின்கோனா கிராமத்தில் மூலிகை தாவரங்கள் வளர்ப்பகம் வனத்துறையின் கூட்டு வன மேலாண்மை சார்பில் செயல்பட்டு வருகின்றது. கடந்த 1995-ம் ஆண்டு வளங்குன்றிய மலைப்பகுதியில் மூலிகை தாவரங்களை வளர்ப்பதற்காக தொடங்கப்பட்டது. இதன் மூலம் சின்கோனா கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. தைலம், ரோஸ்மேரி, சிட்ரநெல்லோ, ஜெரேனியம், பார்சிலி, லெமன் கிராஸ் உள்பட 13 வகையான மூலிகை தாவரங்கள் 15 ஏக்கர் நிலத்தில் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    ஒரு முறை நடவு செய்யப்படும் மூலிகை தாவரம் 6 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை வளரும். முதலில் 6 மாதத்திலும், அடுத்தடுத்து 4 மாதங்களிலும் அதன் இலைகளை அறுவடை செய்யலாம். அந்த பச்சை இலைகளை வேக வைத்து, அதில் இருந்து தைலம் பிரித்து எடுக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தைலங்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, சென்னை வண்டலூர் பூங்கா, டாப்சிலீப், ஒகேனக்கல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மூலிகை தாவரங்கள் வளர்ப்பக மேலாளர் உதயகுமார் கூறிய தாவது:-

    சின்கோனா கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் மூலிகை தைலங்கள் மருத்துவமனைகள், நறுமண வைத்திய சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. கல்தீரியா தைலம் மூட்டுவலி, கழுத்துக் கட்டி வலி, நெஞ்சு வலி, முடக்கு வாதத்துக்கு நிவாரணியாகும். எலுமிச்சை புல் தைலம் எலுமிச்சை வாசனையை கொடுப்பதோடு, வயிற்று உபாதைகளை சரியாக்கும். சிட்ரோடரா தைலம் தலையில் முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். தைம் தைலம் தோல் படைகள் மற்றும் மூச்சுக்குழாய் சம்பந்தப்பட்ட உபாதைகளை நீக்கும். இதுதவிர உணவு வகைகளில் சுவை அதிகரிக்கவும், தோல்களை பராமரிக்கவும் மற்றும் பல்வேறு மருத்துவ குணங்கள் உடையது.

    சின்கோனா கிராமத்தில் மூலிகை தாவரங்கள் வளர்ப்பகம் மூலம் சுமார் 105 குடும்பத்தினர் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். இங்கு வளர்க்கப்படும் மூலிகை தாவரங்களில் இருந்து பிரித்து எடுக்கப்படும் தைலங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

    நேரடியாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முடியாது என்பதால் தனியார் நிறுவனங்கள் வாங்கி ஊட்டியில் உற்பத்தி செய்யப்படும் தைலங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தைலங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மூலிகையின் நன்மைகளை மக்கள் உணர்ந்து பயன்படுத்தி வருவதால், நாளுக்குநாள் தைலங்கள் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதனால் மூலிகை தாவரங்களை அதிகளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தைலங்கள் ஒரு லிட்டர் ரூ.1000-ம் முதல் ரூ.6 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்படுகிறது. நடப்பாண்டில் ரூ.25 லட்சத்துக்கு தைலங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. கல்லூரி மாணவர்கள் இங்கு வந்து மூலிகை தைலங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து பார்வையிட்டு அறிந்து செல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பஞ்சலிங்க அருவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கன மழை கொட்டியது. இதனால் பஸ்நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இரவு 7 மணியளவில் கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் சாலையின் குறுக்கே கற்பூர மரம் ஒன்று விழுந்தது. இதனால் கோத்தகிரி- கூக்கல்தொரை, தூந்தநாடு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகனங்கள் கோத்தகிரி பஸ்நிலையம் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

    தொடர் மழை காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கேத்ரின் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து காலையிலும் மழை பெய்வதால் வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். குன்னூரில் ஒரே நாளில் 96 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனேயே செல்கின்றனர்.

    மேலும் விழுந்த பாறைகள் அகற்றப்படாமல் உள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    மஞ்சூர், தாய்சோலை, கேரிங்டன், கோரகுந்தா, அப்பர்பவானி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் மீக்கேரிதிட்டு முனீஸ்வர் கோவில் அருகே சாலையோரம் இருந்த ராட்சத மரம் ஒன்று வேறோடு சாய்ந்து ரோட்டில் குறுக்கே விழுந்தது.

    இதனால் மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை, இரியசீகை பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குந்தா, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

    ஊட்டி- மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் அடர்லி-ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கிடையே மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு வந்து தண்டவாளத்தில் விழுந்தன.

