search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேயிலை தோட்டத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஆண் குழந்தை
    X
    தேயிலை தோட்டத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஆண் குழந்தை

    கோத்தகிரி அருகே பச்சிளம் ஆண்குழந்தை கொன்று புதைப்பு? போலீசார் தீவிர விசாரணை

    கோத்தகிரி அருகே பச்சிளம் ஆண் குழந்தை கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நடுஹட்டி ஊராட்சிக்குட்பட்ட கெட்டிக்கம்பை பகுதியில் உள்ளது குண்டுபெட்டு காலனி.

    இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்றனர். அங்கு அவர்கள் தேயிலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு இடத்தில் குழந்தையின் கை, கால்கள் வெளியில் தெரிந்தது. இதைபார்த்து வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தை புதைக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர்.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை மீட்டனர். அப்போது புதைக்கப்பட்டிருந்தது பச்சிளம் ஆண்குழந்தை என்பதும், தொப்புள் கொடி கூட அறுக்கபடாமல் புதைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து பிறந்த குழந்தையை கொண்டு வந்து இங்கு யாராவது புதைத்தனரா? அல்லது திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்து விட்டதால் அவமானம் என கருதி குழந்தை கொன்று புதைக்கப்பட்டதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குழந்தையை இங்கு புதைத்தவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×