search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீப்தி
    X
    தீப்தி

    தமிழக வனத்துறையில் முதல் திருநங்கை - நீலகிரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார்

    தமிழக வனத்துறையில் முதல் திருநங்கை, நீலகிரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார்.
    ஊட்டி:

    கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். நீலகிரி மாவட்ட வனத்துறையில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு மதுபாலன் என்ற மகனும், தீப்தி(வயது 21) என்ற திருநங்கையும் உள்ளனர். அதில் தீப்தி, பி.காம். பட்டதாரி ஆவார். இதற்கிடையில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த வாகன விபத்தில் சுப்பிரமணியன் உயிரிழந்தார். இதையடுத்து தந்தையின் வேலையை அவரது வாரிசான தனக்கு வழங்கும்படி தீப்தி அரசுக்கு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, நீலகிரி மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் தீப்திக்கு பணியிடம் ஒதுக்கி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று ஊட்டியில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் மாவட்ட வன அதிகாரி குருசாமியிடம், தீப்தி பணி நியமன ஆணையை காண்பித்து பணியில் சேர்ந்தார். அவருக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தீப்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்ட வனத்துறையில் பணி கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய முயற்சிப்பேன். எனக்கு தனியார் தொண்டு நிறுவனத்தினர், திருநங்கை நண்பர்கள் ஊக்கம் அளித்தனர். தந்தை இறந்த பிறகு தைரியமாக இருக்க பழகினேன். சமூகத்தில் திருநங்கைகள் அரசு வேலைகளில் சேர்ந்து உயர வேண்டும். ஏற்கனவே திருநங்கைகள் காவல்துறையில் பணிகளில் உள்ளனர். நான் வனத்துறையில் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்து பதவிகளில் உயர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னுடன் பணிபுரிபவர்களுக்கு பணியில் ஒத்துழைப்பு அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து அவருடன் வந்திருந்த நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக வனத்துறையில் முதன் முறையாக திருநங்கை பணியில் சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×