search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணியாளர்கள் தைலத்தை பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்த போது எடுத்த படம்.
    X
    பணியாளர்கள் தைலத்தை பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்த போது எடுத்த படம்.

    ஊட்டி அருகே மூலிகை தாவரங்கள் மூலம் ரூ.25 லட்சத்துக்கு தைலங்கள் உற்பத்தி

    ஊட்டி அருகே மூலிகை தாவரங்கள் மூலம் ரூ.25 லட்சத்துக்கு தைலங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இந்த தைலங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சின்கோனா கிராமத்தில் மூலிகை தாவரங்கள் வளர்ப்பகம் வனத்துறையின் கூட்டு வன மேலாண்மை சார்பில் செயல்பட்டு வருகின்றது. கடந்த 1995-ம் ஆண்டு வளங்குன்றிய மலைப்பகுதியில் மூலிகை தாவரங்களை வளர்ப்பதற்காக தொடங்கப்பட்டது. இதன் மூலம் சின்கோனா கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. தைலம், ரோஸ்மேரி, சிட்ரநெல்லோ, ஜெரேனியம், பார்சிலி, லெமன் கிராஸ் உள்பட 13 வகையான மூலிகை தாவரங்கள் 15 ஏக்கர் நிலத்தில் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    ஒரு முறை நடவு செய்யப்படும் மூலிகை தாவரம் 6 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை வளரும். முதலில் 6 மாதத்திலும், அடுத்தடுத்து 4 மாதங்களிலும் அதன் இலைகளை அறுவடை செய்யலாம். அந்த பச்சை இலைகளை வேக வைத்து, அதில் இருந்து தைலம் பிரித்து எடுக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தைலங்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, சென்னை வண்டலூர் பூங்கா, டாப்சிலீப், ஒகேனக்கல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மூலிகை தாவரங்கள் வளர்ப்பக மேலாளர் உதயகுமார் கூறிய தாவது:-

    சின்கோனா கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் மூலிகை தைலங்கள் மருத்துவமனைகள், நறுமண வைத்திய சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. கல்தீரியா தைலம் மூட்டுவலி, கழுத்துக் கட்டி வலி, நெஞ்சு வலி, முடக்கு வாதத்துக்கு நிவாரணியாகும். எலுமிச்சை புல் தைலம் எலுமிச்சை வாசனையை கொடுப்பதோடு, வயிற்று உபாதைகளை சரியாக்கும். சிட்ரோடரா தைலம் தலையில் முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். தைம் தைலம் தோல் படைகள் மற்றும் மூச்சுக்குழாய் சம்பந்தப்பட்ட உபாதைகளை நீக்கும். இதுதவிர உணவு வகைகளில் சுவை அதிகரிக்கவும், தோல்களை பராமரிக்கவும் மற்றும் பல்வேறு மருத்துவ குணங்கள் உடையது.

    சின்கோனா கிராமத்தில் மூலிகை தாவரங்கள் வளர்ப்பகம் மூலம் சுமார் 105 குடும்பத்தினர் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். இங்கு வளர்க்கப்படும் மூலிகை தாவரங்களில் இருந்து பிரித்து எடுக்கப்படும் தைலங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

    நேரடியாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முடியாது என்பதால் தனியார் நிறுவனங்கள் வாங்கி ஊட்டியில் உற்பத்தி செய்யப்படும் தைலங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தைலங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மூலிகையின் நன்மைகளை மக்கள் உணர்ந்து பயன்படுத்தி வருவதால், நாளுக்குநாள் தைலங்கள் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதனால் மூலிகை தாவரங்களை அதிகளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தைலங்கள் ஒரு லிட்டர் ரூ.1000-ம் முதல் ரூ.6 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்படுகிறது. நடப்பாண்டில் ரூ.25 லட்சத்துக்கு தைலங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. கல்லூரி மாணவர்கள் இங்கு வந்து மூலிகை தைலங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து பார்வையிட்டு அறிந்து செல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×