என் மலர்tooltip icon

    நீலகிரி

    பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு பஸ்சில் 77 பவுன் நகை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், முத்தங்கா சோதனை சாவடியில் முத்தங்கா இன்ஸ்பெக்டர் முகமது சலீம், சப்-இன்ஸ்பெக்டர் மஜ்ஜூ தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, பெங்களூரிலிருந்து கோழிக்கோடு நோக்கி கேரள அரசு பஸ் ஒன்று வந்தது. போலீசார் அந்த பஸ்சை மறித் சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் இருந்த ஒரு பயணியின் பையை சோதனையிட்டனர். அதில் 77 பவுன் தங்க நகைகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.26 லட்சம் ஆகும். ஆனால் நகைக்கு உரிய ஆவணங்கள் ஏதும் அந்த நபரிடம் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர், ‘மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன்மாலிக் (வயது25) என்பதும், இந்த நகையை பெங்களூரில் இருந்து ஆவணங்கள் இல்லாமல் கேரளாவிற்கு விற்பனைக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் அர்ஜூன்மாலிக்கை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

    கூடலூர் அருகே ஆற்றில் மூழ்கி 3 கேரள வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஊட்டி:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிஜூலால்(வயது 20). இவர் நேற்று வயநாடு பகுதிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்.

    அதன்படி பிஜூலால் மற்றும் அதேப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான ஜிவின் (21), நிதின் (23) மற்றும் சிலருடன் காரில் வயநாடுக்கு சென்றார். அப்போது அவர்களது கார் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கேரளா மாநிலத்துக்கு உட்பட்ட மேப்பாடியை அடுத்த சோழமலை பொன்குன்னம் பகுதியில் அந்த பகுதியில் உள்ள ஆற்றை பார்த்தனர்.

    பார்க்க ரம்மியமாக இருந்ததால் காரை நிறுத்திவிட்டு இறங்கி ஆற்றை ரசித்து கொண்டிருந்தனர்.

    அப்போது பிஜூலால், ஜிவின், நிதின் ஆகியோர் ஆற்றில் இறங்கி குளிக்க விரும்பினர். இதைத் தொடர்ந்து அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றனர்.

    நீச்சல் தெரியாததால் அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதை பார்த்து அதிர்ச்சியான அவர்களுடன் வந்தவர்கள் சத்தம் போட்டனர்.

    அவர்களது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஆற்றில் குதித்து வாலிபர்களை தேடினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேப்பாடு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி வாலிபர்களை தேடினர். இந்த நிலையில் வாலிபர்கள் குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில், 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மேப்பாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    3 வாலிபர்கள் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2012ஆம் ஆண்டு ஊட்டி கோர்ட்டில் தொடரப்பட்ட விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி. திடலில் கடந்த 22.8.2012-ம் ஆண்டு தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அந்த கூட்டத்தில் பங்கேற்ற தே.மு.தி.க.பொது செயலாளரும், நடிகருமான விஜயகாந்த் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி மரியாதை குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக தமிழக அரசு சார்பில் ஊட்டியில் உள்ள மாவட்ட கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

    இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விஜயகாந்த் மீது சம்பந்தப்பட்ட கோர்ட்டுகளில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக சென்னை ஐகோர்ட்டில் நடத்த வேண்டும் என விஜயகாந்த் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

    இதையடுத்து ஊட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடக்கவில்லை. இந்த நிலையில் விஜயகாந்த் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக சென்னை ஐகோர்ட்டில் அரசு தெரிவித்தது.

    அதன்படி ஊட்டி கோர்ட்டில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதாக மாவட்ட நீதிபதி வடமலையிடம், அரசு வக்கீல் பாலநந்தகுமார் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் 2 டெம்போ திருடிய சேலம் வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து டெம்போக்களை பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, ரைபிள் ரேஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் சொந்தமாக டெம்போக்கள் வைத்துள்ளார். கடந்த 9-ந் தேதி தனக்கு சொந்தமான 2 டெம்போக்களை கோத்தகிரி அருகே தேனாடு பகுதியில் நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் மறுநாள் வந்து பார்த்தபோது 2 டெம்போக்களையும் காணவில்லை. இது குறித்து அவர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் டெம்போக்கள் திருடியவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், ஜார்ஜ், சுரேந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் டெம்போ திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் காணாமல் போன 2 டெம்போக்களும் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று டெம்போக்களை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏற்காடு பகுதியை சேர்ந்த விஜி(23) என்பவர் கோத்தகிரி தேனாடு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 டெம்போக்களையும் திருடி இங்கு கொண்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 2 டெம்போக்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி அருகே வீடு கட்ட கடன் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த சுரேஷ் மற்றும் சிலர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.

    அதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் உள்பட 4 பேர் சில மாதங்களுக்கு முன் தாங்கள் டிரஸ்ட் நடத்தி வருவதாகவும், அதன் மூலம் வீடு மற்றும் திருமணம் நடத்துவதற்கு கடன் கொடுத்து வருவதாகவும், அதற்கு முன்வைப்புத் தொகை தர வேண்டும் என்று கூறினர்.இதை நம்பி 65 பேர் அவர்களிடம் முன் பணமாக ரூ.30 ஆயிரம் வீதம் இதுவரை ரூ.18 லட்சத்துக்கு மேல் கொடுத்துள்ளோம். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர்கள் கடன் வழங்கவில்லை. முன் பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வாட்டர் டேங்க் ரோடு வடக்கிபாளையம் பகுதியை சேர்ந்த ரூபினி பிரியா(வயது 29) என்பவர் மோசடியில் ஈடுபட்டதும், அவருக்கு துணையாக கோவை குமரகுன்று பகுதியை சேர்ந்த சிவா, வெங்கடேஷ், டிரைவர் கார்த்திக் ஆகியோர் உதவியதும் தெரிய வந்தது.

    மேலும் இவர்கள் இதேபோல் பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர், தேவகோட்டை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பல பகுதிகளில் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பொள்ளாச்சிக்கு விரைந்து வந்து வீட்டில் இருந்த ரூபினி பிரியாவை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

    ரூபினி பிரியா போலி டிரஸ்ட் நடத்தி வந்துள்ளார். அதன் மூலம் ஊட்டியில் வெங்கடேஷ், கார்த்திக் ஆகியோரின் உதவியுடன் ஏஜெண்டுகளை நியமித்து மக்களிடம் வீடு கட்டவும், திருணத்திற்கு கடன் தருவதாகவும் கூறி இதுவரை 65 பேரிடம் இருந்து ரூ.18 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் ரூபினி பிரியாவை கைது செய்து விட்டோம். இதில் தொடர்புடைய சிவா என்பவர் மற்றொரு வழக்கில் சிறையில் உள்ளார். மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறோம் என்றனர். இதையடுத்து ரூபினி பிரியாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வீடு கட்ட கடன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் குவிந்தனர்.
    முதுமலை புலிகள் காப்பகத்தில் 17 பயிற்சி வனச்சரகர்கள் பொறுப்பேற்று கொண்டனர்.
    ஊட்டி:

    மலை மாவட்டமான நீலகிரியில் 65 சதவீத வனப்பகுதிகள் உள்ளது. இங்குள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து, விரிந்து காணப்படுகிறது. இதில் காட்டு யானை, புலி, சிறுத்தைப்புலி, காட்டெருமை, கடமான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் வனப்பகுதிகளையொட்டி உள்ள கிராமங்கள், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாமல் தடுக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே முதுமலை புலிகள் காப்பகத்துக்கு புதியதாக 17 பயிற்சி வனச்சரகர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று ஊட்டியில் உள்ள முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் அலுவலகத்தில் பயிற்சி வனச்சரகர்கள் 17 பேர் பொறுப்பேற்று கொண்டனர். அவர்களுக்கு கள இயக்குனர் கவுசல் வாழ்த்து தெரிவித்ததோடு, ஆங்கில மொழித்திறனை வளர்க்க வேண்டும், நல்ல ஒழுக்கத்தோடு பணிபுரிய வேண்டும், பணியில் ஈடுபட்டு அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், விடுமுறை எடுத்தால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.

    பணியில் சேர்ந்தவர்களில் பலர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு வன கல்லூரியில் படித்து உள்ளனர். பின்னர் அவர்கள் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வனச்சரகர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு முதல் கட்டமாக பயிற்சி வனச்சரகர்களாக பணி வழங்கப்பட்டு உள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 6 பெண்கள் இடம் பெற்று உள்ளனர்.

