என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நடுஹட்டி ஊராட்சிக்குட்பட்ட கெட்டிக்கம்பை பகுதியில் உள்ளது குண்டுபெட்டு காலனி.
இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்றனர். அங்கு அவர்கள் தேயிலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு இடத்தில் குழந்தையின் கை, கால்கள் வெளியில் தெரிந்தது. இதைபார்த்து வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தை புதைக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர்.
இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை மீட்டனர். அப்போது புதைக்கப்பட்டிருந்தது பச்சிளம் ஆண்குழந்தை என்பதும், தொப்புள் கொடி கூட அறுக்கபடாமல் புதைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து பிறந்த குழந்தையை கொண்டு வந்து இங்கு யாராவது புதைத்தனரா? அல்லது திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்து விட்டதால் அவமானம் என கருதி குழந்தை கொன்று புதைக்கப்பட்டதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குழந்தையை இங்கு புதைத்தவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சிறியூர் ஆதிவாசி கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. அதனை ஆய்வு செய்ய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா காரில் சென்றார். அப்போது அவருடன் உதவியாளர் இருந்தார். மேலும் கலெக்டரின் காருக்கு முன்னாலும், பின்னாலும் அதிகாரிகளின் வாகனங்கள் சென்றன. ஆனைக்கட்டி பாலத்தை கடந்து சென்றபோது, வாகனங்களை திடீரென காட்டுயானை ஒன்று வழிமறித்தது.
உடனே கலெக்டரின் கார் உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. சிறிது நேரம் கழித்து சாலையில் காட்டுயானை நடந்தது. காட்டுயானையை பின்தொடர்ந்து வாகனங்கள் சென்றன. அதன்பின்னர் மீண்டும் காட்டுயானை வழியை மறித்து திரும்பி நின்றது.
இதைத்தொடர்ந்து சுமார் 30 நிமிடங்கள் சாலையிலேயே நடந்து சென்ற காட்டுயானை, அதன்பிறகு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து கலெக்டர் கார் உள்பட அனைத்து வாகனங்களும் வேகமாக அங்கிருந்து சென்றன.
தொடர்ந்து சிறியூர் வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப்பதிவை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து பிற வாக்குச்சாவடிகளுக்கும் சென்று ஆய்வு செய்துவிட்டு, முடிவில் ஊட்டிக்கு திரும்பினார்.
கலெக்டரின் காரை காட்டுயானை வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(வயது 19). கூலி தொழிலாளி.
இவரது வீட்டின் அருகே 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அருண்குமார் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி உடல் நலம் பாதிப்படைந்து காணப்பட்டாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அவளிடம் விசாரித்தபோது நடந்த சம்பவங்களை கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக கோவைக்கு பிரதான சாலை செல்கிறது. இதேபோன்று கோத்தகிரி வழியாக மற்றொரு சாலை உள்ளது. மேலும் மஞ்சூர் வழியாக 3-வது சாலை இருக்கிறது. அந்த சாலையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகின்றன. அங்கு காட்டுயானைகள், காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். எனவே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் அடிக்கடி மஞ்சூர்-கோவை சாலையில் உலா வருகின்றன. இதனால் அந்த சாலையில் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் டிரைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் கோவையில் இருந்து மஞ்சூர் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கெத்தை அருகில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது, குட்டியுடன் 2 காட்டுயானைகள் அரசு பஸ்சை வழிமறித்தன. இதனால் பீதியடைந்த பயணிகள் பயத்தில் அலறினர். உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இதேபோல் பின்னால் வந்த சுற்றுலா வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் சிறிது நேரம் சாலையிலேயே காட்டுயானைகள் உலா வந்தன.
