search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னூர் ஆரஞ்ச்குரோவ் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்
    X
    குன்னூர் ஆரஞ்ச்குரோவ் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 20 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது

    மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளில் சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதையடுத்து 20 மணி நேரத்திற்கு பிறகு குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் மீண்டும் வாகனங்கள் இயக்கப்பட்டன.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 2 நாட்களாக அதிகாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    எம்.ஜி.நகர், சுராகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதேபோல் மவுண்டன் பகுதியில் மழைக்கு 2 பேரின் வீடுகள் இடிந்து விழுந்தன. இதையடுத்து எம்.ஜி.ஆர்.நகர், சுராகுப்பம் மற்றும் வீடு இடிந்தவர்கள் உள்பட 17 குடும்பத்தினர் அந்த பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மற்றும் வருவாய்த்துறையினர் பெட்கள், வாளிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.

    தொடர்ந்து பெய்த மழையால் குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் பல இடங்களில் மண்சரிவும், மரங்களும் முறிந்து விழுந்தன. குன்னூர் நந்தகோபால் பாலம் குறுகிய சாலையில் 14 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்ட ராட்சத பாறை உருண்டு விழுந்தது.

    இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் வழியாக செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன.

    இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் அந்த ராட்சத பாறையை இரண்டாக உடைத்து அகற்றினர்.

    தொடர்ந்து சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து 20 மணி நேரத்திற்கு பிறகு மாலை 4 மணி முதல் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் மீண்டும் வாகனங்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து மழை பெய்தால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் முடிவு செய்துள்ளனர்.

    நேற்று முன் தினம் இரவு நீலகிரி மாவட்டம் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக மேட்டுப் பாளையம்- ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு, குன்னூர் ரெயில் நிலையங்கள் இடையே மீண்டும் 19 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரெயில் பாதையில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தது. மேலும் மண் சரிந்து ரெயில் பாதையை மூடியது ரெயில் பாதை ஓரத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து ரெயில் பாதையின் குறுக்கே விழுந்தன.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து மற்றும் ஊட்டி மேட்டுப்பாளையம் மலை ரெயில் போக்கு வரத்து இன்றுமுதல் வருகிற 8-ந் தேதி வரை 5 நாட்கள் மீண்டும் ரத்து செய்யப்படுகிறது. ரெயில்வே பணியாளர்கள் பாறைகள் மற்றும் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோத்தகிரியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் சோலூர் மட்டத்தை சேர்ந்த அருள்தாஸ், கட்டப் பெட்டு பாரதி நகரை சேர்ந்த சரவணன், சுண்டப் பட்டியை சேர்ந்த சிவகுமார், கிளப்ரோட்டை சேர்ந்த பிரதீஷ், தவிட்டுமேட்டை சேர்ந்த சரசு ஆகியோரின் வீடுகளின் ஒருபகுதி இடிந்து விழுந்தது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோத்தகிரி தாசில்தார் மோகனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை வழங்கினார்.

    கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கட்டப்பெட்டு என்ற இடத்தில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோத்தகிரியில் மட்டும் 11 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் சாலைகளிலும் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு வாகனங்கள் மாற்றுபாதையில் இயக்கப்பட்டன.

    இதேபோல் கூக்கல் தொரை பகுதியில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மலைக் காய்கறிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து கோத்தகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடுங்குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    ஊட்டியில் ஏராளமான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. கேத்தி காந்தி நகரில் ஏற்பட்ட மண்சரிவால் 4 வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. பாலாடாவில் 2 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. விளைநிலங்களில் இருந்து அடித்துவரப்பட்ட மணல் கால்வாயில் படிந்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. கேத்தி பாலாடாவில் இருந்து சேலாஸ் செல்லும் சாலையில் 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து சாலையில் கிடந்த பாறைகள் மற்றும் மண்சரிவை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    தொடர் மழை காரணமாக ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. ரோஜா பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியது. தொடர் மழையால் டால்பின்ஸ் நோஸ் மற்றும் லேம்ஸ்ராக் பகுதிகளுக்கு பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×