    நீலகிரியை சேர்ந்த கனிமொழி, கூடலூரை சேர்ந்த பிருந்தா, மசினகுடியை சேர்ந்த மேகலா, கிளன்மார்கனை சேர்ந்த திவ்யா, ஊட்டியை சேர்ந்த சவுமியா, பந்தலூரை சேர்ந்த சந்தியா, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன், பாலமுருகன், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அதியமான், மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுரே‌‌ஷ் ரமணன், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித், சந்தோ‌‌ஷ், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வினோபா, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முத்துமணி, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அதிலங்கம், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜினோபிளசில் ஆகிய 17 பேர் பணியில் சேர்ந்து உள்ளனர். 
    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானை உலா வந்தது. அப்போது எதிரே வந்த காரை காலால் மிதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கோத்தகிரி:

    ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்துக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் குஞ்சப்பனை அருகே 2-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று மாலை 4 மணியளவில் காட்டுயானை ஒன்று உலா வந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் பீதியடைந்து, ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    எனினும் காட்டுயானை அங்கும், இங்குமாக தொடர்ந்து உலா வந்தது. அப்போது காட்டுயானைக்கு எதிரே சாலையோரமாக கார் ஒன்று முன்னேறி செல்ல முயன்றது. தனக்கு எதிரே ஓட்டி வரப்பட்ட அந்த காரை கண்டதும் காட்டுயானை திடீரென ஆவேசம் அடைந்தது. உடனே ஓடி சென்று காரை காலால் மிதித்தது. உடனே டிரைவர் காரை நிறுத்தினார். தொடர்ந்து 2 முறை காலால் காரை மிதித்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அதன்பின்னர் சிறிது நேரம் சாலையில் உலா வந்த காட்டுயானை, அதன்பிறகு அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    இந்த காட்டுயானை கடந்த 2 வாரங்களாக சாலையில் உலா வருகிறது. சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை தாக்க முயன்றதும், இதே காட்டுயானை தான். எனவே மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன், இந்த காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீண்டும் காட்டுயானை சாலைக்கு வராதபடி கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

    இதற்கிடையில் காரை காலால் காட்டுயானை மிதிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    ஊட்டி அருகே பயிருக்கு தண்ணீர் பாய்ச்சிய போது மின்சாரம் தாக்கி பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கோவை:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கடசோலை மலைக்கோட்டை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கேரட், உருளை உள்ளிட்ட மலைக் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த பயிர்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் பாய்ச்சி வருகிறார். அந்த கிணற்று மோட்டாருக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பில் இருந்து தோட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள மின் வேலிக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

    நேற்று தோட்டத்தில் கேரட் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் நுந்தளா பகுதியை சேர்ந்த பாலன்(45)கடசோலை பகுதியை சேர்ந்த மணியம்மா(வயது 60), குமார்(55) ஆகியோர் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர். அப்போது மின்கம்பத்தில் இருந்து ஆழ்துளை மோட்டாருக்கு செல்லும் மின்வயர் அறுந்து விழுந்தது. இதனை பாலன் சரி செய்வதற்காக கையில் எடுத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதை பார்த்த குமார், மணியம்மா ஆகியோர் பாலனை காப்பாற்ற முயற்சி செய்தனர். 

    அப்போது அவர்கள் மீது மின்சாரம் பாயந்தது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இது குறித்து புதுமந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து 3 பேரின் உடல்களையும் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக தொட்டிகளில் நடுவதற்கு 4 லட்சம் மலர் நாற்றுகள் தயாராக உள்ளதாக தோட்டக்கலை இணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. அதில் ஊட்டி தாவரவியல் பூங்கா உலக பிரசித்தி பெற்றது. இது கடந்த 1847-ம் ஆண்டு 22 ஹெக்டேர் பரப்பளவில் ஆங்கிலேய கட்டிடக்கலை வல்லுனர் கிரகாம் மெக்கில்வோரால் உருவாக்கப்பட்டது. இங்கு இத்தாலிய பூங்கா, செயற்கை நீரூற்றுகள், குளங்கள், கண்ணாடி மாளிகைகள், சீன போன்சாய் மரங்கள், மூலிகை செடிகள், அலங்கார செடிகள் உள்ளன. மேலும் ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அப்போது வெளிநாடு மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். தாவரவியல் பூங்காவை தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை நிர்வகித்து வருகிறது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவடைந்து பனிக்காலம் தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து கோடை சீசனுககு தயாராகும் வகையில் தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறையினர் 4 லட்சம் மலர் நாற்றுகளை தொட்டிகளில் நடும் பணியை தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக 30 ஆயிரம் தொட்டிகளில் உரம் கலந்த மண் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணியில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் கூறியதாவது:-