சுமார் 20 மீட்டர் தூரம் சாலையிலேயே நடந்து சென்ற காட்டுயானைகள், அதன்பிறகு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றன. இதையடுத்து அந்த வழியே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
இந்த சாலையில் காட்டுயானைகள் உலா வருவது வழக்கமாகி வருகிறது. அவை அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை மறித்து வருகின்றன. இதனால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே மஞ்சூர்-கோவை சாலைக்கு காட்டுயானைகள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலை பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
மிகவும் ஆபத்தான இந்த மலை பாதையில் வாகனங்களை இயக்க அனுபவம் மிகுந்த ஓட்டுநர்களால் மட்டுமே முடியும். போதிய அனுபவமின்மையால் பல விபத்துகள் ஏற்பட்டு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக 2018-ஆம் ஆண்டு கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் சுமார் 52 மணி நேரத்திற்கு பிறகுதான் மீட்கப்பட்டது.
இந்த கோர விபத்தையடுத்து அந்த மலை பாதை வழியாக மசினக்குடி, முதுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது. அதன் படி நீலகிரி மாவட்ட வாகனங்கள் மட்டும் இரு புறமும் சென்று வர அனுமதிக்கபடுகின்றன. பிற மாவட்டம் மற்றும் மாநில வாகனங்கள் மசினகுடியிலிருந்து ஊட்டிக்கு வர அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், கீழே செல்ல விடுவதில்லை.
இதனால், மசினக்குடி பகுதியில் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளதால், கல்லட்டி மலை பாதையில் அனைத்து வாகனங்களும் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எனவே கல்லட்டி மலை பாதையில் வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையிலும் அனைத்து வாகனங்கள் சென்று வரும் விதமாகவும் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் ரப்பர் ரோலர் கேஸ் பேரிகாரட் அமைக்கும் பணி தொடங்கபட்டுள்ளது. வெளிநாடுகளில் மட்டுமே உள்ள இந்த பாதுகாப்பு முறை தற்போது கல்லட்டி மலை பாதையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மலை பாதையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக செல்லும் வாகனங்கள் அந்த ரப்பர் ரோலர் கேஸ் பேரிங்கில் மீது மோதும்போது வாகனங்களுக்கும் அதில் பயணம் செய்பவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. இந்த மலை பாதையில் உள்ள ஆபத்தான 8 கொண்டை ஊசி வளைவுகளில் இது போன்ற பாதுகாப்பு ரப்பர் தடுப்புகள் அமைக்க சுமார் ரூ. 1 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பளித்துள்ளனர்
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் வாகன சவாரி மூலம் வனத்தை சுற்றிப் பார்த்து ரசித்தனர். பின்னர் தெப்பக்காடு பகுதியில் அமைந்துள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் மாலையில் நடைபெற்ற யானைகளின் அணிவகுப்பு, உணவு வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றை கண்டுகளித்தனர்.
பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் யானை சவாரி சென்று காட்டுக்குள் வன விலங்குகளை பார்த்து ரசிப்பதில் ஆர்வம் செலுத்தினர். இதற்காக யானை சவாரி செல்லுமிடத்திலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக அவர்களின் வாகனங்கள் தெப்பக்காடு பகுதியில் சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதே போல் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
இதனால் பூங்காவில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாகவே காணப்பட்டனர். பெரிய புல்வெளி மைதானத்தில் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து பூங்காவின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
இத்தாலியன் பூங்கா, கல்லாகிய மரம், இந்திய வரைப்படம், ஜப்பான் பூங்கா, இலைப்பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். கண்ணாடி மாளிகையில் 20-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த பல வண்ண மலர்களை கொண்ட பூந்தொட்டிகள் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன், புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஊட்டி படகு இல்லத்தில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். லேசான சாரல் மழை மற்றும் பனிமூட்டத்தின் நடுவே மிதிபடகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மோட்டார் படகுகளில் சவாரி மேற்கொண்டனர். காட்சி மேடைகளில் நின்றவாறு ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்ததோடு, புகைப்படம் எடுத்துக்கொண்டனர். படகு இல்ல வளாகத்தில் சுற்றுலா வாகனங்கள் நிரம்பி வழிந்ததால், சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், கோத்தகிரி கோடநாடு காட்சி என மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
சாக்லேட்,டீ தூள், வர்க்கி உள்ளிட்டவைகளை வாங்க கடைகளிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புளியம்பாராவை சேர்ந்தவர் பிரவீன்(26).
