search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேயிலை தூள்"

    • குன்னூர் சிமிஸ் பூங்காவில் தென்னிந்தியாவில் முதல் முறையாக குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சி நேற்று தொடங்கியது.
    • கடந்த ஆண்டு நீலகிரிக்கு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

    ஊட்டி:

    குன்னூர் சிமிஸ் பூங்காவில் தென்னிந்தியாவில் முதல் முறையாக குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளின் சார்பிலும் பல்வேறு சிறந்த திட்டங்களை தீட்டி தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வரும் நோக்கில் செயல்படுத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு நீலகிரிக்கு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இந்த ஆண்டு அதனை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேயிலை விற்பவர்கள், வாங்குபவர்களுக்கு நல்ல தேயிலை மற்றும் கலப்பட தேயிலை தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேயிலை கண்காட்சி நடத்தப்பட்டு உள்ளது.

    நீலகிரியில் தரமான தேயிலை உற்பத்தியை குறு, சிறு விவசாயிகள் மேற்கொள்ள தேயிலை வாரியம் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 2 தொழிற்சாலைகளில் ஆா்தோடக்ஸ் வகை தேயிலையை உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தரமான தேயிலை உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் மாவட்டத்தின் பொருளாதாரம் மேம்படுவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் செழிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து தேயிலை கண்காட்சியை முன்னிட்டு குன்னூர் டைகர் ஹில் பகுதியில் நீலகிரி மாவட்ட நிர்வாகம். தமிழக சுற்றுலாத்துறை. இந்திய தேயிலை வாரியம் மற்றும் இன் கோசர்வ் சார்பில் பொது மக்களிடம் தேயிலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மனித சங்கிலி தொடர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் 1500 சிறு, குறு தேயிலை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தொடா்ந்து, தமிழக அரசு தேயிலை தோட்டக் கழக (டேன் டீ) வளாகத்தில் தேயிலை விவசாயிகள் மற்றும் தேயிலை வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறையினருடன் நடைபெற்ற மனித சங்கலி விழிப்புணா்வு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டாா்.

    இதில் மாவட்ட கலெக்டர் அம்ரித், தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் முத்து குமாா், மலைப் பகுதி சிறப்பு திட்ட அதிகாரி ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரிய தா்ஷனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    ×