    அடுத்த ஆண்டு(2020) ஏப்ரல், மே மாதம் நடைபெறும் கோடை சீசனையொட்டி மலர் கண்காட்சிக்கான பணி தொடங்கப்பட்டு உள்ளது. சுமார் 4 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதற்காக அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து மேரி கோல்டு, டயன்தஸ், டெல்பீனியம், சம்பர் புளோரன்ஸ், ஆன்டிரினீயம் உள்பட 230 வகையான மலர் செடிகளுக்கான விதைகள் பெறப்பட்டு, தாவரவியல் பூங்காவில் நாற்றுகளாக உற்பத்தி செய்து, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் நிலத்தை உழுது பாத்திகள் அமைக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 30 ஆயிரம் தொட்டிகளிலும் உரம் கலந்த மண் நிரப்பப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் மலர் நாற்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கூடலூர்-முதுமலை எல்லையோர கிராமங்களில் வயல்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
    கூடலூர்:

    கூடலூர்-முதுமலை எல்லையோர கிராமங்களில் வயல்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி வனச்சரகரிடம் விவசாயிகள் முறையீடு செய்தனர்.

    கூடலூர் பகுதியில் தொடர் மழைக்காலம் நிறைவு அடைந்துள்ளது. தற்போது கடும் பனிப்பொலிவும், வெயிலும் காணப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் பசுமையாக காட்சி அளித்த வனம் பனிப்பொலிவால் காய்ந்து வருகிறது. இதனால் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட தொடங்கி உள்ளது. இதன் காரணமாக காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி முதுமலை எல்லையில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    முதுமலை புலிகள் காப்பக எல்லையோரத்தில் கூடலூர் நகராட்சி, ஸ்ரீமதுரை ஊராட்சி மற்றும் சுற்று பகுதியில் உள்ள கிராமங்களில் பருவமழைக்காலம் தொடங்கும் சமயத்தில் நாட்டு ரக நெல் நாற்றுக்களை விவசாயிகள் பயிரிட்டு பராமரித்தனர். தற்போது நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி வயலுக்குள் புகுந்து நெற்பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.

    2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீமதுரை ஊராட்சி நரிக்கொல்லி பகுதியில் காட்டு யானைகள் நுழைந்து கிரு‌‌ஷ்ணன் என்பவரது வயலுக்குள் புகுந்து நெற்பயிர்களை தின்று நாசம் செய்தது. இதேபோல் முளப்பள்ளி பகுதியை சேர்ந்த பரமசிவன் என்பவரது வயலுக்குள் காட்டு யானைகள் இறங்கி நெற்பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் ந‌‌ஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அதிருப்தி அடைந்த ஸ்ரீமதுரை விவசாயிகள் நேற்று முன்தினம் முதுமலை வனச்சரகர் சிவக்குமாரை நேரில் சந்தித்து காட்டு யானைகள் அட்டகாசம் குறித்து முறையீடு செய்தனர். மேலும் குனில்வயல் பகுதியில் அடிக்கடி நுழைந்து கால்நடைகளை கொன்று வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக மனுவும் அளித்தனர்.

    மனுவை பெற்ற வனச்சரகர் சிவக்குமார், காட்டு யானைகள் வருகையை தடுக்க இன்னும் சில தினங்களில் முதுமலை எல்லையோரம் அகழி தோண்டும் பணி தொடங்கப்பட உள்ளது. அதன்பின்னர் காட்டு யானைகள் வருகை கட்டுப்படுத்தப்படும். மேலும் சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். புலி கடித்து கொன்ற கால்நடைகளுக்கான இழப்பீடு 10 நாட்களில் வழங்கப்படும். புலியை கூண்டு வைத்து பிடிக்க வன உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    இங்கு பல தலைமுறைகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றோம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக வனவிலங்குகள் ஊருக்குள் வந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. சேதம் அடையும் பயிர்களுக்கு ஏற்ப வனத்துறையும் இழப்பீடு வழங்குவது இல்லை. ஏற்கனவே விவசாயத்தால் போதிய வருவாய் கிடைப்பது இல்லை. தற்போது வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பெரும் ந‌‌ஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தானியங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் முறையான பராமரிப்பு இல்லாததால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் நிறைந்த பிரதேசமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளு குளு காலநிலையை அனுபவிக்க வருகை தருகின்றனர். பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகள், அடர்ந்த வனம் கொண்டதாக விளங்குவதால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்விடமாகவும் உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர், கோத்தகிரி வழியாக மலைப்பாதைகள் ஊட்டிக்கு செல்கிறது. இதேபோல் கேரளா-கர்நாடகா மாநிலங்கள் இணையும் எல்லையில் கூடலூர் நகரம் உள்ளது. இதன் வழியாக தேசிய நெடுஞ்சாலை ஊட்டிக்கு வருகிறது.

