search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலர் நாற்றுகளை நடுவதற்காக தொட்டிகளில் உரம் கலந்த மண் நிரப்பப்பட்டு உள்ள காட்சி.
    X
    மலர் நாற்றுகளை நடுவதற்காக தொட்டிகளில் உரம் கலந்த மண் நிரப்பப்பட்டு உள்ள காட்சி.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக தொட்டிகளில் நடுவதற்கு 4 லட்சம் மலர் நாற்றுகள் தயார்

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக தொட்டிகளில் நடுவதற்கு 4 லட்சம் மலர் நாற்றுகள் தயாராக உள்ளதாக தோட்டக்கலை இணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. அதில் ஊட்டி தாவரவியல் பூங்கா உலக பிரசித்தி பெற்றது. இது கடந்த 1847-ம் ஆண்டு 22 ஹெக்டேர் பரப்பளவில் ஆங்கிலேய கட்டிடக்கலை வல்லுனர் கிரகாம் மெக்கில்வோரால் உருவாக்கப்பட்டது. இங்கு இத்தாலிய பூங்கா, செயற்கை நீரூற்றுகள், குளங்கள், கண்ணாடி மாளிகைகள், சீன போன்சாய் மரங்கள், மூலிகை செடிகள், அலங்கார செடிகள் உள்ளன. மேலும் ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அப்போது வெளிநாடு மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். தாவரவியல் பூங்காவை தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை நிர்வகித்து வருகிறது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவடைந்து பனிக்காலம் தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து கோடை சீசனுககு தயாராகும் வகையில் தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறையினர் 4 லட்சம் மலர் நாற்றுகளை தொட்டிகளில் நடும் பணியை தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக 30 ஆயிரம் தொட்டிகளில் உரம் கலந்த மண் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணியில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் கூறியதாவது:-

    அடுத்த ஆண்டு(2020) ஏப்ரல், மே மாதம் நடைபெறும் கோடை சீசனையொட்டி மலர் கண்காட்சிக்கான பணி தொடங்கப்பட்டு உள்ளது. சுமார் 4 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதற்காக அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து மேரி கோல்டு, டயன்தஸ், டெல்பீனியம், சம்பர் புளோரன்ஸ், ஆன்டிரினீயம் உள்பட 230 வகையான மலர் செடிகளுக்கான விதைகள் பெறப்பட்டு, தாவரவியல் பூங்காவில் நாற்றுகளாக உற்பத்தி செய்து, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் நிலத்தை உழுது பாத்திகள் அமைக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 30 ஆயிரம் தொட்டிகளிலும் உரம் கலந்த மண் நிரப்பப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் மலர் நாற்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×