இவர் சம்பவத்தன்று தனது உறவினர் ஒருவரை சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு செவிலியராக தனலட்சுமி என்பவர் பணிபுரிந்து வந்தார்.
பிரவீனின் உறவினருக்கு தனலட்சுமி சிகிச்சை அளித்தபோது பிரவீனுக்கும், தனலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பிரவீன் தனலட்சுமியை சரமாரியாக தாக்கினார்.
இதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்து தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரியில் ஊரக உள்ளாட்சி தேர்தல், 27, 30-ந்தேதிகளில் நடக்கிறது. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களை தவிர, 404 பதவிகளுக்கு, 1,479 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டதால், கிராம புறங்களில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. கோவையிலிருந்து ஊட்டி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட, ‘பேலட் சீட்’, ஓட்டுபெட்டி உள்ளிட்ட தேர்தல் பொருட்கள் இன்று முதல் ஓட்டுசாவடி வாரியாக பிரிக்கப்படுகிறது.
தொடர்ந்து, 395 ஓட்டுசாவடிகளுக்கு மண்டல தேர்தல் அலுவலர் மூலம், 26-ந்தேதி அனுப்பி வைக்கப்பட உள்ளது. தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘ஊராட்சி தலைவர் வேட்பாளருக்கு ரோஸ், வார்டு உறுப்பினருக்கு வெள்ளை, ஒரே ஓட்டு சாவடியில் இரு வார்டு உறுப்பினர் இருந்தால், வெள்ளை மற்றும் வெளிர் நீலம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலருக்கு மஞ்சள், ஒன்றிய கவுன்சிலருக்கு பச்சை என, நான்கு நிறங்களில் ஓட்டு சீட்டுகள் வழங்கப்படும்.
கட்சி சார்பற்ற தேர்தலான ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் பெயர், ஓட்டு சீட்டில் இடம் பெறாது. வேட்பாளர் பட்டியல், அகர வரிசையில் தயாரிக்கப்பட்டாலும், சின்னத்தின் வரிசை அடிப்படையில், ஓட்டு சீட்டு உள்ளது. வேட்பாளருக்கான சின்னத்தை தேர்வு செய்து ‘பேலட் சீட்’டில் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்,’ என்றனர். ஓட்டு எண்ணும் மையம் அந்தந்த ஒன்றியங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெண் சிசு கொலையை தடுக்கும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொட்டில் குழந்தை எனும் உன்னத மனிதாபிமான திட்டத்தை கொண்டு வந்தார்.
முதன் முதலாக சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம் 2001-ம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டன. இதன் மூலம் 5 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டு இன்று அவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். ஆண்- பெண் சமம் என்று பெற்றோரிடையே ஏற்பட்ட மனமாற்றம் போன்றவைகளால் தொட்டில் குழந்தைகள் கடந்த சில ஆண்டுகளாக மீட்கப்படவில்லை.
இந்நிலையில் சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே இருந்த சாலையோரம் ஒரு குழந்தையும், மஞ்சனக்கொரை பகுதியில் வனப்பகுதியையொட்டி உள்ள புதரில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையும் வீசப்பட்டு கிடந்தது.