    இச்சாலைகள் வழியாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவு வனத்தில் வீசி செல்கின்றனர். இதனால் மண்ணின் வளம் கெடுகிறது. மேலும் வனவிலங்குகள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் தன்னார்வலர்களுடன் இணைந்து அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டது. இதன் காரணமாக திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் இலைகள், டம்ளர்கள், தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதேபோல் கோவில்கள் உள்பட பல்வேறு விசே‌‌ஷ நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் இலைகள் பயன்படுத்துவது குறைந்தது.

    ஆனால் சுற்றுலா பயணிகள் மூலமாக பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் நீலகிரிக்குள் அதிகளவு வந்தது. இதனால் சில வகை பொருட்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தொடர்ந்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் விற்க தடை செய்யப்பட்டது. அதற்கு மாற்றாக மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளின் கரையோரம் சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் பொருத்தப்பட்டது.

    நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்தில் குடிநீர் பெற்றனர். இதனால் நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை முறையாக பராமரிக்காததால் தற்போது குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்தில் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

    மேலும் எந்திரங்களில் வழங்கப்படும் குடிநீர் மாசு அடைந்து இருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் பல லட்சம் செலவில் பொருத்தப்பட்ட எந்திரங்கள் வீணாகும் நிலை காணப்படுகிறது.

    இது குறித்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கூறியதாவது:-

    பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் தனியார் கடைகளிலும் எந்திரங்கள் மூலம் குடிநீர் வினியோகிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதேபோல் அரசின் செலவில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் முக்கிய சாலைகளின் கரையோரம் வைக்கப்பட்டுள்ளது. தொடக்க காலத்தில் நன்கு செயல்பட்ட எந்திரங்கள் பராமரிப்பு இல்லாததால் தற்போது குடிநீர் வருவது இல்லை. குறிப்பாக கேரள எல்லையான பாட்டவயல் தொடங்கி கூடலூர், நடுவட்டம், பைக்காரா, தலைக்குந்தா வரை குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்படுவது இல்லை.

    இதனால் அதிக விலை கொடுத்து கடைகளில் விற்கப்படும் குடிநீரை வாங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இனி வரும் காலங்களில் சீசன் தொடங்க உள்ளது. இதனால் அதிகளவு சுற்றுலா பயணிகள் வர உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டுள்ள தானியங்கி குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ஊட்டி மலை ரெயிலை 2 லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர்.
    குன்னூர்:

    உலக புகழ் பெற்ற நீலகிரி மலை ரெயில் யுனஸ்கோ அங்கீகாரம் பெற்றது. இந்த மலை ரெயில் 1908-ம் ஆண்டு முதல் 111-வது ஆண்டாக தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து பல மலைகள், செங்குத்தான பாதை வளைவுகள், சுரங்கப்பாதைகள் என 46 கி.மீ. தூரம் கடந்து ஊட்டிக்கு செல்கிறது.

    இந்த மலை ரெயிலில் பயணம் செய்ய ஆங்கிலேயர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். உலக நாடுகள் முழுவதும் பயணம் மேற்கொண்டு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடந்த 2 மாதத்துக்கு முன் மலை ரெயிலை முன்பதிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து லண்டன், ரஷியா, அர்ஜென்டினா, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 71 பேர் குன்னூர் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். இதில் 12 குழந்தைகள் முதல் 84 வயதான முதியவர்களும் அடங்குவார்கள்.

    பின்னர் நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட மலை ரெயிலில் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றனர். இதற்காக மலை ரெயிலை ரூ. 2 லட்சத்து 766-க்கு வாடகைக்கு எடுத்து இருந்தனர்.

    முன்னதாக குன்னூர் நீராவி என்ஜின் பணிமனைக்கு சென்று நீராவி என்ஜின் குறித்து விசாரித்து குறிப்புகளை எடுத்து கொண்டனர்.

    ஊட்டிக்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா ஆகிய இடங்களை கண்டு ரசித்தனர்.

    ×