search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்த குட்டி யானையுடன் 3 நாட்களாக நிற்கும் தாய் யானை
    X
    இறந்த குட்டி யானையுடன் 3 நாட்களாக நிற்கும் தாய் யானை

    பந்தலூர் வனப்பகுதியில் பாசப்போராட்டம் - இறந்த குட்டி யானையுடன் 3 நாட்களாக நிற்கும் தாய் யானை

    பந்தலூர் வன்ப்பகுதியில் இறந்த குட்டி யானையுடன் தாய் யானை 3 நாட்களாக நின்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி நாயக்கன்சோலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு யானைகள் பிளிறும் சத்தம் கேட்டது.

    தொடர்ந்து நேற்று காலையும் விடாமல் யானைகள் பிளிறி கொண்டிருந்தன. இதனால் வனப்பகுதி அருகே தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்த தொழிலாளர்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கூடலூர் உதவி கோட்ட வன அலுவலர் விஜயன், சேரம்பாடி வனச்சரகர்(பொறுப்பு) கணேசன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போதும் யானைகள் பிளிறி கொண்டிருந்தன.

    இதையடுத்து யானைகள் பிளிறல் சத்தம் வந்த பகுதியை நோக்கி டெலஸ் கோப் மூலம் வனத்துறையினர் பார்த்தனர். அப்போது அங்கு குட்டி யானை இறந்து கிடந்தது. மேலும் அதனை சுற்றி 7-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன.

    இதையடுத்து வனத்துறையினர் விரைந்து அந்த பகுதிக்கு சென்று பட்டாசு வெடித்து யானைகளை விரட்ட முயற்சி செய்தனர். அப்போது 6 யானைகள் அங்கிருந்து சென்றன. ஆனால் ஒரு பெண் யானை மட்டும் கோபத்துடன் வனத்துறையினரை நோக்கி ஓடி வந்தது.

    இதனால் அதிர்ச்சியான வனத்துறையினர் யானையிடம் இருந்து தப்பிக்க ஆளுக்கொரு பக்கமாக ஓடினர். பின்னர் யானை தனது குட்டியின் உடல் அருகே சென்று நின்றது. வனத்துறையினரும் திரும்பி வந்து பட்டாசு வெடித்தும், தீ மூட்டியும் அந்த யானையை குட்டியை விட்டு காட்டு பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். ஆனால் அந்த யானை தனது குட்டியை விட்டு எங்கும் செல்லாமல் அங்கேயே தொடர்ந்து நின்றது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தாய் யானை தொடர்ந்து அங்கேயே நிற்பதால் குட்டி யானையின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. யானை சென்ற பிறகு தான் குட்டி யானை எப்படி இறந்தது என்பது தெரியவரும் என்றனர்.

    இன்று காலை முதல் தாய் யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தொடர்ந்து 3 நாட்களாக தாய் யானை குட்டி யானையை விட்டு நகராமல் அங்கேயே நிற்பதால் இறந்த குட்டி யானையை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×