search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருகேசன்
    X
    முருகேசன்

    மாணவிக்கு பாலியல் தொல்லை- அரசு பள்ளி ஆசிரியர் கைது

    மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்த முயற்சித்தனர்.
    பந்தலூர்:

    பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கையுன்னியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் முருகேசன் (வயது 49). இவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தேவாலா மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு முருகேசனை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை 11 மணிக்கு கையுன்னி அரசு பள்ளி முன்பு கைதான ஆசிரியர் முருகேசனின் மனைவி, மகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
    இது குறித்து தகவல் அறிந்த சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, வருவாய் ஆய்வாளர் காமு மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

    கையுன்னி அரசு பள்ளி வளாகத்தில் பழமை வாய்ந்த மாமரம் இருந்தது. அந்த மரத்தை வெட்ட சில ஆசிரியர்களும், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினரும் முயன்றனர். இதற்கு ஆசிரியர் முருகேசன் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கடந்த வாரம் நடந்த பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டத்தில் மரத்தை வெட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கான ஆவணத்தில் ஆசிரியர் முருகேசன் கையெழுத்திடவில்லை. எனினும் இரவோடு, இரவாக பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வெட்டி கடத்தப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்துவிடுவார் என்ற அச்சத்தில் ஆசிரியர் முருகேசன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த புகாரை வாபஸ் பெற வேண்டும். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மரத்தை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதை கேட்ட அதிகாரிகள், உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையில் பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தை வெட்டி கடத்தியதாக தலைமை ஆசிரியர், பெற்றோர்- ஆசிரியர் கழக நிர்வாகி மீது எருமாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சேரம்பாடி வனச்சரகர் சின்னதம்பி தலைமையிலான வனத்துறையினர் பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.
    Next Story
    ×