தகவல் கிடைத்தும் குழந்தைகள் மீட்கப்பட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது. அங்கு இன்குபெட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொட்டில் குழந்தைகள் மையம் திறக்கப்பட்டது. இது குறித்து ஊட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரியில் சமீப காலங்களில் பச்சிளம் குழந்தைகளை வனப்பகுதிகளில் அனாதையாக வீசி செல்வது அதிகமாகி வருகிறது. அதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதனை தடுக்கும் வகையிலும், அனாதையாக வீசி செல்லப்படும் குழந்தைகளை காக்கும் வகையிலும் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் தொட்டில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தொட்டில் அமைந்து உள்ள பகுதியின் அருகே கண்காணிப்பு கேமராக்கள் ஏதுமில்லை. எனவே, குழந்தையை வளர்க்க இயலாத நிலையில் உள்ள பெற்றோர் தங்களது குழந்தையை வனப்பகுதியிலோ, சாலையோரங்களிலோ, குப்பை தொட்டிகளிலோ, வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளிலோ, முட்புதர்களிலோ விட்டு செல்லாமல் அந்த தொட்டிலில் குழந்தையை விட்டு செல்ல வேண்டும். அந்த தொட்டிலில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே குழந்தையை விட்டு சென்றதும், அந்த தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களை பற்றிய தகவல்கள் வெளியிடப்படமாட்டாது. குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு பராமரிப்பும், அதற்கு பாதுகாப்பும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏராளமானோர் விண்ணப்பித்தனர். நேற்றுமுன்தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 393 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 1241 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் 33 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 121 பேர் கடைசி நாளான நேற்று முன்தினம் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். மேலும் 89 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக 998 பேர் போட்டியிடுகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 35 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட 205 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 39 பேர் கடைசி நாளான நேற்றுமுன்தினம் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக 160 பேர் போட்டியிடுகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 59 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 334 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 37 பேர் கடைசி நாளான நேற்றுமுன்தினம் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக 289 பேர் போட்டியிடுகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 42 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் 1 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 9 பேர் கடைசி நாளான நேற்றுமுன்தினம் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக 32 பேர் போட்டியிடுகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் 493 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 1822 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 49 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 206 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் 89 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 404 பதவிகளுக்கு 1479 பேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கில் தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் சிறப்பு தேநீர் மேம்பாடு கண்காட்சி நடந்தது.
சிறப்பு தேயிலை தூள்களின் கண்காட்சியில் கீரின் டீ, ஒயிட் டீ, எல்லோ டீ, ஆர்த்தோடக்ஸ் உள்பட பல்வேறு தேயிலை தூள்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த கண்காட்சியில் புஎர் டீ என்ற தேயிலை தூள் ரகம் வைக்கப்பட்டிருந்தது. இதன் விலை 50 கிராம் 2 ஆயிரம் ரூபாய் என வைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்ளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்து உபதலை பொரையாட்டியை சேர்ந்த இயற்கை விவசாயி பிரபு என்பவர் கூறுகையில், நாங்கள் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இயற்கை முறையில் புஎர் டீ தயாரித்து வருகிறோம். இந்த தேயிலை 50 கிராம் பாக்கெட் 2 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் ஒரு கிலோ ரூ.40 ஆயிரம். இதை தயாரிப்பதற்கு 1½ ஆண்டுகள் பிடிப்பதால் இதனை ஏஜ் டீ என்றும் அழைக்கின்றனர்.

பின்னர் தேயிலையை உருவாக்கி விற்பனைக்கு கொண்டு வருகிறோம். மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த தேயிலையை ஆரோக்கிய பானமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனை பருகுவதன் மூலம் உடல் எடை குறையும், இளமை, மத்திய நரம்பு மண்டலத்துக்கு நன்மை ஏற்படும். சந்தையில் கிராக்கி ஏற்படும் போது இந்த தேயிலையின் விற்பனை மேம்படும் என்றார்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான சுண்டட்டி, சேலக்கொரை, ஈளாடா மற்றும் கதகுதொறை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக சுண்டட்டி, கதகுதொறை பகுதிகளில் தேயிலை தோட்டங்களின் அருகே மற்றும் குடியிருப்புகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு வரும் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்தால் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர்.கடந்த வாரம், கதகுதொறை பகுதியில் உள்ள காட்டேஜூக்குள் பகல் நேரத்தில் சிறுத்தை புகுந்தது. இது அங்கிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து வனத்துறையினர், அப்பகுதியில், நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் அந்த பகுதியில் சிறுத்தை சுற்றி வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். மேலும் சுற்றிதிரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து நீலகிரி வன கோட்ட, ஏ.சி.எப்., சரவணகுமார் கூறுகையில்,’’சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க, அந்த பகுதியில் நான்கு கேமரா வைத்துள்ளோம். மேலும், 10 கேமராக்கள் பொருத்த முடிவு செய்துள்ளோம். தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் ஒரு வாரத்தில் சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்படும் என்றார்.