    இதையடுத்து இன்றும், நாளையும் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே ஊழியர்கள் அந்த பகுதியில் தொடர்ந்து தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூரில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து சாரல் மழை பெய்வதால் இதமான காலநிலை நிலவுகிறது. பல்லடத்தில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பஞ்சலிங்க அருவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அருவியில் கொட்டி வரும் தண்ணீர் அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்துள்ளது. இதனால் கோவில் நடை சாத்தப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக பக்தர்கள் கோவிலுக்கும், அருவிக்கும் செல்ல தடை விதித்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாகி உள்ளது.

    கோவை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது

    கோவையில் கடந்த 2 நாட்களாகவே பல நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வபோது சாரல் மழையும், பலத்த மழையும் பெய்து வருகிறது.

    நேற்று இரவு ராமநாதபுரம், பீளமேடு, சிங்காநல்லூர், ரெயில்நிலையம், ரேஸ்கோர்ஸ், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதேபோல் புறநகர் பகுதிகளான கவுண்டம்பாளையம், இடிகரை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள குளங்கள், குட்டைகள், ஏரிகளில், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிரம்பி வருகிறது. கோவை உக்கடம் பெரிய குளம், குறிச்சி குளங்களில் தண்ணீர் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள ஆழியார், சோலையாறு, சிறுவாணி அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெய்த மழை அளவு வருமாறு:-

    ஊட்டி- 4.8, நடுவட்டம்-11, கல்லட்டி-4, கிளன்மார்கன்-8, குந்தா-11, அவலாஞ்சி-7, எமரால்டு-12, கெத்தை-15, கிண்ணக்கொரை-12, அப்பர் பவானி-4, குன்னூர்-96, பர்லியார்-28, கேத்தி-10, கோத்தகிரி-47, கோடநாடு-88, கூடலூர்-11, தேவாலா-9.
    அன்னூர்-36, விமானநிலையம்-36, மேட்டுப்பாளையம்-180.3, வால்பாறை பி.ஏ.பி-2, வால்பாறை தாலுகா-2, சோலையார்-7, பொள்ளாச்சி-17, கோவை தெற்கு-9, ஆழியார்-7, பெரிய நாயக்கன் பாளையம்-17.8, வேளாண்மை பல்கலைக்கழகம்-5.

    திருப்பூர் வடக்கு-8, அவினாசி-23, பல்லடம்-9, ஊத்துக்குளி-19.70, காங்கயம்-5, தாராபுரம்-7, குண்டடம்-10, திருமூர்த்தி அணை-20, அமராவதி-9, உடுமலை, 23, மடத்துக்குளம்-4 வெள்ளகோவில்-15.

    மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைரெயில் போக்குவரத்து14 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
    நீலகிரி:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகின்றது. யுனஸ்கோ நிறுவனம் மலைரெயிலை கடந்த 2005-ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. மலைரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளைக்கண்டு ரசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 15-ந்தேதி இரவு மற்றும் அதனைத்தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழையில் மேட்டுப்பாளையம் ஊட்டி மலைரெயில் பாதையில் கல்லாறு குன்னூர் ரெயில் நிலையங்கள் இடையே 23-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

    இதனால் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து கடந்த 16-ந்தேதி முதல் நேற்று 29-ந்தேதி வரை 14 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.

    ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. மலைரெயில் இருப்புப்பாதை பொறியாளர்கள் ஜெயராஜ், நாகராஜ் ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டனர்.

    ரெயில் பாதையில் விழுந்து கிடந்த ராட்சத பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு அகற்றப்பட்டன. சரிந்து கிடந்த மண்ணும் ரெயில் பாதையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

    சேதமடைந்த தண்டவாளங்கள் மற்றும் ராக் பார்கள் அகற்றப்பட்டு அவைகளுக்கு பதிலாக புதிய ரெயில் தண்டவாளங்கள் ராக்பார்கள் பொருத்தப்பட்டன. மலை ரெயில் பாதையை சீரமைக்கும் பணி அனைத்தும் நேற்று முடிவடைந்தது.

    அதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைரெயில் போக்குவரத்து14 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் தொடங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து வழக்கம்போல் காலை 7.10 மணிக்கு ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் புறப்பட்டுச் சென்றது. மலைரெயிலில் 200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

    இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று விவசாயிகளுக்கு, கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை குறித்த ‘கிசான் மேளா’ ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம் வரவேற்றார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி மேளாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தை இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாற்ற கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்காக மாவட்ட அளவிலான இயற்கை வேளாண்மை உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி மருந்துகளை விவசாயத்துக்கு பயன்படுத்துவதால் நீர் மற்றும் மண்ணின் வளம் கெடுகிறது. இயற்கை வளத்தை நம்மால் உருவாக்க முடியாது. நமது வாழ்வாதார முன்னேற்றத்திற்காக வளங்களை அழித்து சென்று கொண்டு இருக்கிறோம். இயற்கை வளம் கடவுள் படைத்தது. இதனை அழிக்க நமக்கு அதிகாரம் கிடையாது.

    நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைக்காய்கறிகள் வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், அதனை லட்சக்கணக்கான மக்கள் சாப்பிடுகிறார்கள். ரசாயன உரங்களால் காய்கறிகள் மூலம் நச்சுத்தன்மை உடல் நலத்தை பாதிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் புற்றுநோய் மற்றும் சிறுநீரக பாதிப்பால் மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்கறிகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அதிகளவில் செயற்கை உரங்கள், மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து பலருக்கு தெரிவது இல்லை.

    நாளடைவில் மண்ணில் மண்புழுக்களை காண முடியவில்லை. எனவே இயற்கை உரங்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்து விவசாயிகள் விவசாயம் செய்ய வேண்டும். இயற்கை முறையில் விவசாயம் செய்ய கால்நடைகள் தேவை அதிகமாக உள்ளது. இயற்கை விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு அரசின் திட்டங்களில் முன்னுரிமை வழங்க கருத்துருக்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு(2020) முதல் நீலகிரியில் ரசாயன உரங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இயற்கை விவசாயத்தில் நீலகிரி மாவட்டம் தமிழகத்திலேயே முன்னோடியாக திகழ விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும். சமீபத்தில் பெய்த தொடர் மழையால் கேத்தி பாலாடா பகுதியில் விளைநிலங்களில் மண்சரிந்து தண்ணீரோடு அடித்து செல்லப்பட்டது. இதற்கு காரணம் படிமட்ட முறையில் விவசாயம் செய்யாததே ஆகும். மலைச்சரிவான பகுதிகளில் சமமாக பயிரிடாமல், படிமட்ட முறையில் பயிரிட வேண்டும். அப்போது தான் மண்சரிவை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறவர்களுக்கு உழவன் விருது வழங்கப்பட்டது. பின்னர் இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சி நடந்தது. இதில் இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பழ வகைகள், கீரை வகைகள், நுண்ணுயிர் உரங்கள், மலைச்சரிவான இடங்களில் படிமட்ட முறையில் விவசாயம் செய்வது குறித்த மாதிரி, மண் பரிசோதனை எந்திரம், வேளாண் எந்திரங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இதனை விவசாயிகள் பார்வையிட்டனர். இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் இணைய தலைவர் மில்லர் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
    பந்தலூர் வன்ப்பகுதியில் இறந்த குட்டி யானையுடன் தாய் யானை 3 நாட்களாக நின்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி நாயக்கன்சோலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு யானைகள் பிளிறும் சத்தம் கேட்டது.

    தொடர்ந்து நேற்று காலையும் விடாமல் யானைகள் பிளிறி கொண்டிருந்தன. இதனால் வனப்பகுதி அருகே தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்த தொழிலாளர்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கூடலூர் உதவி கோட்ட வன அலுவலர் விஜயன், சேரம்பாடி வனச்சரகர்(பொறுப்பு) கணேசன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போதும் யானைகள் பிளிறி கொண்டிருந்தன.

    இதையடுத்து யானைகள் பிளிறல் சத்தம் வந்த பகுதியை நோக்கி டெலஸ் கோப் மூலம் வனத்துறையினர் பார்த்தனர். அப்போது அங்கு குட்டி யானை இறந்து கிடந்தது. மேலும் அதனை சுற்றி 7-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன.

    இதையடுத்து வனத்துறையினர் விரைந்து அந்த பகுதிக்கு சென்று பட்டாசு வெடித்து யானைகளை விரட்ட முயற்சி செய்தனர். அப்போது 6 யானைகள் அங்கிருந்து சென்றன. ஆனால் ஒரு பெண் யானை மட்டும் கோபத்துடன் வனத்துறையினரை நோக்கி ஓடி வந்தது.

    இதனால் அதிர்ச்சியான வனத்துறையினர் யானையிடம் இருந்து தப்பிக்க ஆளுக்கொரு பக்கமாக ஓடினர். பின்னர் யானை தனது குட்டியின் உடல் அருகே சென்று நின்றது. வனத்துறையினரும் திரும்பி வந்து பட்டாசு வெடித்தும், தீ மூட்டியும் அந்த யானையை குட்டியை விட்டு காட்டு பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். ஆனால் அந்த யானை தனது குட்டியை விட்டு எங்கும் செல்லாமல் அங்கேயே தொடர்ந்து நின்றது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தாய் யானை தொடர்ந்து அங்கேயே நிற்பதால் குட்டி யானையின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. யானை சென்ற பிறகு தான் குட்டி யானை எப்படி இறந்தது என்பது தெரியவரும் என்றனர்.

    இன்று காலை முதல் தாய் யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தொடர்ந்து 3 நாட்களாக தாய் யானை குட்டி யானையை விட்டு நகராமல் அங்கேயே நிற்பதால் இறந்த குட்டி யானையை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ×